குறும்பதிவுகள் 

விமர்சனமும் பாராட்டும் சாதாரணமான விசயங்களா?

Loading

பாராட்டுவதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். அற்பர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள். சிறப்புகள் அனைத்தும் தங்களுக்கு மட்டுமே உரியது என்ற சுயநலமும் கஞ்சத்தனமும் அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் மற்றவர்களின் குறைகள் மட்டுமே. மலையளவு நிறைகளுக்கு மத்தியில் மயிரளவு குறைகள்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும்.

பலர் பாராட்டுதலுக்கும் துதிபாடுதலுக்கும் மத்தியில் காணப்படும் வேறுபாட்டை அறிவதில்லை. பாராட்டுதலும் துதிபாடுதலும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டுதல் ஒரு மனிதனை ஊக்கப்படுத்தும். பல சமயங்களில் அது அவனுக்கு அவசியமானதும்கூட. அது வலிகளை மறக்கச் செய்வதற்கு தற்காலிகமாக வழங்கப்படும் ஒரு மருந்தும்கூட.

அற்பர்கள் தாங்கள் செய்யாத செயலுக்காக பாராட்டப்பட வேண்டும் என்று அல்லது தாங்கள் செய்த சிறிய செயலுக்காக பெரிய அளவில் பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள்தாம் முகஸ்துதிக்காக செயல்படக்கூடியவர்கள். இவர்களின் செயல்களுக்குப் பின்னால் இறைதிருப்தியோ அன்போ கருணையோ இரக்கமோ எதுவும் இருக்காது. இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை பாராட்ட மாட்டார்கள். அப்படி ஒருவேளை பாராட்டினாலும் ‘உன் முதுகை நான் சொறிந்தால் என் முதுகை நீ சொறிய வேண்டும்’ என்ற ஒப்பந்த அடிப்படையில்தான்.

விமர்சனம் செய்வதும் பாராட்டுவதும் சாதாரணமான விசயங்கள் அல்ல. விமர்சனம் ஒரு மனிதனின் தவறுகளை அடையாளம் காட்டுகிறது. அவனைப் பண்படுத்துகிறது. அதன் மூலம் அவன் செம்மையாக்கப்படுகிறான். பாராட்டு அவனை ஊக்கப்படுத்துகிறது. அவனது பாதையில் கிடக்கும் தடைகளைத் தாண்டும் உத்வேகத்தை அவனுக்கு அளிக்கிறது.

செல்வந்தர்களை, அதிகாரமுள்ளவர்களைச் சுற்றி எப்போதும் முஹஸ்துதி பாடக்கூடிய ஒரு கூட்டம் உருவாகிவிடுகிறது. அவர்கள் அண்டிப் பிழைக்கும் வகையினராக இருக்கலாம் அல்லது ஆதாயத்திற்காக எதையும் செய்யத் துணியும் நயவஞ்சர்களாக இருக்கலாம். அவர்களும் தங்களின் துதிபாடிகளை விரும்பவே செய்கிறார்கள். ஒரு மனிதன் செல்வத்தையோ அதிகாரத்தையோ பெற்றுவிட்டால் கூடுதலாக அவனுக்கு முஹஸ்துதி பாடும் அல்லக்கைகளும் தேவைப்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பொய்களை அவர்கள் உளமாற உண்மையென்றும் அத்தனை புகழ்மொழிகளுக்கும் தாங்கள் தகுதியானவர்கள் என்றும் தங்களைக் கொண்டே எல்லாம் நிகழ்கின்றது என்றும் அவர்கள் நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முஹஸ்துதியை அது வெறும் முஹஸ்துதிதான் என்று தெரிந்தும் அதனை விரும்பக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதுபோல தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளவும் விரும்புகிறார்கள். செய்யாத ஒன்றுக்காக தாம் புகழப்பட வேண்டும் என்றும் சிறிய செயலுக்காக பெரிய அளவில் புகழப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இன்னொரு வகையினர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்பவர்கள். இவர்களை ஒருவருக்கொருவர் முதுகுசொறிந்துகொள்பவர்கள் என்றும் கூறலாம். இதுவும் ஒரு வகையான வியாபாரம்தான். நீ என்னைப் புகழ்ந்தால் நான் உன்னைப் புகழ்வேன் என்ற ஒப்பந்தம் அது. பாராட்டுக்கு, புகழ்மொழிக்கு மயங்காத மனிதர்கள் மிகவும் குறைவு. அல்லக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்கள் அல்லது அல்லக்கைகள் கிடைக்கப் பெறாதவர்கள் இப்படி ஒருவர் மற்றவரின் அல்லக்கையாக மாறி தங்களின் தேவைவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

உண்மையில் பாராட்டும் புகழ்மொழிகளும் மனிதனை ஊக்கப்படுத்துபவைதாம். ஆனால் அவை விலைகொடுத்து வாங்கப்பட வேண்டியவையோ பண்டமாற்றாக செய்யப்படும் வியாபாரமோ அல்ல. இயல்பாக கிடைக்கப்பெற வேண்டிய ஒன்று. திறமையைக் கண்டும் பாராட்ட மறுப்பவர்கள் கஞ்சர்கள், பொறாமைக்காரர்கள். பாராட்டப்படும் திறமை இன்னும் மெருகேறுகிறது. கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்படும் திறமை தொய்வடைகிறது. ஆனால் அவை ஓர் அளவுக்கு மீறினால் மனிதனைக் கர்வத்தில் ஆழ்த்திவிடும். அவனை ஆபத்தான பகுதிக்கு இட்டுச் சென்றுவிடும்.

Related posts

Leave a Comment