ஒரு நாள் மனிதர்கள்?!
![]()
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான். நிச்சயமாக சிந்தனை உடையவர்களுக்கு இதில் தக்க படிப்பினை இருக்கின்றது. (அல்குர்ஆன் 24:44)
இரவும் பகலும் மாறி மாறி வரக்கூடிய சுழற்சியான இந்த செயல்தான் பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். இதுமட்டுமல்ல பூமியின் மீது வாழ்ந்து வரும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இயக்கத்திற்கான, செயல்பாட்டிற்கான மையப் புள்ளி இரவும் பகலுமாகும். இதனை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான். இதில் அறிவுடையோருக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்பது அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் செய்தியாகும்.
‘பகல் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே.. இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்.. வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சிகரமாக மாற்றலாம்’ என்றோ அல்லது ‘பகல் எப்போது முடிவுக்கு வரும்? எனது வேலைப்பளு எப்பொழுது தீரும்’ என்றோ எண்ணலாம். அதேபோன்றுதான் இரவின் நீளம் எப்போதுதான் குறையுமோ அல்லது இரவு இனியும் கொஞ்சம் நீண்டால் நன்றாக இருக்குமே, நன்றாக ஓய்வு எடுக்கலாமே.. அதற்குள் விடிந்து விட்டதே என அங்கலாய்ப்பது, விரும்புவது, வெறுப்பது என அவரவர் வசதிக்கேற்ப இரவு – பகல் குறித்தான மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் வேறுபடும். ஆனால், அல்லாஹ்வுடைய திட்டமோ முற்றிலும் வேறு ஆகும். அது குறித்து அல்லாஹ் இப்படி கூறுகின்றான்;
“இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.” (17:12)
ஆக, பகலும் இரவும் தினசரி வாழ்வில் நமது கண்களில் கண்டு உணரும் புவியியல் உண்மைகள் ஆகும். இந்த புவியியல் உண்மைகள் அல்லாஹ்வின் அத்தாட்சியும் அன்பளிப்பும் ஆகும். அல்லாஹ் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்த பகல் – இரவு, அதாவது ‘நாட்கள்’ நமக்கு பின்வரும் செய்திகளை கற்றுத் தருகின்றது என்கின்றார்கள் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள்.
1. பகலில் அல்லாஹ்வின் அருளை, அதாவது நாம் இந்த பூமியில் வாழ்வதற்கு தேவையான பொருளாதாரம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவற்றை, தேடிக்கொள்ளலாம்.
2. மேலும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட இப்புவியின் மீதுள்ள இயற்கையை கண்டு உணர்ந்து நமது அறிவை, சிந்தனையை வளப்படுத்திடலாம். நீங்கள் சிந்தித்து உணர்ந்திடுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.
3. பகல் முழுவதும் ஓடியாடி நாம் மேற்கொண்ட உழைப்பின் களைப்பை நீக்கிட அல்லாஹ் இரவை ஏற்படுத்தினான். “நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம். நாமே இரவை உங்களுக்கு போர்வையாக ஆக்கினோம்.” (78:9,10)
4. இறுதியில் சூரியன் உதிப்பது மற்றும் மறைவதன் மூலம் உருவாகிடும் இந்த இரவும் பகலும் நமது நாட்களை, அதாவது பூமியில் நாம் வாழ்ந்திடும் நாட்களை கணக்கிட்டு நம்மை சீர் செய்து கொள்ளும் வாய்ப்புகளை வழங்குகின்றது.
எனவே நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஒவ்வொரு பகல் பொழுதையும் ஒவ்வொரு இரவையும் பயன்படுத்திட வேண்டும். அதில் நன்மையான காரியங்களில் உழைத்திட, செயல்பட போட்டி போடவேண்டும். இரவோ பகலோ எதுவாயினும் சரி அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும். அதில் நாம் பெற்ற, பெற இருக்கின்ற ஆன்மீக பலன், ஆன்மீக வெளிச்சம், அறிவு வளர்ச்சி, சுய முன்னேற்றம் என்ன என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும். இப்படியான இரவு மற்றும் பகலின் தொடர்ச்சியான இந்த சுழற்சிதான் நமக்கு மீண்டும் ஒரு றமளானை கொண்டு வந்து இருக்கின்றது.
மேற்கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த இரவும் பகலும் இணைந்ததுதான் ஒரு நாள் என கணக்கிடப்படுகின்றது. அந்த நாட்களை குறித்து இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக நமக்கு இப்படி கற்றுத் தருகின்றார்கள்;
“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி”. (பைஹகீ)
இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.
மேற்சொன்ன இரண்டு நாட்கள் குறித்த ஹதீஸை இப்படியும் அணுகலாம். அதாவது ஒரு மனிதர் ஒரு கடையில் டீ போடும் அல்லது பொட்டலம் மடிக்கும் வேலையை செய்து வருகின்றார். அவருடைய வாழ்வில், சிந்தனையில், செயல்பாட்டில், சுய முன்னேற்றத்தில் என எதிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவர் அதே பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
தான், தன் குடும்பம், தன் வியாபாரம் என குறுகிய வட்டத்திற்குள் சுயநலமிக்க வாழ்வை மேற்கொண்டு வரக்கூடிய மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் மேற்சொன்ன ஹதீஸின்படி அவர்கள் ‘ஒரு நாள்தான்’ வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பதுதான் பொருளாகும்.
அல்லாஹ் தனது திருமறையில் ஒரு செய்தியை இப்படி பதிவு செய்கின்றான். அவன் மனிதர்களை நோக்கி; “நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள் என அவன் கேட்பான். அதற்கு அவர்கள் ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்து இருப்போம். இதைப்பற்றி கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக என கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் ஒரு சொற்ப காலத்தை தவிர, பூமியில் அதிக காலம் நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா என்று கூறுவான். என்ன நான் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும் நீங்கள் நம்மிடம் கொண்டுவரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டு இருந்தீர்களா என்று கேட்பான்”. (23:112 – 115)
அதாவது, இந்த உலக வாழ்க்கை மிகவும் குறுகியது; நிரந்தரமான மறுமை வாழ்வுதான் நம்முடைய தேர்வாக இருந்திட வேண்டும். நேரம் எந்த அளவுக்கு மங்கிக் கொண்டு இருக்கின்றதோ அதே அளவுக்கு நம்முடைய வாழ்வும் வளமும் மங்கலாகிக் கொண்டிருக்கின்றது.
பூமியில் நமக்கு வழங்கப்பட்ட குறுகிய நாட்கள் வீணாகவும் விளையாட்டாகவும் கழிப்பதற்காக வழங்கப்படவில்லை. மாறாக, இப்புவி மீதான மனிதனின் வாழ்வு உயர்ந்த பல நோக்கங்களை கொண்டது ஆகும். அந்த நோக்கங்கள் குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் பல பாடங்களை கற்றுத் தருகின்றார்கள்.
நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: (ஒருமுறை) நபி (ஸல்)அவர்கள் சில கோடுகளை போட்டார்கள். பிறகு, இது மனிதன். இது அவனுடைய (காலத்) தவணை. அவன் இவ்வாறு இருக்கும் போது (அவன் தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும்போது) அவனுக்கு நெருக்கமான (மரணக்) கோடு (அவனிடம்) வந்துவிடுகின்றது.” (புஹாரி)
மேலும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஒரு சதுரமான கட்டம் போட்டர்கள். அதன் நடுவில் அதைத் தாண்டிச் செல்லும் ஒரு கோட்டைப் போட்டார்கள். நடுவில் உள்ள கோட்டின் ஓரத்திலிருந்து நடுக்கோட்டை நோக்கி சிறுசிறு கோடுகளைப் போட்டார்கள். பின்னர், இது (கோட்டின் உட்புறம்) மனிதன். இது (நாற்புறமும் சூழ்ந்திருக்கும் கோடுகள்) அவனுடைய தவணையாகும். இச்சதுர வட்டத்தை விட்டு வெளியேயுள்ள இந்தக் கோடு அவனுடைய மேலெண்ணங்கள் (ஆசைகள்) ஆகும். இந்த சிறிய கோடுகள் அவனுக்கு ஏற்படும் சோதனைகளாகும். இது (ஒரு சோதனை) அவனை விட்டுவிட்டாலும் இது (அடுத்தது) அவனைப் பிடித்துக் கொள்ளும். இது (மற்றொரு சோதனை) அவனை விட்டுவிட்டாலும், இது (அதற்கடுத்த சோதனை) அவனைப் பிடித்துக் கொள்ளும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி)
நேரம் குறித்தான அதாவது பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தார்கள் என்ற இந்த கேள்விக்கு பூமியில் வாழ்ந்த எல்லா மனிதர்களுடைய பதிலும் இப்படித்தான் இருக்கும் என பல திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பதிவு செய்கின்றனர்.
அதனை அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்;
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ (ஓர் சொற்ப நேரமே) அன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். (79:46)
இப்படி இருக்கையில் அல்லாஹ் நம்மை ஈமான் கொண்டவர்களாக படைத்து உங்களுடைய வாழ்வை எப்படி அமைத்திட வேண்டும் என்று ஒரு முன்மாதிரியை வாழச் செய்து ஒரு வேதத்தையும் கொடுத்திருக்கிறான். ஆனால், இவையனைத்தையும் கண்டும் காணாதவர்களாக, எவ்விதமான சிந்தனை மாற்றமோ செயல் மாற்றமோ இல்லாத மனிதன் என்ன கூறிடுவான்? நான் பூமியில் வாழ்ந்திடவே இல்லை என்பதுதானே அவனுடைய பதிலாக இருக்கும்!
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “உலக வசதிகளை மிகவும் அனுபவித்த ஒருவர், மறுமையில் நரகவாசிகளில் ஒருவராக கொண்டு வரப்பட்டு, நரகில் ஒரே மூழ்காக முக்கி எடுக்கப்படுவார்.” ஆதமின் மகனே! நீ நல்லதை எதையும் பார்த்ததுண்டா? உம்மிடம் சுகமான வாழ்வு வந்ததுண்டா?” என்று கேட்கப்படும். (அவர் உலகில் சுகபோகமாக அனுபவித்ததை தற்போதைய வேதனை காரணமாக மறந்து)” இல்லை, இறைவா” என்பார்.
அடுத்து உலகில் மனிதர்களிலேயே மிகவும் கஷ்டங்களை அனுபவித்த ஒருவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக கொண்டு வரப்படுவார். அவரைச் சொர்க்கத்தினுள் அனுப்பி, (வெளியே) கொண்டு வரப்பட்டு அவரிடம், ‘‘நீ சிரமத்தை கண்டதுண்டா? உன்னிடம் துன்பம் வந்ததுண்டா?” என்று கேட்கப்படும். (அவர் சொர்க்கத்தின் சுகம் அறிந்து தன்னை மறந்து) “அல்லாஹ் மீது சத்தியமாக என்னிடம் சிரமம் வந்தது மில்லை. நான் துன்பத்தை கண்டதுமில்லை என்று கூறுவார்” என நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
அதாவது, நாம் இம்மையில் எப்படி வாழ்கின்றோமா அப்படித்தான் மறுமையில் எழுப்பப்படுவோம். மேலும், இவர்கள் குறித்து அல்லாஹ் இப்படி கூறுகின்றான்;
‘யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.’ (17:72)
“எவன் என் நல் உபதேசங்களை புறக்கணிக்கின்றனோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளில் நாம் அவனை குருடனாகவே எழுப்புவோம். அச்சமயம் அவன் என் இறைவனே! நீ ஏன் என்னை குருடனாக எழுப்பினாய்? நான் பார்வை உடையவனாக இருந்தேனே?! என்று கேட்பான். அதற்கு இறைவன், உலகத்தில் இவ்வாறு குருடனைப் போன்றே உன் காரியங்கள் இருந்தன. நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றைக் கவனத்தில் வைக்காது மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் கவனிக்கப்படாது மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான்.” (20:124 – 126)
ஆக, இந்த உலகத்தில் நாம் பரந்து விரிந்த விசாலமான பார்வையுடன் செயல்படவேண்டும். சிறந்த செயல்களை தேர்ந்தெடுத்து செயல்படும் அகப்பார்வை நம்மிடம் இருந்திட வேண்டும். உலகியல் வாழ்வு மற்றும் உலக சிந்தனைகளில் இருந்தும் நாம் நம் கவனத்தை திசை திருப்ப வேண்டும் எனில் நமக்கு ஒரு பலமான மாற்றுப் பார்வை தேவை. அந்த ஆழமான அகப்(மாற்றுப்)பார்வைக்கான பெயரை நாம் “தக்வா…” என்று சொல்லிடலாம்.
இந்த ‘தக்வா’வை வலுப்படுத்தும் மாதமான றமளான் நம்மை ஆரத்தழுவி தனது நறுமணத்தை நம்முடன் விட்டுச் செல்ல வந்திருக்கின்றது. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நீங்கள் ‘தக்வா’ உடையவர்களாக ஆகலாம், ஆகிவிட வேண்டும் என்பதற்காகத்தான் நோன்பு உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான்.
வாழ்வை ஒழுங்குபெறச் செய்திடும் திட்டமான இந்த பயிற்சியை நன்கு திட்டமிட்டு செய்தோமென்றால் வாழ்வின் றமளான் அல்லாத எஞ்சிய நாட்களை நம்மால் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்திட, நிர்வகித்திட முடியும். குறிப்பிட்ட இந்த ஒரு மாத காலமான றமளானில் நம்மால் திட்டமிட்டு செயல்பட இயலாவிட்டால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு உள்ளான நமது வாழ்வு எப்படிப் பட்டதாயிருக்கும்?
செயலால்தான் மனிதன் வெற்றியாளன் ஆகின்றான். அதே செயலால்தான் மனிதன் தோல்வியாளனாகவும் மாறுகின்றான். ஆக, நம்முன் இருக்கின்ற றமளானை நாம் ஒரு நாள் மனிதர்கள் போன்று கடத்த இருக்கின்றோமா அல்லது புது ரத்தம் பாய்ச்சப்பட்டவர்களாக புதிய திட்டங்களுடன் எதிர் கொள்ள இருக்கின்றோமா என்பதை தீர்மானித்திட கடமைப்பட்டுள்ளோம்.
‘தக்வா’வின் ஆற்றல்!
தக்வா உடையவன் பயம் அற்றவனாக இருப்பான்! கவலைகள் அற்றவனாக இருப்பான்! தக்வா உடையவன் மகிழ்ச்சியானவனாக இருப்பான்! தக்வா உடையவன் போராட்ட குணம் உள்ளவனாக இருப்பான்! தக்வா உடையவன் சோர்வடைந்து விடமாட்டான்! தக்வா உடையவன் உள்ளத்தளவில் செல்வந்தனாக இருப்பான்! தக்வா உடையவன் பிறருக்கு உபகாரம் செய்திடுவான். சமூக அக்கறை கொண்டவனாக இருப்பான். குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என அனைவரிடமும் நேசக்கரம் நீட்டிடுவான்!
இவை அனைத்தும் ஒரு முஃமினின் அடையாளங்களாகும். மேலே சொன்ன இந்த பண்புகள் நம்மிடம் இல்லை என்றால் அதனை உருவாக்குவதும் அதில் குறைபாடுகள் இருக்கும் எனில் அதனை சரி செய்து நமக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கிடும் மாதம்தான் றமளான்.
‘தக்வா’ என்கின்ற வார்த்தையின் வேர் ‘விகாயத்’ அல்லது ‘தக்வியத்’ என்று நாம் காணலாம். அதற்கு கேடயம், பாதுகாப்பு, மனோதிடம், மனவலிமை, உறுதியாக நிற்றல் என்ற அர்த்தங்கள் உள்ளன . இவ்வுலக வாழ்வில் ஒருவனுக்கு மனோதிடம் வந்துவிட்டால் இவ்வுலக வாழ்வு குறித்தான தெளிவான பார்வை (அகப்பார்வை) வந்து விடும்.
அப்படி ஒரு பார்வை வந்து விட்டால் இந்த உலக விஷயங்கள் அவனை ஏமாற்றி விடாது. இந்த புள்ளியில்தான் மனிதனுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான போராட்டம் துவங்குகின்றது. இந்த ‘மனோதிடம், அச்சமற்ற நிலை நம்மிடம் வந்து விடாத வண்ணம் ஷைத்தான் நம்மை வழி கெடுத்துக் கொண்டே இருப்பான். அவன் நமக்கு அச்ச உணர்வை விதைத்துக்கொண்டே இருப்பான். இதனை அல்லாஹ் தனது திருமறையில் இப்படி கூறுகின்றான்;
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் அவர்களுக்கு பயப்படாதீர்கள். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் எனக்கே பயப்படுங்கள். (3:175)
“நிச்சயமாக ஷைத்தானை நான் உங்களுக்கு விரோதியாக படைத்து இருக்கின்றேன். அவனை நீங்கள் உங்கள் விரோதியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்” (35:6) என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்படியாக குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானை குறித்தும், அவனுடைய ஆபத்துகள் குறித்தும் நமக்கு எச்சரிக்கை விடுகின்றான்.
முஃமின்களுக்கு எதிரான ஷைத்தானை, அவர்கள் ‘தக்வாவை’ அடைந்து விடாமல் திட்டம் தீட்டக்கூடிய ஷைத்தானை, அதனால்தான் அல்லாஹ் றமளான் மாதத்தில் விலங்கிட்டு விடுகின்றான். ஷைத்தானை றமளானில் சிறையிலிடுவதற்கான காரணம் ஷைத்தான்கள் நம்மைச்சுற்றி ஏற்படுத்தி இருக்கும் அல்லது ஏற்படுத்தும் தடைகளை உடைத்தெறிந்து ஒரு உண்மை விசுவாசி மனோதிடம் கொண்டவனாக மாறிட வேண்டும் என்பதன்றி வேறு என்னவாக இருந்திட முடியும். மேலும், அல்லாஹ் அவனுடைய முதல் மனிதப் படைப்பான நமது தந்தையைக் கொண்டு ஒரு அற்புதமான பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றான்.
“ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள்புரிந்து இருக்கின்றோம். எனினும், பாவங்களை மறைத்து விடக்கூடிய (தக்வா) பக்தி என்னும் பரிசுத்த தன்மை ஆடைதான் மிக்க மேலானது. இதுவும் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதனைக் கொண்டு அவர்கள் உணர்ச்சி பெறுவார்களாக!
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோரை அவர்கள் இன்பமுடன் வசித்துவந்த சோலையில் இருந்து வெளியேற்றி துன்பத்திற்குள்ளாக்கிய பிரகாரம் உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு அவன் அவர்களுடைய ஆடையை களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களை காண முடியாதவாறு (மறைவாக) இருந்து கொண்டு உங்களை வழிகெடுக்க சமயம் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். நிச்சயமாக விசுவாசம் கொள்ளாதவர்களுக்குத் தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கின்றோம். (7:26,27)
இந்த இரு வசனங்களிலும் நமக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றது. அல்லாஹ் சொல்கின்றான்; உடலுக்கு அழகு சேர்ப்பது துணியினால் ஆன ஆடையாகும். உள்ளத்திற்கு அழகு சேர்ப்பது ‘தக்வா’ என்னும் ஆடையாகும்.
உடலுக்கு அழகு சேர்த்திடும் ஆடையை தெரிவு செய்திடும் விஷயத்தில் நாம் எந்தளவு கவனம் செலுத்துகின்றோம்! அந்த முயற்சியில் நாம் எவ்வளவு நேரத்தை, பொருளாதாரத்தை செலவிடுகின்றோம். உண்மையில், அதில் செலுத்திடும் கவனத்தின் அளவைத் தாண்டி பல மடங்கு அதிகமாக நமது உள்ளத்திற்கு அழகு சேர்த்திடும் ஆடையான ‘தக்வா’வின் விஷயத்தில் செலுத்திட வேண்டும். அதுதான் நம்முடைய வெற்றிக்கு அடிப்படையாகும்.
காலத்தால் அழியாத ஆடை?!
உடலுக்கு ஏற்றவாறு கச்சிதமாகவும் பல வண்ணங்களிலும் ஆடைகளை தெரிவு செய்வது போன்று நம்முடைய கண்களுக்கு புலப்படாதவாறு நம்மைச் சுற்றி நின்று நம்மை அழித்திட, வழி தவறச் செய்திட பல நிறங்களில், வடிவங்களில், செயல்களில், சொற்களில், எண்ணங்களில் மறைந்து இருக்கக்கூடிய ஷைத்தானை வீழ்த்தக்கூடிய ஆடையான ‘தக்வா’ விஷயத்தில் நாம் கவனம் செலுத்திட வேண்டும். உண்மையில் நாம் தெரிவு செய்திடப் போகும் ஆடையில் ‘தக்வா – இறையச்சம்’ என்கின்ற ஆடைதான் மிகச் சிறந்தது. மிகவும் அழகானது, விலைமதிப்பற்றது, காலத்தால் அழியாதது என்பதை நாம் புரிந்து கொண்டு நம்முடன் இருக்கின்ற றமளானில் நாம் அந்த ஆடையை நமக்குச் சொந்தமாக்கிட முயன்றிட வேண்டும்.
நாம் அவ்வாறு காலத்தால் அழியாத இறையச்சம் எனும் ஆடையை தெரிவு செய்திடும்போது ஷைத்தான் நம்மை பலவீனப்படுத்தி நம்முடைய ஆடையை கந்தல் கந்தலாக கிழித்து எறிந்திட வேண்டி நாம் அறியாத வண்ணம் நமது நாலாபுறமும் நிற்பான். ஷைத்தான் மட்டுமன்றி அவனுடைய கூட்டத்தார் அனைவரும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவனுக்கு நாம் பலியாகி விடக்கூடாது.
உங்கள் தந்தை ஆதம் (அலை), அவருடைய மனைவி ஆகியோர் இப்படித்தான் ஷைத்தானுடைய சூழ்ச்சிக்கு பலியாகி அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்து அவர்களுடைய வெட்கத்தலங்கள் வெளிப்பட்டது போன்று நீங்கள் ஆகிட வேண்டாம் என்று நமக்கு எடுத்துரைக்கின்றான்.
அப்படி என்றால் ‘தக்வா’ என்கின்ற இந்த கேடயத்திலிருந்து விலகிச் செல்லும் காலம் எல்லாம் நாம் ஆடை இருந்தும் நிர்வாண நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதுதானே அர்த்தம். அதாவது உலக வாழ்க்கை மீதான பற்று காரணமாக மதி மயங்கிடுவோம் என்றால் அல்லாஹ்வுடைய பார்வையில் நாம் ஆடை இருந்தும் ஆடையற்றவர்களாக நிற்கின்றோம்.
ஷைத்தான் இந்த நேரத்தில், இந்த நிறத்தில், இப்படித்தான் வருவான் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நாம் மிகவும் கவனத்துடன் றமளானை அணுகிட வேண்டும். ஷைத்தானின் அனைத்து தடைகளையும் தாண்டி ‘தக்வா’ எனும் ஆடையை நாம் சொந்தமாக்கிக் கொண்டால் ‘வெற்றி’ நமக்குப் பின்னால் பணிவாக வந்துவிடும்.
உமர் (ரலி) அவர்கள் போருக்குச் சென்ற தமது தோழர்களுக்கு அறிவுரை கூறிய போது “ஆள் பலத்தைவிட, ஆயுத பலத்தை விட, ‘தக்வா’தான் மிகச் சிறந்த ஆயுதம்’ என்றார்கள். எண்ணிக்கையின் அடிப்படையில், பொருளாதாரத்தின் அடிப்படையில் எதிரிகள் பலமானவர்கள் ஆக இருந்த போதிலும் வெற்றி நமக்கு வசமாகிட வேண்டும் என்றால் அதற்கான மிகச்சிறந்த சூத்திரம் ‘தக்வா’ ஆகும்.
நோன்பின் பிரதான நோக்கம் உடலை வருத்துவது அல்ல. மாறாக, உள்ளத்தை வலுப்படுத்துவது ஆகும். உள்ளங்கள் வலுப்பெறும் போது உண்மைகளை உரக்கச் சொல்லிட முடியும். சத்தியத்தை உறுதியாக எடுத்துரைத்திடவும் அதே உறுதியுடன் அசத்தியத்திற்கு எதிராக குரல் எழுப்பிடவும் முடியும். மேலும், தனிமனிதனாக சமூகமாக நம்மை நோக்கி வரும் சோதனைகளை, சிரமங்களை, கவலைகளை எதிர்கொள்ள முடியும். இவையனைத்திற்கும் தேவையான அடிப்படைத் தகுதிகளை கற்றுத் தந்திடுவது ‘தக்வா’ (நோன்பு) ஆகும்.
ஆக, றமளான் நமக்கு கிட்டத்தட்ட முப்பது இரவுகள் மற்றும் முப்பது பகல்களை வழங்க இருக்கின்றது. அதனை சரியாக திட்டமிட்டு நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போகின்றோமா? அல்லது நாம் முதலில் பார்த்தது போன்று ‘ஒரு நாள் மனிதர்களாக’ இருக்கப் போகின்றோமா?
நம்முடைய ‘தக்வா’வை திடப்படுத்தி தனிமனித மற்றும் சமூக வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கிடும் கருவியாக றமளானை ஆக்கிடுவோம்.

