கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா

Loading

1961 இல் சவூதி அரேபிய மன்னர் இப்னு சவூத் விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்க, மதீனாவில் ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தேவையான விரிவான திட்டத்தை மௌலானா மௌதூதி முன்வைத்தார். கெய்ரோவிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியப் பண்பு, தேசியமயமாக்கல் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளால் நாசமாக்கப்பட்ட போது உருவாகிய வெற்றிடத்தை காலப்போக்கில் இது பூர்த்தி செய்யும் என அவர் நம்புகிறார்.

“நான் உருவாக்கி, மன்னர் நியமித்த குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மதீனா பல்கலைக்கழகத்திற்கான திட்டம், குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் (சட்டவியல்), இஸ்லாமிய வரலாறு, கலாம் (இறையியல்) ஆகியவற்றோடு நவீன சட்டம், அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் மதங்களின் ஒப்பீடு போன்றவற்றையும் கற்பித்தலை உள்ளடக்கியுள்ளது. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஆகியவற்றில் ஒரு மொழி கட்டாயமாக்கப்படும். இத்திட்டத்தில் கற்பனை செய்து பார்க்கப்படும் கல்வி முறையை “மதச்சார்பற்றது” என்றோ “மதச்சார்புடையது” என்றோ குறுகிய நோக்கில் சொல்ல முடியாது. இப் பல்கலைக்கழகம் பிற எல்லா பழைய புதிய கல்வி நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு தனக்கேயுரிய ஓரிடத்தை பிடிக்கும். அதிலிருந்து, இஸ்லாமிய கல்வியோடு நவீன அறிவிலும் புலமை பெற்ற முஸ்லிம் அறிஞர்களை உருவாக்க விரும்புகிறோம். அவர்கள் இன்றைய வாழ்வின் பிரச்னைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பர்.” (13)

1963 இல் எகிப்திற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே ஏற்பட்ட அரசியல் மோதலின் காரணமாக, ஆண்டுதோறும் எகிப்தில் தயாராகும் கஅபாவிற்கான போர்வையை சவூதி மன்னர் புறக்கணித்தார். அதை பாகிஸ்தானில் தயாரித்துத் தருவதற்கு பொறுப்பேற்கும்படி மௌலானா மௌதூதியை சவூதி அரேபிய அரசாங்கம் கேட்டுக் கொண்டது. மௌலானா மௌதூதியும் இதை ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக மௌலானாவின் ஆதரவில், எழில் நயமிக்க கருப்பு கிஸ்வா கையால் நெய்யப்பட்டு, லாஹுரின் சிறந்த கைவினைஞர்களின் துணைகொண்டு தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டு தயாரானது. அவ்வாண்டு மார்ச் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தபின் ஜமாத்தே இஸ்லாமியின் பணியாளர்களடங்கிய இரு சிறப்பு ரெயில்கள், கிஸ்வாவின் பல பெரிய பகுதிகளை சுமந்து கொண்டு லாஹுரிலிருந்து குவெத்தா, குவெத்தாவிலிருந்து கராச்சி, லாஹுரிலிருந்து பெஷாவர், பெஷாவரிலிருந்து கராச்சி என மேற்குப் பாகிஸ்தான் முழுவதும் சென்றன.

இது, நாடு முழுவதும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மதப் பேரார்வத்தை தோற்றுவித்தது. முழுக் கிராமங்களும் நகரங்களும் ரெயில் நிலையங்களில் வந்து குவிந்தன. குழந்தைகளுடன் பெண்களும், வயது வித்தியாசமின்றி வாழ்வின் பல்வேறு படித்தரங்களிலுள்ள ஆண்களும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் பல நாட்கள் வரை எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இறுதியாக ரெயில் வண்டி, கிஸ்வாவை சுமந்து வந்தபோது, ஜமாத்தே இஸ்லாமியின் பணியாளர்கள் அதன் பகுதிகளை அனைவரும் காணும் விதம் உயர்த்திப் பிடிப்பர். மக்கள், ஆனந்தக் குதூகலிப்பில் அழுது, பிரார்த்தித்து, அதை நெருங்க முடிந்தவர்கள் முத்தமிட்டு நறுமணப் பொருட்களால் நனைத்தனர். கடைசியில் கிஸ்வா லாஹுர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, வழி நெடுகிலும் கிடைத்த இடங்களிலெல்லாம் இலட்சக்கணக்கான மக்கள் குர்ஆனிய வசனங்களை ஓதியவர்களாக அதைக் காணும் நம்பிக்கையோடு முட்டி மோதிக் கொண்டு காத்திருந்தனர். விமான நிலையத்தில் மௌலானா மௌதூதி கிஸ்வாவை சவூதி அரேபிய தூதரிடம் சமர்ப்பித்தார். அதைப் பெற்றுக் கொண்ட தூதர், பின்னர் நன்றி தெறிவித்தார்.

மௌலானா மௌதூதி பிரபலமடைவதையும் அவரது வளரும் செல்வாக்கையும் கண்டு பொறாமையடைந்த எதிரிகள், 1963 அக்டோபர் 25-28 இல் நடந்த ஜமாத்தே இஸ்லாமியின் வருடாந்திர மாநாட்டைத் தடுக்க எண்ணி தங்களால் இயன்ற அளவு நாசவேலைகளில் ஈடுபட்டனர். பயண அனுமதியை மறுத்தது, ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதித்தது என அவரது வழியில் விதிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி, 40000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்று, மாநாடு சிறப்பாக நடந்தது. போலீசின் பாதுகாப்பில் வந்த ரவுடிகள் மாநாட்டுத் திடலை தீ வைக்கவும், மௌலானா மௌதூதியை கொலை செய்யவும் கூட முயன்றனர். ஆனால், அவரது தைரியமும் ஜமாத் பணியாளர்களின் அமைதியும், மாநாடு சிறப்பாக நடந்து முடிய உதவியது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது எதிரிகள், அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளில் அவருகெதிரான பரப்புரைகளை பொழிவதில் ஈடுபட்டனர். இதன் உச்சகட்டமாக 1964, ஜனவரி 6 இல் மௌலானா மௌதூதியும் ஜமாத்தின் பிற முக்கிய தலைவர்களும் மீண்டும் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஜமாத்தே இஸ்லாமி சட்ட விரோத அமைப்பாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டு, அதன் அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் கூடும் இடங்கள், காவல்துறையால் பூட்டப்பட்டு முத்திரை வைக்கப்பட்டன. எனினும் இவ்விவகாரம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன் நீதமான பாரபட்சமற்ற விசாரணைக்கு வந்தபோது, ஜமாத் தடை செய்யப்பட்டதும் அதன் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டதும் முற்றிலும் செல்லுபடியாகாது என விதிக்கப்பட்டது. விடுதலையடைந்த பதினைந்தே நாட்களில் -1964 அக்டோபர் 25 இல்- லாஹுரில் நடந்த தேசிய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், மௌலானா மௌதூதி பெருங்கூட்டத்தின் முன் 2 மணி நேரம் சொற்பொழிவாற்றினார். அதில் தனது அதிர வைக்கும் வாதங்களால், அரசாங்கத்தின் கொள்கைகள் அனைத்தையும் தாக்கினார். இவ்வரசாங்கம் அதிகாரத்தில் நீடிப்பதற்கான நியாயங்களை கேள்விக்குள்ளாக்கினார்.

“எமது ‘பெருங்குற்றம்’ என்னவெனில், இஸ்லாமிய நம்பிக்கை விஷயத்தில் நாம் நயவஞ்சகர்களாக இல்லாதிருப்பதும் நம் சமூக அலுவல்களை இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும் முயற்சிகளில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுமே ஆகும். இஸ்லாம்தான் எங்கள் மார்க்கம் என நாம் பிரகடனப்படுத்தும் பொழுது, இயல்பாகவே இஸ்லாம் தான், இஸ்லாம் மட்டுமே, எங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் –அது நன்னடத்தை சம்பந்தமான, நம்பிக்கை அல்லது கொள்கை, கல்வி அல்லது ஒழுக்கம் சம்பந்தமான, சமூக கலாச்சார முயற்சிகள், அரசியல், பொருளாதார அமைப்பு, சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் என எல்லாவற்றையும்- வழி நடத்துவதாக அமையும். அணு அளவேனும் நம்மை மாசுபடுத்தும் எந்தவொரு அந்நிய செல்வாக்கையும் நம் தனி மற்றும் தேசிய வாழ்விலிருந்து துடைத்தெறிய வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய சமரசத்தையும் பொருட்படுத்த மாட்டோம்; எதைப் பிரகடனம் செய்தோமோ அதையே நடைமுறைப்படுத்துவோம். இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றித்திரிய நாடுவோர்க்கு இது மிகவும் வெறுப்புக்குரியதாக உள்ளது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்துக்கெதிராக வேண்டுமென்றே செயல்படும் அதே சமயம், தேசம் அவர்களோடு சார்ந்திருக்கும் பொருட்டு வாயளவில் இஸ்லாத்தை புகழ்வதே அவர்களது கொள்கையாகும்.

நமது இரண்டாவது குற்றம் என்னவெனில், நாம் உறுதியான நம்பகமான பண்புள்ள மனிதர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நுண்ணாய்வு செய்த பின்னரே மக்களை நம்மோடு இணைத்துக் கொள்கிறோம்; ஜமாத்தே இஸ்லாமியில் இணைபவர் எவரும் கவனமான யோசனை மற்றும் முதிர் சிந்தனைக்குப் பின்னரே அதில் இணைகிறார். ஒருமுறை இப்பாதையை அவர் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் பின்னர் அவரது முழு வாழ்க்கையும் அதையே பின் தொடர்கிறது. அவர் வெறுமனே வாய்மொழியாக நம்பிக்கையை மொழிவதில் திருப்தியடைவதில்லை. மாறாக அதன்படி வாழவும், தனது நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களில் தேவையான மாற்றத்தைக் கொண்டு வரவும் முயற்சிக்கிறார். அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் அவருள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. நன்மை எது தீமை எது என்பதை அவர்கள் வெளிப்படையாக பறைசாற்றுவர். அவர்களைப் பொறுத்தவரை சிறைச்சாலைகள் அச்சம் கொள்ளப்பட வேண்டியவை அல்ல. மாறாக, அவை ஒழுக்க மற்றும் ஆன்மீக பயிற்சிப் பாசறைகளை ஒத்தது.

நான் இப்போது ஜனாதிபதி முஹம்மது அய்யூப் கானுக்கு எதிராக ஒரு குற்றப்பத்திரிக்கையை முன்வைக்கிறேன். இராணுவ சட்டம் அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை அவர் என்னென்ன செய்தார் என்பதையும் பாகிஸ்தானின் அதிபராக நீடிப்பதற்கு அவர் தகுதியற்றவர் என்ற எனது கருத்துக்கான அடிப்படைகளையும் அது விளக்கும்.

முதலாவதாக அவர் நம்பிக்கை துரோக குற்றத்திற்கு உள்ளாகிறார். இராணுவத்தின் தலைமை அதிகாரி என்ற அடிப்படையில் தேசத்தின் நம்பிக்கையை பெற்றிருந்த நிலையில், ஆயுதப் புரட்சியை ஏற்படுத்தி நாட்டின் அரசியல் சாசனத்தை அவர் தகர்த்தெறிந்தார். நாட்டின் பாதுகாப்புக்காக அவரது கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்ட இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்கு அவருக்கு என்ன உரிமை இருந்தது? அரசியல் நிகழ்வுகள் பற்றி அய்யூப் சுய கருத்துக்கள் கொண்டிருந்தாலோ தேசத்தை சீர் செய்வதற்கு திட்டங்கள் ஏதும் தன் சிந்தையில் கொண்டிருந்தாலோ, முதலில் அவர் பதவி விலகியிருக்க வெண்டும். பின்னர் 1959 பிப்ரவரி யில் நிச்சயிக்கப்பட்ட தேர்தலில் தன் தேர்தல் அறிக்கையை அறிவித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும்.

அய்யூப் கானின் இரண்டாவது குற்றம் என்னவெனில், நான்கு வருடங்களாக தான் வாக்குறுதிப் பிரமாணம் செய்திருந்த –ஜனநாயக முறைப்படி பிரகடனம் செய்யப்பட்ட- 1956 இன் அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்ததே. இக் காலகட்டம் முழுவதும், மக்கள் அடிப்படை உரிமைகளின்றி இருந்தனர்; தான் விரும்பிய சட்டங்களை இயற்றி நாட்டின் மீது அவற்றைத் திணித்தார். தனக்கு ஒத்துவராத சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தூக்கி எறிந்தார். சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதே இராணுவ நீதிமன்றங்களை அமைத்தார்; பெயரளவிலான விசாரணைக்குப் பின் மக்கள் மீது கடும்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுதே வேறெந்த அரசியல் கட்சியும் இல்லாத சமயத்தில், தேர்தல் அறிக்கைகளும் அரசியல் விவாதங்களும் அறவே இல்லாத நிலையில், அய்யூப் கான் தன் விருப்பத்திற்கேற்ப ‘அடிப்படை ஜனநாயகங்கள்’ என்ற முறையை அறிமுகப்படுத்தி அவற்றுக்கான தேர்தலையும் நடத்தினார். இது அவரது மூன்றாவது குற்றம். அரசியல் பேசுவதும், அரசியலில் ஈடுபடுவதும், 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றுத்தரும் கொடுங் குற்றங்களாக்கப்பட்டன. ‘அடிப்படை ஜனநாயகங்களின்’ தேர்தலுக்கான என்னவொரு இசைவான சூழல் இது! மேலும், தேர்தலின் போது, இந்தச் சில ஆயிரம் ‘அடிப்படை ஜனநாயகர்கள்’ அய்யூபிற்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். வாக்காளர்கள் முன் மாற்று வேட்பாளர்கள் எவரும் இருக்கவில்லை.

பெயரளவிலான இத்தேர்தலின் போது அய்யூப் இந்த 80000 ‘அடிப்படை ஜனநாயகர்களிடம்’ தன்னை அதிபராக்குமாறு கேட்டுக் கொண்டது மட்டுமின்றி, தன் விருப்பத்திற்கேற்ப ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கும் அதிகாரத்தையும் அவர்களிடம் கோரினார். இது நியாயமானதா? அவர் நடத்திய தேர்தலின் போது, அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றிருப்பர் என்பதும், அதிபர் தன் பங்கிற்கு தான் விரும்பிய அரசியல் சாசனத்தை வரையும் அதிகாரத்தை பெற்றிருப்பார் என்பதும் மக்களுக்கு முன்கூட்டியே சொல்லப்படவில்லை. எனவே இந்த 80000 அடிப்படை ஜனநாயகவாதிகள், இவ்விஷயங்களில் மக்களின் உரிமையாற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பது தெளிவு.

அரசியல் சாசனத்தை வரையும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட நாட்டின் அதிபரும் இராணுவச் சட்ட தலைமை நிர்வாகியுமான அய்யூப், நாட்டின் எதிர்கால அரசியல் அமைப்பிற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு அரசியல் சாசனப் பேரவையை அமைத்தார். இப் பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் அதிபராலேயே நியமனம் செய்யப்பட்டனர். மக்களுக்கு அதில் எந்தப் பிரதிநிதித்துவமும் அளிக்கப்படவில்லை. அதிபர் மற்றும் அவரது அமைச்சர்கள் தவிர வேறெவரும் தங்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டது.

இத்தனை முன்னேற்பாடுகள் செய்த பின்னரும், அரசியல் அமைப்புப் பேரவையின் அறிக்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு உரிய மரியாதையை, பெருமளவு அளித்தது. விளைவாக, அய்யூப் அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி, தன் மேதைமைக்கு ஏற்ற ஒரு அரசியல் சாசனத்தை கொண்டு வந்தார். இன்று நாட்டின் விவகாரங்கள் எதனடிப்படையில் நடத்தப் படுகிறதோ, அந்த 1962 இன் அரசியல் சாசனம் முழுக்க முழுக்க மக்களின் விருப்பங்கள் மற்றும் அபிலாசைகளை பொருட்படுத்தாமல் வரையப்பட்டது; அய்யூப் கானால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைப்புப் பேரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் கூட அமைக்கப்படாதது.

இவ்வரசியல் சாசனம், ஒரேயொரு மனிதரின் விருப்பங்களை செயலுருப்படுத்துகிறது. இராணுவச் சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் கட்டாயமாக்கப்பட்டது. இவ்வரசியல் சாசனத்திற்காகத்தான், அதை வரைந்தவருக்கு முழுத் தேசமும் மரியாதை செலுத்தி முடிவில்லா புகழுரை சூட்ட வேண்டியுள்ளது. இத்தகைய அரசியல் சாசனத்தின் மீது நாம் இப்போது ஒரு மேலோட்டமான பார்வை செலுத்துவோம். இதில் அதிகாரம் முழுவதும் ஒரேயொருவரின் –தலைமைச் செயலதிகாரியின்- கைகளில் குவிக்கப்பட்டுள்ளது. அவரே, மத்தியில் செயலாட்சித்துறை முழுவதையும் இயக்குகிறார்; மாகாணங்களைப் பொறுத்தவரை, அவரே அதன் ஆளுநர்களை நியமிக்கிறார். மேலும் தான் விரும்பும் போது காரணம் கூட சொல்லாமல் அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.

அய்யூப், நம் பேச்சு சுதந்திரத்தையும் இணைந்து செயலாற்றும் சுதந்திரத்தையும் என்ன செய்துள்ளார் என்று இப்போது பார்ப்போம். நாட்டு நடப்புகள் பற்றியதான உண்மை நிலவரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படாதவரை, அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தை அவர்கள் பெறாதவரை, எழுத்து பேச்சு மற்றும் கூட்டிணைவின் ஆற்றல்களை பயன்படுத்தி அடிப்படை உரிமைகளை சர்வாதிகார சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்கள் சக்தியை திரட்டும் வாய்ப்புகளை மக்கள் பெறாதவரை, எந்தவொரு அமைப்பும் திருப்திகரமாக இயங்க முடியாது.

முதலில், பத்திரிக்கைகளின் குரல் நசுக்கப்பட்டது. பத்திரிக்கைகளின் வாயை அடைத்ததன் மூலம் அவர்கள் மக்களின் பேச்சு சுதந்திரத்தை பிடுங்கிக் கொண்டனர். இவ்வாறு நாட்டை ஒரு அரசியல் சவக்காடாக மாற்றியபின் பத்திரிக்கை, மேடை, வானொலி மற்றும் நாட்டின் பிற மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ஒரேயொரு கீதத்தை மட்டும் ஒலிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டன. அதுதான், “புகழனைத்தும் அதிபர் அய்யூப் கானிற்கே!” எல்லா கடந்தகால மற்றும் நிகழ்கால சர்வாதிகாரிகளின் வரலாறுகளும் இங்கே மீட்கப்படுகிறது. அனைத்தும் ஒரேயொரு மனிதனைச் சுற்றியே நிகழ்வதாக காண்பிக்கப்படுகிறது.” (14)

குறிப்புகள்

(11) அரசியல் சாசனக் கமிஷனின் கேள்விகளுக்கான விடைகள் மற்றும் இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகள், செய்யது முஹம்மது தாவூத் கஸ்னவியால் பதிப்பிக்கப்பட்டது, லாஹுர், 1960, பக் 26-27

(12) முஸ்லிம் குடும்பவியல் அவசரச் சட்டம் பற்றி பாகிஸ்தானின் 209 உலமாக்களின் அறிக்கை, மியான் துஃபைல் முஹம்மதால் திருத்தி மொழியாக்கம் செய்யப்பட்டது, லாஹுர், 1962

(13)மௌலானா மௌதூதி மற்றும் மர்யம் ஜமீலாவிற்கிடையேயான கடிதத் தொடர்பு op cit பக் 22

(14) பாகிஸ்தானின் அரசியல் நிலைமை, அபுல் அஃலா மௌதூதி, ஜமாத்தே இஸ்லாமி, கராச்சி, 1965, பக் 24-41 (சுருக்கம்)

Related posts

Leave a Comment