நாய்களுக்கு கிடைக்கும் நீதி, செயற்பாட்டாளர்களுக்கு இல்லை!
– இஜாஸ் அஷ்றஃப்
2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்த உள்ளார்ந்த அநீதிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழும் என்று நினைத்தேன். ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் வெளிப்படுத்திய கோபத்திலிருந்து எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ‘முஸ்லிம்களை விட நாய்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ — கசப்பினால் மட்டும் நான் இவ்வாறு கூறவில்லை.
தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தீர்ப்பு குறித்த கோபம், ஆகஸ்ட் 11 உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை தாமதிக்காமல் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தை நிர்ப்பந்தித்ததாகத் தெரிகிறது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, குடற்புழு நீக்கி, தடுப்பூசி போடப்பட்ட பிறகு பிடிக்கப்பட்ட இடங்களுக்கே அவை திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று ஆகஸ்ட் 22 அன்று உச்ச நீதிமன்றம் கூறியது. ‘தெருக்களில் வாழ்வதற்கான தெருநாய்களின் உரிமை’ என்பதை ‘குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு‘ என்பதுடன் சமன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் வெறும் 11 நாள்களை மட்டுமே எடுத்துக் கொண்டது.
டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை ஒட்டுமொத்த நீதிமன்றங்களும் ஆமை வேகத்தில் கையாண்ட விதமானது, நாய்களுக்கு நீதி வழங்குவதில் உச்ச நீதிமன்றம் காட்டிய சுறுசுறுப்பிற்கு முற்றிலும் மாறானது. சிறையில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் ஜாமீன் மனுக்கள், நீதிபதிகள் அவற்றை விசாரிப்பதில் இருந்து விலகுவதால், பல்வேறு நீதிமன்றங்களிலும் ஒரு அமர்விலிருந்து மற்றொரு அமர்விற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன, அல்லது, வாதங்களைக் கேட்டு முடித்தும் பல மாதங்களாக உத்தரவுகளை பிறப்பிக்காத நிலையில் அவர்கள் மாற்றப்பட்டனர். இதனால் ஜாமீன் நடைமுறையை ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்க வேண்டியதாகின்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 18 பேரில் ஒன்பது செயற்பாட்டாளர்களும் அடங்குவர். இந்தப் போராட்டம், பிப்ரவரி 2020 டெல்லி வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதி என்பதாக அரசு கூறுகிறது. வன்முறையில் ஐம்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை
அவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தாமதமாகிவருவதற்கும், நீதிமன்றங்கள் அவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தயங்குவதற்கும் காரணமாக இருக்குமா? அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது பொதுமக்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்குமா?
ஒன்பது செயற்பாட்டாளர்களை விட நாய்கள் அதிர்ஷ்டசாலிகள். 2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 37.17 லட்சம் நாய்க் கடிகள் நடந்துள்ளதாகவும், அவற்றில் பலவற்றில் அதிர்ச்சியாலும் ரேபிஸ் தொற்றினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆயினும், அவற்றைத் தெருக்களில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான உத்தரவு பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது. ‘கருணைமிகு அணுகுமுறை’ என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முந்தைய உத்தரவை ரத்து செய்வதற்கு இது வழி வகுத்தது.
(டெல்லி கலவர வழக்கில்) விசாரணை இன்னும் தொடங்கப்படாத காரணத்தால், ஒன்பது செயற்பாட்டாளர்களையும் ஜாமீனில் விடுவித்திருந்தால், அது நீதிமன்றங்களின் கருணையை வெளிப்படுத்தி இருக்கும். இந்த வழக்கில் 800 முதல் 900 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால், அவர்களின் குற்றத்தைத் தீர்மானிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும். நீதித்துறை, நாய்களுக்குச் செய்ததுபோல், செயற்பாட்டாளர்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமைகளை, அரசு மற்றும் மக்களின் பாதுகாப்புடன் சமநிலைப்படுத்தியிருக்க வேண்டாமா?
நாய்களைக் கருணையுடன் நடத்த வேண்டும் என்ற விதிக்கு ஒரு விதிவிலக்கு உள்ளது. அதாவது, ரேபிஸ் வந்த நாய்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதேபோல, “ஜாமீன்தான் விதி, சிறை விதிவிலக்கு மட்டும்தான்” என்பது நீதித்துறையின் வழிகாட்டும் நெறிமுறையாகும். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆரம்பக் கணிப்பில் (prima facie) உண்மை உள்ளதாக நீதிமன்றத்திற்கு தோன்றினால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட வேண்டும் என்பது UAPAஇன் கீழ் ஒரு விதிவிலக்காக இருக்கிறது.
ஆனால், ஒரு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களை அவற்றின் நம்பகத்தன்மைக்காக ஆய்ந்து சோதித்தால் அது prima facie கிடையாது என்று உச்ச நீதிமன்றம் வட்டாலி வழக்கில் (ஷக்கூர் அஹமது வட்டாலி எதிர் இந்திய அரசு வழக்கில்) தீர்ப்பளித்தது. அரசின் கூற்று, பகுப்பாய்வு எதுவுமின்றி, முதற் பார்வையில் உண்மையாகத் தோன்றுகிறதா இல்லையா என்று தீர்மானிப்பதுதான் prima facie ஆகும்.
வட்டாலி வழக்கு, ஒரு வகையில் மனிதர்களையும் தெருநாய்களையும் ஒரே நிலையில் வைத்தது. ஏனெனில், ஒரு நாய்க்கு ரேபிஸ் இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கான எந்தச் சோதனைகளும் கிடையாது. விவரிக்க முடியாத திடீர் மூர்க்கத்தனம் போன்ற அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே அவை ரேபிஸைக் கொண்டுள்ளன என்று சந்தேகிக்க முடியும். நாய்களில் ரேபிஸ் நோயைக் கண்டறிவதானது, அடிப்படையில் ஒரு prima facie தீர்மானமே. அது தவறாகப் போகலாம். ஆயினும், தப்பபிப்பிராயம் அல்லது வன்மம் காரணமாக, யாரும் ஒரு நாயை வெறி பிடித்தது என்று அறிவிக்க வாய்ப்பில்லை.
ஆனால், முஸ்லிம்கள் துரதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், அரசு அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்ததற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்தது மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாகும். ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக அவர்கள் ‘மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு’ ஆளாக்கப்பட்டதாகவும், சாட்சிகளின் சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்பதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குள்ளாகவே, இந்த 11 முஸ்லிம்களும் தமது 19 ஆண்டுகளை சிறையில் கழித்திருந்தனர்.
(குற்றம் சாட்டப்பட்டவர்களின்) சுதந்திரத்தை மறுக்கும் இத்தகைய துயரங்களைத் தவிர்ப்பதற்காக, அரசு தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக வழங்கும் ஆதாரங்களின் ஆதார மதிப்பை நிறுவுவதற்கு மேலோட்டமான பகுப்பாய்வையேனும் மேற்கொள்வது அவசியமாகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரைரா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோர் 2023இல் இத்தகைய பகுப்பாய்வை மேற்கொண்டனர்.
ஆனால், 2020 டெல்லி கலவர வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம், இத்தகைய முதற்கட்டப் பகுப்பாய்வில் ஈடுபடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அதன் தீர்ப்பு மேல்முறையீட்டிற்கு வரும்போதேனும், நாய்களுக்குப் பிரயோகிக்கப்பட்ட ‘கருணைமிக்க அணுகுமுறை’, ‘முரண்பட்ட உரிமைகளின் சமரசம்’ ஆகிய நீதித்துறைக் கொள்கைகள் ஒன்பது முஸ்லிம் ஆர்வலர்களுக்கும் பிரயோகிக்கப்படும் என்று நம்புகிறோம். இத்தனைக்கும் அவர்களின் (சிஏஏ எதிர்ப்பு) போராட்டம், அவர்களின் நல்லறிவைக் காட்டுகிறதேயொழிய, வெறித்தனத்தை அல்ல,
கட்டுரையாளர் மூத்த பத்திரிகையாளரும் ‘Bhima Koregaon: Challenging Caste’ என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.
Source: Justice easier for dog than activists.
தமிழில்: ரியாஸ்