கட்டுரைகள் 

தர்க்கத்திற்கு அப்பால்

Loading

நமக்கு வரக்கூடிய சில கனவுகள் ஆச்சரியமளிக்கக்கூடியவை. அவை நம் ஆன்மாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு செய்தியை, நிகழப்போகும் ஒரு சம்பவத்தை உணர்த்திவிட்டுச் செல்கின்றன. சில சமயங்களில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் திணறிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வும் கனவின் மூலமாக கிடைத்துவிடுகிறது.

இறைநம்பிக்கையற்றவர்களை கடுமையான குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்தும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பலர் இறைநம்பிக்கையாளர்களாக மாறுவதற்கு குறைந்தபட்சம் இறைமறுப்பைக் கைவிடுவதற்கு இதுவும் ஒரு காரணியாக, திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அவற்றைக் குறித்து இறைநம்பிக்கையாளர்களாகிய நம்மிடம் தெளிவான பார்வை இருக்கிறது. அவை புரிந்துகொள்ள முடியாத, அச்சுறுத்தக்கூடிய, குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய மூடுமந்திரங்கள் அல்ல. அவை எப்படி நிகழ்கின்றன என்று இஸ்லாம் நமக்குத் தெளிவாகத் கற்றுத் தருகிறது. அது மனிதனுக்கு வரக்கூடிய கனவுகளை மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஒன்று, இறைவன் புறத்திலிருந்து வரக்கூடிய நற்செய்தி. இரண்டு, ஷைத்தானிடமிருந்து வரக்கூடிய கவலையளிக்கும் செய்தி. மூன்று, நம்முடைய எண்ணவோட்டங்கள்.

தங்களின் எண்ணவோட்டங்களுடன் தொடர்புடைய கனவுகளை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தங்களுடைய நினைவலைகளுடன் எண்ணவோட்டங்களுடன் தொடர்பில்லாத ஏனைய கனவுகளுக்கு அவர்களால் எந்த விளக்கமும் அளிக்க முடியாது. அதுவும் கனவில் அவர்கள் கண்டவை அப்படியே நிகழ்ந்து விட்டால் மனதளவில் அவர்கள் ஸ்தம்பித்து விடுகிறார்கள். சிலர் படைப்பாளனின் பக்கம் திரும்புகிறார்கள். சிலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக மௌனமாகிவிடுகிறார்கள்.

ஒருவர் நல்ல கனவுகள் கண்டால் அல்லாஹ்வைப் புகழட்டும். அதைக் குறித்து மற்றவர்களிடம் கூறட்டும். தீய கனவுகள் கண்டால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடட்டும். அதைக்குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என்று நபியவர்கள் கூறியதாக புகாரீ மற்றும் முஸ்லிம் ஆகிய நூல்களில் காண முடிகிறது.

கனவுகளும் நிஜங்களைப் போன்று வலியையும் கவலையையும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. கனவுலகு நம் கட்டுப்பாட்டில் இல்லை. எங்கிருந்து கனவுகள் உருவாகி வருகின்றன என்பதை நாம் அறிய மாட்டோம். நிஜஉலகு போன்று அங்கும் எல்லாமும் நடைபெறுகின்றன.

உடல் கட்டுப்பாட்டை இழந்து ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும்போது ஆன்மா திரைக்கு அப்பாலுள்ள சிலவற்றை கனவுலகின்மூலம் காணத் தொடங்குகிறது. உடல்தானே களைப்பினால் உறங்குகிறது. ஆன்மாவுக்கு உறக்கமேது? அது தன் ஆசைகளையும் பயங்களையும் மட்டுமல்லாமல் அதுவரை அறிந்திராத வேறு சிலவற்றையும் காண்கிறது.

மனிதன் அகத்தில் உணர்வதுபோன்று புறத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவன் அல்ல. புறஉலகில் அவன் தன்னுடைய முன்முடிவுகளுக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் நலன்களுக்கும் ஏற்பவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.

கனவுலகு மனித அறிவுக்கும் தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பதில் கனவுலகுக்கும் பங்கு இருக்கிறது. சில கனவுகள் அவனது வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகின்றன. மனிதன் தன் இயலாமையை உணரும் சமயத்தில்தான் இறைவனின் பேராற்றலைக் கண்டுகொள்கிறான். தன் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்பதை அவன் உணரும்போது பேராற்றல்மிக்க இறைவனிடம் அடைக்கலம் தேடுவதைத் தவிர தனக்கு வேறு வழியே இல்லை என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான்.

கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை யோசித்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. சில சமயங்களில் நிகழப்போவதை நேரடியாகக் காட்டிவிடுகின்றன. சில சமயங்களில் நிகழப்போவதை மறைமுகமாக உணர்த்திவிடுகின்றன. ஆன்மா உடலைவிட்டு பிரிந்திருக்கும் சமயத்தில் மூடியிருக்கும் திரை குறிப்பிட்ட நேரத்திற்கு அகற்றப்படுகிறதோ என்னவோ. அல்லாஹ்வே நன்கறிவான்.

எதிர்காலம் மறைமுகமான ஒன்றாக இருப்பதுதான் மனிதனுக்கு நல்லதாகும். அதன் திரை அகற்றப்பட்டால் நாம் நிம்மதியிழந்துவிடுவோம். நமக்குக் கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சிகளைவிட துன்பங்களைத்தான் நாம் அதிகம் நினைவில் வைத்திருப்போம். நேர்மறையானவற்றைவிட எதிர்மறையானவையே நம்முள் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும். துன்பத்தினால் ஏற்படும் வலிகள் மகிழ்ச்சிகளை அனுபவிக்க முடியாமல் ஆக்கிவிடும்.

எதிர்காலம் மறைவாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியுள்ளது. எதிர்பாராமை சலிப்பிலிருந்து மனிதனைப் பாதுகாக்கிறது. மனிதன் எதையோ எதிர்பார்த்தவனாக முன்னால் சென்றுகொண்டே இருக்கிறான். திடீரென அவனது வாழ்க்கையின் பக்கங்கள் சுருட்டப்பட்டு விடுகின்றன. அவனும் கால வெளியில் மறைந்து போகிறான்.

எதிர்காலத்தை அறிவதற்கு மனிதனிடம் எந்தக் கருவியும் இல்லை. அவனால் எதிர்காலத்தை எதனைக் கொண்டும் அளவிட முடியாது. கணிப்புகள் எல்லாம் அதற்கும் முன்னால் கானல்நீராகவிடும். கனவுகளின் மூலம் அவற்றுள் சின்ன சின்ன துளிகளை அவனால் அறிந்துகொள்ள முடியும். அர்த்தமற்ற கனவுகளுக்கு மத்தியில் அபூர்வமான கனவுகளும் தோன்றத்தான் செய்கின்றன. அவனது தர்க்கம் வாய்மூடி மௌனமாக நிற்கும் அரிதான தருணங்கள் அவை. 

கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள். பெரும்பாலோர் அவற்றை கவனிப்பதில்லை அல்லது அவற்றைக் குறித்து சிந்திப்பதில்லை. மிகச் சிலரே அவற்றிற்குப் பின்னாலிருக்கும் மறைகரம் குறித்து சிந்திக்கிறார்கள்.

நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டிருந்தேன். நீண்ட நாட்களாக நண்பர் அதற்குப் பதிலளிக்கவில்லை. நானே உங்களுக்குப் பதிலளிக்கும்வரை அவசரப்பட வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

ஒருநாள் இரவு திடீரென அந்த ஞாபகம் வந்தது. அவரிடம் போன் செய்து விஷயம் என்னவாயிற்று? என்று கேட்கலாமா என்று தோன்றியது. சரி போன் செய்ய வேண்டாம், நினைவூட்டும்விதமாக வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பலாம் என்று முடிவுசெய்து இண்டர்நெட் இணைப்பை ஆன் செய்தேன். வந்து விழுந்தது நான் அனுப்ப நாடிய மெசேஜின் பதில். ஒரு நிமிடம் அப்படியே ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துப் போனேன்.

கடந்த ஒரு மாதகாலமாக அதைக்குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை. திடீரென யோசனை தோன்றியது. கொஞ்ச நேரத்தில் அதற்கான பதிலும் வந்தது. திடீரென எனக்குத் தோன்றிய யோசனைக்கும் வந்த பதிலுக்கும் என்ன தொடர்பு? இதனை தற்செயலானது என்று அப்படியே கடந்து விடுவதா? என்று நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டேயிருந்தேன். பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு பலரும் முகம்கொடுக்க விரும்புவதில்லை. கண்முன்னால் ஆச்சரியம் நிகழ்ந்தாலும் அதையும் கொஞ்ச நேரத்தில் கடந்துவிடுகிறார்கள்.

தற்செயல் நிகழ்வு என்று எதுவும் இல்லை. அனைத்தும் நுணுக்கமான இழைகளால் பின்னப்பட்டுள்ளன. இந்த நுணுக்கமான இழைகளைக் கண்டுகொள்பவர் இந்த உலகமும் வாழ்க்கையும் வீணாக, நோக்கமின்றி படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்வார்.

மனிதன் எதிர்கொள்ளக்கூடிய இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அவனுக்குள் தர்க்கத்தின் வலிமையை முனைமழுங்கச் செய்கின்றன. தர்க்கத்திற்கு அப்பாலிருக்கும் உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. தர்க்கத்தின்மூலம் எதையும் நிராகரிப்பது எளிதானது. ஆனால் மனதுக்குள் ஊற்றெடுக்கும் கேள்விகளை புறக்கணிக்க முடியாது.

Related posts

Leave a Comment