கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர் துறத்தலின் அழகியல்

Loading

இமாம் ஹுசைனின் ‘ஷஹாதத்’ பற்றி அலீ ஷரீஅத்தி

டாக்டர் அலீ ஷரீஅத்தி, உலகளவில் புகழ்பெற்றவர். பலராலும் போற்றப்படுபவர். இஸ்லாமிய எழுச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்திய சிந்தனையாளர். சமூகவியல் மற்றும் மெய்யியல் கண்ணோட்டங்களில் இஸ்லாத்தின் மாட்சிமையை உலகளவில் ஓங்கச் செய்தவர்.

இவர் குறித்து டாக்டர் ஷஹீத் பெஹஷ்தி குறிப்பிடுகையில், ‘கடந்த பலவருடங்களாக ஈரான் இஸ்லாமியப் புரட்சியிலும், இஸ்லாமியச் சூழலிலும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலையை ஷரீஅத்தி உருவாக்கியிருந்தார். தூய இஸ்லாத்தின்பால் பேரார்வம் கொண்ட, கற்றறிந்த, சுறுசுறுப்பான இளைஞரணியைக் கவர்ந்திழுப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகித்தார். அதிகளவிலான உள்ளங்களை இஸ்லாமியப் புரட்சியோடு ஒன்றிணைத்தார். இப்புரட்சியும், இச்சமூகமும் ஆக்கபூர்வமான இப்பங்களிப்பிற்காக அவசியம் அவருக்கு நன்றி பாராட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அலீ ஷரீஅத்தியின் ஆக்கங்களிலே நபிக்குடும்பத்தார் (அஹ்லுல்பைத்) பற்றியவை அனைத்தும் மிகச் சிறப்பானவை. குறிப்பாக, இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகம் (ஷஹாதத்), கர்பலா நிகழ்வு என்பவை தொடர்பிலே அலீ ஷரீஅத்தியின் உரைகளும் எழுத்துக்களும் சிறப்பான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இங்கே, அவருடைய ஆக்கங்களிலிருந்து இமாம் ஹுசைனின் ஷஹாதத் பற்றி வந்துள்ளவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகம்

தான் கொலை செய்யப்படுவதற்காக தானாகவே கிளர்ந்தெழும் ஒரு மனிதன், மற்றவர்களால் கொலை செய்யப்படுவதுதான் இமாம் ஹுசைனின் ‘ஷஹாதத்’ ஆகும். உண்மையில் இமாம் ஹுசைனின் ஷஹாதத் என்பது, வேறொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது. எதிரியை பலவந்தமாக வாளால் வீழ்த்தி, வெற்றிநிலைக்குச் சென்று, பின்னர் அது சாத்தியமற்றுப் போனதும் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்ட தாக்குதலின் மூலமோ மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்படுவதற்காக வந்தவரல்லர் அவர்.

தன் வீட்டினுள்ளேயே அமர்ந்துகொண்டு, உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இயலுமாக இருந்த நிலையில்தான் அவர் கிளர்ந்தெழுந்தார். அறிவுடனேயே மரணத்தை வரவேற்பதற்கு விரைந்தார். இவ்வாறான நிலையில்தான் தன்னை அர்ப்பணிப்பதையும் உயிரைத் துறப்பதையும் தேர்வு செய்தார். இமாம் ஹுசைன், தாம் கொலை செய்யப்படுவதற்கு முன்பே தன்னுயிரை அர்ப்பணித்துவிட்ட ஒரு தியாகி. அது, ஒரு கொலைக்களத்திலே அல்ல. மாறாக, யஸீதுக்கு நம்பிக்கைப் பிரமாணம் (பைஅத்) செய்யுமாறு கூறிய மதீனாவின் ஆளுநராக இருந்த வலீதுக்கு பதிலளிக்கும்போதே, தம் வீட்டினுள் இருந்த நிலையிலே ‘முடியாது’ என்று கூறியபோதே அது நிகழ்ந்துவிட்டது. இந்த ‘முடியாது’ என்பது, ஒன்றை மறுத்துரைத்தலின் நீட்சியிலே பிறக்கும் உயிர்த் தியாகத்தை தேர்வு செய்வதாக அமைந்திருந்தது. அத்தருணத்திலேயே இமாம் ஹுசைன் ‘ஷஹீத்’ ஆகிவிட்டார். வெற்றிக்கான ஒரே ஆயுதம் இது மட்டுமே என்பதுதான் இவ்விடத்திலே, இமாம் ஹுசைனுடைய ஷஹாதத்தின் குறியீடாகும்.

எனினும், இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகம், தனக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த சூழமைவுகளை வேண்டியிருந்தது. அவை அக்கிரமமும் அராஜகமும் அனைத்தையும் சூழ்ந்துகொண்ட நிலையில், இஸ்லாத்தின் உயரிய விழுமியங்கள் அழிந்து, அதிகார வர்க்கத்தினரின் காதுகளில் நல்லுபதேசங்கள் எவையும் விழாதுபோகும்போது அது வெளிப்பட்டது. உண்மையில் இமாம் ஹுசைன், எதிரியை புறத்தே வெற்றிகொள்வதற்குத் தன்னால் முடியாது என்பதை நன்கறிந்த நிலையிலே பகிரங்கமாக மரணத்தின் தலைவாசலுக்குச் சென்றார். உயிர்த்தியாகத்தை தேர்வு செய்ததன் மூலம் செய்வதற்கு முடியுமாக அமைந்திருந்த மிகப்பெரும் காரியத்தை அவர் நிறைவேற்றினார்.

இமாம் ஹுசைனுடைய உயிர்த்தியாகத்தின் பயனாக இஸ்லாத்தின் அடிப்படைத் தன்மையை விளங்கி, அதன்பால் மக்கள் மீளுவது அமைந்திருந்தது. அத்தோடு, பெருமானாரின் பேரருடைய மரணத்திற்குப் பதிலடியாக உமையா ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தொடங்கின.

இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகத்தில், இஸ்லாமிய சன்மார்க்கத்திற்கு உதவுவதில் இஸ்லாத்தின் முதற்கடமையாகக் காணப்படுவது உயிர் துறத்தலேயாகும்.

இவ்விடத்தில், இறைபாதையிலே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு உதவுகிறார். ஹஸ்ரத் அம்மாரின் உயிர்த்தியாகமும் இவ்வகைப்பட்டதே. என்றாலும், இமாம் ஹுசைனுடைய உயிர்த்தியாகத்தின் பிரதிபலிப்பு, பல்வேறு காரணங்களுக்காக காலவரையறைக்கு அப்பாற்பட்டு பரந்துவிரிந்து காணப்படுகிறது. சிறப்போடு உயிர் துறத்தலின் மூலம் ஒரு உயிர்த்தியாகி எதிரியின் முன்னே வெற்றியை அடைந்து கொள்கிறார் என்பதை இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகத்திலே கண்டுகொள்ள முடிகிறது.

அவ்வாறுதான், ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே சிறப்பாகச் சண்டையிடுவது மூலம் ஒரு தியாகி வெற்றியீட்டுவதைக் காண்கிறோம். மாறாக, இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகி புறத்தே தோல்வியுறுவதன் மூலம் தன்னுடைய எதிரியை வெற்றி கொள்வதைக் காண்கிறோம். ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே, புறத்தே எதிரியை வெற்றிகொள்வதன் மூலமாக அது அமைந்திருந்தது.

இமாம் ஹுசைனின் உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகியின் முதற்கடமை உயிர்த்தியாகமே. ஆனால், ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகியின் முதற்கடமை எதிரியை தோற்கடிப்பதற்காகப் போராடுவது ஆகும்.

அலீ ஷரீஅத்தியின் சிந்தனைகள் மீதும், அவரிடத்தில் ஹுசைனியப் பார்வையும், கர்பலா காவியவுணர்வும் தோன்றுவதிலும் செல்வாக்குச் செலுத்தியிருந்த இமாம் ஹுசைனின் தாக்கங்களை அவருடைய அனைத்துப் படைப்புகளிலும் காணமுடியும். அனேக சமூக, அரசியல் போக்குகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் கர்பலா நிகழ்வின்பாலான ஹுசைனிய எழுச்சிப் போராட்ட நோக்குநிலையோடு பகுப்பாய்வதற்கு முனையக் கூடியவாறு, அவருடைய சிந்தனையோட்டங்களில் இமாம் ஹுசைனுடைய கர்பலாக் காவியத்தின் பிரதிபலிப்புகள் மிகவும் பரந்ததாகவும், உயிர்ப்புமிக்கதாகவும், ஆழமானதாகவும் காணப்படுகின்றன.

ஹுசைனிய எழுச்சிப் போராட்டத்தின் சூழமைவுகள்

இமாம் ஹுசைன் தேர்வு செய்திருந்த போராட்ட முறையானது, மிக எளிதில் புரிந்துகொள்வதற்கு உரியதன்று. மாறாக, இமாம் ஹுசைன், தமது தனித்தன்மை வாய்ந்த போராட்டத்தைத் தொடங்கிய அப்போதைய சூழமைவுகளைக் கருத்திற்கொண்டே அதனைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இறைவேத வழிகாட்டலோடு (வஹியோடு) மிக அணுக்கமாக வாழ்ந்தவர் என்பதாலோ என்னவோ, இமாம் ஹுசைன் தமது போராட்டத்தின் இறுதி அரணையும் இழந்து நிற்கின்ற வேளையிலும், தன்னையொரு இஸ்லாமியக் காவலன் எனும் கடமைப்பாட்டிலேயே வைத்துப் பார்க்கிறார். தமது பாட்டனார், தகப்பனார், சகோதரர் ஆகியோரின் வல்லமையாக இருந்து வந்த சத்தியத்தினதும், நீதியினதும் தலமான இஸ்லாமிய அரசிலிருந்து தமக்காகச் சுழற்றப்படுவதற்கு ஒரு வாளுங்கூட எஞ்சியிருக்கவில்லை. அதேபோல், ஒரு போர்வீரனுங்கூட…

அனைத்து சமூக தளங்களும் பலவருடங்களாக உமையா வம்சத்தினரால் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டன. இக்காலப் பகுதியிலே இஸ்லாம் தனது பசுமையை இழந்து காய்ந்த வைக்கோல் போன்று மாறியிருந்தது. இஸ்லாமிய விழுமியங்கள் தம் நிறத்தை தொலைத்து நின்றன. ஊழல்காரர்களின், அபகரிப்பாளர்களின் ஆட்சியின் மூலம் இஸ்லாமியச் சன்மார்க்கம் சரிவுக்கும் திரிபுக்கும் உள்ளாகியிருந்தது.

இமாம் ஹுசைன் இவ்வாறான சூழமைவுகளிலேயே தமது பாட்டனாரின் மார்க்கத்தை மீளவும் சீர்செய்வதற்காக கிளர்ந்தெழுந்தார். ஒருபுறம், இருக்கின்ற நிலையை மாற்றுவதற்கான வல்லமையை அவர் பெற்றிருக்கவில்லை. மறுபுறம், தாம் தொடர்ந்தும் மௌனம் காப்பதிலே எவ்வித நம்பிக்கைச்சுடரையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், வெற்றிக்குரிய ஒரேயொரு ஆயுதமாக தம்மிடமிருந்த ‘உயிர்த்தியாகம்’ (ஷஹாதத்) எனும் ஆயுதத்தினூடாக அசத்தியத்தின் அடையாளமான யஸீதியரை எதிர்கொள்வதற்கு அவர் விரைந்தார். அவ்வாறே, தமது உயிர்த்தியாகத்தின் மூலம் அவர்களை அகத்தே வெற்றிகொண்டார்.

அன்றுதான், ஹிஜ்ரி 61வது வருடம், முஹர்ரம் மாதம், ஆஷூறா தினமாக இருந்தது. கர்பலாக் களத்திலே, தமது அன்புக்குரியவர்கள் அனைவரையும் இரத்தம் சிந்திய நிலையில் காண்கிறார். அதேநேரம், தமக்கெதிரில் நயவஞ்சகமும், ஆக்கிரமிப்பு மனப்பாங்கும் கொண்ட எதிரிகளையும் காண்கிறார். அன்றைய சூழமைவுகள் தமக்கு எதிராக மாறியிருப்பதைக் கண்ணுற்ற பின்பும், ‘எனக்கு உதவக்கூடியவர் யாரும் உண்டோ’ (‘ஹல் மின் நாஸிரின் யன்ஸுர்னா’) என்ற இமாம் ஹுசைனின் அழைப்புக்குரல் சாதாரணமானதன்று.

தமக்கு உதவக்கூடியவர்கள் யாருமில்லை எனும் யதார்த்தத்தை அறியாத நிலையில் இந்த அழைப்புக்குரலை அவர் விடுக்கவில்லை. இவ்வழைப்புக்குரல், ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்காண அழைப்புச் சுமக்கும் வரலாற்றின் எழுச்சிக்குரலாக ஒலித்தது. இவ்வழைப்புக்குரல் எதிர்காலத்தை நோக்கியதாக இருந்தது. நம் அனைவருக்குமாக ஒலித்தது.

உண்மையில், இமாம் ஹுசைனின் இவ்வழைப்புக்குரல், தம்மை நேசிப்போரின் உள்ளங்களிலே அவர் எதிர்பார்த்ததை இன்று வலிமை செய்திருக்கிறது. உயிர்த்தியாகிகளுக்கு மேன்மையையும், கௌரவத்தையும் கொடுக்கும் அனைவருக்கும் அவருடைய உயிர்த்தியாகத்தின் அழைப்பை அறியச் செய்திருக்கிறது.

கடமைப்பாடும் இயலாமையும்

இமாம் ஹுசைனின் தீர்மானம் இதுவே: ‘ஆம், இயலாமையிலும் கூட கடமைப்பாடு இருக்கிறது. தனக்கு வாழ்வும், கோட்பாடும், போராட்டமும் உண்டு. இதன்படி, தான் உயிரோடு இருக்கிறேன் என்றால், உயிரோடு இருக்கும் காரணத்திற்காக கொள்கைவழியே போராடும் கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்’.

உயிருள்ள ஒவ்வொரு மனிதனும் கடமைப்பாட்டை உடையவனே. மாறாக, சக்தியுள்ள மனிதன் மட்டும்தான் கடமைப்பாட்டை உடையவனாக இருக்க முடியாது. இமாம் ஹுசைனை விடவும் உயிரோட்டமுள்ளவர் வேறெவர்தான் இருக்க முடியும். வரலாற்றிலே அவரளவுக்கு வாழ்வதற்கான உரிமையையும், உயிரோடு இருப்பதற்கான தகைமையையும் பெற்றவர் வேறெவர்தான் இருக்கிறார்?

மனித-ஆத்மாவாய் இருத்தல், அறிந்திருத்தல், விசுவாசித்தல், உயிர்வாழுதல் இவையனைத்தும் போராடுவதற்கான கடமையை உடையவனாக மனிதனை மாற்றிவிடுகின்றன. உயிர்வாழ்வும், பெருநேசமும், அறிவுடைமையும் கொண்ட மானுடத்தின் மேன்மையான அடையாளமாய் இமாம் ஹுசைன் இருக்கிறார்.

இயலுமை-இயலாமை, பலம்-பலவீனம், தனிமை-கூட்டு இவை அனைத்திலும் தமக்குள்ள கடமைப்பாட்டை எவ்வாறு நிலைபெறச் செய்வது? எவ்வாறு நிறைவேற்றுவது? என்பதை மட்டுமே வரையறுக்க முடியுமேயன்றி, அதன் இருப்பையல்ல. கடமைப்பாடு என்பது, மார்க்கம் நமக்கு வலியுறுத்தும் கடமையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக முயற்சிப்பதாகும். மேலும், முடியுமான அளவுக்கு அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக, காலம் மற்றும் சூழ்நிலைகளுக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதுமாகும்.

சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியல்

இமாம் ஹுசைன், உயிரோட்டம் மிகுந்த சிந்தனைப் பள்ளியிலே சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியலை நன்கு கற்றுத்தேர்ந்த பரம்பரையினரின் புத்திரர். உயிர்த்தியாகத்தின் மகாப்போதகர். இன்றைய சூழலிலே, முடியுமான நிலையில் மட்டுமே போராடுவதை தேர்வு செய்கின்ற, அதேநேரம் எதிரியை மிகைத்தால் மட்டுமே வெற்றி என்று கருதுகின்ற அனைவருக்கும், ‘உயிர்த்தியாகம் என்பது ஒரு தோல்வியல்ல, அதுவோர் தேர்வாகும். அதாவது, ஒரு போராளி சுதந்திரத் தளத்திலே, நேசத்தின் சந்நிதானத்திலே தன்னைத் தியாகம் செய்துவிடுவதனூடாக வெற்றியை அடைந்துகொள்வதற்கான தேர்வாகும்’ என்பதை போதிப்பதற்காகவே கிளர்ந்தெழுந்தார்.

ஆதமுடைய சந்ததியினருக்கு வாழ்வைக் கொடுத்த ஆதமின் வாரிசு அவர். மனித சமுதாயத்திற்கு எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த பெரும் இறைத்தூதர்களின் வாரிசாய் இருந்த இமாம் ஹுசைன், தற்போது எவ்வாறு சிறப்போடு உயிர் துறப்பது என்பதை ஆதமுடைய சந்ததியினருக்குக் கற்றுக்கொடுப்பதற்காவே வந்திருந்தார்.

சிறப்போடு வாழுதல் இறைநேசர்களின் கலையாக இருந்தது போன்று, ‘ஷஹாதத்’ எனும் சிறப்பான உயிர்த்தியாகமும் இறைநேசர்களின் கலையாகும். சிறப்போடு உயிர் துறத்தலானது, ஷஹீதுகள் அதனை முதல் படித்தரத்திலே அனந்தரமாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு கலையாகும்.

உயிர்த்தியாகிகள், இறைவனது சந்நிதானத்திலே தமது இருப்பையும், உள்ளமையையும் காணிக்கை அளிப்பதன் மூலமாக வெற்றியை அடைந்துகொண்ட, பிரகாசிக்கும் தீபங்களாய் இருக்கின்றனர். ‘சையிதுஷ் ஷுஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் தலைவரான இமாம் ஹுசைன், எல்லாக் காலத்தவர்களுக்கும் சிறப்போடு உயிர் துறத்தலின் அடையாளமாய்த் திகழ்கிறார். அவரைப் பின்பற்றுவோரும் கூட, இறைபாதையிலே தம்முயிரை அர்ப்பணித்து, தம்மையே காணிக்கையாக்கி விடுவர். உண்மையில் தம்பால் நேசங்கொண்ட உள்ளங்களிலே, சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியலை உருவாக்கிவிடுகின்ற உயிர்த்தியாகத்தின் மிகப்பெரும் போதகரே இமாம் ஹுசைன்.

இமாமின் போராட்டத்தை, தோல்வியுற்ற போராட்டம் என்று சிலர் கருதுவது ஆச்சரியமே! உலகில் எந்தப் போராட்டம், சமூக தளத்திலே மக்களின் சிந்தனை, உணர்வு ஆகியவற்றின் ஆழத்தை ஊடறுத்து, வரலாற்று நெடுகிலும் தாக்கங்களை உண்டுபண்ணி, தனது வெற்றியை வியாபிக்கச் செய்திருக்கிறது? கால இடப்பரிமாணங்களைக் கடந்து இத்துணை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இமாமின் போராட்டம் ஒன்றுதான் என்று கூறினாலும் அது மிகையாகாது.

தனக்கேயுரிய காலத்திலும் சரி, அதனையடுத்து வந்த காலங்களிலும் சரி- பல்வேறு எழுச்சிப் போராட்டங்களுக்கு அது தூண்டுதலாக இருந்தது. தவ்வாபீன், அபூமுஸ்லிம் குராஸானி ஆகியோரின் எழுச்சிப் போராட்டங்கள் தொடங்கி ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிவரைக்கும், ஏன் காந்தியின் வார்த்தைகளிலே கூறுவதானால் இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திலும் கூட அது தனது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

உயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.

துணைநின்ற நூல்கள்

  1. ‘ஷரீஅத்தி: இயல்வழியே ஒரு தேடுநர்’ – கலாநிதி பெஹஷ்தி
  2. ‘ஹுசைன்: ஆதமின் வாரிசு’ – கலாநிதி அலீ ஷரீஅத்தி

Related posts

One Thought to “உயிர் துறத்தலின் அழகியல்”

  1. அஷ்ரஃப் இஸ்லாம்

    இந்தக் கட்டுரையை எங்களது மின்னிதழில் வெளியிடலாமா? இன்ஷா அல்லாஹ்

Leave a Comment