கட்டுரைகள் 

பொறாமையும் அகங்காரமும்

Loading

மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு குறைகூறப்படும் மனிதர்கள் தாழ்வு மனப்பான்மைக்கோ தீவிர வெறுப்புணர்ச்சிக்கோ ஆளாகிறார்கள். இந்த வகையான ஒப்பீடு குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும்; தம்பதிகளின் மணவாழ்வை நாசமாக்கும்; மனிதர்களை தேவையற்ற கவலைகளுக்கு ஆளாக்கும். இவ்வாறான ஒப்பீடுகளில் ஈடுபட்டு மற்றவர்களை குறைகூறக்கூடிய மனிதர்கள் இறைவன் அமைத்த இயற்கையமைப்பை புரிந்துகொள்ளாத மூடர்களாவர்.

ஒவ்வொரு உயிரினமும் தனக்கான உணவைத் தேடும் முறையையும் தனக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் முறையையும் இயல்பாகவே அறிந்தேயிருக்கின்றன. மனிதர்கள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப பலவாறான ஆற்றல்களையும் திறமைகளையும் பெற்றேயிருக்கிறார்கள். ஒருவர் எந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்டுள்ளாரோ அதுவே அவருக்கு இலகுபடுத்தப்படும். அவரது ஆர்வமும் திறமையும் அதில்தான் ஒன்றிணையும். அவர்களிடையே காணப்படும் வேறுபாடுகள் அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொண்டு ஊழியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. மனித வாழ்வு தொடர்ந்து சீராக இயங்குவதற்கு இந்த வேறுபாடுகள் மிக மிக அவசியம்.

இந்த வேறுபாடுகள் உயர்வு, தாழ்வு பாராட்டப்படுவதற்காக அல்ல. இறைவன் அமைத்த இயற்கையமைப்பை அறியாத மூடர்கள்தாம் இந்த வேறுபாடுகளைக் கொண்டு உயர்வு, தாழ்வு பாராட்டுவார்கள். அவர்கள் தங்களிடம் இல்லாவதவற்றை எண்ணி நிராசையடைகிறார்கள். மற்றவர்களிடம் இருக்கின்றவற்றைப் பார்த்து பொறாமைகொள்கிறார்கள். இறைவன் அமைத்த இந்த நியதிகளை புரிந்துகொள்பவர்கள் தேவையற்ற கவலைகளிலிருந்தும் பொறாமையிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தமக்கான அங்கீகாரமும் கண்ணியமும் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவே செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சக மனிதர்களிடம் தங்களின் திறமைகளைக் காட்ட, தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற ஏதேனும் ஒரு வகையில் முயன்று கொண்டே இருக்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் மிக அரிதானவர்களாகத்தான் இருப்பார்கள். எல்லாவற்றையும் துறந்துவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட தங்களின் துறவறத்தின்மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள, தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள்.

புறக்கணிப்பின் வலி கொடியது. புறக்கணிக்கப்படும் மனிதர்கள் பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சியால் உந்தித் தள்ளப்படுகிறார்கள் அல்லது தீவிரமான தாழ்வுணர்ச்சியால் முடக்கப்படுகிறார்கள். உதவும் பண்பையும் பொறாமைப்படும் பண்பையும் ஒருசேர கொண்டவர்கள்தாம் மனிதர்கள். மனித மனம் கலவையான எண்ணங்களால் நிரம்பியுள்ளது.

மற்றவர்களுக்கான அங்கீகாரத்தை, கண்ணியத்தை அளிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் அவர்களைப் புண்படுத்தாமல் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலோர் தங்களின் இடத்தை, தங்களுக்கான அங்கீகாரத்தைத் தக்க வைக்க மற்றவர்கள் வீழ வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். மற்றவர்களின் வீழ்ச்சியில் அவர்களின் மனம் குரூர ஆனந்தம் கொள்கிறது.

இந்த உலகில் இறைவன் அமைத்த நியதிகளுள் நாம் விதைத்ததையே நாம் அறுவடை செய்வோம் என்பதும் ஒன்றாகும். காலம் சுற்றக்கூடியது. எந்தவொன்றையும் அது ஒரே நிலையில் விட்டு வைத்திருக்காது. அது நாம் பிறருக்கு அளித்த எந்தவொரு வலியையும் திருப்பி நமக்கு அளிக்காமல் நம்மை விட்டுவிடாது.     

இஸ்லாம் மனிதனின் நற்பண்புகளைத் தூண்டுகிறது. அவனது தீய பண்புகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கிறது. ஒருவர் இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாகக் கொண்டுள்ளார் என்பதன் அடையாளங்களில் ஒன்று, அவரிடம் நற்பண்புகள் ஓங்கிய நிலையில் காணப்படுதும் தீய பண்புகள் ஒடுங்கிய நிலையில் காணப்படுவதும் ஆகும்.       

போட்டியும் பொறாமையும் மனிதர்களிடம் இயல்பாகவே காணப்படும் பண்புகள். அவை அவர்களிடம் எதிர்மறையான தாக்கங்களை மட்டுமின்றி நேர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. ஒரு மனிதனிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்வதில் போட்டியின் பங்கு மிக முக்கியமானது. மனிதன் தன் சக மனிதனை, தன் அருகில் இருப்பவனை மிக உன்னிப்பாகக் கவனிக்கிறான். அவனைவிட எல்லா வகையிலும் தான் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்று எண்ணுகிறான். இந்த எண்ணம்தான் அவனை ஒவ்வொரு விசயத்திலும் போட்டி போட வைக்கிறது. விரும்பியும் விரும்பாமலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவன் போட்டியிட்டுக் கொண்டேயிருக்கிறான்.

ஒரு மனிதன் தன் திறமையைக் காட்டி தன்னை சிறந்தவனாக வெளிப்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் தன்னைத் திறமையானவனாகக் காட்ட இன்னொருவனின் திறமையைக் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது அந்த எண்ணத்திற்கு அவன் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கும்போது அவன் சமூக விரோதியாக மாறுகிறான். அவனுடைய இயலாமை அவனைக் கடுமையான பொறாமையில் ஆழ்த்துகிறது. அவன் பின்வாசல் வழியாக அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடத் தொடங்குகிறான். இங்குதான் அவன் ஷைத்தானாக உருமாறுகிறான்.

மனிதன் எல்லா விசயத்திற்கும் ஒரு துணையை எதிர்பார்க்கிறான். பாவம் புரிவதற்கும் அவனுக்கு கூட்டாளிகள் தேவைப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து அவன் திருப்தியடைந்து கொள்கிறான், தான் மட்டும் அவ்வாறு இல்லை, மற்றவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று அவன் தன் குற்றவுணர்ச்சிக்கு ஆறுதல் கூறிக் கொள்கிறான். மனப்பிறழ்வுக்கு ஆளானவர்களே தனித்து நின்று விசித்திரமான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

நல்ல விசயங்களில் போட்டியிடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. நம்பிக்கையாளர்கள் இறைதிருப்தியைப் பெறுவதற்காக, சுவனத்தை அடைவதற்காக போட்டி போட்டுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. அது மனிதர்களிடம் காணப்படும் போட்டியையும் பொறாமையையும் ஆக்கப்பூர்வமான வழிகளின் பக்கம் திருப்புகிறது. அவற்றின் தீய கூறுகளைத் தெளிவுபடுத்தி அவற்றினால் ஏற்படும் விளைவுகளையும் எச்சரிக்கிறது.

மனிதனின் அகங்காரம் அவனை செயல்படவும் தூண்டுகிறது. அவன் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறான். சுற்றியிருப்பவர்கள் தன் இருப்பை மறந்துவிடாதிருக்கும்பொருட்டு ஏதேனும் ஒன்றின்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறான். அவன் சமூக ஊடகங்களில் மும்முரமாக இயங்குவதற்கும் கட்சிகளில் அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதற்கும் சமூக சேவைகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் பின்னால் அவனது அகங்காரம் ஒளிந்திருக்கிறது.

இந்த அகங்காரம் தன் எல்லையைத் தாண்டிச் செல்லும்போதுதான் அது வெறுக்கத்தக்க ஒன்றாக மாறுகிறது. அவன் சமூகச் சேவைகளில் நற்காரியங்களில் ஈடுபட்டாலும் அவற்றில் அப்பட்டமாக வெளிப்படும் அவனது அகங்காரமும் புகழ்வெறியும் பார்ப்பவர்களுக்கு ஒருவித அசூசையை ஏற்படுத்துகின்றன. அகங்காரத்தை நாம் அகங்காரத்தை கொண்டே எதிர்கொள்கிறோம். அகங்காரத்தை வெளிப்படுத்தும் மனிதன் சிறுமைப்பட வேண்டும் என்று நாம் விரும்புவது நம்மிடம் உள்ள அகங்காரம் செயல்படுவதனால்தான்.

மனதின் பேராசையையும் அகங்காரத்தையும் வெல்வதுதான் ஆன்மீகத்தின் நோக்கம். நம்மைச் செயல்படத் தூண்டும் காரணிகளாக இருக்கும் அகங்காரத்தையும் பேராசையையும் அகற்றி அந்த இடத்தில் இறைதிருப்தியை அமர வைப்பதுதான் இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தின் நோக்கம். இந்த நிலைதான் மனிதன் ஆன்மீகத்தின் உச்ச நிலை. இறைதிருப்தியே அவனை செயல்படத் தூண்டுகிறது. அகங்காரமோ பேராசையோ அல்ல. நாம் அகங்காரத்திற்கு முன்னால்தான் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறோம். பணிவுக்கு முன்னால் அகங்காரத்தை வெளிப்படுத்த மாட்டோம். புகழை விரும்பாதவர்களை நாம் புகழ்வதும் புகழ்வெறி கொண்டவர்களை நாம் சிறுமைப்படுத்த எண்ணுவதும் இதனால்தான். நம்முடைய செயல்பாடுகளுக்குப் பின்னால் இறைதிருப்தி இருந்தால் மட்டுமே நாம் ஒத்திசைந்து செல்ல முடியும். ஒரு அகங்காரம் இன்னொரு அகங்காரத்தை சகித்துக்கொள்ளாது. 

Related posts

Leave a Comment