social media islam tamilநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகங்களை நாம் சரியான முறையில்தான் பயன்படுத்துகிறோமா?

Loading

சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் எவ்வகையில் எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன என்பதை அறிந்துகொள்வது அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது. அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் மறுக்க முடியாதவை. பலர் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறார்கள். பரபரப்பும் மிகு உற்சாகமும் தேவையற்ற அழுத்தமும் செய்திக் குவியல்களும் அவற்றை அளவுகடந்து பயன்படுத்துபவர்களின் நேரங்களைக் கொல்வதோடு, அவர்களின் வேலைத்திறன்களை பாதிக்கவும் செய்கின்றன. அவை தூரமாக இருப்பவர்களை அருகில் கொண்டு வருகின்றன. ஆனால் நெருக்கமாக இருப்பவர்களை தூரப்படுத்தி விடுகின்றன. அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் தேவையற்ற செயல்பாடுகளைத் தங்களின் கடமைகளாகக் கருதி தங்களின் நேரங்களையும் ஆற்றல்களையும் அவற்றுக்காகச் செலவிடக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இது ஒரு திறந்த வெளி. இங்கு எல்லாமும் இருக்கின்றன. கவனத்தைத் திருப்பும் இடையூறுகள் மிகுந்த வெளி இது. கொஞ்சம் அசந்தால் மனிதன் வேறு எங்கோ இழுத்துச் செல்லப்பட்டு விடக்கூடும். ஆனாலும் இதனை சரியான முறையில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு. அதற்கு அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வின்மையும் ஒரு காரணம்தான்.

இந்தச் சூழலில் உமர் உஸ்மான் எழுதிய ‘சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹ்’ என்ற நூலை அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகக் கருதுகிறேன். இது சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை அப்படியே நம் முன்னால் கொண்டு வருவதோடு, அவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

தற்காலத்தில் சமூக ஊடகங்களை நாம் முழுமையாகத் தவிர்க்க முடியாது. ஆனாலும் நம்முடைய பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லையெனில் தேவையற்ற விசயங்களில் நம்முடைய நேரங்களை, ஆற்றல்களை வீணாக்கியதற்காக நாம் வருத்தப்படக்கூடியவர்களாக, நம்மை நாமே நொந்து கொள்ளக்கூடியவர்களாக மாறிவிடுவோம். இழந்த காலத்தை நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரமும் ஆரோக்கியமும் ஆற்றல்களும் மிக முக்கியமானவை. அவை தேவையற்ற விவகாரங்களில் வீணடிக்கப்பட்டுவிடக் கூடாது.

இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். இது நம்மை நாமே பார்த்துக் கொள்வதற்கான, சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான கண்ணாடி.

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/samooga-oodagangalukkaana-fiqh
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment