கட்டுரைகள் 

கருத்து மோதல்கள்

Loading

கருத்துச் சுதந்திரம் பேசுவோர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக மாறுவது விசித்திரமான ஒன்று. ஆனாலும் பெரும்பாலும் அப்படித்தான் நிகழ்கிறது. வரலாற்றில் இப்படிப்பட்டவர்களே நிரம்பக் காணப்படுகிறார்கள் என்கிறார் அஹ்மது அமீன். அதிகாரம் அற்றவனுக்கு, ஒடுக்கப்படுவனுக்கு கருத்துச் சுதந்திரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவன் அதிகாரத்தை பெற்றுவிட்டால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால் அது அவனுக்கு ஒவ்வாத ஒன்றாக மாறிவிடுகிறது.

முழுமையான கருத்துச் சுதந்திரம் சாத்தியமான ஒன்றாக இருப்பதாக நான் கருதவில்லை. அப்படியான ஒரு சூழல் பெரும் குழப்பத்திற்கும் சீர்குலைவிற்கும் வழிவகுத்துவிடும். கருத்துகள் கொள்கைகளாக மாறிவிடும்போது அவை உணர்ச்சிநிலையில் வைத்தே அணுகப்படுகின்றன. அவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அவற்றை நம்புபவர்களின் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.  நிபந்தனைகளுக்குட்பட்ட கருத்துச் சுதந்திரமே பாதுகாப்பானது. அந்த நிபந்தனைகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

கருத்து வேறுபடுவது மனித இயல்புகளில் ஒன்று. அப்படியெனில் கருத்துச் சுதந்திரமும் அவனுடைய தனித்தன்மைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்க மறுப்பது கருத்தியல் பாசிசம் ஆகும். பாசிஸ்டுகளும் கடும்போக்குவாதிகளும் மற்றமையை அங்கீகரிக்க மாட்டார்கள். ‘உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதன் இருப்பை அவசியமெனக் கருதுகிறேன் என்ற புரிந்துணர்வு பல்வேறு பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி அவர்களைக் கொந்தளிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் மறைந்திருக்கும் வெறுப்பின் அறுவடை. மனித சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஆசைகொண்டோர் இப்படியான கீழ்த்தரமான காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

பல்வேறு கருத்துகள் முட்டி மோதும் சூழலே அறிவார்ந்த சூழல். நல்லவை, தகுதியானவை நிலைக்கின்றன. மற்றவை மறைந்து விடுகின்றன. காலமும் சூழலும் கருத்துகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றன. சுதந்திரமான சூழலில் அவை இன்னும் ஊட்டம் பெற்று வேகமாக வளர்ச்சியடைகின்றன.      

ஒன்றை கருத்தாக ஏற்றுக்கொள்வதற்கும் கொள்கையாக ஏற்றுக் கொள்வதற்கும் மத்தியில் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. நாம் கருத்தாக ஏற்றுக்கொண்ட ஒன்று நம் உள்ளத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு எதிராக சொல்லப்படும் கருத்துகளைக் குறித்து நாம் அதிகமாக அலட்டிக் கொள்வதுமில்லை. ஆனால் நாம் கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒன்று நம் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு எதிராக சொல்லப்படும் கூரான சொற்கள் நம்மைக் கொதிப்படையச் செய்கின்றன. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான ஒன்றுதான். ஏதாவது ஒன்றை தம் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள் அதன்மீது பற்றுக் கொண்டிருப்பது இயல்பானது. ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அதன் அடிப்படையில் வாழவே விரும்புவார்கள்.

கொள்கைவாதிகளுடன் உரையாடலை முன்னெடுக்கலாம். குருட்டுத்தனமான மதநம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்கள் உரையாடலை விரும்பத்தான் செய்வார்கள். அதைவிடுத்து அவர்களின் கொள்கையின்மீது தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதல்கள் அவர்களைக் கொந்தளிப்பில்தான் ஆழ்த்தும். வம்பர்களைத்தவிர வேறு யாரும் அவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் தங்களின் காழ்ப்புகளைக் கொட்டுவதற்கு கருத்து சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மற்றவர்களின் உணர்வுகளை கூரான சொற்களால் தாக்கிவிட்டு கருத்துச் சுதந்திரம் பேசுவது அநியாயமாகும். சக மனிதனையோ அவனது உணர்வுகளையோ மதிக்காதவன் மனித சமூகத்தின் விரோதியாகத்தான் இருப்பான். அவனால் மனித சமூகத்திற்கு நன்மை விளையும் என்று எதிர்பார்க்க முடியாது. 

இது கருத்துகள் முட்டி மோதும் காலகட்டம். சமூக ஊடகங்களின் வாயிலாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கருத்துகள் எளிதில் மக்களிடையே பரவிவிடுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ மனிதர்கள் மாற்றுக் கருத்துகளை கேட்கும் அல்லது எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். இங்கு யாரும் கண்ணை மூடிக் கொண்டு காதைப் பொத்திக் கொண்டு எதையும் படிக்காமல் கேட்காமல் இருந்துவிட முடியாது.

தங்களின் கருத்துகளைத் தவிர வேறு யாருடைய கருத்துகளையும் தங்களின் சீடர்கள், தொண்டர்கள் கேட்கக்கூடாது என்று எண்ணக்கூடிய குருமார்களும் தலைவர்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள். தங்களின் சீடர்களை, தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. முன்வைக்கப்படும் ஆட்சேபனைகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. ஒரு காலகட்டம் இருந்தது. தங்களின் சீடர்கள், தொண்டர்களிடம் மட்டுமே அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களிடமிருந்து அவர்களை விலக்கி வைத்தாலே போதும் என்ற நிலையிருந்தது. உள்ளிருந்து மிக அரிதாகவே எதிர்க்குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் எல்லோருடனும் உரையாட வேண்டும், அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிவிட்டார்கள். எல்லாவற்றையும் ஒருசேர எதிர்கொள்ள முடியாமல் பலர் குழப்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். சிலர் கருத்துகள் அற்ற சூன்ய வெளியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முட்டி மோதி நாம் சரியானவற்றை அடையலாம். தகுதியானவை நிலைபெறுகின்றன. மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. கருத்துகள் மாறக்கூடியவை. அவை கால, இட சூழல்களுக்கேற்ப மனநிலை அடையும் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கின்றன. கருத்துகளோடு நம் ஈகோவை கலந்துவிட்டால், அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாக மாற்றிவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது கடினம். அப்போது அவை நம்மை சிறைப்படுத்தும் சிறைச்சாலைகளாக மாறிவிடுகின்றன.   

நம் அனுபவங்களுடன் ஒத்துப் போகும் கருத்துகளை நாம் உடனுக்குடன் ஏற்றுக்கொள்கின்றோம். மற்ற கருத்துகளை, அவற்றைச் சொல்பவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் தயக்கத்துடனே அணுகுகிறோம். நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவற்றை பொய்ப்படுத்த எண்ணுவதில்லை. ஆனால் சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அறியாமைகூட அவர்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையை அளிக்கும். அவர்களின் அந்த தன்னம்பிக்கையை யாராவது ஒருவர் தூண்டுவிடும்போது அதனுடன் உற்சாகமும் கலந்துவிடும். மட்டையடியாக அவற்றை நிராகரிக்கவும் சொல்பவரை இழிவுபடுத்தவும் தொடங்கி விடுவார்கள். என் நண்பர் ஒருவர் ‘உற்சாகமான மடையர்கள்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார். எனக்கென்னவோ இந்த வார்த்தை இத்தகைய மனிதர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் என்று தோன்றுகிறது.

இங்கு முற்றும் அறிந்தவர் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு அறிவாளியையும் மிஞ்சும் வகையில் இன்னொருவர் இருக்கத்தான் செய்கின்றார். ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மற்ற துறைகளில் மூடர்களாகவும் இருக்கலாம். நமது வாழ்க்கையில் படித்த மூடர்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள் என்ற ஜெயகாந்தனின் கருத்தை மிகச் சரியான ஒன்றாகவே கருதுகிறேன். என் வாழ்க்கையில் பாமர ஞானவான்களை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். தீவிர வாசிப்பின் வழியாக நான் அறிந்துகொண்ட விசயங்களை கொஞ்சம்கூட ஆர்ப்பாட்டமில்லாமல் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டாரே என்று வியந்து பார்த்த மனிதர்களும் உண்டு. நறுமணத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்பார்கள். அது தன் வாசனையின் மூலம் மனிதர்களை தன் பக்கம் ஈர்த்துவிடும். அதுபோலத்தான் உண்மையான அறிஞர்களும்.

Related posts

Leave a Comment