இந்துத்துவமும் பொதுஎதிரி கண்ணோட்டமும்
ஜாதியை, சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதில் இஸ்லாம் அளவுக்கு வேறு எந்த மதமும் வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான உண்மையாகும். இந்துத்துவ பாசிஸ்டுகளைத் தவிர வேறு யாரும் இதில் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டார். அவர்களும்கூட தங்களுக்குள் இதை ஒத்துக் கொள்கிறார்கள். அப்படியொரு அமைப்பை தங்களைச் சார்ந்தவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் அப்படியொரு அமைப்பு இஸ்லாத்தில் தவிர வேறு எங்கும் இல்லை. அவர்கள் ஒன்றுசேர்ந்து இருப்பதுபோன்று தோன்றினாலும் அவர்களின் உள்ளங்கள் பிரிந்தே கிடக்கின்றன. அவர்கள் பற்றி எரிய சிறு தீப்பொறிகூட போதுமானது என்ற நிலைதான் இருக்கிறது. பொது எதிரியாக முஸ்லிம்கள் மட்டும் இல்லையென்றால் அவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாவார்கள். இதற்கு கடந்த கால வரலாறு சான்று.
பெரும்பாலும் கிருஸ்தவர்களைப் போன்று முஸ்லிம்கள் வீடுவீடாகச் சென்று மதப்பிரச்சாரம் செய்வதில்லை. தங்களை நாடி வருவோருக்கு அடைக்கலம் அளிக்கிறார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தங்கள் பழைய அடையாளங்கள் அனைத்தையும் துறந்து முஸ்லிம்கள் என்ற பெரும் கடலில் சங்கமித்து விடுகிறார்கள். இதுதான் இந்துத்துவர்களை பயமுறுத்துகிறது. தங்களின் அடிமைகள் தங்களைவிட்டு ஓடி தங்களின் எதிரிகளிடம் சென்று சேர்ந்து விடுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இஸ்லாம் அவர்களை அச்சுறுத்துகிறது. இஸ்லாம் கூறும் சமத்துவமும் சகோதரத்துவமும் அவர்களை அச்சுறுத்துகின்றன. இந்துக்களை ஒன்றிணைப்பதற்கு பொதுஎதிரி என்ற கண்ணோட்டத்தைத் தவிர இந்துத்துவர்களிடம் வேறு எந்தத் திட்டமும் இல்லை என்றே தெரிய வருகிறது.
முஸ்லிம்களை பொது எதிரியாகக் காட்டுவதன்மூலம் அவர்களைத் தனிமைப்படுத்துவதன்மூலம் மற்ற மக்களை இந்து என்ற குடைக்குள் ஒன்றிணைத்துவிடலாம் என்று இந்துத்துவர்கள் கனவு காணுகிறார்கள். இந்துக்களை ஒரே மதத்தினராக வரையறுக்க முடியாது. அவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள். பல்வேறு நம்பிக்கைகளின் தொகுப்பாக இந்து மதத்தை வரையறை செய்தாலும் அது வலிந்து உருவாக்கப்பட்ட வரையறையாகவே இருக்கும். அவர்களை ஒன்றிணைக்கும் பொதுவான கூறுகளோ இணைப்புப் பாலங்களோ அவர்களிடம் கிடையாது. இந்த முரண்பாடுகள் தொடர்ந்து அவர்களிடையே மோதல்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
ஆன்மீகம் குறித்த நிலையான கண்ணோட்டங்கள் அவர்களிடம் கிடையாது. இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு இந்த முரண்பாடுகளும் மோதல்களும் முக்கியமான காரணிகளாகத் திகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது. இஸ்லாம் தன்னளவில் பரவும் தன்மைவாய்ந்தது. மனிதர்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு தன் எல்லையே விரிவுபடுத்திக் கொண்டே செல்வது அதன் இயல்பு. அதற்கு பொது எதிரி என்று யாரும் இல்லை. தன் எதிரியையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அது வளர்ந்து கொண்டே செல்லும். அங்கு ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப்படுத்த முடியாது. மனிதர்கள் இணைந்து வாழ்வதற்கான மிகச் சிறந்த இணைப்புப் பாலங்களை அது தன்னுள் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் இந்த இயல்பே இந்துத்துவர்களை அதிகம் அச்சுறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் செய்து கொண்டேயிருக்க வேண்டும் எண்ணுகிறார்கள்.
இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் இந்து மதத்தை பிராமணிய மதம் என்கிறார்கள். அது பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தான மதம். இந்த சொல்லாடல் கவனிக்கத்தகுந்த ஒன்று என்று கருதுகிறேன். இந்தியாவில் இருந்தவர்களின் மதநம்பிக்கைகள் பல்வேறுபட்டவையாக இருந்திருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலுள்ளவர்களும் ஒவ்வொரு கடவுளை வழிபடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலை வழிபாடு என்றே ஒன்றே அவர்கள் அனைவருக்கும் மத்தியில் பொதுவான ஒன்றாக இருந்து வந்தது. ஓரிறைக்கோட்பாடும் இங்கு காலம் காலமாக இருந்து வருகிறது.
இந்து என்ற வார்த்தை இந்துத்துவர்களால் களவாடப்பட்ட பிறகு ‘இந்து ஞான மரபு’ என்ற சொல்லாடலின் கீழ் இந்தியாவில் இருந்த அனைத்து மதநம்பிக்கைகளையும் ஒன்றிணைப்பது இந்துத்துவாவின் ‘அகண்ட பாரதம்’ என்ற கருத்தியலைப்போல பிற்காலத்தில் திட்டமிட்டு வலிந்து உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்ததுத்துவா தன் அறிவுஜீவிகளைக் கொண்டு இதைத்தான் நிறுவ முயல்கிறது. எல்லாவற்றையும் சுவீகரித்துக் கொண்டு பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் அசல் முகம் வெளிப்பட்டால் நிச்சயம் அது போற்றத்தக்க ஒன்றாக இருக்கும். ஆனால் இங்கு எல்லாவற்றையும் சுவீகரித்துக் கொண்டு வெளிப்படுவது பாசிசத்தின் கோர முகம். பாசிசம் தன்னுடைய சுயநலனுக்காக எல்லாவற்றையும் உண்டு செரித்துவிட முயற்சிக்கிறது.
மதத்தின் துணைகொண்டே பிராமணர்கள் இந்திய மக்களிடைய ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் தங்களின் மதத்தின் வழியாகவே தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். குலதெய்வ வழிபாட்டைத் தவிர மதம் குறித்து எந்தவொரு நிலையான கண்ணோட்டத்தையும் கொண்டிராதவர்களிடம் தங்களின் மதமே அனைவருக்கும் உரிய மதம் என்ற சிந்தனையை பரப்பியதில் அவர்கள் பெருமளவு வெற்றி கண்டார்கள் என்றே தெரிய வருகிறது.
இங்கு இந்துத்துவர்கள் திட்டமிட்டு பொதுஎதிரியை உருவாக்கினார்கள். அந்த பொதுஎதிரியைக் கொண்டு அச்சமூட்டியே மற்றவர்களை தங்களின் குடையின் கீழ் ஒன்றிணைத்தார்கள். பொது எதிரி என்ற கண்ணோட்டம் நிலைத்திருக்கும்வரை அவர்கள் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதாகவே தோன்றும். ஆனால் இணைந்திருப்பதற்கான எந்த வலுவான இணைப்புப் பாலமும் அவர்களிடம் கிடையாது.எனக்கு அடிக்கடி ஒரு குர்ஆன் வசனம் நினைவுக்கு வருவதுண்டு, “அவர்கள் ஒன்றுசேர்ந்து இருப்பதாக நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ பிரிந்து கிடக்கின்றன.” அவர்களால் பொது எதிரியைக் கொண்டு அச்சுறுத்தாமல் ஒருபோதும் ஒன்றிணைந்து இருக்க முடியாது. எதிரிகளின் மீதுள்ள அச்சமே அவர்களை ஒன்றிணைய வைக்கிறது.இந்துத்துவர்களுக்கு மதம் ஒரு பொருட்டே அல்ல.
தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மக்களை ஒன்றிணைப்பதற்கு அவர்கள் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் நாத்திகர்கள். அவர்கள் நாத்திக போர்வையில் ஒளிந்துகொண்டு மற்ற மதங்களைத் தாக்குவார்கள். ஆத்திக போர்வையில் ஒளிந்துகொண்டு இந்து ஞான மரபு குறித்துப் பேசுவார்கள்.