கட்டுரைகள் 

புனைவுகள் என்னும் பெருவெளி

Loading

பெரிய மனிதர்களின் சுயசரிதைகளை படிக்க வேண்டும் என்று நாம் ஆவல் கொள்வதுண்டு. இங்கு பெரிய மனிதர்கள் என்ற பிம்பம் ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தும் மாறுபடக்கூடியது. அந்த மனிதர்கள் அந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணிகள் அவர்களின் சுயசரிதைகளில் காணப்படலாம் என்ற காரணமும் நம் ஆவலுக்குப் பின்னால் இருக்கலாம். ஆனால் பல சமயங்களில் நான் ஏமாற்றமே அடைந்திருக்கிறேன். பெரிய மனிதர்கள் என்று நான் கருதியவர்களின் டைரிகளில் ஒரு வகையான தம்பட்டங்களே மிகைத்திருப்பதை கண்டிருக்கிறேன். சிலரது டைரிகளில் உபதேச மொழிகள் மிகைத்துக் காணப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதனால் தன்னை உள்ளபடியே தன் சுயசரிதையில் முன்வைக்க முடியுமா என்று தெரியவில்லை. மனிதன் தன் விசயத்தில் ஒரு வக்கீலாக நின்றே வாதாடுகிறான். அவனால் அப்படித்தான் வாதாட முடியும்போலும். தன்னைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை சிதைப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. இங்கிருந்துதான் புனைவின் மொழி அவனுக்கு அவசியமாகிறது. தன்னுடைய உண்மையான பிம்பத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களில் பொருத்தி அவன் தன் அகத்தை, தன் வாழ்வைப் பதிவு செய்கிறான். உண்மைகள் உள்ளபடியே பதிவாகிவிடும்போது அது உன்னதமான இலக்கியமாகிவிடுகிறது. புனைவுகளின் வழியே நாம் நம் முன்னால் நடமாடிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனிதர்களை வாசிக்க முடிகிறது.

எதையும் கூர்ந்து அவதானிக்கும் மனிதர்கள் மொழிவளமும் பெற்றிருப்பின் சிறந்த எழுத்தாளர்களாக மாறிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் மனித வாழ்வை உள்ளபடியே பதிவு செய்யும் மகத்தான மனிதர்கள். உண்மையில் புனைவுகள் மனித வாழ்பனுபவங்களின் மாபெரும் தொகுப்பு.

புனைவுகளை வாசிக்கத் தேவையில்லை என்று கூறுவது வடிகட்டிய அறியாமையின் வெளிப்பாடு. எதையும் வாசிக்காத மண்டூகங்கள்தாம் இப்படிப்பட்ட அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். நாங்கள் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும்தான் வாசிப்போம் என்று கூறுவதும் அவற்றைத் தவிர எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்று கூறுவதும் அவற்றைத் தவிர மற்றவற்றை வாசிப்பது நேரவிரயம் என்று கூறுவதும் மடத்தனத்தின் விளைவுதான். முதலில் இவ்வகையான ஒப்பீடே தவறானது. இந்த ஒப்பீட்டில் அறியாமை மட்டுமல்ல எங்கு தங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயமும் அயோக்கியத்தனமும் உள்ளது. எதிர்த்தரப்பினரை வாயடைக்கச் செய்யும்பொருட்டு அவர்கள் புனிதமாகக் கருதும் ஒன்றை இப்படி மட்டையடியாக முன்வைப்பது.

நானும் ஒரு காலத்தில் புனைவுகளை வாசிப்பதை பயனற்ற ஒன்றாகவே கருதிக்கொண்டிருந்தேன். இப்பொதெல்லாம் புனைவுகளையே அதிகம் விரும்புகிறேன். அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து நல்லதொரு நாவல் வாசிப்பதைவிட களிப்பானது வேறு எதுவும் இல்லை என்று தோன்றுகிறது.

புனைவுகளே உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. புனைவுகளின் வழியாக மனிதர்கள் தம் வாழ்பனுபவங்களை, உண்மைகளை மிக இயல்பாகக் கடத்துகிறார்கள். வெளிப்படுத்த முடியாத எத்தனையோ விசயங்கள் புனைவுகளின் வழியே மிக இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. புனைவுகளின் வழியே வெளிப்படும் மனிதர்கள் முகமூடிகள் இன்றி உள்ளபடியே வெளிப்படுகிறார்கள். வாழ்பனுபவங்கள் கடத்தப்படுவதற்கு நாவல்களே மிகச்சிறந்த வடிவங்கள். மனித வாழ்வை கூடுதல் குறைவின்றி உள்ளபடியே சித்தரிக்கும் மகத்தான நாவல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் அனுபவப்பொக்கிஷங்கள். அவை காலாவதியாகிவிடுவதில்லை. மனிதனின் இயல்புகளில் என்றும் மாற்றம் நிகழ்ந்துவிடுவதில்லை. புறத்தோற்றங்கள் மாறலாம். ஆனால் மனிதன் என்றும் அதேமனிதன்தான். மனித வாழ்வை வாசிப்பதற்கு நாவல்களைவிட நல்லதொரு தெரிவு வேறு எதுவும் இல்லை என்று கருதுகிறேன்.

கதைகள், நாவல்கள் வழியாக நாம் மனிதர்களையே வாசிக்கிறோம். மனிதனின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அவனுடைய புறச்சூழல்கள், அவை அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவனுடைய அகத்திலும் புறத்திலும் அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுடைய மன அவஸ்தைகள், அவனுடைய இலட்சியவாத கனவுகள், அவன் நிகழ்த்த விரும்பும் சாகசங்கள், அவனுடைய இயல்புகள் ஆகியவை கதைகள், நாவல்களின் வழியாகவே மிகக் கச்சிதமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதைகளும் நாவல்களும் வெறுமனே புனைவுகள் என்பதைத் தாண்டி அவை மனித வாழ்வை வாசிப்பதற்கான மகத்தான பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

மனித வாழ்வை வாழ்பனுபவங்களின் வழியாக அறிந்துகொள்ளுதல் ஒருவகை. ஆனால் அதற்கு நீண்ட காலம் அவசியமாகிறது. மனிதன் தன்னுடைய வாழ்பனுபவங்களை கதைகள், நாவல்கள் வழியாகவே விட்டுச் செல்கிறான். சுய சரிதையில்கூட மனிதனால் முழுமையாக தன்னை வெளிப்படுத்த முடியாது. அவனது சுயசரிதையின்மூலம்கூட அவனை முழுமையாக அறிந்துவிட முடியாது. சுயசரிதையில் அவன் தனக்கென்று வகுத்துக்கொண்ட எல்லையை அவன் தாண்டுவதேயில்லை. ஆனால் புனைவின் வழியாக இந்த தடைகள் அனைத்தையும் அவன் தாண்டிவிடுகிறான். தன்னையே கூறுபோட்டு ஆராய்சி செய்து தனது அனுபவங்களை கதைகளாக, நாவல்களாக அவன் முன்வைத்துவிடுகிறான்.

மனித வாழ்வை உள்ளபடியே முன்வைக்கும் நாவல்கள் வாழ்ந்து பார்த்த அனுபவங்களுக்கு இணையான அனுபவங்களை நமக்குத் தருகின்றன. வாழ்வு குருட்டாம் போக்கிலானது அல்ல. அது இறைவன் அமைத்த நியதிகளைச் சுற்றியே அமைகிறது. வாழ்பனுவங்கள் அந்த நியதிகளை நமக்குத் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

இங்கு நாவல்கள் என்று நான் குறிப்பிடுவது மனித இச்சைகளுக்குத் தீனி போடும் பொருட்டு எழுதப்பட்ட மட்டமான நாவல்களை அல்ல. அவற்றால் நேரக் கொலையைத் தவிர பெரிய பயன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பிரச்சார நாவல்களும் எனக்கு அலர்ஜியைத் தரக்கூடியவை. கண்டடைவுகளை, ஒரு சமூகத்தின் உண்மையான சித்திரத்தை, மனித மனதின் பரந்த வெளியை கூடுதல் குறைவின்றி உள்ளபடியே முன்வைக்கும் நாவல்களையே வாசிக்க வேண்டிய அவசியமான நாவல்கள் என்பேன்.

வணிக எழுத்துகள் மக்களின் உணர்வுகளுக்குத் தீனியிடுவதையே நோக்கமாகக் கொண்டவை. சுவாரசியமே அவற்றின் அடித்தளம். பெரும்பாலும் நான் அவற்றை என் நண்பர்களுக்குப் பரிந்துரைப்பதில்லை. பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட நாவல்களும் எனக்கு அலர்ஜியைத் தரக்கூடியவை. இப்போதெல்லாம் என்னால் வணிக எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை வாசிக்கவே முடிவதில்லை. மனம் அந்த வகையான எழுத்துகளைவிட்டு மிகவும் தூரமாகிவிட்டது. அகதரிசனங்களை, கண்டடைவுகளை முன்வைக்கும் எழுத்துகளையே நான் அதிகம் விரும்புகிறேன்.

சில நாவல்கள் என்னுள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன். அந்த நாவல்களை பார்க்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள், குர்ரத்துல் அய்னீ ஹைதர் எழுதிய அக்னீ நதி, ஓரான் பாமுக்கின் பனி, வங்காள நாவலான ஆரோக்கிய நிகேதனம் போன்றவை. இவை போன்ற நாவல்கள் வாழ்ந்து பார்ப்பதற்கு இணையான வாழ்பனுபவங்களை எனக்குத் தந்திருக்கின்றன. இலக்கியத்தில் நாவல் வடிவம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இத்தகையே நாவல்களை தேடித்தேடி வாசிக்கிறேன். சுவையான உணவுகள் நாவுக்கு அளிக்கும் இன்பத்தைப் போன்று இத்தகைய நாவல்கள் நம் ஆன்மாவுக்கு பேரின்பம் அளிக்கின்றன.

மனித வாழ்வை அதன் போக்கில் அப்படியே முன்வைக்கும் நாவல்கள் அறவுரை நூல்களைவிட அதிக அளவில் நம்முள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவை உண்மையில் மனித வாழ்வில் செயல்படும் மாறா இறைநியதிகளை முன்வைக்கின்றன. அவை தகவல்களின் திரட்டு அல்ல. அறிதல்களின் கருவூலம்.

Related posts

Leave a Comment