குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபடுவதே மனிதன் சுதந்திரமாக, இயல்பு நிலையில் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். மனதை விடுவிக்க பேரறிஞர் இப்னு கய்யூம் சில வழிமுறைகளை முன்வைக்கிறார். அவற்றுள் சிலவற்றை அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறேன்:

1. இச்சையின் தூண்டுதலின்போது அதற்கு எதிராக பொறுமையாக இருப்பது. அதனால் ஏற்படும் கசப்பை சகித்துக் கொள்வது.

2. இச்சையினால் ஏற்படும் இன்பத்தைவிட அதனால் ஏற்படும் துன்பமே அதிகம் என்பதை எண்ணிப் பார்ப்பது.

3. தான் மனஇச்சையின் பின்னால் அலைவதற்காகப் படைக்கப்படவில்லை என்பதையும் உன்னதமான ஒரு நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளேன் என்பதையும் அந்த நோக்கத்தை அடைவதற்கு இச்சையின் எதிர்த்திசையில் பயணிப்பதும் அவசியம் என்பதையும் நினைத்துப் பார்ப்பது.

4. மிருகத்தைவிட தான் கீழான நிலைக்குச் சென்றுவிடுவதை வெறுப்பது. ஏனெனில் மிருகம் தனக்குப் பலனளிப்பதையும் தீங்களிப்பதையும் நன்கறிந்து பலனிக்கும் விசயத்திற்கே முன்னுரிமை அளிக்கும். மனிதனுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது இந்த நோக்கத்திற்காகத்தான்.

5. அதே செயலை மற்றவர்கள் செய்தால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்ப்பது. பிறகு அந்த இடத்தை தன்னை வைத்து சிந்தித்துப் பார்ப்பது. மற்றவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதுபோன்றே தனக்கும் தீர்ப்பு வழங்குவது.

6. மனம் எதை வேண்டுகிறதோ அதைக் குறித்தும் அதைக் குறித்து மார்க்கமும் அறிவும் என்ன சொல்கின்றன என்பதைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்தல்.

7. பாவம் செய்வதால் கிடைக்கும் இன்பத்தின் இனிமையைவிட தூய்மையாக இருப்பதால் கிடைக்கும் இன்பத்திற்கும் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது.

8. ஷைத்தான் என்னும் எதிரியை மிகைப்பதைக் கொண்டு, அவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் அவனைக் கோபத்தோடு கவலையோடு திருப்பி அனுப்புவதைக் கொண்டு மகிழ்ச்சியடைவது.

9. மனஇச்சையினல் ஏற்படும் விளைவுகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது. பாவத்தின் காரணமாக தான் எத்தனை சிறப்புகளை இழந்திருக்கிறேன் என்பதையும் அது எந்த அளவு கீழான விசயங்களில் தன்னைத் தள்ளியிருக்கிறது என்பதையும் அது எந்த அளவு நல்ல இன்பங்களைத் தடுத்திருக்கிறது என்பதையும் எந்த அளவு நற்பெயரையும் அந்தஸ்தையும் குறைத்து போக்க முடியாத இழிவைக் கொண்டு வந்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்ப்பது.

10. தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு தான் அடிமைப்படுத்தப்படுவதற்கு எதிராக அடியான் கோபம் கொள்ள வேண்டும்.

11. இச்சைக்கு அடிபணிவது அருள்வளத்தின் வாயில்களை அடைக்கிறது. அது துரோகத்தின் வாசல்களைத் திறக்கிறது.

12. இச்சைக்கு அடிபணிவது அடியானின் உறுதியை சீர்குலைத்து அவனைப் பலவீனப்படுத்துகிறது. அதற்கு மாறாகச் செயல்படுவது அவனை வலுப்படுத்துகிறது.

13. இச்சைக்கு அடிபணிவது நோயாகும். அதற்கு மாறாகச் செயல்படுவதே நிவாரணமாகும்.

14. இச்சைக்கு மாறாகச் செயல்படுவது அடியானின் உடலிலும் உள்ளத்திலும் நாவிலும் பலத்தை ஏற்படுத்துகிறது.

15. தன் எதிரியின் ஆதிக்கத்திற்கு தான் உட்பட்டிருக்கிறோம் என்ற விசயத்தில் அவன் கோபம் கொள்ள வேண்டும். ஏனெனில் ஷைத்தான் அடியானிடம் எண்ணத்தில் பலவீனத்தையும் மனஇச்சையை நோக்கிய சாய்வையும் கண்டால் அவனை மனஇச்சையைக் கொண்டு எளிதாக வீழ்த்திவிடுகிறான். தான் விரும்பும் திசையை நோக்கி அவனை இழுத்துச் சென்று விடுகிறான். அடியானிடம் அவன் உறுதியை, கண்ணியத்தைக் கண்டால் திருட்டுத்தனமாக, மறைமுகமாக அன்றி அவன் அடியானுடன் மோத மாட்டான்.

Related posts

Leave a Comment