சமுக மாற்றத்தின் அடிப்படை
![]()
மாற்றம் என்பதே மாறாத விதி. அதில் இறை விதியும் பௌதீக விதியும் அடங்கும். மாற்றத்தை மனித இயல்பு விரும்புகின்றது, ஏற்றுக்கொள்கின்றது, எதிர்பார்க்கின்றது, வரவேற்கின்றது. மாற்றம் நிகழ வேண்டும் என்பதே அனைவரிம் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தை படைத்து, நிர்வகிக்கின்ற இறைவன் அந்த மாற்றத்தை அவனுடைய அடியார்களின் எதிர்பார்ப்போடும் அதற்கான ஏற்பாடுகளோடும் தொடர்பு படுத்தி வைத்திருக்கின்றான். “எந்த ஒரு சமூகமும் தாமாக தம்மை மாற்றாத வரை இறைவனும் அந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான்” (அர்ரஃத் :11) என்பது இறை விதி என்று அல்குர்ஆன் மாற்றம் குறித்த தனது பார்வையை முன் வைக்கிறது.
மனிதன் எப்பொழுதும் தனக்கு வக்கீலாகவும் அடுத்தவர்களுக்கு நீதிபதியாகவும் இருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையை அவன் மாற்றிக் கொள்கின்ற பொழுது மாற்றத்தை நோக்கி முதல் எட்டுகளை எடுத்து வைக்க முடியும். தன்னை, தன்னியல்புகளை அப்படியே வைத்துக்கொண்டு தொலைதூர மாற்றம் ஒன்றை அவன் எதிர்பார்ப்பதாக இருந்தால் அது சமூக மாற்றம் பற்றிய குறை புரிதலின் வெளிப்பாடாகும்.
மாற்றம் எங்கு நிகழ வேண்டும்? எதில் நிகழ வேண்டும்? எப்படி நிகழ வேண்டும்? யாரிடம் நிகழ வேண்டும்? என்று மனிதன் மிகச்சரியாக உணர்வு பெற வேண்டும்.
மாற்றம் மேல் இருந்து கீழ் நோக்கி (top to bottom) நிகழ வேண்டுமா அல்லது கீழ் இருந்து மேல் நோக்கி (bottom to top) நிகழ வேண்டுமா? என்பதல்ல முக்கியம். முறையாக திட்டமிட்டு அதற்கான அடிப்படை ஒழுங்குகளை வகுத்துச் செயல்பட வேண்டும். அதனை தொடர்ச்சியாக, முறையாக கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும். இடையிடையே தோன்றுகின்ற சருக்கல்களை, பிழைகளை, தவறுகளை சீர்படுத்தி புனரமைக்க வேண்டும். இதுதான் மாற்றத்திற்கான படிமுறை ஒழுங்கு.
மாற்றம் என்பது சமூகம் தொடர்பான ஒன்றாக இருப்பினும் கூட சமூகத்தின் அஸ்திவாரமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரிலும் இருந்து அது ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் தத்தமது உடல்சார், உளம்சார், சிந்தனைசார், மன எழுச்சிசார் மாற்றங்கள் நிகழ வேண்டும். மாற்றங்கள் தனித்தனியாக ஒவ்வொரு தனிமனிதரிலும் நிகழத்தக்க மாற்றங்களே. இதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றமாகி மேம்பாட்டை நோக்கி நகரும்.
நமது முயற்சி எதுவுமின்றி மாற்றம் உடனடியாக நிகழாது. தற்செயலாக சாத்தியப்படவும் மாட்டாது. மனித முயற்சிகள் இன்றி அது முழுமை பெறவும் மாட்டாது. மாற்றம் நிகழ மனித முயற்சிகள், பௌதீக விதிகள் போன்றன கருத்தில் கொள்ளப்படுவதோடு இறை நியதிகளும் தொழிற்பட வேண்டும். இறை உதவியும் நிச்சயம் அதற்கு வேண்டும். மாற்றங்கள் நிகழ நாம் தியாகங்கள் செய்ய வேண்டும்.
தனி மனிதரில் தொடங்கி, குடும்பம், சமூகம் என்று அது விரிந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் தேவைக்கும் அவசியத்துக்கும் ஏற்ப மாற்றத்தின் பரிமாணம் வேறுபடும். வித்தியாசப்படும். அந்தந்த சமூக குழுக்களும் துறை சார்ந்தவர்களும் அதனை தீர்மானிக்க ஆற்றல் பெற்றவர்கள். அரசியலில் நிகழும் மாற்றம், கல்வித்துறை சார்ந்த மாற்றத்தில் பங்கெடுத்தாலும் அதற்கு நிகரான மாற்றமாக ஒருபோதும் இருக்காது. சமயம் சார்ந்த வகையில் நிகழக்கூடிய ஆன்மீக மாற்றம் பொருளாதாரத்தில் நிகழக்கூடிய மாற்றத்திற்கு நிகரானதாக ஒரு போதும் இருக்க முடியாது. ஒரு நாட்டில், பிரதேசத்தில் நிகழக்கூடிய மாற்றம், மாற்றப் பொறிமுறை இன்னொரு நாட்டுக்கு எந்த வகையிலும் பொருந்தாத ஒன்றாகக் கூட இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு சமூகத்துக்கும் நேர் வழியைக் கொடுத்து இறை தூதர்களை அனுப்பும் பொழுது அந்தந்த சமூகத்தின் பிரச்சினைகளை அக்குவேர் ஆணிவேர் என பிரித்து சல்லடை போட்டு அறியக்கூடிய, ஆய்வு செய்யக்கூடிய, அறிவுரை வழங்கக்கூடிய, அதே சமூகத்தின் மொழியை பேசக்கூடிய ஒருவரையே தெரிவு செய்து தூதை சுமக்க அனுப்பினான். அப்படித்தான் மாற்றத்தின் வித்தை தூவி விடுகின்றான்.
ஒவ்வொரு துறையிலும் இன்று மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருளாதார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக என எல்லா துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மாற்றங்கள் இயல்பாக நிகழட்டும் என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. மாற்றத்தின் பார்வையாளராக இருந்து விடாமல் மாற்றத்தின் பங்காளியாக, மாற்றத்திற்காக பணியாற்றக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை தமது முதுகில் சுமந்து முன்னோக்கி துணிவுடன் செல்ல வேண்டும். மாற வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும். மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும். அதனை சாத்தியமாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை, ஒழுங்குகளை, நுட்பங்களை, மூலோபாயங்களை வகுக்க வேண்டும்.
மனித உள்ளம் அடிக்கடி துருப்பிடித்து விடுகின்றது. உள்ளத்தில் பிறரை சாட வேண்டும், பிறரை அவமதிக்க வேண்டும், பிறரை விட தான் முன்னிலையில் நிற்க வேண்டும் போன்ற கெட்ட எண்ணங்களும் மோசமான உணர்வுகளும் அடிக்கடி வந்து போகின்றன. இந்த இடத்திலிருந்து அவன் தன்னை மாற்ற ஆரம்பிக்க வேண்டும். அகம் சார்ந்த ஆழ்மன மாற்றம் இதுதான்.
மனித உணர்வைக் கெடுக்க, சிதைக்க எல்லா ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகும் பொருளாதார உலகும் போட்டியிட்டு இதற்கு களம் அமைத்து விடுகின்றன. இறைவனை மறந்து தன்னையே கடவுளாக்கிக் கொண்டு விடுகின்ற ஒரு நிலை மனிதனுக்குள் ஏற்பட்டு விடுவதுண்டு. இந்த இடத்தில் தன்னை, தன் இயலாமையை, பலவீனத்தை உணர்கின்றவனாக அவன் மாற வேண்டும்.
தனக்கு கிடைத்திருக்கின்ற அறிவு, ஆற்றல், திறன், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு, போன்றவற்றை மனிதன் பெரிதாக கருதுகின்ற பொழுது அது அவனுக்கு கடவுளாக மாறுகின்றது. இந்த நிலைக்கு ஆட்பட்டு விடாமல், தான் இறைவனின் படைப்பு என்பதை உணர்ந்து படைப்புகளுக்கு பணியாற்ற வேண்டும் என்ற தன்மையை நோக்கி அவன் மாற வேண்டும். அதுதான் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
இதை விடுத்து தனக்கு வாய்த்திருக்கின்ற அனைத்தையும் வைத்துக் கொண்டு, தம்பட்டமடித்து அவற்றை கடவுளாய் கருதி வணங்கி தன்னளவில் பூஜித்துக் கொண்டிருக்கின்றான் என்றால் அங்கு ஆன்மீக ரீதியான ஒரு மாற்றத்திற்கு அடித்தளம் இடுவது சிரமமாக அமையும். ஆனால் அதனை அவன் உணர்ந்து கொள்ள மாட்டான். பிறர் இவற்றை செய்கின்ற பொழுது விரல் நீட்டுகின்ற மனிதன், தான் அத்தகைய தவறுகளில் விழுகின்ற பொழுது அதனை தட்டிக் கழித்து விடுகின்றான். தன்னுணர்வற்ற நிலையில் கடந்து விடுகின்றான். இத்தகைய தலைகீழ் நிலையை அவன் புரிந்து கொள்கின்ற பொழுது, மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டிய புள்ளியை அடையாளப்படுத்திக் கொள்கின்றான். இது இன்னொரு வகை மாற்றம். மாற்றம் நபருக்கு நபர், இடத்துக்கு இடம் மாற்றமடையும்.
இந்த நிலையில் மனிதன் தன் ஆன்மாவோடு உரையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது. அவனது உள்ளத்தை நோக்கி அவனே பேசுகின்ற பொழுது அவனது உள்ளம் நிச்சயம் அதனை மாற்றிக் கொள்ளும். மனிதர்கள் தாமாக தமது அகம் சார் விடயங்களை மாற்றிக் கொள்ளாத வரை, இறைவன் அவர்களின் புறம் சார் விடயங்களை மாற்ற மாட்டான் என்கிறது திருமறை. சமூக மாற்றம் நம்மிடம் இருந்து உருவாக வேண்டும். அதற்குத்தான் இறைவன் ஒத்துழைப்பான். உதவி செய்வான். வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவான் என்கிறது திருமறை.
எனவே உள்ளத்தை பரிசுத்தப்படுத்தவும் அதில் அப்பிப் படிந்திருக்கின்ற கறைகளை, துருக்களை நீக்கவும் முற்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வான். பிறர் பற்றிய தப்பபிப்பிராயங்களை, பிழையான மதிப்புகளை அகற்றிக் கொள்வான். மனிதனை மனிதனாக மகத்துவம் கொண்ட படைப்பாக கருதி செயல்படுவான். மனிதன் மாற்ற வேண்டிய முதல் இடம் அவனுடைய அகம்தான். அகத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகங்காரத்தை மாற்றிக் கொண்டால் அகிலத்தில் மிகப்பெரிய அதிசய மாற்றங்களை எல்லாம் சாத்தியப்படுத்தலாம்.
(சமூக மாற்றம் குறித்து கட்டுரையாளர் எழுதியுள்ள விரிவான புத்தகத்தை வாங்குவதற்கு: https://www.commonfolks.in/books/d/samuga-maatrathil-naan)

