கட்டுரைகள் 

வாழ்க்கையும் வலிகளும்

Loading

வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன.

வலிகள் என்ன செய்கின்றன? வலிகள் நம் இயலாமையை நமக்கு உணர்த்துகின்றன; நம் கர்வத்தை உடைக்கின்றன; நம் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன; வலிகள் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன. வலிகளற்ற வாழ்வு என்பது சாத்தியமற்ற ஒன்று. வாழ்வு பலவிதமான வலிகளால் சூழப்பட்டதுதான். அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

வலிகள் நம்மை நிராசையில் ஆழ்த்தாதவரை அவற்றால் நமக்குப் பெரிய அளவில் தீங்கேதுமில்லை. வலிகள் நம்மை நிராசையில் ஆழ்த்திவிடக்கூடாது. நாம் அனுபவிக்கும் வலிகளுக்கேற்ப நம் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. நம்மை வந்தடையும் எந்தவொன்றும் வீணானவையல்ல. நம்பிக்கையாளன் இப்படித்தான் வலிகளை அணுக வேண்டும். அவன் காலில் முள் குத்தினால்கூட அதற்குப் பகரமாக அவனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபியின் கூற்றை அவன் எப்போதும் நினைவுகூர வேண்டும்.

வாழ்வை அதன் இயல்போடு அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்லாவற்றையும் ஓர் அனுபவமாகக் கருதி கடந்து செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வாழ்க்கை நாம் எதிர்பார்க்காத புதுப்புது அனுபவங்களை நம்மிடம் கொண்டு வரலாம். சில அனுபவங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் சில நமக்கு துக்கத்தையும் கொண்டு வரலாம்.   

இறைவன் யாருக்கும் தாங்க முடியாத துன்பத்தை அளிப்பதில்லை. ஒரு வழி அடைக்கப்பட்டால் இன்னொரு வழி பிறக்கும் என்பது அவன் ஏற்படுத்திய நியதி. அடைக்கப்பட்டிருக்கும் வழியை எண்ணி நாம் நிராசையடைய வேண்டியதில்லை. எதிர்பாராத புறத்திலிருந்து இன்னொரு வழியை இறைவன் ஏற்படுத்துவான் என்ற நம்பிக்கை நம்பிக்கையாளனின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும். ஆம், நம்பிக்கையாளர்கள் நிராசையடைய மாட்டார்கள். உண்மையான ஈமான் அப்படியான உறுதியான, வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தவே செய்யும்.

தர்க்கங்களால் சூழப்படாத எளிய நம்பிக்கையே சிறந்தது. அது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது வைக்கும் நம்பிக்கையைப்போல. உண்மையில் அதுதான் சரியான நம்பிக்கையும்கூட. அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசம்தானே உள்ளது. நம்மிடம் இருப்பவைகூட நம் அனுமதிகொண்டு இயங்குபவை அல்லவே. நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுபவன் அவனே. நாம் நோயுற்றால் குணமளிப்பவனும் அவனே. அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அரைகுறை நம்பிக்கையாளனும் நம்பிக்கையற்றவனும் பல சமயங்களில் ஒன்றிணைந்து விடுவார்கள். இருவருக்கும் மத்தியில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயம் ஒன்றுதான் அரைகுறை நம்பிக்கையாளனையும் நம்பிக்கையற்றவனையும் வேறுபடுத்தும் புள்ளி. அந்தப் பயமே அரைகுறை நம்பிக்கையாளனை அவ்வப்போது நம்பிக்கையாளனாகக் காட்டுகிறது.

நம்முடைய பண்புகளையும் இறைவனின் பண்புகளையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது. முழுமையான இயலாமையையும் எதையும் செய்ய இயலும் பேராற்றலையும் எப்படி ஒப்பிட முடியும்? அவ்வாறு ஒப்பிடுவதன் மூலம் அரைகுறை நம்பிக்கையாளர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் மத்தியில் சமநிலை ஏற்படுத்திவிட்டதாக திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.     

தாங்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் நாம் கடந்துவிடுவோம். நம்மை அடையக்கூடிய ஒவ்வொன்றுக்கும் ஏற்ப நம்முடைய மனநிலையும் நெகிழ்ந்து கொடுக்கும். உண்மையில் வாழ்க்கையின் போக்கில்தான் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். அதன் குறுக்காக எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்திவிட முடியாது.

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை நம்மைத் தேவையற்ற பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடக்கூடாது. அது நம்முள் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் நாம் அதனை சரியாகப் புரிந்துகொண்டால் அது எல்லாவகையான பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். எதிர்பார்ப்புகள் இல்லாத பற்றற்ற வாழ்க்கை ஏமாற்றத்தைக் குறைக்க உதவலாம். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று தெரியவில்லை.

நம்மிடம் இருக்கும் அனைத்தும் நமக்குரியவை அல்ல. அவை நமக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டவை. எப்போது வேண்டுமானாலும் அவை நம்மிடமிருந்து பறிக்கப்படலாம். வாழ்வின் எதார்த்தத்தை, அர்த்தத்தை நாம் உணரத் தொடங்கும்போது சிறுபிள்ளைத்தனமான தற்பெருமையையும் கர்வத்தையும் விட்டுவிடுகிறோம். புகழ் என்னும் பெரும் போதையில் மூழ்கி தொலைந்துவிடாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்கிறோம்.

எதுவும் நமக்குத் தேவையற்றவை அல்ல. ஒவ்வொன்றிலிருந்தும் நாம் கற்றுக்கொள்கின்றோம். கடந்து செல்லும் ஒவ்வொரு நிலையும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தந்துவிட்டுதான் செல்கிறது. முன்முடிவுகள், யூகங்களைக் கொண்டு நம் வாழ்வை நாம் கெடுத்துவிடக்கூடாது.

எதிர்பார்ப்புகள் இன்றி வாழ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு வாழ்வதில் எந்த சுவையும் இல்லை. வாழ்வு எதிர்பார்ப்புகளால் ஆனதுதான். அவைதாம் வாழ்வுக்குச் சுவையூட்டக்கூடியவை. எதிர்பாராமை நம் எதிர்பார்ப்புகளைக் கொண்டு வரலாம். அதற்கு மாறாகவும் நிகழலாம். மனித வாழ்க்கை இன்பங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டதுதான்.              

எந்தவொன்றும் நிரந்தரமில்லை என்ற பார்வை மனதில் ஆழப்பதிந்து விட்டால் எந்தவொன்றையும் நாம் எளிதாகக் கடந்துவிடுவோம். அதனால் நம்முள் உருவாகும் பற்றற்ற தன்மை பல சிக்கல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆசைகள் நம்மை பலவற்றில் சிக்கவைக்கின்றன. ஒவ்வொன்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உச்சத்தை எட்டுகின்றன.  மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பழைய நிலையை அடைந்து விடுகின்றன. வரவேற்ற மனநிலை இறுதியில் வழியனுப்பும் மனநிலையாக எஞ்சிவிடுகிறது.

மனிதன் இறைநியதிகளைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இறைநியதிகளைப் புரிந்துகொண்ட மனம் ஞானத்தால் நிரம்பி வழியும்.  இழப்பதற்கு எதுவும் அவனுடையது இல்லை. அவனது பிறப்பும் இறப்பும் அவனது அனுமதியின்றி, அவனைக் கேட்காமலேயே நிகழ்கின்றன.

சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் முடிவில் தீராத சலிப்பில் ஆழ்த்திவிடுகின்றன. மனிதன் எந்தவொன்றையும் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அனுபவிக்க முடியாது. எந்தவொன்றும் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்டால் அவனுக்குத் தீங்கிழைப்பவையாக உருமாறி விடுகின்றன.

இயந்திரத்தனமான வாழ்க்கை ஆன்மாவின் தேட்டத்தை நசுக்குகிறது. நசுக்கப்பட்ட ஆன்மாவில் வெறுமையும் விரக்தியும் சலிப்பும் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கப் போகிறது. இடைவிடாத தேடலும் இயக்கமும் சலிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம். உண்மையில் சலிப்பிலிருந்து வெறுமையிலிருந்து தப்பிக்கவே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.      

இறைநம்பிக்கை மனதிற்கு மாபெரும் பாதுகாப்பு அரண். இறைவனைச் சார்ந்து வாழ்வோர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வதில்லை. நிராசை என்னும் படுகுழியில் வீழ்ந்துவிடுவதில்லை. மனம் வெறுமையுணர்வை அல்லது தனிமையுணர்வை அல்லது வாழ்க்கையின் பொருளற்ற தன்மையை உணரும்போது கடுமையான நெருக்கடிக்கு ஆளாகிறது. அதிலிருந்து வெளியேற முடியாமல் வேதனையுடன் தத்தளிக்கிறது. சிற்றின்பங்களை வெளியேறுவதற்கான வழிகளாக நம்பி அவற்றில் மூழ்கி இன்னும் ஆழத்திற்குச் செல்கிறது.

இறைசார்ந்த வாழ்க்கை என்பது இவையெல்லாவற்றையும் இறைவனின் மீது சாட்டிவிட்டு அவனையே நம்பி நிற்பதாகும். இறைவனை வணங்கி வழிபட வேண்டும், அவனுடைய திருப்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையின் பொருளற்ற தன்மையிலிருந்து அவனைப் பாதுகாக்கிறது. தன் வாழ்க்கை பொருளற்றது என்று அவன் எண்ணுவதில்லை. தன்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை வணங்கி வழிபடுவதையே, அவனுடைய திருப்தியைப் பெறுவதையே அவன் தன் வாழ்க்கையின் நோக்கமாக ஆக்கிக் கொள்கிறான்.

மனிதனால் தனித்து நிற்கமுடியாது. அவன் விரைவில் தனிமையுணர்வால் வெறுமையுணர்வால் தின்னப்பட்டுவிடுவான். அவன் பற்றிப் பிடிப்பதற்கு என்றும் அறுபடாத பலமான, உறுதியான கயிறு அவசியம். இறைநம்பிக்கையும் இறைநினைவும் தனிமையின் மிகச் சிறந்த துணைவர்கள்.   எதிர்மறையான கேள்விகளால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என்று எண்ணும் நாத்திகர்கள் இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்? எங்கு செல்ல வேண்டும்? என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். தடுமாறித் திரிகிறார்கள். சிற்றின்பங்களால் தங்களை நிரப்பிக்கொள்ள முனைகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை.

Related posts

Leave a Comment