குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பின்நவீனத்துவத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

பின்நவீனத்துவ செயல்வாதங்களைப் புரிந்துகொள்வதற்கு ஃபூக்கோவைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஃபூக்கோ இவ்வுலகை “மையம்” என்றும் “விளிம்பு” என்றும் இரு முகாம்களாகப் பிரிக்கும் பொறிமுறைக்கு வித்திட்டார். ஆதிக்கக் கதையாடல் என்பது ஐரோப்பிய மையவாத, இருபால் நியதி (hetero-normative) சார்ந்த, நவதாராளவாத, ஆணாதிக்கக் கதையாடல். மறுபுறம் விளிம்புநிலைக் கதையாடல் என்பது கறுப்பர்கள், சிறுபான்மையினர், ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் ஆகியோருடையது. ஃபூக்கோவின் கருத்துக்களே அறுபதுகளுக்குப் பிறகு செயல்வாதக் குழுக்களின் அடித்தளமாய் மாறின.

மேற்குலகிலிருந்த உயர் நடுத்தர வர்க்கக் கல்வியாளர்கள் இப்போது தங்களாலும் விளிம்புநிலையினருக்காகப் பேச முடியும் என உற்சாகமடைந்தனர். உடமை மறுக்கப்பட்டவர்கள் மத்தியில் கம்யூனிசம் பிரபலமாக இருந்த காலம்வரை அவர்களுக்கு அது சாத்தியமில்லாமல் இருந்தது. எனவே, அவர்கள் சுயமாக விளிம்புநிலை வரலாற்றுக் கதையாடல்களை உருவாக்கினர். ஒவ்வொரு கதையாடலும் ஆதிக்கக் கதையாடலின் “கைவினைப் பொருட்களை” —அதன் வெகுஜனக் கலாச்சாரத்தை, அதன் ஆதார இலக்கியத்தை, அதன் கோட்பாட்டாளர்களை— கட்டுடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இச்செயல்முறை 1980களில் முழு வீச்சில் நடந்தேறியது.

முதல் பார்வைக்கு இது விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் எழுப்புவதில் அக்கறை கொண்டதுபோலத் தெரியலாம். ஆனால், உலகு குறித்து ஆதிக்க அமைப்பு கொண்டுள்ள அதே கருதுகோள்களையே இந்தப் பின்நவீனத்துவ அமைப்பும் கொண்டுள்ளது.

  1. இந்த உலகம் அதிகாரத்தாலும் வாய்ப்பாலும் கட்டுப்படுத்தப்படுவதாக நம்புவது.
  2. சத்தியம் என்பது புலனறி இயற்கை விஞ்ஞானங்களுக்கு உட்பட்டது என நம்புவது.
  3. நவீனத்துக்கு முந்தைய ஆன்மிகம் மூடநம்பிக்கையானது, சடங்குத்தனமானது என நம்புவது.
  4. துன்பம் என்பது முற்றிலும் மோசமானது, முற்றிலும் இயற்கையானது, பொருள் ஏதுமற்றது என நம்புவது.
  5. இஸ்லாம், கிறிஸ்தவம், மார்க்ஸியம் என்பவற்றில் இருப்பதுபோல் எந்தவொரு முறையான இறுதி லட்சியமோ மீட்சியோ கிடையாது என நம்புவது.

ஃபூக்கோவைப் பொறுத்தவரை, துன்பத்திலிருந்து மீள வழியே இல்லை. ஆதிக்கச் சக்திகளை “எதிர்த்து” நின்று விளிம்புகளில் வாழ்வது ஒன்றே வழி. பின்நவீனத்துவர்கள் அதிகாரத்திலும் அதற்காகப் போராடுவதிலுமே நம்பிக்கையுடையவர்கள்.

அவர்கள் விளங்காத மொழியிலும் கவர்ச்சிகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்துவதிலும் வல்லவர்களாக இருப்பினும் உண்மையான மாற்றுகளை முன்வைப்பதில்லை. ஆம், பலவற்றைச் சிதறடிக்கிறார்கள்; ஆனால் ஆக்கப்பூர்வமாக எதனையும் கட்டியெழுப்பவில்லை. எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு இறுதியில் அவர்களின் நம்பிக்கையை திறந்த சந்தையில் வைப்பதோடு Anglo-saxon தனிமனிதவாத, இயற்கைவாத, தாராளவாதத்தில் போய் விழுந்துவிடுகிறார்கள்.

கல்விபெற்ற பூர்ஷுவாக்கள் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் நிற்பதற்கும் அவர்களுக்காகப் பேசுவதற்குமான வாய்ப்பை ஃபூக்கோ வழங்கினார். பாட்டாளி வர்க்கப் புரட்சி எதையும் பின்நவீனத்துவர்கள் எதிர்நோக்கியிருக்கவில்லை. அவர்கள் நிலவும் அரசியல் பொருளாதார முறைமைக்கு வளைந்து கொடுத்து ஒத்துழைப்பதன் வழியாக அதிலிருந்து ஏதேனும் பயன்களைப் பெற விழைகிறார்கள்.

இடதுசாரி முஸ்லிம்கள் எதைத் திறம்பட செய்திருக்கிறார்கள் என்றால் தங்களை விளிம்புநிலை தரப்போடு அடையாளப்படுத்திக் கொண்டதுதான். அவர்கள் முழுமையாக குறுங்குழுவாதத்தைத் தழுவிக்கொண்டிருப்பதோடு, பிற விளிம்புநிலைக் குழுக்களோடு முரண்படும் தங்களின் அற நெறிமுறைகள் சார்ந்த நம்பிக்கைகளையும் ஒதுக்கித் தள்ளியிருக்கின்றனர் (ஒருபால் திருமணம், கருக்கலைப்பு போன்றவை சில உதாரணங்கள்). சில பேர் முழுமையாக இந்த விஷயங்களையெல்லாம் உள்வாங்கிவிட்டனர்.

எனவே, முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு முன்னால் பெரும் கடமை ஒன்று இருக்கிறது. உண்மையிலேயே தங்களுடைய காலத்தையும் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ள முயற்சித்தால் நீட்சேவையும் ஃபூக்கோவையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், தங்களுடைய தனித்துவம் வாய்ந்த உலகப் பார்வையை தொடர்ச்சியாக செழுமைப்படுத்திக் கொள்வதோடு, மாற்றத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் சமுதாயத் தலைவர்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டியிருக்கிறது.

மூலம்: To understand postmodern activism, you must understand Foucault.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

Related posts

Leave a Comment