யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள்
இந்தியத் துணைக்கண்டத்தின் அல்காய்தா பிரிவுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மௌலானா கலீமுதீன் முஜாஹிரி 2019இல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு, பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டது, தனது வீட்டில் மத ஒன்றுகூடல்களை நடத்தி அதில் அல்காய்தா தொடர்பான தகவல்களை வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. பதினான்கு மாதச் சிறைவாசத்திற்குப் பிறகு ஜார்கண்ட் உயர்நீதி மன்றம் அவருக்கு நவம்பர் 2020இல் பிணை வழங்கியது. 2016இல் இந்த வழக்கில் முதல் கைது மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏறத்தாழ ஒரு தசாப்த காலச் சட்டப் போராட்டத்திற்குப் பின் முஜாஹிரி, ஒடிஸா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த மௌலானா அப்துல் ரஹ்மான் அலி கான், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அப்துல் சமி ஆகிய மூவரை, ஜாம்ஷெட்பூர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் பிப்ரவரி 28, 2025 அன்று வழக்கிலிருந்து விடுதலை செய்தது. ‘குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதுமான வலுவான ஆதரங்கள் இல்லை. அரசு தரப்பு தனது வாதத்தை நிரூபிப்பதில் மோசமாகத் தோல்வியடைந்துள்ளது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோதும் அல்காய்தாவுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் காரணமாக சமூகப் புறக்கணிப்பையும் பொருளாதாரச் சிக்கல்களையும் தானும் தன் குடும்பத்தினரும் சந்தித்துவருவதாக முஜாஹிரி வேதனையுடன் குறிப்பிடுகிறார். ‘என்உறவினர்களில் சிலர் இப்போதும் என்னைச் சந்திக்கவரவில்லை. என்னைப் பார்த்தால் மக்கள் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்கின்றனர். உள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இந்த வழக்கு என்னைப் பாதித்துள்ளது’ என்று ஆர்ட்டிக்கிள் 14 இணையதளத்திடம் ஜூலை மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
கேரளாவில் தேயிலை தோட்டத் தொழிலாளிகளின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய என்.கே. இப்ராஹிம் 2015இல் தனது 61வது வயதில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 2014இல் வயநாடு வெள்ளமுண்டாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரின் இருசக்கர வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. மாவோயிச ஆதரவாளர் என்று இவர்மீது குற்றம் சுமத்திய காவல்துறை யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தது. ஆனால் குறிப்பிட்ட தினத்தில் வெள்ளமுண்டாவில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான நெடும்பாலாவில் அவர் இருந்ததாகவும், மாவோயிஸ்ட்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்த கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் நீரிழிவு, இதயக் கோளாறு என உடல் உபாதைகளால் அவதிப்பட்ட தன் தந்தையின் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு ஏன் மாற்றினார் என்று மகன் நவ்ஃபல் கேள்வி எழுப்பியதில் நியாயம் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றின்போதும் இவருக்குப் பிணை வழங்கப்படவில்லை. ஆறு வருடங்களில் தலா ஒரு நாள் என்று இருமுறை மட்டுமே இவருக்கு பரோல் வழங்கப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட இரு வழக்குகளில் 2021இல் ஒரு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இப்ராஹிம், மற்றொரு வழக்கில் டிசம்பர் 2021இல் ஜாமீன் பெற்றார்.
மார்ச் 2021இல் குஜராத் சூரத்தில் உள்ள முதன்மை நீதிமன்றம், தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 127 நபர்களை இருபது ஆண்டுகளுக்குப் பின் விடுவித்தது. 2001 செப்டம்பரில் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் தடை செய்தது. சிமியின் பெயரால் அப்போது கைதுகளும் சோதனைகளும் நடைபெற்றன. டிசம்பர் 2021இல் ஆல் இந்தியா மைனாரிட்டி எஜுகேஷன் போர்டு, முஸ்லிம்களின் கல்விநிலை குறித்த கருத்தரங்கை நடத்த இருந்த நிலையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. சிமியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே இவர்கள் கூடியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு ‘சிமி வழக்கு’ என்று இந்த வழக்கு பரபரப்பாக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
ஆரம்ப நாள்களில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டனர். ஒரு வருடத்தில் பிணை கிடைத்தது மட்டுமே இவர்களுக்கான பெரும் நிம்மதியாக இருந்தது. (யுஏபிஏ சட்டத்தில் கடும் பிரிவுகள் சேர்க்கப்படுவதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட வழக்கு இது என்பது கவனிக்கத்தக்கது). ஆனால் இந்த வழக்கின் காரணமாக சமூகத்தில் பல நெருக்கடிகளைத் தாங்கள் சந்தித்ததாகவும், நிரந்தர வேலை கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் விடுதலை செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். வழக்கு விசாரணைக்காக தமிழ்நாட்டிற்கும் குஜராத்திற்கும் அலைந்ததிலேயே இவர்களின் நாள்கள் கழிந்தன. வாய்தா குறித்து அறிவிக்கவரும் காவல்துறையினர் தங்களைக் குறித்து தவறான தகவல்களை அக்கம் பக்கத்தில் பரப்பியதாகவும், அதனால் முஸ்லிம்களேகூட தங்களைக் குற்றவாளிகளாகப் பார்த்ததாகவும் வருத்தத்துடன் பதிவுசெய்தனர். உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு தசாப்தங்கள் கழித்து கிடைத்த விடுதலை என்ன நிம்மதியைக் கொடுத்துவிடப்போகிறது?
2021 ஜூன் மற்றும் ஜூலை மாதத் தொடக்கத்தில் மட்டும் ஐந்து யுஏபிஏ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் அல்லது நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில் கோகாய் மீதான இரண்டு வழக்குகளில் இருந்தும் இந்தக் காலகட்டத்தில் அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. டிசம்பர் 2019இல் கைது செய்யப்பட்ட அகில் கோகாய், சிறையில் இருந்தபடியே 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
2010இல் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் குஜராத்தில் கைது செய்யப்பட்டார் கஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அஹ்மது. 12 வருடங்களில் ஒரு நாள்கூட பரோல் கிடைக்காத பஷீர், 2021இல் விடுதலை செய்யப்பட்டார். மகனின் விடுதலைக்காக நீதியைத் தேடிப் பயணித்த அவர் தந்தை 2017இல் புற்று நோயினால் மரணமடைந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்குகூட பஷீருக்கு பரோல் கிடைக்கவில்லை. 12 வருடங்களில் ஒருமுறை மட்டுமே பஷீரைச் சந்தித்திருந்தார் அவரின் தாய். பஷீர் கைது செய்யப்பட்டபோது அதனை மிகப்பெரும் வெற்றியாக அறிவித்தார் அப்போதைய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை. ‘பெப்ஸி பாமர்’ என்று பஷீருக்கு அடைமொழி கொடுத்து தங்கள் பங்கை ஊடகங்கள் நிறைவேற்றன. 12 வருடங்களை சிறையில் தொலைத்த பஷீர் வெளியே வந்தபோது இவர்கள் யாரும் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
பீமா கொரேகான் வழக்கு, டெல்லி கலவர வழக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு எனப் பல வழக்குகளில் ஏராளமான நபர்கள் பிணை இன்றி மூன்று முதல் ஏழு வருடங்கள்வரை சிறையில் அடைபட்டுள்ளனர். பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி, சிறையிலேயே மரணமடைந்தார். டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் காலித் உள்ளிட்டவர்களின் பிணை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குகூட நீதிமன்றங்கள் தயக்கம் காட்டுகின்றன. புற்றுநோய், பார்க்கின்ஸன் உள்ளிட்ட ஒன்பது நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் முன்னாள் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் பிணை இல்லாமல் சிறையில் உள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ்.இஸ்மாயில் வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் பிணை மறுக்கப்படுகிறது.
பிணையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் நூற்றுக்கணக்கான சிறைவாசிகளும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் மன ரீதியான, பொருளாதார ரீதியான, சமூக ரீதியான சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு நாம் மேலே குறிப்பிட்டுள்ள சில வழக்குகள் போதுமானவையாக இருக்கும்.
அதிகரிக்கும் கைதுகள், குறைந்துவரும் தண்டனை விகிதம்!
யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைதுகள் அதிகரித்து, தண்டனை விகிதம் குறைந்து வருவதைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 1960களில் உள்நாடு மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காகவும், நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகவும் இச்சட்டம் 1967இல் இயற்றப்பட்டது. 1962 இந்திய–சீனா போர், 1965 இந்திய–பாகிஸ்தான் போர், தமிழ்நாட்டில் நடைபெற்றுவந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கை ஆகிய சூழல்களின் பின்னணியில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்டவர்களையும் அரசியல் எதிரிகளையும் பழிவாங்குவதற்காக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2004, 2008, 2012, 2019 ஆகிய ஆண்டுகளில் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இதனை மிகப்பெரும் கொடிய கறுப்புச் சட்டமாக மாற்றி, பிணை பெறுவதை கடினமாக்கின. ‘பயங்கரவாதம்’ என்ற பதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பரந்த, தெளிவற்ற விளக்கம் யார்மீதும் அந்த முத்திரையைக் குத்துவதற்கு அதிகாரத்தை வழங்குகிறது. தனிநபர்களையும் பயங்கரவாதியாக அறிவிக்கும் பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் முடக்கம், பிணை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், அதனால் நீடித்துவரும் சிறைவாசம் என இச்சட்டத்தின் கொடுங்கரங்கள் பரந்து விரிந்துள்ளன.
2014 முதல் 2024 வரை யுஏபிஏ மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கைதுகள், தண்டனை விகிதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைஸி ஆகஸ்ட் 2024இல் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 8719 யுஏபிஏ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும், 222 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், 567 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது.
வருடம் | பதிவு செய்யப்பட்ட வழக்குகள் | விடுவிக்கப்பட்ட வழக்குகள் | தண்டனை பெற்ற வழக்குகள் |
2014 | 976 | 24 | 9 |
2015 | 897 | 65 | 11 |
2016 | 922 | 22 | 11 |
2017 | 901 | 33 | 34 |
2018 | 1182 | 68 | 34 |
2019 | 1226 | 64 | 33 |
2020 | 796 | 99 | 27 |
2021 | 814 | 39 | 27 |
2022 | 1005 | 153 | 36 |
மொத்தம் | 8719 | 567 | 222 |
அதாவது, 6.5 சதவிகித வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 2.55 சதவிகித வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 90 சதவிகித வழக்குகள் நிலுவையில் உள்ளன. யுஏபிஏ வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் விசாரணை சிறைவாசிகளாகவே உள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் நிரூபிக்கின்றன.
2022இல் அதிகப்படியாக ஜம்மு கஷ்மீரில் 371 வழக்குகளும், மணிப்பூரில் 167 வழக்குகளும், அஸ்ஸாமில் 133 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 101 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் அவ்வருடம் 4 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
பண மோசடி வழக்குகளின் விபரங்களையும், (2024 வரை) மாநில வாரியாக தற்போதுவரை எத்தனை நபர்கள் சிறைகளில் உள்ளனர் என்ற விபரங்களையும் வழங்கிய உள்துறை அமைச்சகம், யுஏபிஏ வழக்குகளில் அத்தகைய விபரங்களை வழங்கவில்லை. அத்துடன் யுஏபிஏ சட்டத்தின் கீழ் தற்போது எத்தனை நபர்கள் சிறைகளில் உள்ளனர் என்ற விபரங்களை குற்ற ஆவணக் காப்பகம் வைத்திருப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. (மக்களவை கேள்வி எண்:2376, உள்துறை அமைச்சகம்)
2014ற்குப் பிறகு யுஏபிஏ வழக்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகளை மையமாக வைத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய புலனாய்வு முகமையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் 2009 முதல் 2014 வரை வெறும் 69 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும், 2014 முதல் 2022 வரை 288 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பியூசிஎல் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, 2014ற்குப் பிறகு யுஏபிஏ வழக்குகளின் எண்ணிக்கை 160.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2014இல் சராசரியாக ஒரு வருடத்திற்கு 14 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2014ற்குப் பிறகு இந்த எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.
2015 மற்றும் 2019ற்கு இடைப்பட்ட ஐந்து வருட காலங்களில் தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் யுஏபிஏ வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளன. 2015இல் யுஏபிஏ சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வெறும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 2019இல் இந்த எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது. மற்ற வருடங்களைவிட 2019இல் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த ஐந்து வருட காலத்தில் நாடு முழுவதும் 6104 வழக்குகளில் 7050 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். வழக்குகளின் எண்ணிக்கை 36.38 சதவிகிதம் அதிகரித்திருந்த நிலையில் கைதுகளின் எண்ணிக்கை 72.7 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
இந்தப் பகுப்பாய்வை மேற்கொண்ட சமூகச் செயற்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக், ‘எதிர்க்குரல்களை நசுக்குவதற்கும் மனித உரிமைக் காப்பாளர்களையும் சமூக நீதிச் செயற்பாட்டாளர்களையும் துன்புறுத்துவதற்கும் யுஏபிஏ பயன்படுத்தப்படுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு ஆதரிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்று வருடங்களுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ள யுஏபிஏ வழக்குகள் 2019 இறுதியில் 40 சதவிகிதமாக இருந்த நிலையில் 2022 இறுதியில் இந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரித்தது. 2018 முதல் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் யுஏபிஏ வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் 67 சதவிகிதத்தினர் விசாரணை சிறைவாசிகளாக இருந்தனர். பொதுவாக, இந்தியாவில் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், யுஏபிஏ வழக்குகளில் பிணை வழங்கப்படுவதில் உள்ள கெடுபிடிகள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.
‘பிணை என்பதே விதி, சிறை என்பது விதிவிலக்கே’ என்று நீதிமன்றங்கள் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளன. குற்றச்சாட்டுகள் மோசமாக உள்ள நிலையில் பிணை கிடைப்பது கடினமாக உள்ள வழக்குகளின் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை யாரும் கண்டுகொள்வதும் இல்லை, மீறுபவர்களைக் கேள்வி கேட்பதும் இல்லை.
நீதிக்கான குரல்கள் எங்கே?
பிணை இன்றி நீண்டகாலச் சிறைவாசம், நீண்டகாலச் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை என்று யுஏபிஏ பலரின் வாழ்க்கையைச் சீரழித்துவந்தாலும் அரசியல்வாதிகள் இதில் உரிய அக்கறை காட்டுவதில்லை. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. பண மோசடி வழக்கை எதிர்த்துக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் யுஏபிஏ வழக்குகளில் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுமே யுஏபிஏ வழக்குகளில் அதிகமாகக் கைது செய்யப்படுகின்றனர். யுஏபிஏ சட்டத்தை எதிர்த்து அறிக்கைகள் வெளியிடும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை விமர்சனம் செய்த ஆலன், தாஹா ஆகிய இரு இளைஞர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ததை நாம் இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது. பிஎம்எல்ஏ அளவிற்கு யுஏபிஏ தங்கள் ‘வர்க்கத்தை’ பாதிக்காது என்பதால் அரசியல்வாதிகள் அமைதி காப்பதுபோல் தெரிகிறது.
யுஏபிஏ வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்போது, அவை புனையப்பட்ட வழக்குகள் என்றோ, அரசு தரப்பு முறையான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டது என்றோ நீதிமன்றங்கள் வெளிப்படையாகத் தெரிவித்தபோதும், விசாரணை அதிகாரிகள்மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவுசெய்யப்படுவதற்கு இது முக்கியக் காரணமாகும். டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட தேவன்கானா கலிதா, நடாஷா நர்வால், ஆசிஃப் தன்ஹா ஆகியோருக்குப் பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் யுஏபிஏ குறித்து பல கேள்விகளை எழுப்பியது. உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் பின்னர் தெரிவித்தது. இதனால் வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்படுவதும் இழுத்தடிக்கப்படுவதும் குறையவில்லை.
யுஏபிஏ வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏதும் வழிமுறைகள் உள்ளனவா என்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, யுஏபிஏவின் கீழ் அவ்வாறு எந்த வழிமுறையும் இல்லை என்று பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் நடப்பிலிருக்கும் அரசியலமைப்பு, நிறுவன மற்றும் சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் யுஏபிஏ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கப் போதுமானவை என்று இயந்திரத்தனமான பதிலை அளித்தார்.
தான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர், அஸ்ஸாம் முதல் அமைச்சர், தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அகில் கோகாய் அப்போது கூறினார். புனையப்பட்ட வழக்குகள் என்று நீதிமன்றங்கள் வெளிப்படையாக அறிவித்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகள்மீதே நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உயர் பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது சற்று அதிகப்படியான ஆசைதான்!
பயங்கரவாதக் குற்றச்சாட்டு, பிணை மறுப்பு, நீண்டகாலச் சிறைவாசம், பல்லாண்டுகளுக்குப் பின்னர் விடுதலை, மறுக்கப்படும் நிவாரணம், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள், உள மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என யுஏபிஏ வழக்குகள் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் அதனைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் சமூகத்தில் எழுவது அவசியமாகும்.
References:
Charge Dismissed, A Muslim Cleric Is Living In The Shadow Of A Baseless Terrorism Case, www.article-14.com, updated: July 3, 2025
Half of UAPA investigations pending for over three years: Data, www.thehindu.com, updated: October 17, 2024
Nothing to show his involvement: Kerala HC grants bail to UAPA accused jailed since 2015, www.indianexpress.com, December 27, 2021
UP, Tamil Nadu record massive jump in UAPA cases in five years, www.deccanherald.com, last updated: August 17, 2021
UAPA: Anti – terror law now terrorizes citizens, www.deccanherald.com, last updated: July 11, 2021
யுஏபிஏ அரக்கன், புதிய விடியல், ஏப்ரல் 1-15, 2021
நீதியின் குரல், புதிய விடியல், ஜூலை 16-31, 2021