புதிய பாதைகளை உருவாக்கும் வங்கதேசத் தேர்தல்
![]()
வங்கதேசத்தில் பிப்ரவரி 12இல் நடைபெற்ற தேர்தல்களில் அந்நாட்டின் வங்கதேச தேசியவாதக் கட்சி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். 2008இல் நாட்டை விட்டும் வெளியேறிய தாரிக், தேர்தல்கள் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழப் பதினைந்து வருடங்கள் ஆட்சிசெய்த ஷேக் ஹஸீனாவிற்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் போராட்டங்கள் வெடித்தன. ஜென் ஸீ (Gen Z) தலைமுறை தொடங்கிய அந்தப் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் ஷேக் ஹஸீனா இந்தியாவிற்குத் தப்பியோடினார். (ஜென் ஸீ என்பது 1997 முதல் 2012 வரை பிறந்த டிஜிட்டல் தலைமுறையைக் குறிக்கும்). வங்கதேசப் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான முகம்மது யூனுஸ் தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது.
முறையான தேர்தல்கள் நடைபெறுமா, அல்லது தற்காலிக அரசாங்கம் நிரந்தர அரசாங்கமாக மாறுமா என்று கேள்விகள் எழுந்த நிலையில் தேர்தல்கள் நடைபெற்று புதிய அரசாங்கமும் பதவியேற்றுள்ளது. பெரும்பாலும் வங்கதேசத் தேர்தல்கள் குளறுபடிகள் நிறைந்தவையாகவே இருந்துவந்துள்ளன. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் காலிதா ஜியாவின் தேசியவாதக் கட்சி போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது தற்போதைய தேர்தல் மிக அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள்குறித்து அனைத்து கட்சிகளும் சந்தேகம் எழுப்பினாலும், முடிவை ஏற்றுக்கொண்டனர்.
300 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசியவாதக் கட்சி 212 இடங்களில் வெற்றி பெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. போராட்டங்களின் விளைவாகத் தோன்றிய புதிய கட்சியான நேஷனல் சிட்டிசன் பார்ட்டி ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாஅத்தின் கூட்டணியில் இக்கட்சியும் அங்கமாக உள்ளது. கட்சிகள் பெற்ற தொகுதிகளின் அடிப்படையில் 50 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.
நீண்ட காலம் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியை நிகழ்த்துபவர்கள் அதிகாரத்தை விட்டும் அகற்றப்படுவதை உலகின் பல்வேறு பகுதிகளில் நாம் தொடர்ந்து கண்டுவருகிறோம். வங்கதேசத்தின் ஷேக் ஹஸீனாவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஏறத்தாழ நாற்பது வருடங்கள் வங்கதேச அரசியலில் முக்கிய அங்கம் வகித்த அவர், தற்போது அந்நாட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தற்போதைய நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கு அதன் கடந்த காலத்தைச் சற்று அறிந்துகொள்வது அவசியமாகும்.
வங்கதேச அரசியல்
ஆங்கிலேயர்களால் அவசர கோலத்தில் பிரிக்கப்பட்ட இந்தியத் துணைக் கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதில் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பாகிஸ்தான் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளிலிருந்து வெளியேறும் காலனியச் சக்திகள் அங்கு நிரந்தரக் குழப்பம் நிலவுவதை உறுதிப்படுத்திய பின்னரே அங்கிருந்து வெளியேறுவர். இந்தியத் துணைக் கண்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் கிழக்கு பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் ஆரம்பம் முதலே ஒன்றாக இருந்ததில்லை. மொழியின் அடிப்படையில் எழுந்த பிரிவினைப் போராட்டம் 1971இல் பங்களாதேஷ் என்ற புதிய நாடு பிறப்பற்கு வழிவகுத்ததாகப் பொதுவாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானின் இரு பிரிவுகள் இடையே மொழிப் பிரச்சினையை விட பொருளாதார சிக்கல்களும் மேற்கு பாகிஸ்தானின் எதேச்சதிகாரப் போக்குமே பிரச்சினைகளுக்கு காரணம் என்று மற்றொரு பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
கிழக்கு பாகிஸ்தான் மக்களைவிட மேற்கு பாகிஸ்தான் மக்களே இஸ்லாத்தின் மீது அதிகப் பற்று கொண்டவர்கள் என்றும், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மதச்சார்பற்ற சிந்தனையும் மொழி வெறியும் கொண்டவர்கள் என்றும் ஒரு கருத்து மேற்கு பாகிஸ்தானில் பரப்பப்பட்டது. ஆனால், இன அடையாளத்தைவிட கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இஸ்லாமிய அடையாளத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக எதிர்க் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 1972வரை மதச்சார்பின்மைக்கு வங்கதேசத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முஜீபுர் ரஹ்மானின் அனுமதி இன்றியே மதச்சார்பற்ற நடைமுறை வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவாமி லீக் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான அப்துல் மன்சூர் அஹமது குறிப்பிடுகிறார்.
1965 இந்தியா–பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து கிழக்கு பாகிஸ்தான் சுயாட்சியைக் கோரி ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார் அவாமி லீக் கட்சியின் முஜீபுர் ரஹ்மான். இதில் பாதுகாப்பு ஒரு முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்பட்டது. 1970 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு பாகிஸ்தானின் 169 இடங்களில் 167 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் பிரதானக் கட்சியாக அவாமி லீக் உருவெடுத்தது.
ஒருபுறம் முஜீபுர் ரஹ்மானுடன் பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் இராணுவம் குவிக்கப்பட்டு 1971 மார்ச் 25 அன்று மிகப்பெரும் தாக்குதல்களை நடத்தியது. ஏராளமான மாணவர்கள் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முஜீபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தானிற்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஏனைய அவாமி லீக் தலைவர்கள் கல்கத்தாவில் இருந்து சுதந்திர பங்களாதேஷ் தேசத்தை அறிவித்தனர்.
வங்கதேச உருவாக்கத்திற்கு இந்தியா இராணுவ, ராஜ்ஜிய உதவிகளை வழங்கியது. போர் தொடங்குவதற்கு முன்னரே வங்கமொழி பேசும் மதச்சார்பற்ற அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இந்தியாவுடன் தொடர்பில் இருந்தனர். இதனைக் காரணமாக வைத்து, மேற்கு பாகிஸ்தானில் கிழக்கு பாகிஸ்தானிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பல அரசியல் தலைவர்கள் கிழக்கு பாகிஸ்தானில் இல்லாத நிலையில், இராணுவத்திலிருந்த வங்கமொழி பேசுபவர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திவந்தனர். அவர்களில் முக்கியமானவராக ஜியாவுர் ரஹ்மான் திகழ்ந்தார். கிழக்கு பாகிஸ்தானிற்கு ஆதரவாக இந்தியா களத்தில் இறங்கியது. டிசம்பர் 16இல் பாகிஸ்தான் படைகள் சரணடைந்ததைத் தொடர்ந்து அதிபர் யஹ்யா கான் பதவி விலகினார். ஒரு ஹீரோவாக நாட்டிற்குத் திரும்பிய முஜீபுர் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றார். வங்கதேசத்தின் தந்தை என்றும் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், அவரது ஆட்சியின் ஆரம்ப நாள்கள் அவ்வளவு பிரகாசமானவையாக அமையவில்லை.
1973 தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றபோதும் பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் மிகப்பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்தன. 1974இல் பலரின் உயிரைப் பறித்த மிகப்பெரும் பஞ்சம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. சூழலை எதிர்கொள்வதில் சவால்களை எதிர்கொண்ட முஜீப், மக்களின் சுதந்திரத்தைப் பறித்து ஒரு சர்வாதிகாரியாக மாறினார். லஞ்சமும் ஊழலும் தலை விரித்தாடின. 1975 ஆகஸ்ட் 15இல் முஜீபுர் ரஹ்மானும் அவர் குடும்பத்தினர் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரின் மகள் ஷேக் ஹஸீனா உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த ரத்தக் களரியிலிருந்து தப்பினர். இராணுவத்திலிருந்த பாகிஸ்தான் ஆதரவு அதிகாரிகள், சில அரசியல்வாதிகள், வெளிநாட்டுச் சக்திகள் ஆகியோருக்கு இந்தப் படுகொலையில் பங்கிருப்பதாகக் கூறப்பட்டது.
பாகிஸ்தானைப் போலவே வங்கதேசத்திலும் அரசியல் குழப்பங்களுக்கும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. நவம்பர் 1975 இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான், இந்திய எதிர்ப்பு நிலையை கைக்கொண்டார். இவரின் ஆட்சிக் காலத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் வங்கதேசத்தின் உள்கட்டமைப்பில் அவர் கவனம் செலுத்தினார். 1981 மே 30இல் சில இராணுவ அதிகாரிகளால் ஜியாவுர் ரஹ்மான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்ததாக ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ ஜெனரல் முஹம்மது இர்ஷாத், சொந்தமாக ஜாதியா கட்சி என்றொரு புதிய கட்சியைத் தொடங்கி, பெரும்பான்மை அரசியல் கட்சிகள் புறக்கணித்த 1986 தேர்தலில் பெருவெற்றி பெற்றார். அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹஸீனாவும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான ஜியாவுர் ரஹ்மானின் மனைவி காலிதா ஜியாவும் அதிபர் இர்ஷாத்திற்கு எதிராகக் கரம் கோத்தனர். நாட்டின் மோசமான பொருளாதார நிலை காரணமாக இடைக்கால அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இர்ஷாத். 1991 தேர்தலில் வெற்றி பெற்ற காலிதா ஜியா, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால், அதன் பின்னரான வங்தேச அரசியல் இரண்டு பேகம்களுக்கு இடையிலான சண்டைக் களமாக மாறிப் போனது. ஒருவர்மீது ஒருவர் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். தேர்தல்கள் கேலிக்கூத்தாக மாறின. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது வாடிக்கையானது. இடைக்கால அரசாங்கங்கள் அமைவதும் வங்கதேச அரசியலின் அங்கமானது. 1996இல் ஷேக் ஹஸீனா ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், பொருளாதார மந்த நிலையும் இயற்கைச் சீற்றங்களும் மக்களை வதைத்தன. 2001இல் காலிதா ஜியா அதிகாரத்திற்குத் திரும்பிய நிலையில் 2009இல் ஷேக் ஹஸீனா வெற்றி பெற்றார். 2007இல் அதிகாரத்திலிருந்த இடைக்கால அரசாங்கம் இரண்டு பேகம்களையும் சில நாள்கள் சிறையில் அடைத்த சுவாரஸ்யமும் நடைபெற்றது.
2014 தேர்தலை வங்கதேச தேசியவாதக் கட்சி புறக்கணிக்க, ஹஸீனா மீண்டும் வெற்றி பெற்றார். 2013இல் ஜமாஅத்தே இஸ்லாமி கட்சியும் தடை செய்யப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஒற்றைக் கட்சி முறை வங்கதேசத்தில் இருந்தது. 1971 காலகட்டத்தில் பாகிஸ்தானுடன் கைகோத்துச் செயற்பட்டதாக ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டு 2010இல் அவர்களை விசாரிப்பதற்காக ஓர் ஆணையமும் அமைக்கப்பட்டது. ஜமாஅத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2018 தேர்தலுக்கு முன்னர் காலிதா ஜியா சிறையில் அடைக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் பதவியில் அமர்ந்தார் ஹஸீனா. ஜனநாயகத்தின் பெயரில் சர்வாதிகாரம் வங்கதேசத்தை ஆட்சி செய்தது.
ஜென் ஸீ போராட்டம்
ஹஸீனாவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் இருந்துவந்த நிலையில் வேலைவாய்ப்பில் அரசாங்கம் அறிவித்த இடஒதுக்கீடு, போராட்டத்திற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது. சிவில் சர்வீஸ் பணிகளில் 30 சதவிகிதத்தை 1971 சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கும் வகையில் ஓர் உத்தரவை அரசாங்கம் வெளியிட்டது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருந்த நிலையில், அவாமி லீக் கட்சியினருக்குச் சாதகமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய இளைஞர்கள், நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர். 2018இல் இதே போன்றதொரு அறிவிப்பு போராட்டங்களைத் தொடர்ந்து பின்வாங்கப்பட்ட நிலையில் 2024 ஜூன் மாதத்தில் உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு முறையை உறுதிசெய்தது. இதன் காரணமாக, கல்வி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறின.
போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவல்துறையும் ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பும் நடத்திய வன்முறைகளில் ஏறத்தாழ ஆயிரம் போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜென் ஸீ என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் அதிக எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கினர். சமூக ஊடகங்களை தங்களின் பிரச்சாரக் களமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் கருவிகளாகவும் மாற்றினர். பிரதமரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், ஷேக் ஹஸீனா 2024 ஆகஸ்ட் 5 அன்று இந்தியாவிற்குத் தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜீபுர் ரஹ்மானின் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. பல இடங்களில் அவரின் சிலைகள் உடைக்கப்பட்டன. உச்சகட்டமாக, ‘தேசத் தந்தை’ என்ற அவரின் பட்டத்தை இடைக்கால அரசாங்கம் ரத்து செய்தது. ஷேக் ஹஸீனா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை, போராட்டக்காரர்கள் ‘இரண்டாவது சுதந்திரப் போராட்டம்’ என்று வர்ணித்தனர்.
இலக்கை அடைந்தனரா ஜென் ஸீக்கள்?
தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேஷனல் சிட்டிசன் பார்ட்டி என்ற புதிய கட்சியைத் தொடங்கிய இளம் தலைமுறையினர், ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தனர். பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட இவர்களின் பிரச்சாரம் காரணமாக வாக்குச் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், முழுமையான செயற்திட்டம், கட்சிக் கட்டமைப்பு ஆகியவை இல்லாத காரணத்தால் இவர்களின் பிரச்சாரம் வங்கதேச தேசியவாதக் கட்சிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
இவர்களின் போராட்டம் காரணமாக, உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாகக் குறைத்தபோதும் ஏனைய கோரிக்கைகளும் சவால்களும் இன்னும் அப்படியே உள்ளன. முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் பிரதமரமாகப் பதவியேற்றுள்ளது ஏற்கெனவே உள்ள நடைமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலில் ஜென் ஸீயின் செயற்பாடுகளே அவர்களின் எதிர்காலத்தையும் வங்கதேசத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன.
தூனிசியா, எகிப்து என மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வெடித்த நாடுகளில் நிகழ்ந்த அதே பழைய காட்சிகள் மீண்டும் வங்க தேசத்திலும் நடந்தேறின. நபர்கள் மாறினார்களே தவிர, மக்கள் முன்வைத்த மாற்றங்கள் நிகழவில்லை. பல ஆண்டுகளாக அதிகாரத்தைச் சுவைத்த அதிகார வர்க்கத்தினர் அதனை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த வரலாறுகளை நன்கு அறிந்துள்ள ஜென் ஸீ பிரிவினர் அதற்கேற்பத் தங்கள் செயற்திட்டங்களை அமைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய வங்கதேசத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி
மௌலானா அபுல் அஃலா மௌதூதி 1941இல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஒரு இஸ்லாமிய தேசத்தைக் கட்டமைப்பது இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்பட்டது. இந்தியத் துணைக் கண்டம் இரண்டு நாடுகளாக உருவானபோது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி பாகிஸ்தான் என்று இயக்கம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. 1947இல் மொத்தமாகவே இந்த அமைப்பிற்கு ஆயிரத்திற்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் ஒருவர் மட்டுமே அதன் உறுப்பினராக இருந்தார்.
1955இல் குலாம் ஆஸம் என்ற கல்லூரி விரிவுரையாளரின் வருகையைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஜமாஅத் வளர்ச்சியைக் கண்டது. அதே சமயம், ஜெனரல் அய்யூப் கானின் ஆட்சிக் காலத்தில் (1958–1969) ஜமாஅத் கடும் நெருக்கடிகளை வங்கதேசத்திலும் சந்தித்தது. ஆனால், பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் அமைப்பது, ஏழைகளுக்கு உதவி செய்வது என்று ஜமாஅத்தின் பணிகள் தொடர்ந்தன. 1969இல் ஜமாஅத் உறுப்பினர்களின் எண்ணிக்கை 425ஆக உயர்ந்தததுடன், ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40,000யைக் கடந்தது.
1956இல் நாற்பது நாள்கள் பயணமாக கிழக்கு பாகிஸ்தான் வந்த மௌதூதி, வங்க மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன் கிழக்கு பாகிஸ்தான்மீது காட்டப்படும் பாரபட்சத்தையும் கண்டித்தார். அய்யூப் கானின் ஆட்சிக்கு எதிராக அவாமி லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் ஜமாஅத் இணைந்து செயற்பட்ட போதும், இஸ்லாத்திற்குத் திரும்புவதன் மூலமே நாட்டை ஒற்றுமைப்படுத்தும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது.
1970 தேர்தலில் நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற ஜமாஅத், முஜீபுர் ரஹ்மான் ஆட்சி அமைப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கானிடம் வலியுறுத்தியது. வங்கதேசப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் களம் இறங்கியதைத் தொடர்ந்து அவாமி லீக்குக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பணியை ஜமாஅத் நிறுத்தியது. ஆனால், பாகிஸ்தானிற்கு ஆதரவாக ஜமாஅத் செயற்பட்டது என்பதாக இன்றுவரை அதன் மீது விமர்சனம் உள்ளது. 1972இல் புதிய அரசாங்கம் ஜமாஅத்தைத் தடை செய்ததுடன் குலாம் ஆஸமின் குடியுரிமையையும் ரத்து செய்தது.
ஜியாவுர் ரஹ்மான் ஜமாஅத்திற்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கினார். அதன் பின் இர்ஷாத்தின் ஆட்சிக் காலத்தில் ஜமாஅத் மீண்டும் நெருக்கடிகளைச் சந்தித்தது. 1990 தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற ஜமாஅத், காலிதா ஜியா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்தது. ஆனால், பின்னர் அவாமி லீக் பக்கம் சாய்ந்தது. 1996 தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டும் ஜமாஅத் வெற்றி பெற்றது. மீண்டும் காலிதா ஜியா பக்கம் திரும்பிய ஜமாஅத், 2001 தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றதுடன் இரண்டு ஜமாஅத் உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 2008 தேர்தலில் மீண்டும் சரிவைச் சந்தித்து இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
அதன் பின் அவாமி லீக்குடன் ஜமாஅத் தொடர்ந்து மோதல் போக்கைக் கைக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. மௌதூதியின் புத்தகங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டிய ஷேக் ஹஸீனா அரசாங்கம், 2010இல் அவரின் புத்தகங்களைத் தடை செய்தது. அதே வருடம் அமைக்கப்பட்ட சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் 1971 எழுச்சியின்போது மனித இனத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி பல ஜமாஅத் தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. ஜமாஅத்தின் தலைவர் முதியுர் ரஹ்மான் நிஸாமி, முஹம்மது கமருஸ் ஸமான், அப்துல் காதர் முல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். முன்னாள் தலைவர் குலாம் ஆஸமிற்கு 90 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 2014இல் சிறையில் அவர் மரணம் அடைந்தார்.
ஹஸீனா அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஜமாஅத் தனது பங்களிப்புகளை வழங்கியது. மாணவர் தலைவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டபோது, தனது வலிமையான கட்டமைப்பின் மூலம் போராட்டங்களை ஜமாஅத் வழி நடத்தியது. இதன் காரணமாக, நாட்டை விட்டும் செல்வதற்குச் சில நாள்களுக்கு முன், ஆகஸ்ட் 1 அன்று ஜமாஅத்தே இஸ்லாமியை ஹஸீனா தடை செய்தார். ஆனால், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை இந்தத் தடை இன்னும் வலுப்படுத்தியது. மாணவர் போராட்டங்களை ஜமாஅத் கைப்பற்றியதாக அவாமி லீக் தலைவர்கள் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால், மாணவர் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரித்தனர்.
பிப்ரவரி தேர்தலில் ஜமாஅத் தலைமையிலான கூட்டணி 77 இடங்களில் வெற்றி பெற்று, வலுவான எதிர்கட்சியாக வளர்ந்துள்ளது. இதுவரை 18 தொகுதிகளுக்கு அதிகமாக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிராத ஜமாஅத் 68 இடங்களைக் கைப்பற்றியது. போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட நேஷனல் சிட்டிசன் பார்ட்டி, ஜமாஅத் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜமாஅத் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சாசனச் சீர்திருத்தங்களை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதைத் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஜமாஅத் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அவாமி லீக், வங்கதேச தேசியவாதக் கட்சி போன்ற பாரம்பரியக் கட்சிகள்மீது அதிருப்தி கொண்டுள்ள இளம் தலைமுறையைத் தங்கள் பக்கம் கவர்வதற்காக ஊழல் எதிர்ப்பு, முறையான நிர்வாகம், சமூக நீதி உள்ளிட்ட விவகாரங்களில் ஜமாஅத் அதிக கவனம் செலுத்துகிறது.
அவாமி லீக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய சவால்களை தேசியவாதக் கட்சி எதிர்கொள்ளும் சூழலில் வங்கதேச அரசியல் களம் ஜமாஅத்திற்குச் சாதகமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் மூலம் பல ஜமாஅத் தலைவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஷேக் ஹஸீனா, தற்போது அதே தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கடமைகள்
வழக்கமான பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளில் புதிய பிரதமர் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கையை அவரின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கெனவே இடைக்கால அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுகளை அதிபர் முஹம்மது ஷஹாபுத்தீன் சுமத்தத் தொடங்கிவிட்டார். அரசியல் பழிவாங்கலுக்கான அங்கீகாரமாக ஆட்சியைப் பயன்படுத்தாமல், மக்கள் நலனில் புதிய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்படும் வங்கதேசத்தை இந்த அவலங்களிலிருந்து நீக்கும் கடமை புதிய அரசாங்கத்திற்கு இருக்கிறது. இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புகளைச் சந்திக்கும் மக்களைப் பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. முந்தைய அரசாங்கங்கள் கவிழ்வதற்கு இவையே முக்கியக் காரணங்களாக இருந்தன என்பதைப் புதிய ஆட்சியாளர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
ஷேக் ஹஸீனாவிற்கு எதிரான போராட்டங்களின் போதும் இடைக்கால ஆட்சியின் போதும் வங்கதேசச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் சில இடங்களில் இடம்பெற்றன. நாட்டின் சிறுபான்மையினரைப் புறக்கணித்துவிட்டு ஒட்டுமொத்த தேசம் வளர்ச்சியை அடைய முடியாது என்பதை உணர்ந்து புதிய ஆட்சியாளர்கள் செயற்பட்டால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வங்கதேசத்தால் எட்ட முடியும்.
17 ஆண்டுகள் நாட்டை விட்டும் வெளியே இருந்த தாரிக் ரஹ்மானிற்குச் சொந்த கட்சியில் அதிகாரத்தை நிலைநாட்டும் நிர்ப்பந்தமும் புதிய அரசாங்கத்தை வழிநடத்தும் கடமையும் இருக்கிறது. வெற்றிப் பேரணிகள் நடத்த வேண்டாம் என்று கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஒரு புதிய பாதையில் அவர் பயணிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலையான, நேர்மையான, அனைவருக்குமான அரசாங்கத்தை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கம் உண்மையில் ஜனநாயத்தின் திருப்புமுனையா, அல்லது ஏற்கெனவே உள்ள அரசியலின் மறு வடிவமா என்பதை வரும் காலங்களில் அறிந்துகொள்ளலாம்.
References:
Bangladesh election results 2026: Who won, who lost, what’s next?, www.aljazeera.com
After Bangladesh votes: Stability will be earned through delivery, not declarations, www.csis.org
Irfan Ahmad, Islam and Politics in South Asia, The Oxford Handbook of Islam and Politics.
Mohamed Ashraf Aziz Ishrak Fahim, Pakistan’s elite betraying the people of Bangladesh again, www.criticalmuslimstudies.co.uk

