இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையினரா?
வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதற்கு மறுநாள் (27.05.2014), சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ் விநோதமானவொரு அறிக்கையை வெளியிட்டார். அதற்காகச் சிலர் ஆச்சரியப்பட்டார்கள், சிலர் அதிர்ச்சியடைந்தார்கள். வேறு சிலர் அதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர் சொன்னது இதுதான்: “முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, பார்சிகள்தான் சிறுபான்மையினர். அவர்களுக்கு (பார்சிகளுக்கு) எப்படி உதவுவது என்றே நாம் யோசிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை மேலும் தாழ்வுறாமல் பார்த்துக்கொள்ளலாம்”.
தற்போது பார்சிகளின் எண்ணிக்கை 69,000 என்றளவில் இருக்கிறது. அதேவேளை, முஸ்லிம்களோ மொத்த மக்கள் தொகையான 130 கோடியில் 14 சதவிகிதத்திற்குச் சற்று குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் நிலையை ஆராய்ந்து 2006ல் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, பார்சிகளைப் போல் அல்லாமல், “முஸ்லிம்கள் மற்ற சமூகங்களைவிட மோசமான நிலையில், (தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த) முசாஹர் தலித்களை விடவும் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலையிலேயே இருந்துவருகிறார்கள்.”
ஒரு நாளேடு நஜ்மா ஹெப்துல்லாஹ்வின் அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், “சிறுபான்மையினர் என்று கூறமுடியாத அளவுக்கு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டது. ஒரு பத்திரிகையாளர் ஹெப்துல்லாஹ்விடம் உங்கள் அமைச்சகம் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறது என்று வினவியதற்கு, “இது ஒன்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சகம் அல்ல, சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சகம்” என்றார்.
யார் சிறுபான்மையினர்?
முஸ்லிம்கள் சிறுபான்மை அல்ல என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன? முதலில் சிறுபான்மைக்கான அர்த்தத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது. சிறுபான்மை என்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் வரையறை கிடையாது. ஆனால், ஹெப்துல்லாஹ்வின் கருத்து ஒரு வரையறையைக் குறிக்கிறது. அவர் சிறுபான்மையை வெறும் புள்ளியியல் அடிப்படையிலானதாய் மட்டும் கருதுகிறார். அவரைப் பொறுத்தவரை, பார்சிகளைப் போன்ற ஒரு சிறு தொகையினரே சிறுபான்மையினர். முஸ்லிம்கள் பார்சிகளை விட மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அவர்கள் சிறுபான்மை அந்தஸ்துக்குத் தகுதியற்றவர்கள்.
மத்திய அமைச்சரின் இந்த விளக்கம் வரலாறு சார்ந்த அவரது அறியாமையை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் அரசியல் சூழ்ச்சியைக் காட்டுகிறது. சிறுபான்மை என்று வரையறுக்கப்படுவதில் எண்ணிக்கை மட்டுமே மையமான அம்சம் அல்ல. ஒரு அரசியல் அமைப்பில் பெரும்பான்மைச் சமூகத்தை ஒப்பிடுகையில் சிறுபான்மைச் சமூகம் எவ்வாறு அதிகாரம் குன்றிய நிலையில் இருக்கிறது என்பதே அதில் மையமானது. அரசியல் அறிவியலாளர் ஆண்ட்ரே லீபிச்சை பொறுத்தவரை, ஒரு சிறுபான்மையானது இரு முக்கியக் கூறுகளைக் கொண்டது: “சமத்துவமின்மை, தாழ்வுநிலை —வெறும் எண்ணிக்கை சார்ந்த தாழ்வுநிலை அல்ல, உண்மையான பொருளில் தாழ்வுநிலை”.
உண்மையைச் சொல்வதென்றால், ஹெப்துல்லாஹ்வின் பாட்டனாருடன் பிறந்த மெய்யியலாளரும், அரசியல்வாதியும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆஸாத் சிறுபான்மை என்பதற்கு வழங்கிய வரையறையை ஹெப்துல்லாஹ்வின் வரையறை அப்படியே கவிழ்த்துப் போடுகிறது. 1940ம் ஆண்டு ராம்கர் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரையில் அவர் குறிப்பிட்டதாவது:
அரசியல் சொல்வழக்கில் சிறுபான்மை எனும் வார்த்தைக்கு… ஒரு பலவீனமான சமுதாயம் (ஜமாஅத்) என்று பொருள். அது எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் (சலாஹியத்) பலம்குன்றியதாக இருக்கும் காரணத்தால் ஒரு பெரிய, பலம்வாய்ந்த சமூகத்துக்கு முன்னால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்… இங்கே எண்ணிக்கை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஆற்றல் (நவ்யியத்) என்பதும் முக்கியமானது.
அரசியல் அதிகாரத்தைப் பெறவும் பிரயோகிக்கவும் இயலாமல் இருப்பதே எதிர்கால ஜனநாயக அரசியலமைப்பில் சிறுபான்மை எனும் கருத்தாக்கத்தின் மையக்கருவாக இருக்கப்போகிறது என்பதை ஆஸாத் இங்கு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1947ல் நடைபெற்ற தேசப் பிரிவினையையொட்டி, முஸ்லிம்களை அதிகாரமற்றவர்களாக ஆக்கும் ஒரு சாணக்கியத்தனத்தின் மூலமாகவே அரசியல் மற்றும் அரசியல் சாசன உரையாடல்களில் ‘முஸ்லிம்கள் சிறுபான்மையினர்’ எனும் கருத்தாக்கம் நிலைநிறுத்தப்பட்டது.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் மத்தியில் ஒரு படிப்படியான அதிகாரச் சமனின்மையை உருவாக்கிப் பிரதிபலிப்பதுடன் அதை நிரந்தரமாக்கவும் செய்கிறது. சிறுபான்மை என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்வதற்கு ஏதென்ஸின் மக்கள்சபை ஜனநாயகத்திற்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். சிறுபான்மை எனும் வார்த்தையின் தற்காலப் பயன்பாடு பிரதிநிதித்துவ ஜனநாயகத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது —அயர்லாந்து முதல் வடஅமெரிக்கா வரையிலும், ருமேனியா முதல் இந்தியா வரையிலும் இதுவே நிலை.
சிறுபான்மையினரை அதிகாரத்திலிருந்து விலக்கிவைப்பதன் மூலம் பாதுகாத்தல்
ஒரு முக்கியத்துவமிக்க ஆய்வொன்றில், அரசியல் அறிவியலாளர் ஷெஃபலி ஜா, 1950ல் இந்தியச் சட்டம் இயற்றப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் சிறுபான்மையினரின் அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு எப்படி இன்றைய இந்திய சிறுபான்மைக்கான அர்த்தம் தக்கவைக்கப்பட்டது என்பதை நிறுவுகிறார். பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதையொட்டி சட்ட அவையில் மத அடிப்படையிலான தனித்தொகுதி கோரிக்கை கைவிடப்பட்டது. ஜூலை 1947ல் அமைக்கப்பட்ட சிறுபான்மை கமிட்டி முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் அவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றதோடு, பொதுப் பணியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க ஆலோசித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்துக்காக வாதாடுவது “நிலவும் ஜனநாயகத்தின் கேடுகளிலிருந்து, (அதாவது) பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து” தப்பிப்பதற்காகவே எனக் கூறிய காஸி கரீமுத்தீன், இது “மத அடிப்படையிலானதல்ல. அரசியல், மதம், இனம் என அனைத்து வகையான சிறுபான்மையினருக்கும் இது பொருந்தும்” என்றும் “ஜனநாயகத்தின் நியதியை நாம் பலிகொடுக்க வேண்டியதில்லை” என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், இதன் மூலம் “எல்லா இன, அரசியல் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க முடியும்” என்றார். இதைப் போலவே ZH லாரி வாதிடும்போது, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினால் பாராளுமன்றம் “தேசத்தின் மனதைப் பிரதிபலிக்கும்” என்றும் “சிறுபான்மையினருக்கு அவர்களின் பிரதிநிதித்துவம் குறித்த மனக்குறை இருக்காது” என்றும் சொன்னார். ஆனால், DH சந்திரசேகரியா போன்ற அவை உறுப்பினர்களால் கரீமுத்தீன், லாரி போன்றோரின் குரல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
பல்வேறு பொறிமுறைகளின் மூலம் சிறுபான்மையினரின் —குறிப்பாக முஸ்லிம்களின்— பிரதிநிதித்துவம் பற்றி விவாதிக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்பாடுகளையும் அரசியல் சட்ட அவை கழித்துக்கட்டியது. பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதிமுறை அப்படியே தொடர்ந்தது. “மதச்சார்பற்ற இந்தியா”வின் சிற்பியாக ஜவஹர்லால் நேரு அறியப்பட்டாலும் அரசியல் சாசனத்தில் “மதச்சார்பின்மை” எனும் பதத்தை நிறுவுவதற்கு அவர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. “ஒரு ஜனநாயகத்தில் பெரும்பான்மையினரின் நாட்டம்தான் இறுதியில் மேலோங்கும் என்பது மிக இயல்பான ஒன்று” என நாசுக்காகக் கூறினார்.
எதிர்காலத்தில் அமையவிருந்த நாடாளுமன்றத்திலும் நிர்வாகத்திலும் சட்ட ரீதியாகவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவப் பலத்தைப் பறித்துக்கொண்டு “சிறுபான்மை உரிமைகளை” அரசியல் நிர்ணய சபை அவர்களுக்கு வழங்கியது. இந்தச் சிறுபான்மை உரிமைகளும்கூட ஆரம்பத்தில் மூர்க்கமாக எதிர்க்கப்பட்டன. “தேசக் கண்ணோட்டத்தையும்” “தேச ஒற்றுமையையும்” சிதைக்கும் என்கிற நயமற்ற காரணங்களைச் சொல்லி ஜெயப்பிரகாஷ் நாராயணன், தாமோதர் சேத் போன்றோர் மொழி மட்டுமே சிறுபான்மையை வகைப்படுத்துவதற்கான அடிப்படைகளை உருவாக்கும் (மதம் கிடையாது) என்று வாதிட்டனர்.
தாமோதர் சேத்தைப் பொறுத்தமட்டில், சிறுபான்மையினரை கல்வி நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதித்தால் அது “வகுப்புவாதத்தையும் தேச விரோதச் சிந்தனையையும் தோற்றுவிக்கும்”. அம்பேத்கர் சரியாகச் சொல்லியிருப்பதுபோல, “அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சிறுபான்மையினரின் எந்தவொரு கோரிக்கையும் வகுப்புவாதமாக அழைக்கப்படும்போது, பெரும்பான்மையினரே ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வாரிச்சுருட்டிக் கொள்வதுதான் தேசியவாதமா?”.
சட்ட அவையிலும் நிர்வாகத்திலும் அங்கம் வகிப்பதற்கான அதிகாரச் சிறகுகளைக் கத்தரித்துவிட்டு, அரசமைப்பில் முஸ்லிம்கள் முதலான சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், “மதத்தை விசுவாசம் கொள்ளவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும்” (நிச்சயமாக ‘சமூக ஒழுங்கு, ஒழுக்கநெறி, சுகாதாரம் மற்றும் இதர விதிகளுக்கு உட்பட்டு’) “உரிமைகள்” கொடுக்கப்பட்டது. குறிப்பாக, “அரசமைப்புச் சட்டத்தை பல்வேறு அரசியல்வாதிகள், முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கினர்”. அவர்களுள் பெரும்பாலானோர் கே.எம்.முன்ஷி போன்று தங்களின் விஷமத்தனமான பெரும்பான்மைவாதத்திற்காகவும் இந்து தேசியவாதச் செயல்பாடுகளுக்காகவும் நன்கு அறியப்பட்டவர்கள்.
இந்த வரலாற்றுச் சூழமைவில் வைத்துப் பார்த்தால், நஜ்மா ஹெப்துல்லாஹ்வின் அறிக்கைக்காக சிலர் வருந்தும்போது வேறு சிலர் ஏன் மகிழ்கிறார்கள் என்பது புரியும். அவர்களின் ஆழ்ந்த கரிசனம் என்னவென்றால் தற்போதுள்ள சிறுபான்மைப் பாதுகாப்புகள்கூட மறுபரிசீலனை செய்யப்படவோ குறைக்கப்படவோ அல்லது ஒழித்துக்கட்டப்படவோ வேண்டும் என்பதுதான்.
இந்துக்கள் தனிப்பெரும்பான்மையினரா?
ஆண்ட்ரே லீபிச்சும் அபுல் கலாம் ஆஸாதும் குறிப்பிட்டதுபோல், சிறுபான்மை என்பதே பெரும்பான்மையினால்தான் இருக்கிறது என்றால், முஸ்லிம்கள் சிறுபான்மை அல்ல எனும் ஹெப்துல்லாஹ்வின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில், சட்ட ரீதியாகவே இதனோடு தொடர்புள்ள இந்துப் பெரும்பான்மை எனும் சொல்லை அவர் கேள்வி கேட்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களிடமும் அது பரவலாகப் போய்ச் சேர்ந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதன்மை சமூகவியலாளர் எம்.என். ஸ்ரீநிவாஸ், “இந்திய ஒற்றுமை என்கிற எண்ணக்கரு இந்து மதத்தில் பிண்ணிப்பிணைந்துள்ளது” என்கிறார். அவரைப் பொறுத்தவரை “இந்து” என்பது பௌத்தர்களையும் ஜைனர்களையும் சீக்கியர்களையும் உள்ளடக்கும். ஸ்ரீநிவாஸின் குருவும் இந்தியச் சமூகவியலின் தந்தையுமான ஜி.எஸ். குரே, பழங்குடியினர் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்களோ தனித்தவர்களோ அல்லர் என்கிறார். அவர்கள் “இன்னும் பூரணமாக ஒன்றிணைக்கப்படாத, ஆனால் இந்துச் சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர்தான்” என்பதே அவரின் அபிப்ராயம். அதேபோல, நிர்மல் குமார் போஸ் பழங்குடியினரை “பரிபூரண இந்துக்கள்” எனக் கருதுகிறார். இங்கு குறிப்பிடவேண்டியது, 1940வரை அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடிகள் இந்துக்களாக வகைப்படுத்தப்படவில்லை என்பதுதான்.
இந்த வலியுறுத்தல்கள் யாவும் எண்ணிக்கையின் அடிப்படையில் வலிமை தீர்மானிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பில், ஒரு இந்துப் பெரும்பான்மையை உருவாக்கும் முயற்சிகளையும் அதன் பின்னுள்ள முன்அனுமானத்தையும் பிரதிபலிப்பவையாக உள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியினரை இந்துக்களாகச் சேர்த்தது முதலான சுதந்திர இந்தியாவின் அரசாங்க நடவடிக்கைகள் சிலவும் இம்முயற்சிக்கு வலிமை சேர்ப்பதாய் அமைந்தன.
காங்கிரஸும் பிற அரசியல் கட்சிகளும் “சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்கள்”, முஸ்லிம்களை “வாக்கு வங்கியாக”ப் பயன்படுத்துகிறார்கள் என்ற பாஜகவின் குற்றச்சாட்டானது பெரும்பான்மை என்ற ஒன்று இருக்கிறது எனக் கற்பிதம் செய்வதாகவும் அந்த அனுமானத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதாகவும் அமைகிறது. பாபர் பள்ளிவாசலை இடித்து ராமர் கோவிலைக் கட்டவேண்டும் என்று மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்ட 1990ன் தொடக்க காலத்தில், பாஜகவும் அதன் கூட்டாளிகளும் சட்டத் தீர்வுக்கான பரிந்துரையை மறுத்து, கோயில் கட்டுவது முழுக்கமுழுக்க மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்று வாதிட்டனர். இங்கே தெளிவாக பெரும்பான்மைச் சமூகத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீவிரவாதம் சார்ந்த சமகால விவாதங்கள் திட்டமிட்டு சிறுபான்மைச் சமூகத்தோடும் அதன் மதத்தோடும் தொடர்புபடுத்திக் காட்டப்படுகின்றன. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து அரசியல் வன்முறையில் ஈடுபடுவோர் மிக அரிதாகவே தீவிரவாதிகளாக அழைக்கப்படுகிறார்கள். பாஜக மற்றும் அதன் தாய் இயக்கமான ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தப்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், தங்கள் மதத்தின் காரணமாகவே, இந்தியாவுக்கு விசுவாசமானவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது; ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தினரோ இயல்பிலேயே இந்தியாவுக்கு விசுவாசமானவர்கள்.
ஏப்ரலில் தேர்தல் பிரச்சாரம் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி சொன்னார், “அடிமட்ட அளவிலான எதார்த்தம் என்னவென்றால், நீங்கள் ‘மதச்சார்பற்றவர்’ என்று சொன்ன மறுகணமே மக்கள் உங்களை ‘இந்து விரோதி’ என்று நினைக்கின்றனர்.”
இந்துப் பெரும்பான்மை எனும் கற்பிதத்தை பின்வரும் கோஷம் போல் வேறெதுவும் துல்லியமாக எடுத்துக்காட்ட முடியாது: “இந்து கடா, தேஷ் படா” (இந்துக்கள் குறையும்போது இந்தியா பிளவுபடும்). இந்தக் கோஷம் 1980,90களில் எழுப்பப்பட்டு, பொது இடங்களிலெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
இந்துக்கள் பெரும்பான்மையினர் அல்லர் என்று என்றைக்காவது ஹெப்துல்லாஹ்வால் சொல்ல முடியுமா? அல்லது, அவ்வாறு சொல்லத் தேவையில்லாதபடி அது மிக “இயல்பான”, சாதாரணமான உண்மையா?
மூலம்: அல்ஜஸீரா
(தமிழில்: நாகூர் ரிஸ்வான்)