கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்து ஃபோபியா’: இந்துத்துவர்களின் அரிய கண்டுபிடிப்பு!

Loading

சமூக அரசியல் கருத்தாடல்களுக்குள் ‘இந்து ஃபோபியா’ எனும் சொல்லைப் பரவலாக்கும் முயற்சியில் தீவிர இந்து தேசியவாத சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. இஸ்லாமோ ஃபோபியா, செமிட்டிய எதிர்ப்புணர்வு (anti semitism) என்பனபோல் தூலமாக நிறுவப்படாத, தெளிவாக வரையறை செய்யப்படாத ஒரு புதிய சொல் இந்து ஃபோபியா. இதை சமீப காலமாக மேற்குலகில் வாழும் இந்துத்துவ வட்டாரம் தொடர்ந்து பரப்பி வந்தது. தற்போது சங்கி ஊடகங்களைத் தாண்டி இந்தியாவிலுள்ள பல மையநீரோட்ட ஊடகங்களில் இவ்வார்த்தைப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

நேற்று நடந்த சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஐநாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி இச்சொல்லை ஐநா அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அத்துடன் வலதுசாரித் தீவிரவாதம், தீவிர தேசியவாதம் போன்ற சொற்களை தீர்மானங்களில் சேர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் அமைப்பு ரீதியாக ஒடுக்கப்படுவது ஆதிவாசிகள், தலித்கள் உள்ளிட்ட அடித்தள சாதியினர், சிறுபான்மையினர் முதலானோர்தாம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் இந்துக்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் நெடுங்காலமாக இந்துத்துவ கும்பல் அழுகாச்சி நாடகமாடி வந்திருக்கிறது. முதலில் இந்துக்கள் எனும் பொத்தாம் பொதுவான சொல்லே அதனளவில் பிரச்னைக்குரிய ஒன்று. இது ஒருபுறமிருக்க, இப்போது அவர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்து ஃபோபியா பற்றி பார்ப்போம்.

இச்சொல்லாடலை மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் இந்துத்துவர்கள் கல்விப்புலத்திலும் அரசியல் மட்டத்திலும் நிறுவும் முயற்சியில் படுதீவிரமாக இருப்பது தெரிகிறது. உண்மையில் இந்துக்கள் என்பதற்காகவே மேற்கத்திய நாடுகளில் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்களா அல்லது தீய அரசியல் உள்நோக்கத்துடன் இப்படியான சொல்லாடலை வலதுசாரித் தீவிரவாதிகள் உற்பத்தி செய்கிறார்களா என்பது இங்கு எழும் கேள்வி.

மேற்குலகில் குடிபுகுந்த பலர் கடந்த காலங்களில் பாரபட்சமாக நடத்தப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மை. வாடகைக்கு வீடு தேடும்போது, கல்வி கற்கும்போது, பணி இடங்களில் என அவர்களிடம் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டோரில் இந்துக்களும் அடக்கம். சரி, இந்துக்கள் எதனடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? புலம்பெயர்ந்தோர் என்பதற்காகவா அல்லது இந்துக்களாக இருப்பதாலா எனும் கேள்விக்கு விடை காண்பதன் வழியாகவே இந்து ஃபோபியா எனும் வார்த்தையிலுள்ள பாசாங்குத்தனம் நமக்குப் புலப்படும்.

பேராசிரியர் அசோக் ஸ்வைன் கூறுகிறார்: “ஒரு புலம்பெயர்ந்தவனாக முப்பதாண்டுகள் ஐரோப்பாவிலும், ஒரு குறிப்பிடத்தக்க காலம் வட அமெரிக்காவிலும் வசித்திருக்கிறேன் என்ற வகையில் நான் பல வடிவங்களில் பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் குறிவைக்கப்பட்டதாக ஒரு சம்பவத்தைக்கூட என்னால் சொல்ல முடியவில்லை.”

உலகளவில் இந்துக்கள் எனப்படுவோரின் மக்கள் தொகை சுமார் 120 கோடி. அதில் 110 கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நேபாளத்தில் சுமார் 250 லட்சமாக உள்ளது. இதுபோக, வெறும் 6% இந்துக்கள்தான் சிறுபான்மையினராகப் பிற நாடுகளில் வாழ்கிறார்கள். 22 லட்சம் பேர் வட அமெரிக்காவிலும், 13 லட்சம் பேர் மேற்கு ஐரோப்பாவிலும் வசிக்கிறார்கள். மேற்கில் பிற புலம்பெயர்ந்தோரைக் காட்டிலும் பொருளாதார ரீதியாகவும், தொழில் / வேலை ரீதியாகவும் மிகப்பெரும் முன்னேற்றத்தை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாகவும் மேலெழுந்திருக்கிறார்கள். இந்தியச் சமூகத்தில் காலங்காலமாகக் கோலோச்சிய உயர் சாதியினர்தாம் பெரும்பாலும் மேலை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்க ஒன்று.

கூகுள், மைக்ரோ சாஃப்ட் போன்றவற்றின் தலைமைப் பொறுப்புகளில் இந்துக்கள் இருப்பதாகவும், அமெரிக்கத் துணை அதிபரின் தாய் ஓர் இந்து என்றும் சொல்லி, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேற்குலகில் வாழும் இந்துக்கள் பெருமிதப்படுவார்கள் என்கிறார் அசோக் ஸ்வைன். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பல இந்துக்கள் முக்கியமான அரசியல் பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் மக்கள் தொகையும் அங்கு அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலுள்ள Rutgers பல்கலைக்கழகத்தில் ஒரு இந்துத்துவ அமைப்பு இந்து ஃபோபியா எனும் கருப்பொருளில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தியிருக்கிறது. உண்மையில் அமெரிக்காவில் இந்து எதிர்ப்புணர்வு இருக்கிறதா? அமெரிக்கர்கள் இந்துக்களிடம் நட்புணர்வுடன் நடந்துகொள்வதாக Pew ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பாக 2014ல் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், 2017ல் வெளியான ஆய்வறிக்கை இந்த நிலைமை இன்னும் மேம்பட்டிருப்பதையே காட்டுகிறது. பிறகு ஏன் இந்து ஃபோபியா என்றொரு பிரச்னை இருப்பதாக இவர்கள் கட்டமைக்கிறார்கள்?

இந்துக்கள் என்பதாலேயே மேலை நாடுகளில் அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்ற வாதம் அடிப்படையற்றது. குடிபுகுந்தோர் என்ற ரீதியிலும், நிற அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவது நீண்ட காலமாக அங்கே இருக்கும் ஒரு பிரச்னை. இந்திய-அமெரிக்கர்கள் குறித்து 2020ம் ஆண்டு Carnegie நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவென்றால், இந்திய-அமெரிக்கர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவது அதிகரித்தாலும், ஆஃப்ரிக்கர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், பெண்கள் மற்றும் பிற ஆசியர்கள் அவர்களைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஆக, மேற்கத்திய நாடுகளில் இந்துக்கள் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இல்லை என்பதுடன், சமூக ரீதியாக, நிறுவன ரீதியாக அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெளிவு. அவர்களையோ, அவர்களின் வழிபாட்டுத் தலங்களையோ வெள்ளை இனவாதிகள் தாக்குவதில்லை; மேற்குலக அரசியல்வாதிகளோ கல்வியாளர்களோ அவர்களைப் பற்றி விமர்சிப்பதும்கூட அரிதினும் அரிதானது. யதார்த்தம் இவ்வாறிருக்க, இவர்கள் இந்து ஃபோபியா என ஒன்று இருப்பதாகச் சித்தரிக்க முயல்வதன் நோக்கம் என்ன?

உண்மையில், லவ் ஜிஹாது, கொரோனா ஜிஹாது போன்று இதுவும் ஒரு போலியான அரசியல் சொல்லாக்கம். ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற சங் பரிவார்களின் பேரினவாதம் மீது எழும் விமர்சனங்களை இதைக் கொண்டு அவர்கள் எதிர்கொள்ள முனைகிறார்கள். அதேபோல், இதன் மூலம் அநீதியான சாதியமைப்பு அல்லது அறிவியல் விரோத மூடநம்பிக்கை போன்றவற்றுக்கு எதிராக இந்துச் சமூகத்துக்குள் எழும் சீர்திருத்தக் குரல்களையும் ஒடுக்க திட்டமிடுகிறார்கள். இவர்களின் இந்தக் குயுக்தி நிச்சயம் எடுபடப்போதில்லை.

(கல்ஃப் நியூஸுக்கு பேராசிரியர் அசோக் ஸ்வைன் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.)

Related posts

Leave a Comment