கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நேற்று அயோத்தி, இன்று காசி: ஞான்வாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயமும் – அ.மார்க்ஸ்


அயோத்தி, காசி, மதுரா ஆகியவற்றை “மீட்போம்” எனும் முழக்கம் 1984ல் டெல்லியில் நடந்த இந்துத்துவ சக்திகளின் மாநாடொன்றில்தான் மேலுக்கு வந்தது. முதலில் அயோத்தி அடுத்தது காசி, மதுரா என்பதாகச் செயல்பாடுகள் தொடங்கின. வெற்றிகரமாக இன்று அயோத்தி “மீட்கப்பட்டுவிட்டது”. இப்போது அடுத்த இலக்கை நோக்கிப் பயணம் தொடங்கிவிட்டது! இதையே அவர்கள் ”அயோத்தியா டு சிர்ஃப் ஜஹான்கிஹே காசி மதுரா பாக்கி ஹே..” என்றார்கள். இந்த முழக்கத்தின் பொருள் ”அயோத்தியாதான் தொடக்கம். அடுத்து இருக்கு காசியும் மதுராவும்..” என்பதுதான்.

நரசிம்மராவ் ஆட்சியின்போது 1991ல், “வணக்கத்தலங்களைப் பொருத்தமட்டில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இருந்த நிலையில் எந்த மாற்றமும் கூடாது” எனச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் உள்ள வணக்கத்தலங்கள் யார் வசம் இருந்தனவோ அதில் எந்த மாற்றங்களும் இனி செய்ய முடியாது என்பது இதன் உள்ளடக்கம். அதற்கு முன்பாகப் பல ஆண்டுகளாக பாபர் மசூதிப் பிரச்னை இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆக, இனி யாரும் எந்த ஒரு தரப்பின் ஆலயத்தையும், இது முன்னதாக எங்களிடம் இருந்தது; இதை இப்போது வைத்துள்ளவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி பிரச்னை செய்ய இடமில்லை.

மிகவும் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல சட்டம் அது. அன்றைய நிலையில் எந்தவொரு வழிபாட்டுத்தலமும் இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என யாரிடம் அப்போது இருந்ததோ அதில் எந்த மாற்றமும் இனி இல்லை என இதன்மூலம் உறுதியானது. இந்த நாட்டில் இன்று குறைந்தபட்சம் மூன்று முக்கிய மதங்களை நம்புவோர் வாழ்ந்து கொண்டுள்ளனர். இதில் இரு மதங்கள் உலகளவில் மிகப் பெரிய மதங்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள இந்து மதம் உலக அளவில் மூன்றாவது பெரிய மதமாகக் கருதப்படுகிறது. அவரவர் இருந்த நிலையை ஏற்று நாம் நம் எதிர்காலத்தைக் கட்டமைப்போம் என்பது நரசிம்மராவ் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் பொருளாக இருந்தது.

அதில் இரு அம்சங்கள் உள்ளன. 1) பாபர் மசூதிப் பிரச்னையை முடியவில்லை. அது யாருக்குச் சொந்தம் என்பது பின்னால் தீர்மானிக்கப்படும். 2) மற்ற எல்லா வழிபாட்டுத்தலங்களும் யாரிடம் இருந்தனவோ அதில் இனி எந்த மாற்றங்களுக்கும் இடமில்லை.

இப்போது நான்கு நாட்களுக்கு முன் ஏப்ரல் 8ம் தேதி அன்று வாரணாசி நீதிமன்றம் ஒன்று அங்குள்ள ஞான்வாபி மசூதி உள்ள இடத்தில் அதற்கு முன் ஓர் இந்து ஆலயம் இருந்ததா என அறிய அப்பகுதியை அகழாய்வு செய்யுமாறு இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பிற்கு ஆணையிட்டுள்ளது. “சுயம்பு ஜ்யோதிர்லிங்க பகவான் விஷ்வேஷ்வர்” சார்பாக விஜயசங்கர் ரஸ்தோகி எனும் வழக்குரைஞர் தொடுத்த வழக்கொன்றில் மேற்படி நீதிமன்றத்தின் சிவில் நீதிபதி ஒருவர் இந்த ஆணையை இட்டுள்ளார். உபி அரசு இதற்கான செலவை ஏற்கவேண்டும் என்றும், அப்படிச் சர்வே செய்யும் குழுவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடக்கப்பட்டால் “நல்லது” (Preferable) எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

”அஞ்சுமன் இன்திஸாமியா மஸ்ஜித்” (Anjuman Intezamia Masjid – AIM) எனப்படும் ஞான்வாபி மசூதி நிர்வாகக் குழு ரஸ்தோகியின் இந்த வழக்கிற்கு எதிர்மனு ஒன்றை உடன் தாக்கல் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

1669ம் ஆண்டு முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் இப்போது ஞான்வாபி ஆலயம் உள்ள இடத்திலிருந்த இந்து ஆலயம் தகர்க்கப்பட்டு அந்தக் கற்களைக் கொண்டு அங்கு கட்டப்பட்டதுதான் ஞான்வாபி ஆலயம் என்பது விஜயசங்கர் ரஸ்தோகி தரப்பு வாதம். அதுவே மொத்த இந்து அமைப்புகளின் கருத்தும் என நாம் நம்பலாம். இதே நேரத்தில், சற்றுமுன் நான் குறிப்பிட்ட நரசிம்மராவ் காலத்திய ”வணக்கத்தலங்களைப் பொருத்தமட்டில் 1945 ஆகஸ்ட் 15ல் இருந்த நிலை இறுதியானது” எனும் சட்டத்திற்கு எதிரான வழக்கொன்றை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆக, அயோத்தியுடன் பிரச்னை முடியவில்லை. அடுத்த பிரச்னைக்கு தொடக்கப்புள்ளி வைத்தாகிவிட்டது!

ஔரங்கசீப் ஆட்சியில் காசியில் கட்டப்பட்ட இந்து மடம்

பிரதமர் நரேந்திர மோடிதான் வாரணாசி தொகுதி எம்பி என்பதும் அவர் காசி விஸ்வநாதர் ஆலய முன்முகப்பை (Corridor) விரிவாக்கி அழகுபடுத்தும் ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் ஒன்றிற்கு சென்ற 2019 மார்ச்சில் அடிக்கல் நாட்டியதும் இத்துடன் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு சமீபத்திய நிகழ்வாகும். கங்கைத் துறையிலிருந்து பார்த்தாலே விஸ்வநாதர் ஆலய தரிசனம் கிடைக்குமாறு இந்தத் திருப்பணி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கு வாழும் முஸ்லிம்களிடம் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி தீர்ப்பு வந்தபோது ஞான்வாபி மசூதி நிர்வாக இணைச் செயலர் எஸ்.எ.யாசின் என்பவர், “பாபர் மசூதிக்கு நிகழ்ந்ததுதான் ஞான்வாபி மசூதிக்கும் நடக்கப் போகிறது” என அச்சம் தெரிவித்ததில் உள்ள நியாயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் திருப்பணி தொடங்கியபோது காண்ட்ராக்டர் ஒருவர் ஞான்வாபி மசூதியின் நான்காவது நுழைவாயில் மேடையை உடைத்ததையொட்டி அங்கே சலசலப்பு ஏற்பட்டு, அதனடியாக அந்த ஒப்பந்தக்காரர் இரவோடு இரவாக அதைச் சரிசெய்த சம்பவம் ஒன்றும் நடந்தது.

மேலே தொடருமுன் இங்கொன்றைச் சுட்டிக்காட்டுவது முக்கியம். ஔரங்கசீப் ஆட்சியில் இப்படிக் காசி ஆலயம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதா என்பது இங்கு கேள்வி அல்ல. ஔரங்கசீப் மாற்று மத ஆலயங்களைத் தகர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவரெல்லாம் இல்லை என்பது வரலாற்றறிஞர்கள் மத்தியில் உள்ள ஒருமித்த கருத்து. அதன் பொருள் அவரது ஆட்சியில் இப்படியாக ஆலயங்கள் ஏதும் இடிக்கப்பட்டதே இல்லை என்பதும் அல்ல. ஔரங்கசீப் ஆட்சியில் சுமார் 12 ஆலயங்கள்வரை இடிக்கப்பட்டன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதற்குப் பின்னால் மதக் காரணங்கள் இருக்கவில்லை என்பதையே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில், எந்த ஔரங்கசீப் ஆட்சியில் இது நடந்ததோ அதே ஆட்சியில்தான் அவரின் மகன் தாராஷிகோ ஒரு சர்வ சமய மாநாடொன்றையும் காசியில் நடத்தினார். அதில் கலந்துகொண்டவர்களில் நமது குமரகுருபரரும் ஒருவர். அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்ட தாராஷிகோ, குமரகுருபரரின் வேண்டுகோளை ஏற்று ஔரங்கசீப் அனுமதியுடன் காசியில் இந்து மடம் ஒன்றைக் கட்ட குமரகுருபரருக்கு அனுமதியும் நிதி உதவியும் அளித்தார். இன்றளவும் அங்கு அந்த மடம் செயல்பட்டு வருகிறது.
நிறையச் சொல்லலாம். ருத்திராட்சம் விளையும் பூமியான நேபாளத்தில் ருத்திராட்சக் காடொன்றும் வாங்கப்பட்டு அது பல காலம் இந்தக் காசி மடத்திற்கே சொந்தமாக இருந்தது. ஆனால் இப்போது அது இந்த மடத்திடம் இல்லை. அப்படி ஆனதற்கு எந்த முஸ்லிம் மத ஆட்சியும் காரணமல்ல. ஒரே இந்து நாடு என இவர்கள் சொல்லும் நேபாள ஆட்சியில்தான் இது இன்று நடந்துள்ளது.

மன்னர்களால் ஆலயங்கள் அழிக்கப்படுவதற்கு மத வெறுப்பு மட்டுமே அடிப்படையாக இருந்ததில்லை என்பதே வரலாற்று உண்மை. ஹர்ஷனின் ஆட்சியில் ஆலயங்களை இடிப்பதற்கென்றே ”தேவ உற்பத நாயகன்” என்றொரு அதிகாரி நியமிக்கப்பட்ட வரலாற்றையும் நான் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பே எனது “இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்” நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

நம்பிக்கையை ஆயுதமாக்கும் நயவஞ்சகம்

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சில பகுதிகள் சிதைக்கப்பட்டு அந்த இடத்தில் ஞான்வாபி மசூதி கட்டப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றே. அப்படி அந்த உண்மையை ஏற்கிறபின்னும், இன்று அதைத் தகர்த்து அங்கு இந்துக் கோவில் ஒன்றைக் கட்டுவது என்பதை இன்று ஏற்க இயலாது. இன்றைய அநீதிகள் என்பன எந்த வகையிலும் முந்தைய அத்துமீறல்களுக்குப் பதிலாக இருக்க முடியாது. இப்படி இரண்டையும் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணல்ல. இன்று இதுவொரு ஜனநாயக நாடு. பல மதத்தினரும் வாழும் நாடு. உலகில் மிகப்பெரிய அளவில் முஸ்லிம் மக்கள் வாழும் நாடுகளில் ஒன்று. இப்படியான பின்னணியில், 16ம் நூற்றாண்டு செயல்பாடு ஒன்றுக்கு இன்றைக்குப் பழிவாங்குவது என்பதற்கெல்லாம் இடமில்லை.

இந்த வகையில்தான் நரசிம்மராவ் காலத்தில் இயற்றப்பட்ட 1991ம் ஆண்டு வணக்கத்தலங்கள் சட்டம் ஒரு அறம் சார்ந்த முக்கிய ஆவணம் ஆகிறது. நாம் 1947 ஆகஸ்ட் 15 அன்று வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றோம். அந்தத் தேதிக்குப் பின் நாம் ஒரு புதிய அரசியல் சட்டத்துடன் அதுவரை வரலாற்றில் நாம் அனுபவிக்காத ஒரு புதிய அரசியல் வாழ்வைத் தொடங்கினோம். அந்த அரசியல் சட்டத்தைச் சரியாக நிறைவேற்றுவதுதான் நம்முன் உள்ள ஒரே தீர்வு. மாறாக, முன்னொரு காலத்தில் அப்படிச் செய்தாய், அன்று அப்படிச் செய்ததற்காக இன்று இப்படிச் செய்கிறோம் எனச் சொல்வதற்கு ஒரு நாகரிகச் சமூகத்தில் இடமில்லை.

இது எப்படி உள்ளதென்றால் அன்று தீண்டாமையை நியாயப்படுத்தி வேதம் எழுதினார்கள் என்பதற்காக அப்படித் தீண்டாமையை வேதமாக்கிய சாதியினர் மீது இன்று தீண்டாமையைக் கடைபிடிக்கவேண்டும் எனச் சொல்வதற்கு ஒப்பு அது. அதுமட்டுமல்ல ஆலயம், வழிபாடு என்பதற்கெல்லாம் என்ன உன்னத அர்த்தங்கள் கொள்ளப்படுகின்றனவோ அவற்றை ஆகக் கீழ்த்தரமாக அவமதிப்பதற்குச் சமம் இது. அன்று ஆலயம் இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதற்காக இன்று மசூதியை இடித்து ஆலயம் கட்டுவது என்பது உண்மையில் பக்தி, இறை நம்பிக்கை, மதக் கடமை என்கிற எல்லாவற்றையும் படு ஈனத்தனமாக இழிவுசெய்வதாகும். அது மட்டுமின்றி, பிரதாப் பானு மேதா போன்ற பத்தி எழுத்தாளர்கள் பதிவுசெய்திருப்பதைப் போல, இப்படியான செயல்பாடுகள் பக்தி, இறைக் கடமை ஆகியவற்றை பழிவாங்கலுக்கான ஆயுதமாக்குவதும்கூட (Weaponisation of Faith in God).

பெரிய அளவில் இன்று நமது அரசியல் சட்டம் நாசமாக்கப்படுகிறது. நீதிமன்றங்களின் ஒப்புதலுடன் இவை நடைபெறுகின்றன. நேற்று பாபர் மசூதி, இன்று காசி, நாளை மதுரா. என்ன இதெல்லாம்!

இப்படிச் சிறுபான்மையர் ஆலயங்கள் இடிக்கப்படுவது, அரசியல் சட்டத்தைக் குட்டிச்சுவராக்குவது, UAPA போன்ற கொடுஞ் சட்டங்களை மேலும் வலுவாக்கி கேள்வி கேட்பவர்களைக் கொடுஞ்சிறையில் அடைப்பது என்பது மட்டுமல்ல இன்று நடைபெறுபவை. பெரிய அளவுக்கு இங்கு பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை முதலியன ஏற்பட்டுள்ளன. கார்ப்பரேட் அதிகாரங்கள் எல்லை மீறுகின்றன. இவற்றை வெறுமனே கொரோனாவின் விளைவு எனப் பார்த்துவிட முடியாது. கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இங்கு நிலைமை சீராகப் போவதில்லை. இந்த கார்ப்பரேட் அடிவருடி அரசு மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளது. அரசின் பொருளாதாரத் தோல்வியையும் அதன் பிளவுவாத அரசியலையும் பொது மக்களிடம் விளக்குவதுதான் இன்று இடதுசாரிகள், சிறுபான்மையினர், தலித் கட்சிகளின் பணியாக இருக்கவேண்டும்.

உறுதியான பாசிச எதிர்ப்புதான் இன்றைய தேவை.

Related posts

One Thought to “நேற்று அயோத்தி, இன்று காசி: ஞான்வாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயமும் – அ.மார்க்ஸ்”

  1. Saravanan

    நூறு சதவீதம் உண்மை.தரமான கட்டுரை… நன்றி

Leave a Reply to Saravanan Cancel reply