கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்

Loading

பத்திரிகையாளராக இருந்து ’குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநரானவர் ராஜு முருகன். தனது ’ஜோக்கர்’ படத்துக்காக தேசிய விருது வரை பெற்ற அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள ’ஜிப்ஸி’ ஒரு நாடோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்தச் சமூக அமைப்பில் ஒரு நாடோடியாக அவன் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் பேசுவதன் வழியாக சாதி, மதம் கடந்து மனிதம் முக்கியம் என்று சொல்கிறது படம்.

அதில் 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையிலான அவருடைய பதிவு ஒரு துணிச்சலான முயற்சி. அந்தக் கலவரத்தின் புகைப்பட சாட்சியாக இருக்கும் குதுபுத்தீன் அன்சாரியையும் அஷோக் மோச்சியையும் 2014ஆம் ஆண்டு கேரள சிபிஎம் கூட்டத்தில் ஒரே மேடையில் பேச வைத்தார்கள். ஜிப்ஸி படத்துக்கு அந்த நிகழ்வு ஓர் ஆதாரமான அங்கமாக இருக்கிறது.

இத்திரைப்படம் குறித்த நிறைகளைப் பலரும் பதிவு செய்துள்ளனர். நாம் இந்தக் கட்டுரையில் அது பேசும் அரசியலை விமர்சன நோக்கோடு அணுகுவோம்.

ஜிப்ஸியின் கதைக் கரு வித்தியாசமான ஒன்று. எனினும், பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக அதைத் திரைக்கதை ஆக்குவதை விடவும் இயக்குநர் படம் முழுக்க கருத்துரைக்க முயற்சித்திருப்பதால் பல இடங்களில் நமக்குப் பிரச்சார நெடியேறுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பிரச்சாரத் திரைப்படமாகவே அது இருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் கஷ்மீரில் வன்முறை நடப்பது போன்ற காட்சி. அதில் மதப்பற்றுள்ள கஷ்மீரி முஸ்லிம் பெண் மற்றும் பண்டிட் இந்து ஆண் ஜோடிகள் (முஸ்லிம் பிரிவினைவாதிகளால்) கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை நாடோடி குதிரைக்காரரான சீனியர் எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் ஜிப்ஸி. சீனியரை போலவே சாதி, மத அடையாளங்கற்றவன் அவன்.

ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு நாடு முழுக்க அந்தக் குதிரைக்காரர் சுற்றித்திரிகிறார். ஜிப்ஸி இந்திய மொழிகளில், இசையில், பாடலில் கைதேர்ந்தவனாக வளர்கிறான். அவன் வாலிபனானதும் அவனுக்கான துணையைத் தேடிக்கொள்ளுமாறு அறிவுரைத்துவிட்டு மரணித்துவிடுகிறார் சீனியர். நாடோடியான ஜிப்ஸி தனது குதிரை சே உடன் நாகூர் போகும்போது, அங்கு சீனியர் சொன்னது போல ஒரு பெண்ணைப் பார்க்கிறார். உருது பேசும், பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் அவள். இப்படி காதல் கதை போலத் தொடங்கிய படம் அந்த முஸ்லிம் பெண், ’அடிப்படைவாதியான’ அவளுடைய தந்தையாலும் தன் சமூக சூழலாலும் எப்படியெல்லாம் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறாள் என்பதில் கவனம் குவிக்கிறது.

அந்த நிமிடத்திலிருந்து, முஸ்லிம்கள் குறித்து பொதுபுத்தியில் இருக்கும் அத்தனை தப்பெண்ணங்களையும் தொகுத்து காட்சிக்குக் காட்சி அடுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். வழக்கமாக திரைப்படங்களில் முஸ்லிம்களை எப்படி எதிர்மறையாகப் பொதுகுணப்படுத்துவார்களோ அவ்வாறே இப்படமும் செய்திருக்கிறது. அதையொரு பரப்புரை போல முன்னெடுத்து, திகட்டத் திகட்ட பார்வையாளர்களுக்குத் தந்திருக்கிறார் ராஜு முருகன்.

முஸ்லிம்களின் சமய, குடும்ப, சமூக வாழ்வு பற்றி குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் அரைகுறையாக ஹோம்வொர்க் செய்து எடுக்கப்பட்ட படம் இது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ் முஸ்லிம்கள் வாழும் நாகூரில் உருது முஸ்லிம் குடும்பம், அதிலும் மலையாள தொனியில் தமிழ்ப் பேசும் அப்பா! நாகூரில் பீஃப் பிரியாணி செய்யும் வழக்கமே கிடையாது. ஆனால், படத்தில் அந்தக் குடும்பம் இரவு உணவாக பீஃப் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறது! தொழுகையில் அல்லாஹு அக்பர் சொல்ல வேண்டிய இடத்தில் சுப்ஹானல்லாஹ் என்பது, திருமண விவாகரத்து நடக்கும்போது சந்தோஷமான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் ”மாஷா அல்லாஹ்” என்று சொல்வது, நபி மொழிகளைச் சொல்லும்போதெல்லாம் குர்ஆன் சொல்லுவதாகக் கூறுவது, தாலி சென்டிமன்டை கருகமணிக்குக் கூறுவது போன்ற அசட்டுத்தனம் கடும் அயற்சியைத் தருகிறது.

கிரிக்கெட், குடி, கூத்து என எல்லாவிதமான கேளிக்கைகளிலும் முஸ்லிம் ஆண்கள் திளைத்திருக்க, முஸ்லிம் பெண்கள் அடிமைகளாக வாழ்வது போல சித்தரிக்கிறது படம். தொழுகை, ஹிஜாப் உள்ளிட்ட இஸ்லாமிய அம்சங்களெல்லாம் முஸ்லிம் ஆண்களால் பலாத்காரமாக முஸ்லிம் பெண்கள் மேல் திணிக்கப்படுவதாக தம் முன்முடிவைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்திலுள்ள பல விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. படத்தின் தொடக்கம் முதலே ஜிப்ஸி மீது எவ்வித காரணமுமின்றி கதாநாயகி வஹீதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிப்ஸியின் குதிரை சே முஸ்லிம் இமாம் ஒருவரை உதைத்துவிடுகிறது. அதற்காக ஜிப்ஸிக்கு ’அந்த ஆட்களின்’ அமைப்போடு தொடர்பிருக்கிறதா, அவன் என்ன சாதி, எந்த மதம் என ஆய்வு செய்கிறார்கள் முஸ்லிம்கள். ’ஆய்வு முடிவு’ வரும் வரை தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஜிப்ஸியையும் அவரின் நண்பர்களையும் கட்டிப் போடச் சொல்கிறார் கதாநாயகியின் தந்தை.

அதன் பின் கதை எப்படி நகரும் என்பதை பார்வையாளர்கள் எளிதில் ஊகிக்க முடியும். காதல் பாடல், நடனம் என எல்லாம் செய்து கதாநாயகி வஹீதாவை எளிதாகவும் முழுமையாகவும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார் ஜிப்ஸி. எந்நேரமும் முரட்டுத்தனமாகவும் அன்பற்றவராகவும் இருக்கும் அப்பாவிடம் சிக்கித் தவிக்கும் வஹீதாவுக்கு ஜிப்ஸி மூலம்தான் சிரிப்பு, மகிழ்ச்சி என்பன கிடைக்கின்றன. ஒருநாள் அவள் தன்னுடைய வீட்டு முற்றத்தில் நின்று மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்த ‘பாவத்துக்காக’ அவளைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுப்பார் அவளின் தந்தை. அந்தக் காட்சியில் வஹீதா மழையில் நனையும்போது, வில்லத்தனமான இசைப் பின்னணியுடன் எண்ட்ரீ கொடுப்பார் இரும்பு நெஞ்சம் கொண்ட அவர். அடுத்த காட்சியிலேயே அவளுடைய நிச்சயதார்த்தம் காட்டப்படும். அப்போது அந்த வில்லத்தனமான இசை அப்படியே சோகம் ததும்பும் இசையாகப் பரிணமிக்கும்.

கதாநாயகிக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கும் மணமகனின் தாய் அடுப்பங்கரையில் புழுங்கிக் கிடப்பதைக் காட்டி, கதாநாயகிக்கும் அதேவிதமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைக் குறியீடாக உணர்த்துவதன் வழியாக முஸ்லிம் பெண்கள் என்போர் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்று இந்தப் படம் நிறுவ முனைகிறது.

திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த வேளையில், அதில் விருப்பமில்லாத வஹீதா யாருக்கும் தெரியாமல் தன் காதலன் ஜிப்ஸியைக் கூட்டிக்கொண்டு திடீரென ஓடிப்போய்விடுகிறார். முஸ்லிம் பெண்கள் மூச்சு முட்டும்படியான ஒடுக்குமுறையின் கீழ் துன்புற்று வருவது போலவும், கிடைக்கும் முதல் வாய்ப்பில் தங்கள் குடும்பங்களைவிட்டு வெளியேறிவிடத் துடித்துக்கொண்டிருப்பது போலவும் ஒரு கருத்தை இப்படியான காட்சிகள் மூலம் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

முஸ்லிம் ஆண்கள் எதிர் முஸ்லிம் பெண்கள் எனக் கட்டமைப்பது, முஸ்லிம் ஆண்களை கொடூரர்களாகச் சித்தரிப்பது, அவர்களை அடிப்படைவாதி என்பது, அவர்களிடம் இருந்து முஸ்லிம் பெண்ணுக்கு இந்து ஆண்தான் விடுதலை தரவேண்டும் எனக் கொக்கரிப்பது போன்றவை இந்து தேசியவாதிகளின் அரசியல். அதற்குத் துணை போகும் வகையிலேயே ஜிப்ஸி படம் அமைந்துள்ளது. இது ராஜு முருகனிடம் இருக்கும் சிக்கல் மட்டுமல்ல சிபிஎம்காரர்களின் (அதிலும் குறிப்பாக கேரள கட்சிக்காரர்களின்) கண்ணோட்டத்திலேயே இருக்கின்ற சிக்கல். அதனால்தான், படம் இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷனாக வெளிவந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது. திரைப்படத்தின் இடைஇடையே குர்ஆனில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, பைபிளில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என ஜிப்ஸியும் ஒரு கேரள காம்ரேடும் பாடமெடுக்கும் மேதாவித்தனம் எரிச்சலூட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் கணவன்-மனைவியாக வாழும் ஜிப்ஸியும் வஹீதாவும் அங்கு இந்து தேசியவாதிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். படுகொலைகள், பொருட் சேதங்கள், பாலியல் வன்கொடுமைகள் என எல்லா அட்டூழியங்களையும் கட்டவிழ்த்துவிடுகிறது அந்த கும்பல். ஜிப்ஸியின் குதிரை சே-வையும் தீயிட்டுக் கொலை செய்கிறது. அந்தச் சமயத்தில் கருவுற்றிருந்த வஹீதாவை ஓர் இந்து பக்திமான் காப்பாற்றுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைக் குழந்தையுடன் வஹீதாவை கேரளாவில் வசிக்கும் அவளின் தந்தையிடம் அவர் ஒப்படைக்கிறார். தன் மகள் ஓடிப்போனதால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக நாகூரில் இருந்து கேரளாவுக்குக் குடிபெயர்ந்திருப்பார் அந்த தந்தை.

ஓராண்டு கழித்து சிறையிலிருந்து நிரபராதி என்று வெளிவரும் ஜிப்ஸி தன்னுடைய மனைவியைத் தேடி கேரளாவுக்கே செல்கிறார். பெரும் வன்முறையைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டு தம் பெற்றோருடன் வசிக்கும் வஹீதாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்குச் செல்லும் ஜிப்ஸியை அவளின் தந்தை வசைபாடி திருப்பியனுவிடுவார். பிறகு, அங்குள்ள சிபிஎம் காம்ரேடுகளோடு சேர்ந்து ஜிப்ஸி அந்த ’அடிப்படைவாத’ தந்தையிடம் இருந்து பாவப்பட்ட அந்த கதாநாயகியை எப்படி மீட்கிறார் என்பதுதான் மீதிக் கதை. அதற்காக பாடலின் வழியாக ஜிப்ஸியும் காம்ரேடுகளும் ’புரச்சி’ செய்வது உச்சபட்ச நாடகத்தன்மையுடன் வெளிப்படும்.

கதையின் இறுதிப் பகுதியிலும் இஸ்லாமோ ஃபோபியா பிரச்சாரம் ஓயாமல் தொடர்கிறது. ஜிப்ஸியிடம் வஹீதாவின் தாய் சொல்லுவார், “அவள் வீட்டை விட்டுப் போனப்போ இந்தக் கதவுக்கு வெளியே அவளுக்காவது ஒரு உலகம் கிடைக்கும்னு சந்தோஷப்பட்டேன் பா”. இந்த வசனம் மூலம் இயக்குநர் என்ன சித்திரத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

முஸ்லிம் தீவிரவாதம் பற்றிய படங்களில்கூட, ஊறுகாயாகவேனும் ஒரு நல்ல பாய் காட்சிபடுத்தப்பட்டிருப்பார். இப்படத்தில் அதுவும் கிடையாது. இதற்கு முரணாக, ஜிப்ஸியின் அப்பா ஒரு சிவன் பக்தராக இருந்தாலும் தன் மனைவி இஸ்லாமைக் கடைப்பிடிக்க அனுமதிப்பார். அதேபோல, தீவிர ராம பக்தனாக வரும் ஆட்டோ ட்ரைவர் வஹீதாவைக் காப்பாற்றி கரையேற்றுவார். வஹீதா பாதிப்புக்குள்ளாகக் காரணமான இந்துத்துவரும் தவறை உணர்ந்து நல்ல மனிதனாகிவிடுவார். இவற்றையெல்லாம் தற்செயலானது என்று கடந்து செல்ல இயலவில்லை.

கேரளாவில் வஹீதாவை மீட்க ஜிப்ஸிக்கு உதவி செய்யும் காம்ரேட் ஒரு சந்தர்பத்தில், ”வேறெதாவது விஷயம்னா இறங்கி அடிச்சிருப்பேன். மதத்தை வெச்சு சென்சிடிவான அரசியல் பண்ணிடுவாங்க” என்பார். சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் வஹீதாவின் தந்தையை ”அடிப்படைவாதி” என்றுகூட ஓரிடத்தில் முத்திரை குத்துவார். அந்த இடத்தில் சிபிஎம்காரர்கள் தாம் என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடிப்படைவாதம் என்பது ஓர் அரசியல் சொல்லாடல். வைதீக (Orthodox) கிறிஸ்தவரையோ அல்லது யூதரையோ சட்டென அடிப்படைவாதி என யாரும் கூறிவிடுவதில்லை. அதுவே முஸ்லிம் என்றால் அடிப்படைவாதம் எனும் கடுமையான அரசியல் சொல்லாக்கத்தைக்கூட ரொம்ப ஈசியாக பயன்படுத்த முடிகிறது. Orthodox முஸ்லிம் என்றாலே அவனொரு செயலூக்கமுள்ள தீவிரவாதியாகக் கொள்ளப்படுகிறான் என்பதே இங்குள்ள சிக்கல். சிபிஎம் ஆட்கள் வைதீக பார்ப்பனர்களை இப்படிச் சொல்வார்களா என்பது சந்தேகமே.

குஜராத் இனப்படுகொலைக்கு இரு புகைப்படங்கள் சாட்சியாக இருப்பது போல, இப்படத்தில் நடைபெறும் உபி இனப்படுகொலைக்கு வஹீதா மற்றும் இந்துத்துவன் ஒருவனின் படங்கள் சாட்சியாக இருக்கும். அவர்கள் இருவரையும் ஒரு இசை மேடையில் சேர்ப்பார் ஜிப்ஸி. கடைசியில், மனநிலை சீராகி கதாநாயகி நாயகனுடன் இணைவதோடு படம் முடிகிறது.

இந்து எனும் வளையத்துக்குள் இருந்துகொண்டு பாதிக்கப்படும் முஸ்லிம் சமூகம் குறித்து தன் மனம் போன போக்கில், பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீட்பர் எனக் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே இப்படி சக்திமான்களாகக் கற்பனை செய்துகொள்ளும் முதிராப் பருவத்திலிருந்து வளர்ந்து எப்போது வயசுக்கு வருவார்கள் என்பதுதான் நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வி.

Related posts

Leave a Comment