கட்டுரைகள் 

அறிவுரையும் சட்டமும்

Loading

சட்டங்களைக் கொண்டு மனித உள்ளத்தை ஆட்சி செய்ய முடியாது. மனிதர்கள் வெளிப்படையாக சட்டத்திற்குக் கட்டுப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவர்களின் உள்ளம் அதுகுறித்து எந்த மதிப்பையும் கொண்டிராது. மாறாக அது தம் ஆசைகளைத் தணித்துக்கொள்ள அதற்குள் இருக்கும் ஓட்டைகளைத் தேடி அலையும்.

சட்டங்கள் ஒரு சமூகத்திற்கு மிக அவசியமானவை. ஆனால் அவை மட்டுமே போதுமானவை அல்ல. மனித உள்ளத்தை ஆட்சி செய்யும் வலுவான ஒரு மார்க்கமும் சமூகத்திற்கு மிக அவசியம். மனித உள்ளத்தை ஆட்சி செய்யும் மார்க்கமும் மனிதர்களை வெளிப்படையாக ஆட்சி செய்யும் சட்டமும் ஒன்றுக்கொன்று முரண்படக்கூடியவையாக இருக்கக்கூடாது. மாறாக அவை ஒரே மூலத்திலிருந்து வெளிப்பட்டவையாகவே இருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் ஒரு தனித்தன்மையாக நாங்கள் கருதுவது, அது மேற்குறிப்பிடப்பட்ட இரண்டையும் ஒருசேரே பெற்றிருக்கிறது. அது முதலில் மனித உள்ளத்தை ஆட்சி செய்கிறது. மனிதன் முதலில் பயப்பட வேண்டியது இறைவனைத்தான், அவனுடைய கண்காணிப்பைத்தான் என்ற சிந்தனையை மனித மனதில் ஆழமாகப் பதிக்கிறது. பின்னர் அது சட்டத்தின் மூலமாக மனிதர்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதன் சட்டங்கள் யாவும் அதன் கண்ணோட்டத்திலிருந்தே வெளிப்படக்கூடியவை. வேறொரு வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமானால் அறிவுரையும் சட்டமும் என்று குறிப்பிடலாம். அறிவுரை பயனளிக்காத இடத்திலிருந்து சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்குகிறது. மனிதனின் உள்ளமும் உடலும் ஒருசேர இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறியால் நெறிப்படுத்தப்படுகிறது.

ஒரு பாவமான செயலிலிருந்து மனிதனைப் பாதுகாக்க இஸ்லாம் இரண்டு வழிமுறைகளைக் கையாளுகிறது. முதலில் அது அவனுக்கு அறிவுரை கூறுகிறது. நம்பிக்கையாளர்கள் அறிவுரையைக் கொண்டு பயனடைகிறார்கள். அந்த பாவமான காரியத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். ஒருவேளை அதில் ஈடுபட்டுவிட்டாலும் இறைவனிடம் மன்னிப்புக்கோரி அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். அதில் அவர்கள் நிலைத்திருப்பதில்லை. அதிலிருந்து விலகாமல் முன்னேறிச் செல்பவர்களை அது சட்டத்தின்மூலம் தடுக்கிறது. அவன் செய்த பாவமான காரியங்களுக்கு தக்க தண்டனையளிக்கிறது. அந்த தண்டனை அவன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகவும் மற்றவர்களுக்குப் படிப்பினையாகவும் அமைகின்றது.

அறிவுரை மட்டுமே போதுமானது என்று அது நின்றுவிடுவதில்லை. அறிவுரை அனைவருக்கும் பயனளிக்காது என்பதை அது அறியும். சமூக விரோதிகள் அனைத்தையும் தாண்டிச் செல்லவே விரும்புவர். இஸ்லாம் அவர்களை சட்டத்தின்மூலம் கட்டுப்படுத்துகிறது. அவர்களின் குற்றங்களுக்கேற்ப தண்டனைகளை வழங்குகிறது. அது அளிக்கும் தண்டனைகளின் நோக்கம் குற்றங்களைத் தடுப்பதுதானே தவிர வெறுமனே குற்றவாளிகளைத் தண்டிப்பது அல்ல. அந்த தண்டனைகளின் மூலம் குற்றவாளிகளின் உள்ளத்தில் அச்சம் உண்டாக்கப்படுகிறது. அதனால் குற்றம் செய்ய எண்ணுபவர்கள் அவ்வளவு எளிதாக குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இஸ்லாம் வழங்கும் அறிவுரைகளும் சட்டங்களும் மனித இயல்பைப் படைத்த இறைவனால் உருவாக்கப்பட்டவை. அவை மனிதனால் உருவாக்கப்பட முடியாதவை. மனித இயல்பினைக் குறித்து நன்கறிந்த இறைவனால் மட்டுமே மனிதனுக்கு உகந்த அறிவுரைகளை, சட்டங்களை வழங்க முடியும் என்று அது அறுதியிட்டுக் கூறுகிறது. மனிதன் அவற்றைப் புறக்கணித்துவிட்டு தன்னைப் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பின்பற்றினால் இழப்பும் அழிவும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை என்றும் அது எச்சரிக்கிறது.

இஸ்லாம் வழங்கும் குற்றவியல் சட்டங்களின் நோக்கம் குற்றங்களைத் தடுப்பதுதான் அன்றி மக்களைத் தண்டிப்பது அல்ல. குற்றங்களைத் தடுக்கும்பொருட்டு, சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்தும்பொருட்டு அது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. அது மனிதனின் உயிரையும் பொருளையும் மானத்தையும் பாதுகாக்கிறது. மனிதனின் உயிரும் பொருளும் மானமும் புனிதமானவை என்றும் ஒருவனை வாழ வைப்பது உலகிலுள்ள அனைவரையும் வாழவைப்பதைப் போன்றதாகும் என்றும் அநியாயமாக ஒருவனைக் கொலைசெய்வது உலகிலுள்ள அனைவரையும் கொலைசெய்வதைப் போன்றதாகும் என்றும் அது போதிக்கிறது.

கொலைசெய்யப்பட்டவரின் பொறுப்பாளருக்கு கொலையாளியைத் தண்டிக்கவும் மன்னிக்கவும் அது உரிமையளிக்கிறது. விரும்பினால் அவர் கொலையாளியைத் தண்டிக்கலாம், விரும்பினால் ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்துவிடலாம். ஆயினும் மன்னித்து விடுவதே சிறந்தது என்றும் இஸ்லாம் அவருக்கு அறிவுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளை இஸ்லாம் மதிக்கிறது. தண்டிக்கவும் மன்னிக்கவும் உரிமை பெற்றவர் அவர்தானே தவிர நீதிமன்றமோ மற்றவர்களோ அல்ல. முழு உடலையும் அரிக்க நினைக்கும் ஆபத்தான கிருமிகளைத்தான் இஸ்லாம் அழிக்கிறது. அவை விட்டுவைக்கப்பட்டால் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டே செல்லும். சமூக அமைதியைக் கெடுப்பவர்கள், சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் ஆகியவர்களுக்கு எதிராகத்தான் இஸ்லாம் தனது சாட்டையைச் சுழற்றுகிறது.

கொலைசெய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு பழிவாங்கும் உரிமையை இஸ்லாம் வழங்குகிறது. அதற்குப் பிறகுதான் மன்னிக்குமாறு ஆர்வமூட்டுகிறது. மனிதனின் இயல்பான உணர்வுகளை இஸ்லாம் பொருட்படுத்துகிறது. அவனது இயல்பை நசுக்கிவிட்டு மன்னிக்குமாறு அவனை நிர்ப்பந்திப்பதில்லை. ‘ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மறு கன்னதையும் காட்டு’ என்று அப்பாவித்தனமாக தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அது போதிப்பதில்லை.

மௌலானா வஹீதுத்தீன் கானின் அமைதி குறித்த கருத்தோடு நம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது. தற்காப்புத் தாக்குதலைக்கூட அவர் தவறென்று வாதிடுகிறார். அனைவரையும் மன்னிப்பால், அன்பால் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். அமைதி குறித்த அவரது நிலைப்பாடு மட்டும் இல்லையெனில் இன்று அவர் பெரும்பான்மை முஸ்லிம்களால் கொண்டாடப்படும் அறிஞர்களில் ஒருவராக இருந்திருப்பார். இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட காந்தியம்தான் அவரது வழிமுறை. கேட்பதற்கும் பேசுவதற்கும் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் அது மனிதனின் இயல்பான உணர்வுகளை நசுக்க முற்படும் ஆபத்தான முயற்சி.

இஸ்லாம் சொல்லக்கூடிய போதனைகள் மனித இயல்புக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு மனிதன் முன்முடிவுகளின்றி, அரசியல் நிலைப்பாடுகளின்றி திறந்த மனதோடு அவற்றை உள்ளபடியே அணுகினால் அவை அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் அப்படியே கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக இருப்பதை உணர முடியும். இது இஸ்லாம் இறைமார்க்கம் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாடுகளோடு விவகாரங்களை அணுகுபவர்களால் சத்தியத்தைக் கண்டடைய முடியாது. சத்தியம் முன்முடிவுகளுக்கு அரசியல் நிலைப்பாடுகளுக்கு கட்டுப்பட்டதல்ல. நாத்திகர்கள் அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களால் சத்தியத்தை கண்டடைய முடியாததற்கான காரணம், அவர்கள் கொண்டிருக்கும் முன்முடிவுதான். நாத்திகம் அவர்கள் கண்டடைந்த சத்தியம் அல்ல. அது அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டுக்கு எதிரான ஒவ்வொன்றையும் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிடுவார்கள். அப்படி கடந்துவிட முடியாதவர்கள் ஒரு கட்டத்தில் நாத்திகத்தை கைவிட்டுவிடுகிறார்கள். நாத்திகம் ஒரு அரசியல் நிலைப்பாடாகத்தான் முன்வைக்கப்பட்டது. அதனால் கண்டடைந்த சத்தியத்திற்கு அருகில் நிற்கக்கூட முடியாது.

மனிதர்களைக் கொண்டு நாம் சத்தியத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. சத்தியத்தைக் கொண்டே மனிதர்கள் அணுகப்பட வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ஒரு மனிதன் மீது நம்பிக்கைகொண்டு அவன் கூறுவதை எல்லாம் நாம் நம்பத்தொடங்கினால் அவன் மீது நம்பிக்கையிழக்கும்போது அவன் கூறிய அனைத்தையும் சந்தேகிக்கத் தொடங்கிவிடுவோம். சத்தியம் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவு சிக்கலானது அல்ல. அது எளிமையானதுதான். அதன் பக்கம் நமக்கு இருக்கும் ஆர்வமே இங்கு முக்கியமானது. ஆர்வம் அனைத்தையும் இலகுவாக்கிவிடும். ஆர்வமின்மை இலகுவானதைக்கூட கடினமானதாகக் காட்டும். நாம் கண்டடையும் சத்தியமே நம்முள் நிலைத்திருக்கும். மற்றவை மிக எளிதாக தகர்க்கப்பட்டுவிடும்.

Related posts

Leave a Comment