கட்டுரைகள் 

பினாயக் சென் கைது – இதனால் அறிவிப்பது என்னவென்றால்….

Loading

[‘சமநிலை சமுதாயம்’ பத்திரிகையில் ஹிஜ்ரி 1432 சஃபர் மாதம் (2011-02) வெளிவந்த கட்டுரை. ]

இந்த அரசு தேசத்துரோக வழக்குப்போடும் வேகத்தைப் பார்த்தால் கூடிய விரைவில் நாட்டில் தேசபக்தர்களை விடவும் தேசத்துரோகிகளே அதிகமிருப்பார்கள் போலிருக்கிறது. பெயரில் உள்ளதோ ஜனநாயகம். செயல்கள் அனைத்துமே இரும்புக்கரம். ஜனநாயகத்தினுடைய பண்பாட்டு அடித்தளத்தின் மீது சாமானிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை பினாயக் சென்னை கைது செய்ததின் மூலம் இந்த அரசு சிதறச் செய்திருக்கின்றது. அருந்ததி ராய் விசயத்தில் ஒன்றும் செய்வதற்கில்லாமல் கையைப் பிசைந்த அரசு சென் மீது மிகத் தீவிரமாய் பாய்ந்துவிட்டது. ஏனெனில் ராயைச் சுற்றிச் சுழலும் ஒளி வட்டமும், அவருக்குரிய சர்வதேச அங்கீகாரமும் அவரைக் கைது செய்வதன் மூலம் நம் ஜனநாயகத்தின் தன்மையை சர்வதேச அளவில் பெரும் கேள்விக்கு உள்ளாக்கும். ஆனால் சென் விவகாரத்தில் அத்தகைய விளைவுகள் எதுவும் அத்துணை தீவிரமாய் இருக்கப்போவதில்லை. எனவே துணிந்து அடித்துவிட்டது. நமது மாண்புமிகு உள்துறை அமைச்சகம் வச்ச குறி இந்த முறை தப்பவில்லை.

ஆனால் பினாயக் சென்னை கைது செய்வதற்கு நமது அரசு கூறியுள்ள காரணங்களின் படி பார்த்தோமேயானால் நான், நீங்கள் ஏன் நாட்டு மக்களில் கால்வாசிப்போர் குற்றவாளிகளாய்த்தான் இருக்கமுடியும். வரலாறெங்கும் இது போன்ற ஐந்தாம் படை நிகழ்வுகள் உள்ளதெனினும் காலத்தின் முன் அவை நின்றதில்லை. பெரு முதலாளிக்கும், அவர்களின் நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்திய தேசங்களுக்கும் சாமரம் வீசிக்கொண்டிருக்கும் இந்த அரசிற்கு, ராய்ப்பூர் நீதிமன்ற மாவட்ட கூடுதல் நீதிபதி பி.பி.வர்மா வால் இந்திய தண்டனைச் சட்டம் 124 (தேசத்துரோகம்) 120டீ (சதி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பினாயக்சென், நாராயண் சன்யால், பியுஸ் குஹா ஆகியோரின் செயல்பாடுகள் தேசத் துரோகமாகத் தெரிந்ததில் வியப்பேதும் இல்லை. பினாயக் சென் மீதான வழக்கு விபரங்களைப் பார்ப்பதற்கு முன் அவர் யாரென பார்த்து விடுவோம்.

மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் அறியப்பட்ட மனிதநேயமிக்க குழந்தைகள் நல மருத்துவர் தான் பினாயக்சென். மருத்துவம் என்பது வியாபாரம் என்ற நிலையையும் கடந்து பெரும்பாலான மருத்துவர்களின் சுயநலமிக்க துறையாகவே மாறிவிட்ட இக்காலச் சூழ்நிலையில், சென் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர்க்கும் எண்ணற்ற சேவைகள் புரிந்ததின் மூலம் அவர்களின் அன்புக்கு உரித்தானவர். பெருமுதலாளிகளின் அன்பைப் பெற்றால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியுமென்ற ஒரு தேசியச் சூழலில் போயும் போயும் ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற ஒரு மனிதநேயம் கொண்ட மருத்துவரால் என்ன செய்ய இயலும்?

மேலும் சென், சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் அமைப்பினால் நடத்தப்படும் சங்கர் குஹா நியோக் எனும் மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து அதனைத் தொடர்ந்து திறம்பட நடத்துவதிலும் பேருதவியாக இருந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் குறைந்த செலவில் பயன்மிக்கதொரு சமூக மருத்துவ திட்டமான ஜன ஸ்வஸ்த்யா ஸ்யோக் என்ற அமைப்பின் ஆலோசகரும் அதில் பணிபுரிந்தவரும் ஆவார். இன்னும் பழங்குடியின சமுதாயத்திற்கு எண்ணிலடங்கா வாராந்திர மருத்துவ முகாம்களை நடத்தியவர் என்பது மட்டுமல்ல சென் பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (Pருஊடு) தேசிய தலைவராகவும், அதன் சத்தீஸ்கர் மாநில அமைப்பின் துணை தலைவராகவும் பதவி வகித்த மனித போராளியும் ஆவார்.

இது மட்டுமல்ல. உள்நாட்டிலும், உலக அளவிலும் அவருக்கு கிடைத்துள்ள விருதுகளும், அங்கீகாரமும் அவரின் செயல்பாட்டினை நமக்கு நன்கு உணர்த்துவதாக உள்ளது. பழங்குடியின மக்களுக்கு அவர் செய்த வாழ்நாள் சேவைக்காக 2004-ம் ஆண்டு வேலூர் கிறித்துவ கல்லூரியின் (நமக்கெல்லாம் வேலூர்; ஊஆஊ என்றால் தெரியும்) பால் ஹாரிசன் விருதும், 2007 டிசம்பரில் சமூக அறிவியலுக்கான இந்திய கல்வி நிறுவனத்தால் (ஐளுளுயு) ‘இந்தியாவின் மிக சிறப்பு வாய்ந்த அறிவியலாலர்களுள் ஒருவர்’ எனும் பட்டத்தோடு ஆர்.ஆர்.கேதன் தங்கப்பதக்க விருதுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இத்தோடல்லாமல் சென் 2008-ல் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாத்தன் மன் விருதுக்காகவும் தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதிற்கு அவரை தேர்ந்தெடுத்த காரணமாக உலகளாவிய சுகாதார சபை தெரிவித்த கருத்து குறிப்பிடத்தகுந்ததாகும். “சுகாதாரப் பயிற்சியாளர்கள் சமூகத் தலைவர்களாகவும் பொறுப்பில் உள்ளபோது எத்துணை சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு பினாயக் சென் ஒரு உதாரணமாவார். அவர் வறுமையில் வாடும் சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து நிதியுதவி பெற்ற கட்டப்பட்ட மருத்துவமனையில் சேவைபுரிகிறார். மேலும் தன்னுடைய வாழ்நாளை சுகாதார நடைமுறைகள் மற்றும் பொது உரிமைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே அர்ப்பணித்திருக்கிறார். இன்னும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மனித உயிர்களை பாதுகாக்கவும் தேவையான பல தகவல்களை அவர் மக்களுக்கு அளித்துள்ளார். அவருடைய நற்பணிகள் இந்தியாவிற்கும், உலகளாவிய சுகாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பாக உள்ளது. அவை நிச்சயமாக நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கமுடியாது” எனத் தெரிவித்துள்ளது. இத்துணை சிறப்புகள் கொண்ட ஒருவரை நமது அரசு கவனிக்காமல் விடுமா? அதுவம் தன் பங்கிற்கு ஒரு பட்டம் கொடுத்து கௌவரவித்தது. ‘தேசத் துரோகி’ எனும் பட்டம்.

ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள பண்புகளை விடவும் பினாயக் சென்னின் பிரதான நற்பண்பு அவர் மிகச் சிறந்த ஜனநாயக வாதியாவார். அரசு பயங்கரவாதத்தைப் போலவே மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தையும் கண்டித்தவர். எனில் இந்த அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையிலடைத்ததின் பின்னணி என்ன?

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள விலை மதிப்பற்ற கனிம வளங்களையும், அவற்றை பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் இந்த அரசின் தீவிர வேகத்தையும், அதற்காக அப்பகுதியில் போடப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களையும், மேலும் சிறப்புக்காவல் படைகள், சல்வா ஜீடும், நாகா பட்டாலியன் போன்ற ஐந்தாம் படைகளையும், அப்படைகள் அம்மக்களுக்கு புரிந்து வரும் பெருங்கொடுமைகளையும் நாம் ஓரளவிற்கு அறிந்துள்ளோம். பினாயக்சென் விவகாரமும் இதன் பின்னணியில் உள்ள ஒன்றுதான்.

2008-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் பங்கேற்ற சென் அதில் “நான் நக்சல்களை மன்னிக்கவுமில்லை. அவர்களின் வன்முறைப் பாதையை ஏற்றுக்கொள்ளவுமில்லை. உண்மையில் அவர்களுக்கு எதிராக நான் சில சமயத்தில் தீவிரமாகவே பேசியுள்ளேன். இங்கு மூன்று விசயங்களை குறிப்பிட வேண்டும். முதலில் இந்த வழக்கிற்கு அடிப்படையே இல்லை என்பதுடன் முடிந்த வரையில் இவ்வழக்கு மிக விரைவாக முடிக்கப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். என்னுடைய இந்த 58-வயது காலம் வரையில் என் குடும்பத்தினருடன் நேரம் கழிக்க எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இனி உள்ள காலத்தை என் மனைவி, மற்றும் எனது குழந்தைகளுடன் கழிக்கவே விரும்புகிறேன். இரண்டாவது சல்வா ஜீடும் படை ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். இப்படையால் பழங்குடியின சமூகத்தில் பிரிவினை உண்டாயிருக்கிறது. இப்பிரிவினை மறைய நீண்ட காலமாகும். மூன்றாவதாக இப்பகுதியில் உடனடியாக அமைதி ஏற்பட வேண்டுமென்பதே என் எண்ணமாகும். அனைத்துக் கட்சிகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவேண்டும். நான் வெளியில் வந்தவுடன் செய்யப்போகும் முதல் வேலையும் அதுதான் எனக் கூறியுள்ளார். ஆனால் நம் அரசு பேச்சு வார்த்தையை விரும்பவில்லை போலும். பிணையில் வெளிவந்த அவரை மீண்டும் சிறையிலடைத்து விட்டது.

“தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து துரத்தப்பட்ட பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான எதனையும் பெறமுடியாமல் துன்பப்படுகிறார்கள்” என்று கூறும் பினாயக்சென் 1966-முதல் 1976ம் ஆண்டு வரை வேலூரிலுள்ள ஊஆஊ மருத்துவமனையில் பணிபுரிந்தவர். பின்னர் ஹைதராபாத்திலுள்ள தேசிய சத்துணவு கண்காணிப்பு கழகத்தில் இணைந்ததின் காரணமாக அத்திட்டப் பணியின் வேலை நிமித்தம் சத்தீஸ்கரில் உள்ள பழங்குடி மக்களிடையே சத்துணவு பற்றிய உடல் எடைக் குறியீடு (டீழனல ஆயளள ஐனெநஒ) எனும் ஆய்வை மேற்கொள்வதற்காக சத்தீஸ்கர் செல்வதற்கு விதி அவரைத் துரத்தியதெனலாம்.

உடல் எடைக் குறியீடு என்பது ஒருவருடைய உயரத்தை அவருடைய உடல் எடையைக் கொண்டு வகுத்தால் வரும் விடையேயாகும். இதன்படி ஆய்வு செய்த பினாயக் சென் இந்தியாவைப் பொறுத்தவரை 45% குழந்தைகளும், 37% பெண்களும், 33% ஆண்களும் சத்துணவு குறைபாட்டுடன் உள்ளார்கள் என்றும் பழங்குடி மக்களில் சத்துணவு குறைவானவர்கள் 60% எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் விட தொடர் நிகழ்வுகளாக அவர் செய்த சில செயல்கள்தான் அரசைச் சூடேற்றியது எனலாம். அது அவர் தேசிய தலைவராக இருந்த PUCL அமைப்பின் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்கள் பலவற்றை அமைக்க பெரிதும் உதவியாயிருந்தார் என்பதே. மேலும் அரசால் ஆயுத உதவி செய்யப்படுவதாகக் கூறப்படும் சல்வா ஜீடும் அமைப்பால் நிராயுதபாணியான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட மிகத்தீவிரமான மனித உரிமை மீறல்களுக்கான விசாரணையில் சென் பங்கேற்றது இந்த அரசை கடுப்பேற்றியது. அதே நேரம் அமைதியான வழிமுறைகளில் அவருக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக அறிவு ஜீவிகள் மற்றம் பெரும்பாலான மக்களிடமும் அவர் சிறப்பு கவனம் பெறத் தொடங்கியது அரசாங்கத்திற்கு இடைஞ்சலாகவே இருந்தது எனலாம்.

இந்நிலையில் அது மாவோயிஸ்டுகள் உள்ள பகுதி எனும் ஒரே காரணத்தினால் மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்ய மறுப்பதாலும், அங்குள்ள மக்கள் போதிய ஊட்டச்சத்தின்மையால் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி இருப்பதையும் தொடர் கூட்டங்கள் மூலம் சென் அம்பலப்படுத்திய போது அரசு பொறுமை இழந்தது. தொடர்ந்து 2007-மே-14-ம் தேதி ‘சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு)சட்டம்’, மற்றும் ‘சத்தீஸ்கர் சிறப்பு பாதுகாப்புச்சட்டம் 2005’ ஆகியவற்றின் கீழ் சென் கைது செய்யப்படுகிறார். அவரை பினையில் விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்தபோதும் அரசு அவைகளைப் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் அவருடைய இதயநோய் அபாயமானதைத் தொடர்ந்து அவருக்கு ஓய்வும், சிகிச்சையும் அவசியமென்பதால் வேறு வழியின்றி 25/05/2009 அன்று பினையில் விடுவிக்கப்படுகிறார். தொடர்ந்து நடந்த வழக்கில் கடந்த 24/12/2010 அன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கருதியும், மாவோயிஸ்டுகளிடம் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பினாயக் சென் மீண்டும் சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.

ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் அரசு புரியும் கொடுஞ்செயல்களை வெளிப்படுத்தும் எவரையும் இந்த அரசு மன்னிக்கத் தயாராக இல்லை. இந்த இடத்தில் எழுத்தாளரும், சமூகப் போராளியுமான அருந்ததி ராயை இந்த அரசு ‘மாவோயிஸ்டுகளின் கூட்டாளி’ என்றே குறிப்பிடுவது நினைவு கூறத்தக்கது. மேலும் மேற்குவங்க மாநிலமான லால்கரில் காவல் துறையினரின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்கள் கமிட்டி என்ற அமைப்பினர் தனித்த ஒரு அமைப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் மாவோயிஸ்டுகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்தினால் அவ்வமைப்பு மாவோயிஸ்டுகளின் வெளிப்படையான பிரிவு என்றே அழைக்கப்படுகிறது. சிறையில் உள்ள அவ்வமைப்பின் தலைவரான சத்ரகார் மகாத்தோ இந்த அரசால் வேண்டுமென்றே ‘மாவோயிஸ்டுகளின் தலைவர்’ என்றே அழைக்கப்படுகிறார்.

‘வனவாசி சேத்னா’ எனும் ஆஸ்ரமத்தை நிறுவி ஆதிவாசி மக்களுக்கு சேவை புரிந்து வந்த ஹிமான்சு குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ள சட்ட விரோத செயல்கள் குறித்தும், காட்டுவேட்டை போர்க் குற்றங்கள் குறித்தும் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்றிற்கு கடந்த வருடம் ஏற்பாடு செய்திருந்தார். டெல்லியில் இருந்து மேதாபட்கர், சந்தீப் பாண்டே, நந்தினி சுந்தர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளவிருந்த அந்த கூட்டத்திற்கு அவர்கள் அங்கு சென்று விசாரிப்பதைக் கூட விரும்பாத இந்த அரசு கடும் அச்சுறுத்தலை ஏவி அக்கூட்டத்தை நடத்தவிடாமல் செய்துவிட்டது. அதுபோலவே மேற்க வங்க அடக்குமுறைக்கு எதிராகப் பேசிய மஹாஸ்வேதா தேவி போன்ற அறிவு ஜீவிகளும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இந்த வரிசையில் முதலில் பினாயக்சென். இதனைக் கருத்தில் கொண்டுதான் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு அறிவுச் சூழலை உருவாக்குகிறார்கள்” எனக் குறிப்பிட்டார். ஆனால் அரசு பயங்கரவாதத்தை விட கொடியது வேறு எது இருக்கமுடியும்? “நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எங்கள் எதிரிகளுடன் உள்ளீர்கள் என்றே அர்த்தம்” என்ற புஷ் ஷின் சித்தாந்தத்திற்கு ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர்களும் வந்து சேர்ந்திருப்பது பெரும் அபாயமானதும் அச்சுறுத்தக் கூடியதுமாகும்.

பினாயக்சென்னை கைது செய்ததற்காக அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் என்னவென்று பார்த்தோமானால்,

1) மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலால் என்பவரை சென் சிறையில் முப்பதுக்கும் அதிகமான முறை சந்தித்திருக்கிறார்.

2) சென்னுடைய கணிணியில் சில ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரை கிடைத்தது.

3) நாராயண் சன்யாலுக்கு மருத்துவ உதவிகள் செய்யக்கோரி சென்னுக்கு மதன்லால் பானர்ஜி (மற்றொரு மாவோயிஸ்ட் தலைவர்) எழுதிய கடிதத்தில் சென்னை “பிரியத்திற்குரிய தோழரே” என விளித்திருப்பது.

இதில் காவல்துறையினர் முக்கிய ஆதாரமாகக் கூறுவது மூன்றாவது காரணத்தைத் தான். மதன்லால், சென்னை “பிரியத்திற்குரிய தோழரே” என அழைத்திருப்பது பினாயக் சென்னிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் உள்ள உறவைக் காட்டுகிறதாம். மேலும் சில அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள், போலி மோதல்கள் குறித்த தகவல் அறிக்கைகள், செய்தி துணுக்குகள், மற்றும் கூலிப்படையினரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்களின் கடிதங்கள் போன்றவைகளை ஆதாராமாகக் கொண்டு ஒரு மனித உரிமைப் போராளியை தேச துரோக வழக்கில் கைது செய்யலாம் என்றால் நாட்டில் உள்ள பல போராளிகளிடமும் மற்றும் சமூக ஆர்வலர்களிடமும் இதுபோன்ற பதிவுகள் இருக்குமே. எனில் அவர்களனைவருமே தேச துரோகிகள் தானா?

இந்த இடத்தில் முக்கியமானதொரு கடந்த கால சம்பவம் ஒன்றை நாம் கட்டாயம் நினைவு கூறவேண்டும். கடந்த 09/06/2002-ல் காஷ்மீர் பத்திரிக்கையாளரான இஃபதிகார் ஜுலானியை அவரது விட்டுக்கே வந்து ஆயுதந்தரித்த போலீஸ் கைது செய்தது. முன்தினம் வரை பத்திரிக்கையாளராயிருந்த அவர் மறுநாள் பாகிஸ்தான் உளவாளியாக போலீசால் மாற்றப்பட்டிருந்தார். அவர் செய்த குற்றமென்று உளவுத்துறை குறிப்பிட்டது. பாகிஸ்தான் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றால் ஏற்கனவே வெளியிடப்பட்டு பரவலாக வினியோகம் செய்யப்பட்ட ஓர் ஆவணத்தை அவர் தனது கணிணியில் வைத்திருந்தார் என்பதே. அந்த ஆவணம் அப்படியொன்றும் பரம ரகசியமானதும் அல்ல. இணையதளத்திலிருந்து யாரும் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். அதன்பின் அவர் கணிணியை கைப்பற்றிய உளவுத் துறையினர் அந்த ஆணவத்தில் தம் இஷ்டப்படி பல மாற்றங்களை செய்து அதனை ஜுலானியே எழுதியதாக இட்டுக்கட்டி அவர்மீது மிக கொடிய வழக்கான ரகசிய காப்புச்சட்டம் என்ற பிரிவின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் ஆதாரமற்ற குற்றச்சாட்டிலிருந்து சிறை மீண்ட ஜுலானி சிறையில் தனக்கு எற்பட்ட அனுபவத்தை ‘சிறையில் எனது நாட்கள்’ என புத்தகமாக எழுதினார். அப்புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய தி ஹிந்து ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர் திரு.சித்தார்த் வரதராஜன் “உளவுத் துறையினர் என்ன முட்டாள்களா?” என ஓரிடத்தில் கேள்வி கேட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். காரணமில்லாமல் இந்த வழக்கை இங்கு உதாரணம் காட்டவில்லை. அரசு ஒருவரை குறிவைத்து விட்டால் அதற்கான முகாந்திரத்தை தானே உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் சிறந்த உதாரணமாகும். இன்று பினாயக் விசயத்தையும் நாம் இதனடிப்படையில் ஆய்வோமானால் அவர் கைதுப் பின்னணியை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி;. இன்றுள்ளவர் சிதம்பரம். ஆட்சிகள் மாறினாலும் நம் சுதந்திர தேசத்தில் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.

ஆனால் மருத்துவர் பினாயக் சென்னின் கைது அப்படியொன்றும் கேட்பாரற்றுப் போய்விட வில்லை. அவர் கைது செய்யப்பட்டவுடன் உலகம் முழுவதிலுமுள்ள நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 22 பேர்கள் நம் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சத்தீஸ்கர் மாநில அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் “தன்னுடைய அடிப்படையான மனித உரிமைகளை மருத்துவர் சென் அமைதியான முறையில் மேற்கொண்டதற்காக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எங்களுடைய கவலைகளை தெரிவித்துக் கொள்கிறோம். இது பொது உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 19 (கருத்து மற்றும் வெளிப்படுத்தும் சுதந்திரம்) மற்றொரு பிரிவான 22 (கூட்டு சேரும் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முரணானது என்பதோடு சர்வதேச மனித உறவுகளின் விதிகளோடு பொருந்தாத இரண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டங்களின் கீழும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்” என எழுதியுள்ளது.

மேலும் உலகப்புகழ் பெற்ற அறிஞரான நோம் சாம்ஸ்கி, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென், மகஸேஸ்ய விருது பெற்ற அருணா ராய், டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ராஜுந்தர் சச்சார், சர்வதேச புகழ்பெற்ற இயக்குநர், ஷ்யாம் பெனகல், உள்ளிட்ட முக்கியமானவர்களாலும் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்களும், அறிவியலாளர்களும், இன்னும் அருந்ததி ராய் போன்றவர்களும் சென் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினர்.

ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் என்ற அமைப்பு 2007 மே-24-ல் “இந்தியா சத்தீஸ்கர் அரசு மனித உரிமை போராளியை சிறை வைத்திருக்கிறது. பழங்குடி மக்களை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய மறுக்கிறது” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இன்னும் அதே வருடம் ஜுனில் ‘பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்’ என்ற பத்திரிக்கை வெளியிட்ட ஒரு கட்டுரையில் “லண்டனிலுள்ள இந்திய ஹை கமிசனுக்கு வெளியில் ஒரு போராட்டம் நடைபெற்றதாகவும் காரணம் மருத்துவர் சென் அமைதி மற்றும் நீதிக்கு கட்டுப்பட்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய முழு வாழ்க்கையையும் ஏழை மக்களுக்கு அர்ப்பணித்து மென்மையான முறையில் மருத்துவ சேவையாற்றிய மரியாதைக்குரிய மருத்துவர் ஆவார் என்றும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும்” குறிப்பிடப்பட்டிருந்தது. ‘நற்பணிகளுக்கு கிடைத்த மோசமான பரிசு’ என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கை அவர் கைது குறித்து கட்டுரையை வெளியிட்டது.

இப்படியாக ஒரு நல்லவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உள்ளுரிலும், ஏன் உலகெங்குமே எதிர்வினைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் சிறுபான்மை சமூகமாகிய நாம் இத்தேசத்தின் குடிமக்கள் என்ற குறைந்தபட்ச அளவிளேனும் நமது நிலைப்பாடு என்னவென்று பார்ப்போம். பொதுவாகவே இந்திய முஸ்லீம்களிடத்தில் உள்ள மனச்சோர்வில் பிரதானமானது நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற உணர்வாகும். இது உண்மையே எனினும் நம்மில் எத்துணை பேர் கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளோம்? எத்துணை பேர் போராடும் குணம் கொண்டுள்ளோம்? தேசிய அளவில் பாபர் மஸ்ஜித், காஷ்மீர் பிரச்சினை என வரும் போது மட்டும் சிறு சலசலப்போடு அடங்கி விடும் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு என்ன மாதிரியான விடிவு கிடைக்க இயலும்?

இலங்கை அகதி முகாம்களில் உள்ள தமிழர் மற்றும் இஸ்லாமியர்களின் அவலம், வடகிழக்கு மாகாணப் பிரச்சினை, காவிரி நீர், முல்லைப்பெரியாறு விவகாரம், உலக மயமாக்கத்திற்கு பின் ஏழை எளிய வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, மாறிவிட்ட கலாச்சாரம் போன்ற சர்வதேச, தேசிய மற்றும் மாநில பிரச்சினைகளில் நமது பங்களிப்பு என்னவாக இருக்கிறது? ஏன் இவைகளெல்லாம் ஒரு அநீதியாகவே நமது கண்களுக்குத் தெரிவதே இல்லை? கண்ணை இறுக மூடிக்கொண்டு தனித்தீவாக வாழும் ஒரு சமூகம் எங்கணம் தன்னை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள இயலும்? இன்னும்; எவ்வளவு காலம் தான் இப்படியே இருக்கப்போகிறது இச்சமூகம்? அநீதி இழைக்கப்படும் மக்களுக்காக இன்று அறிவுத் தளத்திலும், களத்திலும் போராடிக் கொண்டிருக்கும் அருந்ததி ராய், பினாயக் சென், ரொமிலா தாப்பர், ஐரோம் ஷர்மிளா, மேதா பட்கர் போன்றவர்களும் இன்னும் பல்வேறு அமைப்பினரும் தனி நபர்களும் நமக்கு வாழும் உதாரணங்கள் அல்லவா?

அநீதியை எதிர்த்துப் போராடுவது நாம் செய்யவேண்டிய செயல்களில்லையா? நாம செய்யவேண்டிய செயற்கரிய செயல்களை இன்று மற்றவர்கள் செய்து கொண்டிருக்கும் போது குறைந்தபட்சம் அதனைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு கூட இல்லாமல் என்ன மாதிரியான சமூகத்தை கட்டமைக்கப்போகிறோம் நாம்? கடந்த கால வரலாறும் தெரியாமல், சம கால நிகழ்வுகளும் புரியாமல், எதிர்கால பயமும் அறியாமல் பழம் பெருமையிலும், சுயநல சிந்தனையிலுமே உழலும் ஒரு சமூகம் தனக்கான முன்னேற்றப் பாதையை எங்கணம் அறியும்? அனேகமாய் இதே போன்று வகைப்பட்ட கேள்விகள் நம் அனைவரிடமுமே இருக்கக்கூடும். ஆனால் நமது தற்போதைய தேவை பதில்களே.

சரி விசயத்திற்கு வருவோம். பினாயக் சென்னிற்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் நடைபெற்ற போராட்டங்களையெல்லாம் நமது அரசு கண்டு கொள்ளவே இல்லை. மட்டுமல்லாமல் 29/05/2009-ல் அவர் நேரடியாகச் சென்று பெற வேண்டிய ஜொனாத்தன் மன் விருதைப் பெறக்கூட அவர் அமெரிக்கா செல்ல அரசு அனுமதிக்கவில்லை. அரசின் இச்செயலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட சீன ஜனநாயகவாதியான லியு-சியோபோ-வை அவ்விருதைப் பெறவிடாமல் அவரை சிறையில் அடைத்து வைத்துள்ள சீனாவின் இரும்புக்கர நடவடிக்கையை ஒத்த செயலே இது என்று கூறியுள்ளார். மேலும் எதிர் வழக்கு கொடுத்துள்ள சென்னின் மனைவி இலினா சென் உள்ளிட்ட பலரையும் மிரட்டும் தொனியில் நடந்து கொள்கிறது இவ்வரசு.

சென்னின் மீதான குற்றச்சாட்டு குறித்து நாம் யோசிக்க வேண்டிய ஒரு விசயம் முக்கியமானது. சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலை பினாயக் சென் முப்பது முறை சந்தித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு சந்திப்புமே முறைப்படி அரசு அனுமதி பெற்று சிறைக்காவலர்கள் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது. எனில் இப்போது அதையே ஒரு குற்றச்சாட்டாக கூறுகிறார்கள் எனில் அவர்களை சந்திக்க அனுமதி அளித்ததே இது போன்ற ஓர் உள்நோக்கத்திற்காகத்தானா? அல்லது இந்த வழக்கே முழுமையானதொரு உள்நோக்கப் பின்னணி கொண்டதுதானா? எனில் சென்னைக் கைது செய்ததின் மூலம் இந்த அரசு அறிவிக்கும் செய்திதான் என்ன?

“பாராளுமன்றம், அரசியல் சட்டம் மற்றும் இந்த ஜனநாயத்தை நம்புகின்ற ஒருவருக்கே இக்கதியென்றால் இக்கைது, மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இந்த அரசு விடும் எச்சரிக்கையே” என்கிறார் தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் எஸ்.ராஜு பினாயக் சென் மனைவி இலினா சென்னோ “இதனால் அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு சாதாரண மனிதன் குரல் எழுப்பவே பயப்பட வேண்டிவரும்” என கூறியுள்ளார். அவர் கூறியது முற்றிலும் உண்மையே. ஏனெனில் அரசு வன்முறைகளுக்கு எதிராக அனைத்து தளத்திலும் போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பினாயக் சென்னின் கைது சந்தேகமேயில்லாமல் ஒரு அச்சுறுத்தல் தான்.

இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ஜார்ஜ் புஷ் அமெரிக்கா அதிபராக இருந்த கால கட்டத்தில் வெளியுறவுப் பயணமாக அமெரிக்கா சென்ற நமது பிரதமர் மன்மோகன்சிங் புஷ்ஷைப் பார்த்து “இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சற்றும் நாகூசாமல் புளுகினார். இக்கருத்தையொட்டி அன்றைய நாளிதழ்களில் பல தரப்பட்ட விமர்சனங்களும் வந்த வண்ணமிருந்தன.

ஊரறிய, உலகறிய பொய் சொல்பவர்களுக்கு கிடைப்பதோ ‘மிஸ்டர் கிளீன் பட்டம்’. ஏழை மக்களுக்கு உதவும் மருத்துவரின் மீது பாய்வதோ தேசத் துரோகச் சட்டம். போபாலில் நம் மக்கள் 24,000 ம் பேரை பலி கொண்ட யூனியன் கார்பைடு தலைவன் ஆண்டர்சன்னுக்கு வாய்த்ததோ அரசு விமானப் பயணம். ஆனால் குடிமக்கள் படுந்துயரங்களை எடுத்துரைக்கும் போராளிகளோ, குடும்பத்தையும் பிரிந்து வாழும் அவலம்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

Related posts

Leave a Comment