சிறுகதை முக்கியப் பதிவுகள் 

போக்கிடமற்றவர்கள்

Loading

மார்க்கெட்டில் தான் வேலை பார்க்கும் அரிசி மண்டியின் எதிரே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கை வண்டியின் மீது உட்கார்ந்திருந்த குமார் ரொம்ப நேரமாக எங்கேயோ வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். அனல்காற்று முகத்தை தாக்கியதைக்கூட அவன் உணரவில்லை. அவன் வேலை பார்க்கும் குடோனுக்கு காலையில் நேரமாகவே லோடு வந்துவிட்டது. அத்தனை மூட்டைகளையும் ஐந்து பேரும் சேர்ந்து இறக்கி முடித்து வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு இப்போதுதான் ஆசுவாசமாக கொஞ்சம் உட்கார முடிந்தது.

பக்கத்து குடோனுக்கு எதிரில் இரண்டு லாரிகள் வந்து நின்றிருந்ததில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. சுள்ளென்று மதிய வெயில் காய்ந்து கொண்டிருந்தது.                                                                    

“ஏம்ப்பா, வண்டிய கொஞ்சம் தள்ளி நிறுத்தலாமல்ல. இப்பிடி ரோட்டுல நிறுத்தி வச்சிருக்கியே? வண்டி போக எவ்வளவு எடஞ்சலா இருக்கு பாரு” டூ விலரில் வந்த ஒருவர் கத்திக்கொண்டே இருந்தது குமாரின் காதில் விழவே இல்லை.                                                                           

“ஏம்ப்பா, உன்னத்தா நான் கத்திட்டே இருக்கேன். காதுல வாங்கமா உக்காந்துட்டே  இருக்க? யோவ், உன்னத்தா.வண்டிய கொஞ்சம் ஓரமா தள்ளி நிறுத்தய்யா” அவர் வண்டியை முறுக்கியபடி குமாரை பார்த்து கையை நீட்டி எரிச்சலுடன் மீண்டும் கத்தினார்.

அப்போதுதான் அவரைப் பார்த்த குமார் தன்னைத்தான் சொல்கிறார் என்று வண்டியிலிருந்து எழுந்து, ”என்னட வண்டியில்லங்க இது“ என்றபடி அந்தப்பக்கம் போனான். “வண்டிய கொஞ்சம் நகர்த்தி வய்ப்பா” என்று அந்த நபர் அவனைப் பார்த்து சொல்ல, ஒரு கோபப் பார்வையை  அந்த பைக்குகாரன் மீது வீசியபடி, கைவண்டியின் முன்புறத்தை தூக்கி  வண்டியை இழுத்து கொஞ்சம் ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மீண்டும் வண்டி மீது ஒரு காலை தொங்கப் போட்டவாறு உட்கார்ந்து கொண்டான் குமார்.  

‘’என்ன குமாரு,  ரொம்ப நேரமா வண்டி மேல ஒக்காந்துட்டு அப்பிடியென்ன யோசன? நா அங்கிருந்து பாத்துட்டேதா இரிந்தே. அந்த பைக்காரன் ஒன்னப்பாத்து கத்திட்டே இரிக்கிறான். நீ காதிலயே வாங்கம ஒக்காந்துட்டு இரிக்கே?” கேட்டுக்கொண்டே வந்தார் வஹாப்.

“ஒன்னுமில்லண்ணா.” 

“ஒன்னுமில்லாமலயா அப்பிடி ஓசன பண்ணிட்டிரிந்தே?”

‘’நம்மூர்ல ரோட்டோரத்து வூடுகளயெல்லாம் எடுக்கச் சொல்றாங்கலாமா.. உண்மையாண்ணா?” குமார் சங்கடத்துடன் கேட்டான்.  

”என்னடா சொல்றே?” அதிர்ச்சியுடன் கேட்டார் வஹாப்.  

“நேத்திக்கு நைட்டு வேல முடிஞ்சு நா வூட்டுக்குப் போகும்போது நம்ம பக்கம் அல்லாரும் கூடி கூடி நின்னு பேசிட்டிருந்தாங்கணா. நா என்ன ஏதுணு கேட்டப்ப  நம்ம வூடுகளயெல்லாம் காலி பண்ண சொல்றாங்கடானு மட்டும் எங்கிட்ட சொன்னாங்கணா. எதுக்கு இப்ப திடீர்னு எங்க வூட்டயெல்லாம் எடுக்கச் சொல்றாங்க?” குமார் அப்பாவித்தனமாக மறுபடியும் கேட்டான்..                                                              

நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது  அவன் குடியிருக்கும் இடத்தில் சாலையோரத்து மக்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்த போது என்ன ஏது என்று குமார் அவர்களிடம் விசாரித்தான். அப்போதுதான் இந்த தகவலை அவனிடம் சொன்னார்கள்.                    ‘‘நாம எத்தன காலமா இங்கன குடியிரிக்கோம். இப்ப வந்து திடீர்னு எதுக்கு எடுக்கச் சொல்றாங்க. நாம வேற எங்க குடி போறதாம்?” குமார் அப்போதே அப்பாவித்தனமான தன் சந்தேகத்தை கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. இதையே நினைத்து நினைத்து இரவெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததில் அவனுக்கு தூக்கம் வரவே இல்லை.

இதுவரை அவன் நினைத்துக்கூட பார்க்காத, கேள்வியே படாத  அதிர்ச்சியான செய்தியாக இருந்தது இது. குமாரின் மனைவி காமாட்சி அவனிடம் இதுபற்றி கொஞ்ச நேரம் தொண தொணத்துக்கொண்டே இருந்து அப்பிடியே தூங்கிப் போனாள்.

ஆத்துல தண்ணி வந்து அடிச்சிட்டுப் போனப்பக் கூட அங்குள்ள வூடுகள யாரும் எடுக்கல. அவுங்கவுங்க மறுக்கவும் அங்கயே குடிச போட்டுக்கிட்டாங்க. யாரும் வந்து தடுக்கல. இப்ப எதுக்கு ரோட்டோரத்துல இருக்குற வூடுகள எடுக்கச் சொல்றாங்க? குடியிருக்க வாடகை வூட்டுக்கெல்லாம் போயி நம்மால வாடகை குடுக்க முடியுமா? இங்கிருந்து நம்மள துரத்திட்டா தினக்கூலி மார்க்கெட் வேலையும் போய்டுமே!

இதை நினைக்கும் போதே குமாருக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. காலைல நம்ம தலைவர்கிட்ட என்ன ஏதுணு வெவரம் கேக்கணும் என்றெல்லாம் நள்ளிரவு வரைக்கும் யோசனை செய்துகொண்டு புரண்டு கொண்டிருந்த குமார் அப்படியே தூங்கிப்போனான். 

….

காலையில் எழுந்த போதே  புல்டோசர் வாகனம் அவன் வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கும் உணர்வு குபீரென எழுந்தது. வேகமாக வெளியே வந்து பார்த்த பிறகுதான் மனது நிம்மதியானது. காலையில்    தலைவரைப் பார்க்க முடியவில்லை. எட்டரை மணிக்கெல்லாம்  மார்க்கெட் கிளம்பிவிட்டான் குமார்.  

லாரியிலிருந்து மூட்டைகளை இறக்கி முதுகில் தூக்கி சுமந்துகொண்டு போகும் போதும்  இந்த சிந்தனை எழுந்து கொண்டே இருந்தது. லோடு இறக்கி முடித்த பிறகு வஹாப் அண்ணனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியபடியே வேலை செய்துகொண்டிருந்தான்.  

“யாரு எடுக்கச் சொன்னாங்க, எனக்கேதும் வெவரம் தெரியலையே குமார்”  என்று பதில் சொன்ன வஹாபுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ரோட்டோரம் சுடுகாட்ட ஒட்டி இரிக்கும் அந்த எடம் மட்டுமல்ல, அணைமேடு பகுதியும் கூட பொறம்போக்கு எடம்தானே. அப்ப அங்கிரிக்கும் எல்லா  வூடுகளயும் எடுக்கச் சொல்லுவாங்களே. அவருடைய வீடும் அங்குதான் கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கிறது. அவருக்குள்ளும் ஒருவித பய உணர்வு எழுந்தது.    .

“ஒருவேள அய்வேஸ்காரங்களா இரிக்குமோ!” சந்தேகத்துடன் வஹாப் சொன்ன பதிலைக் கேட்டதும் குமார் இன்னும் நிலை குலைந்தான்.

“அய்வேஸ்காரங்க எதுக்கண்ணா எங்க வூடுகள எடுக்கச் சொல்றாங்க?”

“ரோட்டோரத்துல குடிச போட்டாக்கா இப்பிடித்தா திடீர்னு வந்து  எடுக்கச் சொல்லுவானுங்க. அனேகமா அவுங்களாத்தா இரிக்கணும்”

“அவுங்க எதுக்குணா எடுக்கச் சொல்லுறாங்க?”

“ரோட்ட அகலப்படுத்துவாங்களா இரிக்கும்”

“என்னணா சொல்றீங்க, அப்படீனாக்கா எங்க வூடெல்லாம் போயிருமா?”  என்றபடி தலையில் கை வைத்துக்கொண்டு குமுறினான் குமார். .

“அப்பிடியெல்லாம் உடனே வந்து வூடுகளையெல்லாம் இடிக்க மாட்டாங்க. நா என்ன ஏதுணு கேட்டு உனக்கு வெவரம் சொல்றன். நீ இதயே நெனச்சிட்டிரிக்காதே.போ போயி ஏதாச்சும் சாப்பிட்டு வா.”

“இப்பத்தா வடயும் சாயாவும் சாப்புட்டணா”

இதுவரை அவர் கேள்விப்படாத செய்தி இது. இங்கு காலங்காலமாக குடியிருந்து வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் சாலையோரத்து வீடுகளையெல்லாம் எடுக்கச் சொல்லி இதுவரையிலும் நெடுஞ்சாலைத்துறையினர் யாருமே வந்து  அதிகாரம் பண்ணியது இல்லை, அவர் கேள்விப்பட்டதுமில்லை. குமார் சொல்வது ஆச்சிரியமாக இருந்தது அவருக்கு. கொஞ்ச நேரம் யோசித்தபடியே நின்றிருந்தார் வஹாப்.

அய்வேஸ்காரங்க சொல்லியிரிந்தா பொள்ளாச்சி ரோட்டோரத்து வீடுகளையும் எடுக்கச் சொல்லியிரிப்பாங்களே. அங்க யாருகிட்டயாவது கேட்டுப்பாப்போம் என எண்ணிக்கொண்டார். அவருக்குள்ளும் திக் திக் என அடித்துக்கொண்டே இருந்தது.

பல இடங்களில் சாலையோரங்களில் குடியிருந்து விட்டு, இந்த அணைமேடு  பகுதிக்கு குடிவந்த வந்த பிறகுதான் எப்போது வந்து வீட்டை எடுக்கச் சொலுவார்களோ என்ற பயமில்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருந்து வருகிறார் அவர்.    .

“குமார், வாடா எதுனாச்சும் சாபுட்டுட்டு வருவோம்.”

“வேண்டாம்ணா பசியில்ல. நீங்க போயிட்டு வாங்க” என்றான் குமார்.

சுடுகாட்டின் மேற்குப்புற மதிற்சுவரை ஒட்டி மெயின் ரோட்டில் வரிசையாக இருக்கும் குடிசை வீடுகளில் முதல் வீடு குமாருடையது.

அவனை நம்பி அந்த குடிசை வீட்டில்  அவன் மனைவியையும் சேர்த்து நான்கு ஜீவன்கள். வரிசையாக பிறந்தது மூன்றுமே பெண் குழந்தைகள். கஷ்ட ஜீவனம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்றாடம் உழைத்துக் கிடைப்பதை கொண்டு வாழ்க்கையை ஓட்டும் குமார் இப்போது மார்க்கெட்டில் அரிசி மண்டியில் அரிசி லோடு ஏற்றி இறக்கும் வேலை செய்து வருகிறான்.

அவன் தந்தை ஆறுமுகம் சிறு வயது முதலே தோல் ஷாப்பி‌ல் தோல் பதனிடும் வேலை செய்தவர். தோல்களை ஊர வைக்கும் மருந்து கலந்த பெரிய பெரிய கழிவு தொட்டிகளில்தான் அவரைப் போன்ற சாதாரண தொழிலாளிகளின் அன்றாட வேலை. தோல் பதனிடும் அந்த பெரிய நிறுவனத்தில் இது போன்ற வேலைகள் செய்து வந்த கூலித்  தொழிலாளிகள் நிறையப் பேர் நாளடைவில் சயரோகம் நோய் பிடித்து  கொஞ்ச நாட்கள் இருமிக்கொண்டே இருப்பார்கள். சரியாக கவனிக்காமல் விட்டு நோய் முற்றி இறந்து போயிருக்கிறார்கள்.

குமாரின் தந்தையும் இப்படியாக இருமி  இருமி படுக்கையில் விழுந்து கடைசி நேரத்தில் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் இறந்து போனார்.           

குமார் வாட்ட சாட்டமாக பலம் கொண்டவனாக இருந்ததால் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஒர்க் ஷாப்களுக்கு லாரிகளில் வந்திறங்கும் பொருட்களை இறக்குவதற்கும் அதேபோல லோடு ஏற்றுவதற்கும் அவனைத்தான் கூப்பிடுவார்கள்.

“எம் மவனும் சீக்குப் புடிச்சு சாகண்டா“ என்று அவனை தோல் ஷாப்புக்கு அனுப்ப அம்மா மறுத்துவிட்டார் அதனால் குமார் சிறு வயது முதலே  இப்படியான வேலைகளைத்தான் செய்து வந்தான்.

அவ்வப்போது குடிசை வீடுகளுக்கு தென்னம் மட்டை வேயப்போவது போன்ற வேலைகளையும் செய்து வந்த குமாரை வஹாப் பாய்தான் அவர் வேலை செய்யும் அரிசி குடோனில் வேலைக்கு சேர்த்து விட்டார். அந்த அரிசி மண்டியில் லோடு ஏற்றவும்  இறக்கவும் ஐந்தாறு பேர் வேலைக்கு இருந்தார்கள்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் அரிசி மண்டிக்கு சென்றாகணும். இரவு எட்டரை வரை குடோன் திறந்திருக்கும். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும், வண்டி இழுக்கும் தொழிலாளிகள் யாரும் மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்வதில்லை. பக்கத்தில் இருக்கும் சிறிய ஹோட்டலில் தினமும் புரோட்டா அல்லது தக்காளி சாதமோ, புளி சாதமோ சாப்பிட்டு, அல்லது வடையும் டீயும் சாப்பிட்டு அவர்களின் வாழ்க்கைப்பாட்டை  ஓட்டிக்கொள்வார்கள்

மார்க்கட்டில் வண்டி இழுப்பவர்களும் லோடு ஏற்றுபவர்களும் மூட்டை தூக்குபவர்களும், மார்க்கெட்டிலிருந்து வந்து போக சிரமம் இல்லாத ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்தப் பகுதிகளில் சாலையோரத்திலிலும், நொய்யலாற்றின் கரைப்பகுதிகளில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். கல்வியில் பின்தங்கிய ஏழை எளியவர்களுக்கு குறைந்த ஊதியத்தில்  வெயிலிலும், மழையிலும் அலைந்து உழைக்கும் இந்த கூலி வேலைதான் அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கு உதவிக் கொண்டிருந்தது.   

குமாரின் மூத்த மகள் கௌரி பதினெட்டு வயதை நெருங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தவள் செல்வி குறிச்சிப் பிரிவு இட்டேரி ஆரம்ப பள்ளியில் ஐந்தாவது வரை படித்தாள். மேற்கொண்டு நகருக்கு அனுப்பி படிக்க வைக்க அவனுக்கு விருப்பமும் வசதியும் இல்லாததால் தெருவில் விளையாடிக் கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறாள். கடைசிப்பெண் மகேஸ்வரி அதே பள்ளியில் நான்காவது படித்துக் கொண்டிருக்கிறாள்.

பெரியவளுக்கு எப்படியாவது இந்த ஆண்டு திருமணம் நடத்தி விடவேண்டும் என கங்கணம் கட்டி கஷ்டப்பட்டு சிறுகச் சிறுக பணம் சேர்த்துக் கொண்டிருந்தான் குமார். இந்நிலையில் வீடுகளை இடித்து இங்கிருந்து தங்களை அப்புறப்படுத்திவிட்டால் தன் குடும்ப நிலமை என்னாகும்? இதே சிந்தனையுடன் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் குடிசைகளை அகற்றுவது பற்றிய எந்த பரபப்பும் இல்லாமல் வழக்கம் போலவே அவன் குடியிருக்கும் பகுதி அமைதியாக கிடக்க, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.   

வஹாபும்  கொஞ்சம் நேரமாகவே கிளம்பி வந்துவிட்டார். சில சமயம் இருவரும் ஒன்றாகவே வருவார்கள். அவரின் வீடு அணைமேடு பக்கம் ஆற்றின் கரையோரம் இருந்தது. அவருக்கும் மூன்று குழந்தைகள்.   கல்யாணம் ஆகும் வயதில் மூத்த பெண். மகனும் இன்னொரு மகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த வருமானத்தில் ஆசைப்பட்ட எதையும் எதிர்பார்க்க முடியாத, வாங்க முடியாத வருத்தத்துடன் நகரும் வாழ்க்கை. கிடைக்கும் கூலியில் வாடகை கொடுக்கக் கூட முடியாத நிலையில் இவரைப் போன்ற அன்றாடங்காச்சிகள் எங்காவது சாலையோரங்களிலும் புறம்போக்கு இடங்களிலும் குடிசை போட்டு தங்களின் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.       

நட்சத்திரங்களே இல்லாமல் வானம் கருமை பூசிக்கிடந்தது. சுடுகாட்டுக்குள் மதிலோரத்தில் இருந்த வேப்ப மரங்களின் கிளைகள் சுடுகாட்டுப் பேய்களின் கரிய கரங்களைப் போல வெளிப்பக்கம் நீண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது பார்ப்போரை பயப்படுத்துவதாய் இருந்தது. சுடுகாட்டு மதிலோரம் படுத்திருந்த இரண்டு மூன்று நாய்கள் வஹாபின் காலடி ஓசை கேட்டு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கால்களின் மீது தலை வைத்தபடி படுத்துக்கொண்டன.

காலையில் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் வெளியே களேபரமும்   அழுகை சத்தமுமாக இருக்க பதட்டத்துடன் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார் வஹாப். அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக தெரு முனையில் புல்டோசர் வாகனமும் ஒரு லாரியில் ஆட்களும் வந்து இறங்கி நின்றிருந்தார்கள். நீர் நிலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உத்தரவு என்று ஜீப்பில் வந்த அதிகாரிகள் குடிசைவாசிகளிடம் மிரட்டலாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

திடீர்னு இப்பிடி குடிசை வீடுகளை இடிக்க  வந்திருக்காங்களே! ‘குடியிருக்க சொந்த வீடில்லாம இப்பிடி ரோட்டோரத்திலும் புறம்போக்கிலும் குடிசை போட்டு வாழும் ஏழை எளிய மக்களான நாங்க ஆக்கிரமிப்பாளர்களா?’ வருத்தம் மேலிட தன் வீட்டை இழக்கும் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல், இப்போது என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் இடிந்துபோனவராக அப்படியே நின்றிருந்தார் வஹாப். அவருடைய மனைவியும், குழந்தைகளும் கண்ணீருடன் அப்படியே செய்வதறியாமல் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள். சிலர் அதிகாரிகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்க, அந்தப் பகுதி முழுக்க இருந்த போக்கிடமற்ற பெண்களின் கதறல் காற்றில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. யாருடைய கதறலும் அதிகாரிகளின் காதில் விழவில்லை.          ‘அய்யோ! அடுத்து நம்ம வூட்டுப் பக்கமும் இடிக்க வருவாங்களே’ தன் நிலைமையை நினைத்து தூரத்தில் தன் வீட்டின் முன்புறம் நின்றிருந்த குமாரும் பதட்டமடைந்து பதறியவனாக, கதற ஆரம்பித்தான்.

Related posts

Leave a Comment