கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்

1938ம் ஆண்டு நவம்பர் 9முதல் 10வரை ஜெர்மன் அரசாங்கம் தனது ஆதரவாளர்களை யூதர்களின் ஆலயங்களையும் அவர்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் பள்ளிகளையும் அடித்து நொறுக்கும்படி ஊக்குவித்தது. குறைந்தது 91 யூதர்கள் —அனேகமாக மேலும் பலர்— நாஜி ஆதரவாளர்களால் கொல்லப்பட்டனர். பொது அறிவொளி மற்றும் பிரச்சாரத்துக்கான அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் என்பவரின் ஆதரவுடன் நடைபெற்ற அது கிறீஸ்டல்நாஹ்ட் (Kristallnacht) – “உடைந்த கண்ணாடி இரவு” – என்று அறியப்படுகிறது. பெருந்திரளாய் மக்களை இனப்படுகொலை செய்யும் செயலுக்கு அந்நிகழ்வு தீர்க்கமானதொரு முன்னுதாரனம்.

2020ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் டெல்லியில் இந்து தேசியவாதக் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் மசூதிகளையும் எரித்துக் கொள்ளையடித்தனர். தப்பித்து ஓட முடியாத முஸ்லிம்களைக் கொன்றனர். அல்லது உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களை காவல்துறையும் பாதுகாக்கவில்லை. குறைந்தது 37 பேர் —அவர்களுள் அனேகர் முஸ்லிம்கள்— கொல்லப்பட்டனர். மேலும் பலர் குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகும்படி அடித்துத் தாக்கப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்றை —அது விருத்தசேதனம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய— ஆடையை உருவிப் பார்த்திருக்கிறது ஒரு கும்பல். (ஏனெனில் இந்துக்களைப் போலன்றி முஸ்லிம்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டிருப்பர்.) சில முஸ்லிம் பெண்கள் தப்பிப் பிழைப்பதற்காக இந்துக்களைப் போல் நடித்துள்ளனர்.

ஜெர்மனியில் 82 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதைப் போல், அரசாங்கம் இதில் நேரடி உடந்தை இல்லை என்ற போதிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) குண்டர்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களில் முன்னணியில் இருந்துள்ளனர். அடித்து நொறுக்கப்பட்டதால் இரத்தத்தில் நனைந்திருந்த முஸ்லிம் ஆண்களை காவல்துறை அதிகாரிகள் தரையில் வலுக்கட்டாயமாகப் படுக்கவைத்து, தேசிய கீதத்தைப் பாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அக்காட்சியின் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. மோடி பல நாள்கள் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, பின்னர் “அமைதியையும் சகோதரத்துவத்தையும் காக்கவும்” என்று மேம்போக்கான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கலவரத்தின் போது அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி ஒருவரை உடனடியாக பணியிடமாற்றம் நிகழ்த்தியதில்தான் அரசாங்கத்தின் நிஜமுகம் வெளிப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் வன்முறை மீதான மனுக்களை விசாரித்தபோது, “மற்றொரு 1984” நடக்க நீதிமன்றம் அனுமதிக்க முடியாது என்று கூறினார். அந்த ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தம்முடைய சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டபோது, டெல்லியில் 3,000 சீக்கியர்கள், கும்பல்களால் படுகொலைக்கு ஆளானதையே அவர் அப்படி குறிப்பிட்டார். தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை காவல்துறை முறையாகப் பதிவு செய்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி முரளிதரின் பணி இடமாற்றம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது என்றும் அந்த நடவடிக்கை விரைவாக நடைமுறைப் படுத்தப்படுவது அவரது கருத்துக்களுடன் தொடர்புடையது இல்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது.

சமகால அரசியல் தலைவர்களின், அவர்களது அரசாங்கங்களின் பாசிச நடத்தை, 1930, 1940ம் ஆண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள பாசிச ஆட்சிகளைப் போன்றது என்று எளிதாகக் குற்றஞ்சாட்டிவிடக் கூடாது. இத்தகைய ஒப்பீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், போலந்து, பிரேசில் நாடுகளின் தேசியவாதிகள், சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு எதிராக அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்துபவர் அதை அவ்விதம் நம்புகிறார். மற்ற நேரங்களில், இது வெறுமனே அவதூறாகப் பிரயோகிக்கப்படுகிறது. ஆனால், மோடியும் பாஜகவினரும் தங்களின் தீவிர தேசியவாதக் கொள்கையிலும் வன்முறையைப் பிரயோகிப்பதற்கு தயாராக இருப்பதிலும் இதர வலதுசாரி ஆட்சிகளைவிட பாரம்பரிய பாசிசத்துக்கு மிகவும் நெருக்கமாகி விட்டனர். அவர்களுடைய செயல்திட்டத்தின் மையத்தில் அவர்களது இந்து தேசியவாதத்தின் முத்திரை உள்ளது. இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லிம்களை ஓரங்கட்ட அல்லது வெளியேற்றுவதற்கான இடைவிடாத முயற்சி உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் கனத்தை உலகின் இதர பகுதிகள் புரிந்துகொள்வது மந்தமாக உள்ளது. ஏனெனில் பன்மைத்துவ மதச்சார்பற்ற நாடான இந்தியாவை அதன் நிலையிலிருந்து மாற்றும் தங்கள் திட்டத்தை மோடி அரசு கமுக்கமாக நிறைவேற்றி வருகிறது. இந்த மாற்றத்தால் எதிர்மறையாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. எந்தளவு என்றால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒரு தனி நாடாக அமைந்தால், அது மக்கள்தொகை அடிப்படையில் உலகின் எட்டாவது பெரிய நாடாக இருக்கும்.

முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இருமுனைத் தாக்குதல்கள் அவர்கள்மீது அச்சம், வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி இந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளாக உருவாகியுள்ளன. ஒருமுனை, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) வடிவில் உள்ளது —இதன் வாயிலாய் புலம்பெயர்ந்தவர்களுள் முஸ்லிம் அல்லாதோர் இந்தியக் குடியுரிமையை விரைவாகப் பெற முடியும், ஆனால் முஸ்லிம்களால் முடியாது. இதைவிட அச்சுறுத்தலான விஷயம் தேசியக் குடிமக்களின் பதிவேடு (என்.ஆர்.சி) என்பதாகும். இந்திய முஸ்லிம்கள் பலரின் குடியுரிமையை இது பறிக்கக்கூடும். இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் அகிம்சை போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்தாம் இந்த வாரத் தொடக்கத்தில் இனப்படுகொலைக்கு நெருக்கமானவற்றை நடத்த இந்து தேசியவாதக் கும்பல்களைத் தூண்டிவிட்டன.

முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவினரும் எந்தளவு கீழிறங்குவார்கள் என்பதற்கான சான்று முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட, இந்திய மாநிலமாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே உள்ளது. கடந்த ஆகஸ்டில் அதன் சுயாட்சி அகற்றப்பட்டு அன்றிலிருந்து அது சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்புக்காவல்களும் சித்திரவதைகளும் சகஜம் என்று தாங்கள் கண்ணுற்றதை சில சாட்சிகள் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அரசாங்கம் ரத்து செய்ததிலிருந்து 150 நாள்கள்வரை இணையம் துண்டிக்கப்பட்டது. அது ஜனவரியிலிருந்து மிகக் குறைந்த அளவில் மட்டுமே மீட்டுத் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் சிறையிலிடுகிறார்கள். கலக்கமடையும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றோ அல்லது 800 மைல் தொலைவில் உள்ள சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டு, தாங்கள் அவர்களைப் பார்க்க இயலாதவாறு செய்யப்படுகிறார்கள் என்றோ புகார் கூறுகின்றனர்.

அரசாங்கத்தின் பார்வையில் பார்க்கப்போனால், காஷ்மீரைத் தனிமைப்படுத்தி, வெளி உலகத் தொடர்பிலிருந்து முடக்குவது அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் சாத்தியமாகியுள்ளது. ஆயினும், அங்குள்ள நிகழ்வுகளை நன்கு அறியவந்தால் மட்டும் அது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தி விடுமா? இந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த தீ எரிப்புகளும் கொலைகளும் நன்கு தெரியவந்துள்ளன. ஆனாலும், சர்வதேச அளவில் ஒரு குறிப்பிட்ட சகிப்புத்தன்மையுடன் ஏற்கப்படுகின்றன. எப்படியெனில், இந்தியாவில் “வகுப்புவாத வன்முறை” என்பது ஃப்ளோரிடாவின் சூறாவளி, ஜப்பானின் பூகம்பங்கள் போல் சகஜமானது; இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு மோசமான ஜனநாயக நிகழ்வு இது என்பதைப் போல் மோடி மாற்றிவிடுவார். யாரையும் குறை சொல்வதற்கில்லை.

இந்தியாவில் அதன் குறுங்குழுவாத மரபுகளின் சீரழிவுக்கு ஊக்கமளிக்கும் எதிர்ப்பு அலை, கடுமையாக ஒடுக்கப்பட்டபோதும், ஏற்பட்டுள்ளது. ஆனால் இதிலுள்ள ஆபத்து, மோடியும் அவரது அரசாங்கமும் இந்து தேசியவாத அட்டையை இன்னும் வலுவாக உயர்த்திப் பிடித்து முழங்குவதன் மூலம் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள் என்பதே. டெல்லியில் உள்ள கும்பல்கள் இதன் அறிகுறியாக இருக்கலாம்.

வெளிநாட்டு விமர்சனங்களைக் கையாளும்போது, உள்நாட்டு அரசியல் திட்டங்கள் எப்படியிருப்பினும் பொருளாதார வளர்ச்சியில் மிகைத்துள்ளோம், அதனால் இதர தோல்விகள் மன்னிக்கத்தக்கது என்று அரசாங்கம் கூறலாம். தங்களது ஊடகங்களில் பெரும்பாலானவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வாதிகார ஆட்சிகள் பெரும்பாலும் இதுபோன்றே கூறும். பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் இதற்கு நேர்மாறானவற்றைக் காட்டும்போது போலியான புள்ளிவிவரங்களை அவர்கள் உருவாக்குவார்கள். இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய அண்மைய ஆய்வு ஒன்று ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வலுவாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் முதலீடு, இலாபங்கள், வரி வருவாய், இறக்குமதி, ஏற்றுமதி, தொழில்துறை உற்பத்தி, கடன் ஆகியனவற்றின் வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் பலவீனமடைந்துள்ளது என்று தெரிவிக்கிறது.

ஒரு வகையில், கிறீஸ்டல்நாஹ்ட்டிற்குப் பிறகான ஜெர்மனியைவிட மோடி வலுவான நிலையில்தான் இருக்கிறார். ஜெர்மனியின் யூத எதிர்ப்பையும் வன்முறையையும் கண்டித்து ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஓர் அறிக்கையை வெளியிட்டு உடனடியாகத் தம் நாட்டுத் தூதரையும் திரும்பப் பெற்றார். இரு நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ட்ரம்போ, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சில மைல் தொலைவில் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவது நிகழும்போது, மதச் சுதந்திரத்தை நிலைநாட்ட மோடி “மிகவும் கடினமாக” உழைக்கிறார்; அதில் நான் திருப்தி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

மூலம்: While Muslims are being murdered in India, the rest of the world is too slow to condemn

தமிழாக்கம்: நூருத்தீன்

Related posts

One Thought to “டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்”

Leave a Reply to டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும் – Darul Islam Family Cancel reply