கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: வயிற்றுக்கு ‘விடுமுறை’ தருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Loading

றமளான் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் சிறப்புமிக்க மாதமாகக் கொள்ளப்படுவதை நாம் அறிவோம். அதேபோல், ஓரிறை நம்பிக்கை, தொழுகை, தனது சொத்தில் 2.5 சதவீதத்தை ஸகாத் கொடுப்பது, ஹஜ்ஜுக்குச் செல்வது போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளுடன் றமளான் மாதம் முழுக்க நோன்பிருப்பதும் ஒரு கடமை என்பதும் நாம் அறிந்ததே.

இறைவனிடமிருந்து அதிகமான அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள இந்த றமளான் பேருதவிபுரிகிறது. மேலும், ஓர் அடியான் தன் பாவங்களையெல்லாம் நினைவுகூர்ந்து அதற்கெல்லாம் பாவமன்னிப்பைக் கேட்டு இறைவனிடம் மன்றாடி, முழுமையாகத் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள ஓர் அற்புத வாய்ப்பையும் றமளான் வழங்குகிறது.

இறை வேதமாகிய புனிதமிகு குர்ஆன் அருளப்பட்ட இம்மாண்புமிகு மாதத்தில் இறையடியான் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எழுந்து நோன்பை நோற்பான். அதை இறைக் கட்டளைகளுக்கு இணங்க உரிய முறையில் கடைப்பிடித்து, சூரிய அஸ்தமனத்தின்போது தன் நோன்பை முடித்துக்கொள்வான்.

தக்வா உடையோராக நம்மை ஆக்குவதே நோன்பின் நோக்கம் என்கிறது திருமறை. இறையச்சம், உளத்தூய்மை, இறைவனின் பொருத்தம் போன்றவற்றைப் பெற்றுத் தருகிறது நோன்பு. மேலும், அது உடல் இச்சையைக் கட்டுப்படுத்தி கூடவே உளக்கட்டுப்பாட்டையும் உருவாக்குகிறது. இதைத் தாண்டி, அதைக் கடைப்பிடிப்போரின் உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கிறது. நோன்பின் நோக்கம் உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதல்ல என்ற போதிலும், நோய்கள் பெரியளவுக்குக் குறைய நோன்பு உதவிபுரிகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்கிறார்கள்.

அதிகமாக உண்பது, காண்பதையெல்லாம் உண்பது இன்றைக்கு ஒரு பெரும் சமூகப் பிரச்னையாய் ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் இப்படியான பண்பு கொண்டோர் தீனிப்பண்டாரம் என்று கிண்டல் செய்யப்படுவதுண்டு. இதையே இன்றைக்கு ஸ்டைலாக Foodie என்பதாக அவரவர் தம் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலென்ன பெருமிதமோ தெரியவில்லை! தற்காலத்தில் கார்ப்பரேட் உலகு ஏற்படுத்தும் மோசமான உணவுக் கலாச்சாரம் பற்றியும் உடல் ஆரோக்கியத்துக்கு அது ஏற்படுத்தும் தீங்கு பற்றியும் சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உடல் பருமன் (Obesity), இருதய நோய்கள் (Heart Diseases), மேலும் புற்று நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் (Chronic Diseases) எல்லாம் இன்று சர்வ சாதாரணமாக நம்மைத் தாக்குகின்றன. இத்தருணத்தில் வயிற்றுக்கு ’விடுமுறை’ அளிப்பது இப்படியான பல உடல்நலக்குறைபாட்டுக்கு நிவாரணியாக அமைகிறது.

”சிரமங்கள் இருக்கின்றபோதிலும் அவர்களுக்கு நோன்பு மிகச் சிறந்ததாக இருக்கிறது. இதைப் பலரும் அறியமாட்டார்கள்” என இறைவன் அறிவுறுத்துகிறான் (திருக்குர்ஆன் 2:184). உலகில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து றமளான் நோன்பிருக்கும் கால அளவு மாறுபடுவது நமக்குத் தெரியும். இந்தியாவில் நாம் சுமார் 14 மணி நேரம் நோன்பிருக்கிறோம். இன்னொருபக்கம், ஃபின்லாந்து, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் அதிகபட்சமாக சுமார் 23 மணி நேரம் நோன்பிருக்கிறார்கள். இப்படி கால அளவு மாறுபட்டாலும், வயிற்றுக்கு சற்று ஓய்வு கொடுப்பதால் நோன்பாளிகள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் விளைகின்றன.

நோன்பு பலதரப்பட்ட உடல் அமைப்புகளான சுற்றோட்ட அமைப்பு (Circulatory System), நரம்பியல் அமைப்பு (Nervous System), சுவாச அமைப்பு (Respiratory System), செரிமான அமைப்பு (Digestive System), எலும்பமைப்பு (Skeletal System), தசை அமைப்பு (Muscular System) ஆகிய அனைத்திற்கும் வலுசேர்கிறது என்கிறது நவீன அறிவியல்.

4 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரங்களாக நோன்பு வைத்த ஒருவரின் உடல் நிலை எவ்வாறு இருக்கும் என அமெரிக்க மருத்துவர் எரிக் பெர்க் ஆய்வு மேற்கொண்டார். அதன் மூலம் நோன்பு நோற்பது ஒருவகையான ’மேஜிக்’காக நம் உடலில் செயல்படுவதை அவர் கண்டார். இதுகுறித்து அவர் விளக்குகையில், நோன்பாளி 12 மணிநேரங்கள் முடிந்த பின்பு அவர் உடம்பில் முக்கியமாகப் பங்காற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது உடம்பில் புரதங்களைக் கூட்டத் தொடங்குகிறது. மேலும், கொழுப்பைக் கரைக்கும் மூலப்பொருளாக விளங்குவதுடன், மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. நேரம் செல்லச்செல்ல இச்செயல்பாடு உடலில் அதிகரிக்கிறது என்கிறார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், 18ம் மணி நேரம் தொடங்கிய உடனே Autophagy எனும் செயல்பாடு தன் வேலையை ஆரம்பிக்கிறது. இது ஏற்கனவே சிதைந்த மற்றும் வலுவிழந்த புரதங்களையும் (Proteins), நுண்ணுயிர்களையும் (Microbes) மறுசுழற்சி செய்து சக்தியை இரட்டிப்பாக்குகிறது. அதேவேளை, இவ்வளவு காலம் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நம் குடல் முழுமையாகச் சுத்தமாக்கப்பட்டு சீர்செய்யப்படுகிறது. இருதயம் இயற்கையாகவே கீட்டோன்ஸ் மூலக்கூறுகளை விரும்புவதால் இருதய அமைப்பை (Cardiovascular) சீர்செய்கிறது. மூளையின் இயக்கத்தையும் அதில் புது திசுக்களையும் உருவாக்குகிறது.

இவ்வளவு நன்மைகளும் சாப்பிடாமல் இருப்பதாலா என ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் நன்மைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. காலங்காலமாக அரை வயிற்றோடு ஓடி உழைத்து, வேர்வை சிந்தி, உடல் ஆரோக்கியத்துடன் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

உணவு மோகத்தைத் தவிர்த்து, வாரத்தில் இரண்டொரு நாட்கள் நோன்பு நோற்கலாம். நபிகளார் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்பவர்களாக இருந்துள்ளார்கள். அது நமக்கு இறைவனிடம் கூலியை ஈட்டித் தருவதோடு, உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும்.

Related posts

Leave a Comment