கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

Loading

பல விசயங்களுக்குத் தடையாக இருப்பது நினைவலைகள்தாம். ஒரு வீடு மாற வேண்டும் என்றாலும் ஒரு ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றாலும் ஒருவரைவிட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றாலும் முதலில் தடையாக வருவது நினைவலைகளே. அவை மனித மனதில் தாக்கம் செலுத்தும் வலுவானவை. இந்த நினைவலைகளை மீறி வெளியேறிச் செல்பவர்கள் மிகவும் குறைவு. பல சமயங்களில் நிர்ப்பந்தங்கள்தாம் அவர்களை வெளியேற்றுகின்றன. சில சமயங்களில் நிர்ப்பந்தங்களை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

நாடோடி மனநிலை கொண்டவர்கள் எளிதாக நினைவலைகளைத் தாண்டி விடுகிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் புதுப்புது அனுபவங்கள் அந்த நினைவலைகளை மிகைத்து விடுகின்றன. முதன் முறையாக அவற்றைத் தாண்டிச் செல்வதற்கு மனதைரியம் அவசியமாகிறது. ஒருமுறை தாண்டி விட்டால் அவர்கள் பெறக்கூடிய அனுபவங்களுக்கு முன்னால் நினைவலைகள் மதிப்பிழந்து விடுகின்றன. உண்மையில் நினைவலைகளால் சூழப்படுபவர்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை, அனுபவங்களைப் பெற முடியாது. ஒரு கிணற்றுத் தவளைபோல தங்களின் வாழ்க்கையை அவர்கள் சுருக்கிக் கொள்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் பரந்து விரிந்தது. அது தன்னுள் உள்ளடக்கியுள்ள அதிசியங்களை, இரகசியங்களை கண்டுகளிக்க புறப்பாடு அவசியமாகிறது. ஓரிடத்தில் தேங்கிவிடும் மனிதனிடம் பண்ணையார் மனப்பான்மை குடிகொண்டிவிடும். தன்னைச் சுற்றி போலியான பிம்பங்களை உருவாக்கிவிட்டு அவற்றையே அவன் உண்மையென நம்பவும் தொடங்கிவிடுவான். பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சத்தை விட்டுவிட்டு சிறிய கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொள்ளும் மனிதன் உண்மையில் துரதிஷ்டசாலிதான்.    

எதுவுமே நிரந்தரமில்லை என்ற சிந்தனை உங்களிடம் ஆழமாக குடிகொண்டுவிட்டால் அது உங்களை செயல்பட விடாமல் ஒருபோதும் முடக்காது. மாறாக அது தரக்கூடிய விசாலமான பார்வை உங்களுக்கு மனவிரிவை அளிக்கும். குறுகிய சிந்தனைகளில் நோக்கங்களில் அடைபட்டுவிடாமல் உங்களைப் பாதுகாக்கும். இமாம் ஷாஃபியின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால் “பயணம் செய்து கொண்டேயிரு. ஓரிடத்தில் தேங்கும் தண்ணீர் அழுக்கடைந்துவிடும்.”   

எந்தவொன்றையும் எதிர்கொள்வதுதான் அது குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. எந்தவொன்றும் வெளியிலிருந்து, தொலைவிலிருந்து பார்ப்பதற்கு பூதாகரமானதாக, அச்சுறுத்தக்கூடியதாகத் தெரியலாம். அருகில் நெருங்க நெருங்க அதன் இயல்பும் வெளிப்படத் தொடங்கி விடும். அறியாமை அச்சத்தை ஏற்படுத்தும். அறியாமையோடு கர்வமும் கலந்திருந்தால் அச்சம் கலந்த வெறுப்பும் ஏற்படும். ஒரு ஆளுமையைக் குறித்து எதுவும் அறியாமல் அவரை வெறுப்பதற்கு, அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 

ஒரு துன்பத்தை, ஆபத்தை வெளியிலிருந்து பார்ப்பது என்பது வேறு. அந்த துன்பத்தில் ஆபத்தில் சிக்கிக்கொள்வது என்பது வேறு. துன்பத்திலோ ஆபத்திலோ சிக்கிக்கொள்பவனுக்கு அதனை எதிர்கொள்வதற்கான மனநிலையும் உருவாகி விடுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவனுக்கு தப்பி ஓடுவதற்கான மனநிலையே இருக்குமே தவிர அதனை எதிர்கொள்வதற்கான மனநிலை இருக்காது. தப்பி ஓடுவதற்கான மனநிலையைக் கொண்டு எதிர்கொள்வதற்கான மனநிலையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? துன்பத்தில்கூட ஒரு வகையான இன்பமும் கலந்துவிடுகிறது. சில சமயம் மனிதன் தன்னை அழுத்தும் குற்றவுணர்வினால் தனக்கு ஏதேனும் துன்பம் வராதா என்று எண்ணவும் செய்கிறான். துன்பம் அவனுக்கு ஒரு வகையான விடுதலையைக் கொடுக்கிறது.

எந்தவொன்றையும் அனுபவமாகக் கருதி கடந்து விடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அது ஒன்றே இலகுவான வழி. நாம் அடையும் பதற்றமும் அதீத எச்சர்க்கையுணர்வும் நமக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் கொண்டுவரக்கூடியவை. எதுவும் நம் கைவசம் இல்லை என்ற பட்சத்தில் அந்த வழியைத் தேர்வு செய்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்? வாழ்வென்பது நாம் அடையும் அனுபவங்களின் தொகுப்புதானே?

நம் அனுபவங்களிலிருந்து வெளிப்படும் இயல்பான அறிவுரைகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும். நம் அனுபவங்கள் நமக்குப் பாடம் கற்றுத்தரும் மிகச்சிறந்த ஆசான்கள். மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமான மனிதர்கள் ஒரே பொந்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்பட மாட்டார்கள். ஒருமுறை கொட்டப்பட்டுவிட்டாலே அவர்கள் விழிப்படைந்து விடுவார்கள். பேராசை கொண்டவர்களும் இச்சைகளுக்கு அடிமையானவர்களும் மூடர்களும் மீண்டும் மீண்டும் சதிவலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். வாழ்பவனுவங்கள் எல்லோருக்கும் சமஅளவில் பாடங்களைக் கற்றுத்தந்தாலும் மிகச் சொற்பமானவர்களே அவற்றிலிருந்து பயனடைகிறார்கள்.  

மனித வாழ்க்கை பல்வேறு வகையான அனுபவங்களின் குவியல். மனிதன் பலவாறான அனுபவங்களை எதிர்கொண்டவாறு, எல்லாவற்றுக்கும் முகம்கொடுத்தவாறு தன் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறான். அவன் எதிர்பார்ப்பவை, எதிர்பார்க்காதவை என ஒவ்வொன்றையும் அவன் எதிர்கொள்ள வேண்டும். சில சமயங்களில் வாழ்க்கை எதிர்பாராமைகளால் ஆனது என்று எண்ணும் அளவுக்கு எதிர்பாராமைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும். சில சமயங்களில் வாழ்க்கை எதிர்பார்ப்புகளால் ஆனதுதான், தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்படக்கூடும். சில சமயங்களில் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதுபோன்று, பின்னிப் பிணைந்துள்ளதுபோன்று அவன் கருதக்கூடும். சில சமயங்களில் தற்செயல்களின் வெள்ளத்தில் தான் அகப்பட்டுவிட்டோமா என்று அவன் எண்ணக்கூடும். இங்கு முன்முடிவுகளைக் கொண்டு எதையும் அணுகாமல் இருப்பதே சிறந்தது. முன்முடிவுகள் நம்மை தேங்கச் செய்துவிடும். அவை நம் அறிதல்களின் கண்ணியை அறுத்துவிடக்கூடும். 

வாழ்வு என்னும் இந்தப் பெரு நதி நம்மை எந்த இடத்தில் விட்டுவிட்டுச் செல்லும் என்பதை நாம் அறிய மாட்டோம். இந்த ஒரு அறியாமை மட்டுமே வாழ்வுக்கு சுவாரசியம் அளிக்கக்கூடியது. அறிதல்கள் வாழ்வை நமக்குப் புரிந்துகொள்ள உதவலாம். ஒரு வரியில் வாழ்வு இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. அது அறிதல்களின் வழியே கொஞ்சம் கொஞ்சமாக உணரப்பட வேண்டிய ஒன்று.      

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.     

எதிர்பார்க்கப்பட்டதுபோன்று வாழ்வு ஒரே மாதிரியாக இருந்தால் மிக விரைவாக சலிப்படைந்துவிடுவோம். நீளமான எந்தவொன்றும் சலிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். வாழ்க்கையின் மேடு, பள்ளங்கள் அதன் சலிப்பை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு பொருளின் சிறப்பும் அதன் எதிர்மறையைக் கொண்டு நன்கு உணரப்படுகிறது.

வாழ்வு தன்னுள் ஏராளமான அனுபவங்களை உள்ளடக்கியுள்ளது. அவை சிரமங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சிரமங்கள் இறுதியில் வழிகாட்டும் வாழ்பனுபவங்களை விட்டுச் செல்கின்றன. மகிழ்ச்சியோ துன்பமோ எல்லாம் கடந்து போகும். எதையும் பக்குவமாக எதிர்கொள்ளும் மனம் மாபெரும் பொக்கிஷம். எதிர்காலத்தை எண்ணி பதற்றமடையும் மனம் ஒரு சாபக்கேடு.

ஆரம்பத்தில் பதற்றமடைந்தாலும் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள மனம் பழகிக்கொள்கிறது என்பதே உண்மை. எந்தவொன்றும் சிறிது காலத்திற்குள் வாழ்வின் இயல்பான போக்கோடு இரண்டறக் கலந்து விடுகிறது. தேவை, சிறிது காலப் பொறுமையே.  வாழ்வு போன்றே மரணமும் நிச்சயமானது. அது எந்தச் சமயத்திலும் நம்மை வந்தடையலாம். வாழ்வின் நோக்கம் அறியாமலேயே மரணிப்பதைவிட பெரும் துரதிஷ்டம் எதுவும் இல்லை.     

Related posts

Leave a Comment