குறும்பதிவுகள் 

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

Loading

மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த நிபுணர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் கவனிக்க வேண்டியதில்லை. அது நமக்கு அவசியமானதும் இல்லை. ஆனால் நம்பக்கத்தன்மை குறித்த விவகாரங்களில் நம் முன்னால் வெளிப்படும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கவனிக்கத்தக்கது.

மார்க்கம் சொல்லக்கூடியவர்கள், அறத்தை போதிக்கக்கூடியவர்கள் பாவம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அப்படி யாராலும் இருக்க முடியாது. போதிப்பவர்களும் போதிக்கப்படுபவர்களும் இந்த விசயத்தில் ஒன்றுதான். ஒருவர் இன்னொருவருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் அப்படிப்பட்டவர்கள் நம்பக்கத்தன்மையை இழந்தவர்களாக இருக்கக்கூடாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து நம் முன்னால் வெளிப்படும் செயல்பாடுகள் அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினால் அவர்களிடமிருந்து விலகிவிடுவது நல்லது.

பொய்யராக, கர்வம்கொண்டவராக, நேர்மையற்றவராக, நயவஞ்சகராக, தயக்கமின்றி, குற்றவுணர்ச்சிகள் இன்றி தம் தவறுகளை நியாயப்படுத்துபவராக ஒருவர் இருந்தால் நிச்சயம் அவர் மார்க்கம் சொல்லவோ அறம்போதிக்கவோ தகுதியானவர் அல்ல. இங்கு வேறுபாடு ஆதமுக்கும் ஷைத்தானுக்குமுள்ள வேறுபாடு. ஆதம் தவறு செய்தார். ஆனால் தம் தவறை நியாயப்படுத்தவில்லை. அதற்காக வருந்தினார், வெட்கப்பட்டார். குற்றவுணர்ச்சியோடு பாவமன்னிப்புக் கோரினார். இறைவனின் கருணை அவரைத் தழுவிக்கொண்டது. ஷைத்தானும் தவறு செய்தான். ஆனால் அவன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை சரியென வாதிட்டான், நியாயப்படுத்தினான். இறையருளைவிட்டு அவன் தூரமானவான். சபிக்கப்பட்டான்.

இங்கு போதிப்பவனுக்கும் போதிக்கப்படுபவனுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே நிலையில்தான் இருப்பவர்கள்தாம். ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூற உரிமையிருக்கிறது. ஒருவர் மற்றவரைப் பழிக்க உரிமையில்லை. யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அந்தரங்கத்தையும் தோண்டி துருவி ஆராய, அவை குறித்த விவாதிக்க நமக்கு உரிமையில்லை. அவர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்யும் நிலையில்தான் உள்ளோம். நாம் அவர்களுக்கு மிக அருகில்தான் இருக்கிறோம் அல்லது அவர்களைப் போன்றுதான் இருக்கிறோம். அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு விட்டார்கள். நாம் மறைக்கப்பட்டுவிட்டோம். இதுதான் அவர்களையும் நம்மையும் வேறுபடுத்தும் அம்சம்.

நாம் ஒருவரை நம்பினால் அவரது பேச்சை ஏற்றுக்கொள்கிறோம். நம்பவில்லையெனில் அவரைப் புறக்கணித்து விடுகிறோம். பாவியான மனிதரைக் கொண்டும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் என்று நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி உள்ளது. இந்த மார்க்கம் நல்லவர்களாலும் தீயவர்களாலும் வலுப்படுத்தப்படும்.

அறம் போதிப்பவர்களின், மார்க்கம் சொல்பவர்களின் தவறுகள் மட்டும் ஏன் இந்த அளவு பூதாகரமானவையாகப் பார்க்கப்படுகின்றன? ஆம், அறம்போதிப்பவர்களை அம்பலப்படுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு ஒரு குரூரமான ஆனந்தம் இருக்கிறது. அதனால்தான் மற்றவர்களைவிட அவர்களின் தவறுகள் பூதாகரமானவையாக சித்தரிக்கப்படுகின்றன. தொடர்ந்து அவை குறித்து பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இன்னொரு அம்சமும் இருக்கிறது. அறம்போதிக்கும் அந்த மனிதர்களின் கீழ்மைகளைக் கொண்டு தங்களின் கீழ்மைகளை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்களுக்கு அதில் ஒருவித ஆறுதலும் மகிழச்சியும் உள்ளது.

இங்கு இன்னும் ஒரு விசயமும் இருக்கிறது. பிரபல்யமான பிம்பங்கள் எப்போதும் தீவிர கண்காணிப்பில்தான் இருக்கும். தெரிந்த, தெரியாத மனிதர்கள் அவர்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மோசமான அந்தரங்கம் இருக்கத்தான் செய்யும். தொடர்ந்து அவனைக் கண்காணிப்பதன் மூலமாக அதனை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

பெரும்பாலும் மனிதர்கள் நல்லவர்களை இழிவுபடுத்த விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து தவறான செயல்கள் வெளிப்பட்டாலும் அவற்றை மறைத்து விடுகிறார்கள். ஆனால் கர்விகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அவர்களால் இழிவுபடுத்தப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் தங்களுக்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புனைந்து உருவாக்கவும் செய்வார்கள். கர்விகள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அநியாயக்காரர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அநியாயக்காரனுக்கும் மேல் அவனைவிட பலமான, தந்திரமான அநியாக்காரன் இருக்கத்தான் செய்வான்.

இன்னொரு விசயமும் இருக்கிறது. ஒரு மனிதன் எப்படிப்பட்டவனோ அப்படி வெளிப்படுவதுதான் அவனுக்கு இலகுவானது. அதற்கு மாறாக அவனைக் குறித்து உருவாகும் பிம்பம் அவனுக்குத் தொந்தரவு தரக்கூடியது. சில சமயங்களில் அவனையும் மீறி அவனே அதனை தகர்த்துவிடவும் செய்வான் அல்லது அது தகர்ப்படுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுவான்.

0 comments

Related posts

Leave a Comment