கட்டுரைகள் 

மனிதனின் இயலாமை வெளிப்படும் தருணம்

Loading

துன்பத்தில்தான் மனிதன் தன் இயலாமையை உணர்கிறான். அது அவன் மீது அதிகாரம் செலுத்தும் பேராற்றல் கொண்ட இறைவனை அவனுக்கு நினைவூட்டுகிறது. அவனைத் தவிர தனக்கு வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதையும் தன் துன்பத்தைப் போக்க அவனால் மட்டுமே முடியும் என்பதையும் மனிதன் உளமாற நம்புகிறான். தன் துன்பங்களைப் போக்குமாறும் தன் தேவைகளை நிறைவேற்றுமாறும் அந்த இறைவனிடமே அவன் மன்றாடுகிறான். ஆனாலும் இந்த நிலையில் அவன் நீடித்திருப்பதில்லை. துன்பம் நீங்கியவுடன் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறான். திருக்குர்ஆன் மனிதனின் இந்த நிலையை பின்வருமாறு படம்பிடித்துக் காட்டுகிறது:

“மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நின்றவாறும் அமர்ந்தவாறும் படுத்தவாறும் நம்மை அழைக்கிறான். ஆனால் அவனது துன்பத்தை நாம் அவனை விட்டும் நீக்கி விட்டால் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதவனைப்போன்று ஆகிவிடுகிறான். இவ்வாறு வரம்புமீறும் மக்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.” (10:12)

மகிழ்ச்சி அவனைக் கர்வத்தில் ஆழ்த்துகிறது; அவனது இயலாமையை மறக்கடித்துவிடுகிறது; தன் திறமையினால் ஆற்றலினால் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம் என்ற தவறான நம்பிக்கையை அவனது உள்ளத்தில் உருவாக்கிவிடுகிறது. நம்பிக்கையாளன் இதற்கு மாறானவன். அவன் துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் இறைவனை நினைவுகூருகிறான். இயலாமை அவனுக்கு இறைவனை நினைவூட்டுவதுபோல மகிழ்ச்சியும் இறைவனின் அருட்கொடைகளை அவனுக்கு நினைவூட்டுகிறது. தனக்குக் கிடைத்திருப்பது தன் திறமையின் ஆற்றலின் விளைவு அல்ல என்பதையும் அது முழுக்க முழுக்க இறைவனின் அருட்கொடையே என்பதையும் அவன் சந்தேகத்திற்கிடமின்றி உணர்ந்து கொள்கிறான். அவனுக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சி, துன்பம் என இரு நிலைகளும் அவனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கின்றன. பின்வரும் நபிமொழியில் இப்படிப்பட்ட நம்பிக்கையாளனே சிலாகிக்கப்படுகிறான்:

“நம்பிக்கையாளனின் நிலை ஆச்சரியமானது. அவனது விவகாரங்கள் அனைத்தும் அவனுக்கு நன்மையாகவே அமைந்துவிடுகின்றன. அவனுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமையைக் கடைப்பிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.”

மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்கள் ஓர் எல்லைக்குட்பட்டவையே. தாங்க முடியும் அளவுக்கே அவன் சோதிக்கப்படுகிறான். தாங்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. இறைவன் யாரையும் அவரது சக்திக்குமீறி சோதிப்பதில்லை. தன்னிரக்கம் தேடுவோர் சிறு துன்பமாயினும் அதனைக் கொண்டு தன்னிரக்கம் தேடவே விரும்புவர். ஒவ்வொருவரும் துன்பங்களை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவற்றின் வடிவங்கள்தான் வேறுவேறு. அதனால் ஏற்படும் வலிகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. வடிவத்தைக் கொண்டு துன்பம் அளவிடப்படுவதில்லை. அது ஏற்படுத்தும் வலியைக் கொண்டே அளவிடப்படுகிறது.

இறைவன் துன்பங்களைக் கொண்டு மனிதர்களைச் சோதிக்கிறான். ஒரேவகையான துன்பம் மனிதர்களைப் பொறுத்து வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் அவர்களுக்கு இறைநினைவூட்டி இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கின்றன. அவனை மறந்து வாழ்ந்த அவர்கள் அவற்றுக்குப் பிறகு அவனை எந்நேரமும் நினைவுகூரும் இறைநம்பிக்கையாளர்களாகி விடுகிறார்கள்.

சிலருக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் அவர்களை இறைவனைவிட்டுத் தூரமாக்கிவிடுகின்றன. “தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லையே” அல்லது “தங்களுடையது பறிக்கப்பட்டுவிட்டதே” என்ற எண்ணம் அவர்களை விரக்தியில், கோபத்தில் ஆழ்த்திவிடுகிறது. அவர்கள் இறைவனைச் சபிக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொள்கிறார்கள். சோதனைகள் உண்மை விசுவாசிகளையும் போலியானவர்களையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவை நம்பிக்கையாளனின் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகின்றன. நயவஞ்சகனை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றன.

இறைவனின்பால் நெருக்கமாக்கி வைக்கும் துன்பங்கள் நம்மை மெய்மறதியில் ஆழ்த்தும் இன்பங்களைவிடச் சிறந்த அருட்கொடைகள். இறைவனின் வல்லமையை, நம் இயலாமையை உணர்த்தும் துன்பங்கள் அவன்பால் நம்மை நெருக்கமாக்கி அவனையே சார்ந்து வாழக்கூடியவர்களாக நம்மை ஆக்குகின்றன.

வேகத்தடைகள் நம் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வேகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் நம்மைக் கட்டுப்படுத்தி வேகத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களும் அவை போன்றவைதாம். அவை நம் கர்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன. நம்மைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பேராற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. வாழ்க்கையின் அலுவல்களில் மூழ்கி நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவைதாம் நம்மை மீட்டுக் கொண்டு வருகின்றன.

துன்பங்கள் மட்டும் இல்லையென்றால் மனிதன் கட்டுப்படுத்த முடியாத கொடிய மிருகமாகி விடுவான். அவனுக்கு அவனுடைய இயலாமையும் படைப்பாளனின் வல்லமையும் உணர்த்தப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்கள் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அவை அவனுடைய இயலாமையையும் படைப்பாளனின் பேராற்றலையும் ஒரு சேர அவனுக்கு உணர்த்துகின்றன.

வாழ்க்கையின் நிச்சயமின்மையை உணரும் மனிதன் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்றோ மற்றவர்கள் மீது அநீதியிழைக்க வேண்டும் என்றோ எண்ண மாட்டான். முடிந்த மட்டும் யாருக்கும் தீங்கிழைக்காமல் நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே அவன் எண்ணுவான்.

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குத் துன்பமே வராது. நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை. அப்படி எந்த மார்க்கமும் கூறவும் முடியாது. ஏனெனில் இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையின் மாறா நியதிகள். ஆனால் இஸ்லாம் இன்பத்தையும் துன்பத்தையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது. அதுதான் ஒரு மார்க்கத்தின் பணி. அதைத்தான் இஸ்லாம் செய்கிறது.

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார். ஏன் நம் மனதில் அடுத்த நிமிடம் என்ன வகையான எண்ணங்கள் உதிக்கும்? என்ன வகையான மாற்றங்கள் நிகழும்? அவை நம்மை எங்கெல்லாம் இட்டுச் செல்லும் என்பதைக்கூட நாம் அறிய மாட்டோம். மனிதனால் தன்னைக் கூட முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. நாம் அறிந்தவைகூட அவதானிப்புகளும் கணிப்புகளுள்தாம். அதுவும் அவற்றின் உண்மைநிலையோ, இயல்புகளோ அல்ல. அவையும்கூட நம் ஆன்மாவில் ஏற்கனவே பதிவாகியிருப்பவை. நாம் அவற்றைக் கண்டடைகிறோம். அவற்றைக்கு குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது அல்லது அவை நமக்குத் தேவைப்படும்போது அவை நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.

மனிதன் தன்னுடைய இயலாமையை உணரும்போது இறைவனின் இருப்பை அவனுடைய மாபெரும் ஆற்றலை உணரத் தொடங்குகிறான். அவன் தன்னை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னகர்ந்து நீண்ட தூரம் செல்ல முடியாது. தொடர்ந்து வரக்கூடிய துன்பங்களும் அவனைத் தின்னக்கூடிய வெறுமையும் சலிப்பும் நிராசையும் அவனது கர்வத்தை மிக விரைவாகவே உடைத்து விடுகின்றன. அவை திக்குத் தெரியாமல் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தட்டழிந்து திரியக்கூடியவனாக அவனை ஆக்கி விடுகின்றன.

இறைநம்பிக்கை மனித மனதில் வாழ்க்கையைக் குறித்த நேர்மறையான பார்வையை, நன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் முன்னகர்ந்து செல்ல, எதிர்படும் துன்பங்களை எதிர்கொள்ள அது மனிதனுக்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அதனைத் தொலைத்தவர்கள் நிச்சயம் மனஅமைதியை, நிம்மதியைத் தொலைத்து விடுவார்கள்.

“யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு.” (20:124)

Related posts

Leave a Comment