‘மொஹப்பத் கா ஷர்பத்’ ஒன்றும் ‘ஷர்பத் ஜிஹாது’ இல்லை!
ரூஹ் அஃப்ஸாவை ஆயுதமாக்கும் உணவு அரசியல்
ஒரு காலத்தில் ஒற்றுமையின் சின்னமாகக் திகழ்ந்த ரூஹ் அஃப்ஸா, இன்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சில் பகடையாக மாறியுள்ளது. பாபா ராம்தேவ் இதனை ‘ஷர்பத் ஜிஹாது’ என்று அடையாளப்படுத்தியிருப்பதானது, ஒன்றிணைக்க வேண்டிய உணவு எவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பகிர்ந்து உண்ட நமது உணவு மேசைகள், இதுபோன்ற பிளவுகளிலிருந்து என்றேனும் விடுபடுமா என்று வினவுகிறார் ஸதஃப் ஹுசைன்.
ஷாஹ் ஜஹானாபாத்தை (பழைய டெல்லி) சேர்ந்த 24 வயது மூலிகை மருத்துவர் ஹக்கீம் ஹாஃபிஸ் அப்துல் மஜீது, 1906ஆம் ஆண்டு கொளுத்தும் கோடை வெய்யிலின் வெப்பத்தால் வாடுபவர்களின் தாகம் தணிப்பதற்காக தான் உருவாக்கிய எளிய பானம், ஒருநாள் பிளவினை ஏற்படுத்தும் ஆயுதமாக உருமாறும் என்று ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்.
அந்தப் பானத்திற்கு அவர், அதன் நோக்கத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் உருது மொழியில் ‘ஆன்மாவைக் குளிர்வித்தல்’ என்று பொருள்படும் ‘ரூஹ் அஃப்ஸா’ என்று பெயர் சூட்டினார்.
அதே 1906ஆம் ஆண்டுதான் தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனி அரசாங்கம் ஆசியர்கள்மீது விதித்த பாகுபாடான ‘ஆசியர்கள் பதிவுச் சட்டத்திற்கு’ (Asiatic Registration Act) எதிராக காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அதே காலகட்டத்தில்தான் எளிய, புத்துணர்ச்சியூட்டும் பானம் ஒன்று அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து மதங்களையும், அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் அடையாளமாகப் பரிணமித்தது.
ரோஜா இதழ்களும் மூலிகைகளும் கலந்த இந்தத் தூய கலவை, ஒருநாள் ஒரு புதிய ஜிஹாதின் சுமையைச் சுமக்க வேண்டிவரும் என்று யார் நினைத்திருப்பார்கள்? இதற்கு ‘ஷர்பத் ஜிஹாது’ என்று பெயர் சூட்டியது வேறு யாருமல்ல: வணிகச் சக்ரவர்த்தியும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் என்று அறியப்படும் ராம் கிஷன் யாதவ் தான் அது!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஜிஹாது!
முஸ்லிம்கள்மீது ஏற்கனவே ‘லவ் ஜிஹாது’ முதல் ‘எச்சில் ஜிஹாது’ வரை அடுத்தடுத்து அபத்தமான முத்திரைகள் சுமத்தப்படும் இக்காலகட்டத்தில், ஒரு புதிய அத்தியாயத்திற்கு நேரம் வந்துவிட்டதாக ராம்தேவ் தீர்மானித்தார்.
அவரைப் பொறுத்தவரை, ரூஹ் அஃப்ஸா பருகுவது மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் நிர்மாணிப்பதற்கு ஆதரவளிப்பதாகும். மாற்றமாக, நீங்கள் பதஞ்சலியின் ‘குலாப் ஷர்பத்’தைப் பருகினால், அது குருகுலங்கள், ஆச்சார்யகுலம், பாரதீய ஷிக்ஷா போர்டு ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்!
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஓர் அவசர அழைப்பாக முன்வைக்கப்பட்ட இச்சொற்றொடர், அவரது வணிக பிராண்டினை வலுப்படுத்தும் ஓர் வணிக உத்தியாக நயம்பட வடிவமைக்கப்பட்ட, நிகரற்றதோர் இஸ்லாமோ ஃபோபிய நாடகமே தவிர வேறில்லை.
ஹம்தர்து ஃபுட்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீது அஹ்மது, ஜாமியா ஹம்தர்து பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றுகிறார். ஹம்தர்த் இந்தியா 1906இல் நிறுவப்பட்ட நாளிலிருந்து மதம், அரசியல் எல்லைகளைக் கடந்து மனிதகுலத்திற்குச் சேவை செய்வதிலேயே வேரூன்றியுள்ளது என்பதை அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்
கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட நினைவலைகள்:
ரூஹ் அஃப்ஸா றமளான் மாதத்தின் நோன்பு திறக்கும் நேரமான இஃப்தாரிலும், பழைய டெல்லியின் உணவுச் சந்தையிலும் தனிச்சிறப்பானதோர் அங்கம். சமூகம், அன்பு ஆகியவற்றுடனான அதன் பிணைப்பினைக் கருத்தில் கொண்டால், தற்போதைய பிளவுகள் கட்டுரையாசிரியருக்குத் தனிப்பட்ட ரீதியில் ஆழ்ந்த வலியைத் தருகின்றது.
இனிய நினைவுகளுக்கான ஏக்கத்தை ஆயுதமாக்குதல்:
ராம்தேவ் ரூஹ் அஃப்ஸாவை ’ஷர்பத் ஜிஹாது” என்று முத்திரை குத்தி, அது மஸ்ஜிதுகளுக்கும் மதறசாக்களுக்கும் நிதியளிப்பதாகக் கூறியதோடு, தனது சொந்த வணிக பிராண்டினை ‘இந்திய பிராண்டு’ என்பதாக முன்னிறுத்தி, தனது வணிக ஆதாயத்திற்காக வகுப்புவாதக் கதையாடலைக் கிளப்பிவிடுகிறார்.
பிளவுபடுத்தும் உத்திகள்:
உணவு தொடர்பில் முன்வைக்கப்படும் ‘ஜிஹாது’ என்ற இந்தச் சொல்லாட்சி ‘இந்துத் தண்ணீர்’, ‘முஸ்லிம் தேநீர்’ போன்ற சொற்களைப் பயன்படுத்திய காலனித்துவப் பிரித்தாளும் கொள்கையை எதிரொலிக்கிறது. இதன் மூலம் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தி, அதனால் உருவாகும் கொந்தளிப்பின் மூலம் சிறுபான்மையினரைக் குறி வைக்க முயல்கிறது.
உணவு ஒரு கருவி:
ஒரு காலத்தில் சமூகத்தை ஒன்றிணைப்பவையாக இருந்த உணவும் பானங்களும், இப்போது வெறுப்பைத் தூண்டவும் அடக்கியாளவும் உதவும் கருவிகளாகக் கையாளப்படுகின்றன. ரூஹ் அஃப்ஸாவைச் சுற்றி எழுந்துள்ள இந்த சர்ச்சை, அடையாளம் மற்றும் அதிகாரத்திற்கான போராட்டத்தில் உணவு எத்துணை ஆழமாக அரசியலாக்கப்படலாம் என்பதைக் காட்டுகிறது.
இந்த மாயாஜால சிவப்பு நிறத் திரவம், எனக்கு எப்போதும் றமளானின் இஃப்தாரின் அடையாளமாகவே இருந்துவந்துள்ளது. ரூஹ் அஃப்ஸா இல்லாமல் எந்த இஃப்தாரும் முழுமையடையாது. தனிப்பட்ட முறையில், நான் அதைப் பாலுடன் கலந்து பருகுவதை விரும்புவேன். ஆயினும் பலர் அதைத் தண்ணீருடன் கலந்து அருந்துகிறார்கள்.
பழைய டெல்லியின் தெருக்களில் ரூஹ் அஃப்ஸாவை முக்கியப் பொருளாக கொண்டு, பாலையும் நறுக்கிய தர்பூசணியையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘மொஹப்பத் கா ஷர்பத்’தை விற்பனை செய்யும் கடைகள் வரிசையாக உள்ளன. இவ்வளவு அன்பைப் பரப்பும் ஒரு பானம், திடீரென ஒரு சுயநல முதலாளியின் மலிவான போலியை விற்பனை செய்யும் வணிக ஆசைக்காக, ‘வகுப்புவாதமானது’ என்று முத்திரை குத்தி குறிப்பிட்டவொரு சமூகத்தையும், நிறுவனத்தையும் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுவது வலியைத் தருகிறது.
கிளாரியன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஹம்தர்து ஃபுட்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீது அஹ்மது ராம்தேவின் வகுப்புவாதக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். ரூஹ் அஃப்ஸா பிளவுகளை உருவாக்கும் பானம் அல்ல, அன்புப் பாலங்களை அமைக்கும் பானம் என்பதைத் தெளிவுபடுத்தினார். “ரூஹ் அஃப்ஸா மஸ்ஜிதுகள், கோவில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் என அனைத்திலும் பரிமாறப்படுகிறது. யாரும் அதை மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அதன் இயற்கையான குளிர்ச்சித் தன்மைக்காகவே அது மதிக்கப்படுகிறது — மற்ற பானங்கள் அதன் அருகில்கூட வர முடியாது” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
பயத்தைப் பண்டமாக்குதல்
ராம் தேவின் ‘ஷர்பத் ஜிஹாது’ போன்ற பிரிவினைவாதக் கருத்துகளைச் சுமந்த பேச்சுகள் எல்லாம், அச்சத்தை வியாபாரப் பண்டமாக்கும் போக்கையே காட்டுகின்றன. பன்முகத்தன்மையை அச்சுறுத்தலாகக் கட்டமைப்பதன் மூலம், பிற சமூகத்தினரை அந்நியப்படுத்தி அதிகாரத்தைக் குவிக்கும் பெரியதோர் அரசியல் சூழ்ச்சித் திட்டத்துடன் அவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இது முஸ்லிம்களை, வெளியேற்றப்பட வேண்டிய அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஓர் அந்நியச் சக்தியாகச் சித்தரிக்கும் பொய்யான ஓர் இருமையை உருவாக்குகிறது.
பரந்த நோக்கில் பார்க்கும்போது, புதிதாகக் கட்டப்படும் மஸ்ஜிதுகளும் மதறசாக்களும் இஸ்லாமிய ஆதிக்கத்தின் சின்னங்களாகச் சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த நிறுவனங்கள் கல்வி, அறப்பணி, சமூக நலன் ஆகியவற்றுக்கான மையங்களாகவே திகழ்கின்றன — கோவில்கள், குருத்வாராக்கள் மற்றும் தேவாலயங்களைப் போலவே. இவற்றின் மீது காட்டப்படும் இந்த எதிர்ப்புணர்வு, அந்த நிறுவனங்கள்மீது காட்டப்படுவதைக் காட்டிலும் அதிகமாக அவை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்முக அடையாளத்தின் மீதே காட்டப்படுகிறது.
இத்தகைய குரல்கள் எழுந்துவருவதானது, மதத்தைப் போர்க்கருவியாக்கி, சமூக ஒற்றுமையைக் குலைத்து, பிளவுகளை மேலும் ஆழப்படுத்தும் கதையாடல்களை உருவாக்கும் ஓர் முயற்சியாகும்.
இது வெறுமனே ஒரு பானத்தைப் பற்றியது அல்ல; வகுப்புவாதப் பிளவுகளின் தீயை வளர்த்து, தேவையற்ற விதத்தில் ‘நாம் X அவர்கள்’ என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதாகும் இது.
ராம் தேவ் தனது ஆடைத் தொழிலைத் தொடங்கியபோது, கிழிந்த ஜீன்ஸ் அணிவதானது இந்தியப் பண்பாட்டைச் சீரழிக்கும் என்பதாகப் பறைசாற்றியது மற்றுமொரு விநோத முரண். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய உலகில், ‘மேற்கத்திய‘ உடைகள் திடீரென ஒழுக்கக்கேட்டின் அடையாளமாக மாறின. ராம் தேவ் இன்னும் ஒரு படி மேலே போய், “இப்போதெல்லாம் மக்கள் கிழிந்த ஜீன்ஸ்களை அணிகிறார்கள். அதனால், எங்களுடைய ஜீன்ஸ்கள் சிலவற்றிலும் கிழிசல்கள் இருக்கின்றன. அதே சமயம், இந்தியத் தன்மையையும் விழுமியங்களையும் இழக்கும் அளவுக்கு நாங்கள் அவற்றை அதிகம் கிழிப்பதில்லை” என்று கூறினார். இது எல்லாமே ஒரே விளையாட்டின் அங்கம்தானே? தீவிரத் தேசியவாதத்தை முன்னிறுத்தும்போது, அது தர்க்கரீதியாக இருக்க வேண்டியதில்லைதானே! எல்லாவற்றிற்கும் மேலாக, வணிகத்திற்கான, சித்தாந்தத்திற்கான சண்டையில் முதலில் பலியாவது பெரும்பாலும் பகுத்தறிவுதான்.
கேள்விகள்
ரூஹ் அஃப்ஸா எவ்வாறு இந்தியாவில் ஒற்றுமையின் அடையாளமாகவும், காலப்போக்கில் பிளவின் அடையாளமாகவும் உருவெடுத்தது?
ரூஹ் அஃப்ஸா தொடர்பான விவகாரத்தில் பாபா ராம்தேவின் பங்களிப்பு என்ன?
வரலாற்றில் உணவு எவ்வாறெல்லாம் சமூகங்களை ஒன்றிணைக்கவும், அதே வேளையில் பிளவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
உணவை வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் விளையும் அபாயங்களைச் சுட்டிக்காட்டும் வரலாற்றுச் சான்றுகள் யாவை?
உணவை அரசியல் ஆதாயங்களுக்காக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆசிரியர் ஏன் வாதிடுகிறார்?
நவீன உலகம் சந்தித்த மிகக் கொடிய தொற்றுநோய் காலத்தில் கோவிட்-19ஐக் குணப்படுத்துவதாக வாக்குறுதியளித்த ‘கோரோனில்’ மருந்தின் ஆற்றல்களைப் பற்றி திட்டமிட்டுப் பொய் சொன்ன அதே நபர்தான் இவர்.
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கும் மலட்டுத்தன்மைக்கும் தீர்வு, ஆண் குழந்தை பிறக்கும் என்பது போன்ற வாக்குறுதிகளை உள்ளடக்கி, தமது தயாரிப்புகள்குறித்து ஆதாரமற்ற கூற்றுகளை முன்வைத்ததாக அவரின் நிறுவனம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராம் தேவும் அவரது நிறுவனமும் எப்போதுமே அச்சத்தையும் குழப்பத்தையும் மூலதனமாக்கி, அதனால் பிளவுபடும் தேசத்தின் சிதிலங்களிலிருந்து ஆதாயம் அடைந்துவந்துள்ளனர். ‘இந்தியத்தன்மையை’ மேம்படுத்துவது என்று போர்வையின் கீழேயே இவை அனைத்தும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்துத் தண்ணீர், முஸ்லிம் தேநீர்
இன்று நிலவும் தீவிர தேசியவாதம், சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே ‘இந்து பானி – முஸ்லிம் பானி’, ‘இந்துத் தேநீர் – முஸ்லிம் தேநீர்’ என்ற பிரித்தாளும் சூழ்ச்சியின் நாள்களை எனக்கு நினைவூட்டுகிறது.
1929இல், சுதந்திரப் போராட்ட வீரரும், மஜ்லிஸே அஹ்ராரே இஸ்லாமின் நிறுவனர்களில் ஒருவருமான மௌலானா ஹபீபுர் றஹ்மான் லுதியானவி, தேசத்தைப் பிளவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பல கொள்கைகளில் ஒன்றான இதைத் துணிவுடன் எதிர்த்து நின்றார்.
லுதியானாவின் காஸ் மண்டி சௌக்கில், ரயில் நிலையத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி தண்ணீர்க் குடங்களை வைக்கும் ஆங்கிலேயர்களின் முடிவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். அவரது போராட்டம் நகர மக்களிடையே ஒற்றுமையின் ஒரு புதிய அலையைத் தூண்டியது, இதன் விளைவாக அதிகாரிகள் அந்த இரண்டு குடங்களுக்குப் பதிலாக ‘சப்கா பானி ஏக் ஹை’ (எல்லோருக்கும் ஒரே தண்ணீர்) என்று அழுத்தமாகப் பொறிக்கப்பட்ட ஒரு குடத்தை வைக்க வேண்டியதாயிற்று. அது ஒருமைப்பாட்டிற்கான ஓர் உறுதியான நிலைப்பாடாக அமைந்தது.
‘ஜனதா வீக்லி’ என்ற இணைய இதழ், தேநீர் பற்றிய மேலும் சில தகவல்களை நமக்கு வழங்குகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1946 ஏப்ரல் 11ஆம் தேதி, மகாத்மா காந்தி, பழைய டெல்லியில் உள்ள செங்கோட்டையில், ஆங்கிலேயர்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ (INA) வீரர்களைச் சந்தித்தார். வீரர்களுடனான உரையாடலின்போது, INAவில் அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தபோதிலும், இப்போது அவர்கள் ‘இந்துத் தேநீர் – முஸ்லிம் தேநீர்’ என்ற சூழ்நிலையை எதிர்கொள்வதாக வீரரொருவர் கூறினார். “நாங்கள் என்ன செய்வது?” என்று அவர் கேட்டபோது, “நீங்கள் ஏன் அதைச் சகித்துக்கொள்கிறீர்கள்?” என்று காந்தி வினவினார். அதற்கு அந்த வீரர், “இல்லை, நாங்கள் அதைச் சகித்துக்கொள்வதில்லை. இந்துத் தேநீரையும் முஸ்லிம் தேநீரையும் சரி பாதியாகக் கலந்து பரிமாறிக்கொள்கிறோம்” என்று பதிலளித்தார். இதைக் கேட்ட காந்தி சிரித்ததுடன், வீரர்களின் அமைதிவழி எதிர்ப்பு நடவடிக்கையைப் பாராட்டவும் செய்தார்.
இந்துத் தேநீர், முஸ்லிம் தேநீர் என்று பிரித்துப் பரிமாறும் பழக்கம் 1950கள் வரை ரயில் நிலையங்களில் தொடர்ந்தது.
ராஜ்யசபா உறுப்பினரான சீதா பரமானந்தா, ரயில்வே பட்ஜெட் விவாதத்தின்போது இதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டிய பின்னரே இது முடிவுக்கு வந்தது. அவரது வேண்டுகோளே இறுதியில் அந்தப் பழக்கம் நிறுத்தப்பட வழிவகுத்தது. ஆனால், இப்போது பிரித்தாளும் சூழ்ச்சியின் பூதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
உணவு ஒன்றிணைக்கும் சக்தி; பிரிவினைக்கு அதைப் பயன்படுத்தாதீர்!
உணவும் பானங்களும் பல சமயங்களில் சிறந்த ஒற்றுமைப் பாலங்களாக அமைகின்றன என்று புகழப்படுதுண்டு. ஒரு சமையல் கலைஞர் அல்லது உணவு விவரணையாளர் என்ற வகையில் நான் என் வாழ்வின் பெரும்பகுதியை உணவுச் சூழலிலேயே கழித்திருப்பதால், இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன்.
அதேசமயம், அதன் இருண்ட பக்கத்தையும் என்னால் காண முடிகிறது: நம்பமுடியாத அளவிற்குப் பிளவுபடுத்தும் ஆற்றலையும் உணவு கொண்டிருக்கிறது. இது மிக அடிப்படையான பொதுவான அம்சம்; மக்களின் உணவையும் உண்ணும் பழக்கங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களின் சமூகம், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.
ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைந்துள்ள உணவும் மதமும், மக்களை ஒன்று சேர்க்கும் அல்லது பிரிக்கும் ஆற்றலை எப்போதுமே கொண்டுள்ளன. அவற்றால் அழகான மரபுகளை உருவாக்கவும் முடியும்; பிளவுபடுத்தும் சர்ச்சைகளைத் தூண்டிவிடவும் முடியும்.
இன்றைய உலகில் மதம், உணவு ஆகியவை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, வேறுபாடுகளைத் தீவிரப்படுத்தவும், வெறுப்பைப் பரப்பவும், தீய அரசியல் திட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
ஒற்றுமையின் ஊற்றாக இருக்க வேண்டியது, இப்போது பிரிவினைக்கான மற்றுமொரு கருவியாக மாறிவிட்டது.
பக்ரீதுப் பண்டிகை நெருங்கிவரும் சூழலில் என்ன நிகழவிருக்கிறது என்பதையும், இந்தப் பண்டிகையின் கொண்டாட்டங்களைக் கண்டு கோபமுறுவதுடன், அந்தக் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் ‘அராஜகக் குழுக்கள்‘ மீண்டும் எப்படித் தலைதூக்கும் என்பதையும் என்னால் ஊகிக்க மட்டுமே முடிகிறது.
இறுதியாக… புத்துணர்ச்சி, ஒற்றுமை, பகிரப்படும் பாரம்பரியம் ஆகியவற்றின் எளிய அடையாளமாகத் தொடங்கிய ஒன்று, இன்று பிளவுபடுத்தும் அரசியலுக்கான மற்றுமொரு மோதல் களமாக மாறியிருக்கிறது. இணைப்பையும் சமூக ஒற்றுமையையும் வளர்த்த உணவுப் பண்பாடு, இன்று முரண்பாடுகளையும் வெறுப்பையும் வளர்க்கும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. ராம் தேவின் ‘ஷர்பத் ஜிஹாது’ என்பது, வழிபிறழ்ந்த தேசியவாதத்தின் ஒரு விளைபொருள் மட்டுமல்ல; சமூகத்தின் பிளவுகளையும் அச்சங்களையும் பயன்படுத்தி லாபம் ஈட்டும் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்.
அதிகரித்துவரும் அச்சம், பிளவுகள் ஆகியவற்றால் ஆளப்படும் ஓர் உலகில், உணவைப் பகிர்ந்துகொள்ளும் எளிய செயலினை, பிரிவினையின் கருவியாக அன்றி, ஒற்றுமைக்கான வழியாக நாம் மீட்டெடுக்க வேண்டும்.
— ஸதஃப் ஹுசைன் (எழுத்தாளர், சமையல் கலைஞர், TEDx உரையாளர், பாட்காஸ்ட் தொகுப்பாளர். 2016இல் ’மாஸ்டர்செஃப் இந்தியா’ பட்டியலில் சிறந்த எட்டு பேரில் ஒருவராக இடம்பிடித்தவர்)
(நன்றி: The Quint)
(தமிழில்: A. செய்யது அலீ)