கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

Loading

நாம் செய்யும் பாவங்களை ஒரு கட்டத்தில் நம்மையும் அறியாமல் நாம் வெளிப்படுத்தி விடுவோம். எதைக் குறித்து நமக்கு குற்றவுணர்ச்சி இருக்கிறதோ அதைக் குறித்தும் நாம் அடிக்கடி நம்மையும் மீறி பேசிக் கொண்டிருப்போம். நம்மால் தொடர்ந்து நடிக்க முடியாது. அந்த வகையான நடிப்புகூட ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். இயல்பாக இருப்பது மிக இலகுவானது. தொடர்ந்து வலிந்து ஒருவன் தன்னை வேறொரு மனிதனாக காட்ட முனைவது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு கட்டத்தில் அவனையும் மீறி அவன் வெளிப்பட்டே தீருவான்.

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

ஒருவன் தன்னை அறிதலே ஆன்மீகத்தின் முதல்படி என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. தன்னை அறிதல் என்பது தன் இயலாமையை உணர்தலே. அந்த அறிதலால் மனிதன் இறைவனை நோக்கி செல்ல முடியுமே தவிர அதன்மூலம் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அந்த அறிதலால் அவனுடைய செயல்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. அவன் பாவம் எனத் தெரிந்து கொண்டே மீண்டும் மீண்டும் அதனைச் செய்து கொண்டுதான் இருப்பான்.

ஆம், அந்த அறிதலின் மூலம் அவன் இறைவனை நோக்கிச் செல்ல முடியும். ஒருசேர தன் இயலாமையையும் இறைவனின் பேராற்றலையும் அவன் உணர முடியும். அந்த பேராற்றலுக்கு முன்னால் முழுக்க முழுக்க சரணடைய முடியும். அந்தச் சரணடைதலே அவனுக்கான விடுதலை. அதுதான் அவன் அடையும் மகத்தான வெற்றி.

குற்றவுணர்வுகளுக்கும் நற்செயல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஆம். இரண்டுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக நான் கருதுகிறேன். குற்றவுணர்வுகள் சிலரிடம் கூர்மையாகக் காணப்படுகின்றன. சிலரிடம் மழுங்கிய நிலையில் காணப்படுகின்றன. அவை யாரிடம் கூர்மையாகக் காணப்படுகின்றனவோ அவர்கள் அவற்றைப் போக்குவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நற்செயல்களில் சமூக சேவைகளில் ஈடுபடுவது. இது ஒரு ஆரோக்கியமான வழிமுறைதான். குற்றவுணர்களிலிருந்து விடுபடுவதற்கு இது ஒன்றுதான் இலகுவான வழி. இஸ்லாமும் இதை வலியுறுத்துகிறது. “ஒரு பாவம் செய்துவிட்டால் அதைத் தொடர்ந்து ஒரு நற்செயல் செய்துவிடு. அந்த நற்செயல் அந்தப் பாவத்தைப் போக்கிவிடும்” என்கிறார்கள் நபியவர்கள். நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடுகின்றன என்று திருக்குர்ஆனும் கூறுகிறது.

மனிதன் பாவம் செய்யாமல் இருந்தால் அதுவும் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தும். அது பாவம் செய்யும் மனிதர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலையை அவனுக்குள் ஏற்படுத்திவிடலாம். அதனால்தான் என்னவோ மீண்டும் மீண்டும் அவன் பாவத்தில் விழுந்து கொண்டேயிருக்கிறான். அவன் அறிந்தும் அறியாமலும் அவனிடமிருந்து தவறுகள், பாவங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இங்கு சிக்கல் பாவம் செய்வதில் அல்ல. பாவத்தில் நிலைத்திருப்பது, செய்த பாவத்தை நியாயப்படுத்துவது இவைதாம் மிகப்பெரிய சிக்கல்கள். இந்த ஒரு தன்மைதான் ஷைத்தானை விரட்டப்பட்டவனாக ஆக்கியது. அவன், தான் செய்த பாவத்திற்கு நியாய வாதம் பேசினான். தான் செய்த பாவத்தை சரியென வாதிட்டான். இந்த ஷைத்தானிய தன்மைதான் மிக மிக ஆபத்தானது. இதுதான் மனிதனை பாவத்தில் முழ்கடித்துவிடும். தம் தவறுகளை ஒத்துக்கொள்ளும், அவற்றிலிருந்து மீண்டு வாழ விரும்பக்கூடியவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள்.

இங்கு ஒரு ஆட்சேபனை முன்வைக்கப்படுகிறது, ஒரு மனிதனின் குற்றவுணர்வுக்கு சமூகம் உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகளே காரணம் என்று. ஒரு மனிதனின் குற்றவுணர்வுக்கு சமூகம் உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகள் மட்டுமே காரணமல்ல. அவையும் ஒரு காரணமாகலாம். சமூகம் உருவாக்கிய கட்டுப்பாடுகளை துளியும் மதிக்காதவர் அவற்றால் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கட்டுப்பாடுகளை மதிப்பவர் அவற்றால் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறார் என்பதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். இங்கு கவனிக்கத்தக்கது அவற்றை மதிக்காதவரும் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் என்பதுதான்.

எல்லா மதிப்பீடுகளையும் அறவிழுமியங்களையும் தகர்க்கும் நாத்திகன்கூட அவனையும் அறியாமல் குற்றவுணர்வுக்கு ஆளாகிறான். சரி எது, தவறு எது என்பதைக் குறித்து ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இயல்பான உணர்வே அந்த குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அவற்றை யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறு நினைவூட்டல் போதும். எது உங்களின் உள்ளத்தில் உறுத்தலை ஏற்படுத்துகிறதோ அதுவே பாவம் என்றார்கள் நபியவர்கள். உள்ளத்தில் இருக்கும் ஈமான் அந்த உணர்வை கூர்தீட்டுகிறது.

ஈமானற்ற நிலையிலும் அவனுக்குள் குற்றவுணர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை முனைமழுங்கிய நிலையில் காணப்படுகின்றன. நாத்திகம் அவற்றுக்கான நியாய வாதங்களை உருவாக்கித் தருகிறது. அவற்றின் துணைகொண்டு அவன் குற்றவுணர்விலிருந்து விடுபட்டாலும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து அவனால் தப்ப முடியாது. அதனால்தான் ஒரு தீய காரியம் செய்த பிறகு சலிப்பிற்கும் வெறுமைக்கும் உள்ளாகிறான். அதனைச் செய்யாமல் இருந்திருக்கூடாதா என்ற எண்ணமும் அவனுடைய உள்ளத்தின் ஒரு ஓரத்தில் ஏற்படத்தான் செய்கிறது.

நாத்திகர்களில் சிலர் சமூக சேவைகளில் மும்முரமாக ஈடுபடுவதையும் நம்மால் காண முடிகிறது. மனிதத்தின் மீது நாங்கள் கொண்டுள்ள பற்றே எங்களை சமூக சேவைகளின் பக்கம் திருப்புகிறது என்று அவர்கள் கூறலாம். அவர்கள் கொண்டிருக்கும் குற்றவுணர்வே அவர்களில் சிலரை சமூக சேவைகளின் பக்கம் உந்தித் தள்ளுகிறது. அவற்றின் மூலம் சிலர் தங்களின் ஆன்மீக வெறுமையை போக்கவும் முயற்சிக்கிறார்கள். மனிதத்தின் மீது நாங்கள் பற்றுக் கொண்டுள்ளோம் என்று அவர்கள் கூறுவதெல்லாம் ஒருவித ஏமாற்று. அது தங்களையும் மற்றவர்களையும் ஒருசேர ஏமாற்ற அவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தை. பேரழிவுக்கும் சீரழிவுக்கும் காரணமாக அமையக்கூடிய ஒன்று நிச்சயம் மனித சமூகத்தின் மீது அக்கறையை ஏற்படுத்தாது.

மனிதர்களால் தங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. யாரிடமாவது ஏதேனும் ஒரு வடிவிலாவது அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியே தீருவார்கள். பல சமயங்களில் இரகசியங்கள் ஒப்படைக்கப்படும் மனிதனாக நான் இருந்திருக்கிறேன். பலர் தங்களின் இரகசியத்தை என்னிடம் வெளிப்படுத்தியுள்ளார்கள். பலருக்கு அந்தரங்க ஆலோசகராக நான் இருந்திருக்கிறேன். மக்கள் ஏன் தங்கனின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு. நான் மக்களிடம் அதிகம் பழகாதவனாக இருப்பதாலும் என் முகம் பழகிய முகம் போன்று இருப்பதாலும் அவர்கள் தங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

சிலர் தங்களின் இரகசியத்தை வெளிப்படுத்திய பிறகு என்னை வந்து பார்ப்பதை, என்னுடன் பழகுவதை ஒரேயடியாக நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் இரகசியங்கள் அறிந்தவன் என்ற அடிப்படையில் அவர்கள் என்னை மீண்டும் சந்திப்பதற்கு வெட்கப்பட்டிருக்கலாம் அல்லது தாம் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி என்னை சந்திக்க விடாமல் அவர்களைத் தடுத்திருக்கலாம். பல வருடங்களாக பழகிய நண்பர் திடீரென தம் உறவை இப்படி முறித்துக் கொண்டபோது என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவரை சந்தித்து நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா, அப்படி ஏதேனும் உங்களின் மனம் புண்படும்படி நடந்திருந்தால் என்னை மன்னியுங்கள் என்று கேட்டுக்கொண்டேயிருந்தேன். இமாமாக பணிபுரிந்த காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்ததுண்டு. சிலர் இதன் காரணமாக தங்களின் வெறுப்பை வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியதுண்டு. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என் மனம் இது போன்ற சம்பவங்களை எளிதாகக் கடந்துவிட பழகிவிட்டது. சரி விசயத்திற்கு வருகிறேன்.

‘கரமசோவ் சகோதரர்கள்’ என்ற புத்தகத்தில் தஸ்தயேவ்ஸ்கி இப்படியொரு சம்பவத்தை விரிவாக விவரிக்கிறார். அந்த மனநிலையின் ஒவ்வொரு துடிப்பையும் கண்முன்னால் நிகழும் காட்சிகள் போன்று படம்பிடித்துக் காட்டுகிறார். ஒரு இராணுவ வீரரின் கதாபாத்திரம்மூலம் இந்த மனநிலையை சித்தரித்துக் காட்டுகிறார். குடியும் கும்மாளமுமாக சுகபோகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு இராணுவ வீரர் திடீரென எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாகி விடுகிறார். பழிவாங்க வாய்ப்பு கிடைத்தும் தம் எதிரியை மன்னித்து விடுகிறார். அவரது இந்த மாற்றத்தால் மக்களிடத்தில் பிரபல்யமாகிவிடுகிறார். மக்கள் அவரைக் கண்ணியப்படுத்துகிறார்கள். அப்போது சமூகத்தில் நற்செயல்களில் அதிகம் ஈடுபடக்கூடியவர் என்று பெயரெடுத்த ஒருவர் அவரை சந்திக்க வருகிறார். நீண்ட காலம் அவருடன் பழகுகிறார். பழகிய பிறகு பல வருடங்களாக தாம் மறைத்து வைத்திருந்த இரகசியங்களை, தம் மனதை அரித்துக் கொண்டிருந்த குற்றவுணர்வுகளை அவரிடம் கொட்டுகிறார். அந்த குற்றவுணர்ச்சிகள்தாம் அவரை நற்செயல்களில் வேகமாக ஈடுபடத் தூண்டின. தம்முடைய இந்த மனஅவஸ்தையிலிருந்து விடுபட தாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்தத் துறவியிடம் ஆலோசனை கேட்கிறார்.

குற்றத்தை மக்களின் முன்னால் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமாறு அந்தத் துறவி அவருக்கு ஆலோசனை வழங்குகிறார். உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளிலிருந்து, உங்கள் மனஅவஸ்தையிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டுமானால் இதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார். அவரும் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறார். திடீரென அவருக்கு அந்தத் துறவியின் மீது கடுமையான வெறுப்பு தோன்றுகிறது. அவரைக் கொல்ல வேண்டும் என எண்ணுகிறார். எப்படியோ தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

அவர் மக்களின் முன்னால் தாம் முன்னர் செய்த கொலையை பகிரங்கமாக ஒப்புக் கொண்டபோது யாரும் அதனை நம்பத் தயாராக இல்லை. இப்படியொரு நல்ல மனிதன் அப்படிப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறார்கள். இறுதியில் அவர் மரணிக்கும்போது தம் மனதை அரித்துக் கொண்டிருந்த குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட்டவராக முழு திருப்தியுடன் மரணிப்பதாக தஸ்தயேவ்ஸ்கி அந்த கதாபாத்திரத்தை நிறைவு செய்கிறார்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் படித்த புத்தகம். நான் மீண்டும் மீண்டும் படிக்க விரும்பும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. என் நினைவில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். புத்தகம் என் கைவசம் இல்லை. சம்பவத்தில் சிறு சிறு தகவல் பிழைகள் இருக்கலாம். அவரது இந்த புத்தகத்தை வாசித்த பிறகுதான் என் மனதை அரித்துக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. தஸ்தயேவ்ஸ்கி மனித மனதின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆராய்ந்து பார்த்தவர். வாய்ப்பிருப்பின் அவரது ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். ஒரு குற்றம் செய்த பின் மனித மனம் உணரும் அவஸ்தைகளை துல்லியமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பார்.

Related posts

Leave a Comment