கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா? – திருமுருகன் காந்தி

Loading

(மே 17 நிறுவனர் திருமுருகன் காந்தி Red Pixக்கு அளித்த பேட்டியிலிருந்து…)

தேசிய அளவில் பயங்கரவாத நடவடிக்கைகளை விசாரிப்பதற்கு ஒரு நிறுவனம் வேண்டும் என்கிற அடிப்படையில் 2008 குண்டுவெடிப்பையொட்டி, தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு இருந்தது. மாநில சுயாட்சியை மறுக்கும் நிறுவனமாக அது பார்க்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த என்ஐஏ நிறுவனமானது இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து வழக்குப் பதிவு செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

அதேசமயம், பயங்கரவாதச் செயல்கள் புரிந்த இந்துத்துவ அமைப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றிருக்கிறது. ஆக, ஒருபக்கம் ஆர்எஸ்எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தோர் பயங்கரவாதத்தில் ஈடுபடும்போது அவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது. இன்னொரு பக்கம், அப்பாவி இஸ்லாமியர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்ட, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த, கர்னல் பிரோஹித் மீதான குற்றச்சாட்டை பாஜக நீக்கியிருக்கிறது. அசிமானந்தாவை விடுதலை அவர்கள் செய்துள்ளார்கள். இப்போது போபாலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி; அவருக்குப் பிணை கொடுத்துள்ளார்கள். இப்படியான இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு என்ஐஏ பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது மறுபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

இதையே உவைசி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்கள் மீதே வழக்குகள் பாய்கின்றன; இந்த நிறுவனம் முழுக்கமுழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்றார் அவர். அதற்குப் பதிலளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் சசி குமார் மற்றும் இராமலிங்கம் கொலை வழக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். கொல்லப்பட்ட இருவரும் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள். குற்றப் பிரிவு காவல்துறையால் விசாரிக்க வேண்டிய இவர்களுடைய கொலை விவகாரங்களை என்ஐஏ விசாரிக்கும் அளவுக்கு மாற்றுகிறார்கள். இந்து – முஸ்லிம் பிரச்னை இருக்கக்கூடிய இடத்தில், கொலை செய்யப்பட்டவர் இந்துத்துவ அமைப்பினர் என்றால் உடனே என்ஐஏவை உள்ளே கொண்டு வருகிறார்கள். அதற்கு தேசியத்தின் மீதான தாக்குதல் எனும் அளவுக்கு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதுவே கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட கட்சிகள் முதலான வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு நடந்தால் என்ஐஏ வராது. இந்துத்துவ அமைப்பினருக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அது அவர்களின் சொந்தப் பிரச்னையாக இருந்தாலும், ஏதாவது அவர்களுக்கு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு உடனே என்ஐஏவைப் பயன்படுத்தும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மோசமான ஒன்றைத்தான் இப்போது மேலும் விரிவுபடுத்தி மாநில அரசாங்கங்களின் உரிமைகளையெல்லாம் மறுக்கின்ற வகையிலே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மாநில உரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, எளிதில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியத்தை அதிகமாக்கி இருக்கிறார்கள். இந்த என்ஐஏ மசோதாவைத் தனித்துப் பார்க்க முடியாது. ஏனெனில் அது விசாரணை செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமைகள் பற்றிப் பேசுகிறது. இதனோடு தொடர்புடைய சட்டமாக, ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ (UAPA) திருத்த மசோதா கொண்டுவரப் போகிறார்கள். அதுவும் நடைமுறைக்கு வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

ஏனென்றால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சாதாரண குற்றச் செயல் வழக்குகள் UAPAவுக்கு மாற்றப்பாட்டால், உடனே என்ஐஏவைக் கொண்டு வந்து விசாரிக்க வைத்துவிடுவார்கள். இது தவிர, சிறப்பு நீதிமன்றங்கள் என்ஐஏவுக்குக் கொண்டுவரப்படுகிறது. இப்படியான வேலைகளை இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது, சிறுபான்மையினருக்கு எதிரானது. மேலும், இங்கு இருக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும், எழுத்தாளர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் எதிராகத்தான் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதனால்தான் நாம் என்ஐஏவை எதிர்க்கிறோம். இது குறித்த முதல் கவன ஈர்ப்பாக, இப்படியொரு மசோதா வருகிறது என்றும் இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் திமுகவிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். இப்போது அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருகிறது.

இந்த என்ஐஏ சட்டத் திருத்த மசோதா ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் எதிரிகளையும் சிறுபான்மையினரையும் வேட்டையாடுவதற்காகத்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின், நாட்டின் நலன் சார்ந்து இல்லை. இதை விவாதத்துக்கு உட்படுத்தி இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்லக்கூடிய அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது. உவைசி மிக முக்கியமான கேள்வியை இது குறித்து எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கியது திமுகதான். அவர்களுக்கு இவரை விட ஒரு பங்கு அதிகமாகவே பொறுப்பிருக்கிறது. அவர்கள் சிறுபான்மை உரிமைகள் மட்டுமின்றி மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் சார்ந்து பேசுகின்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிற கட்சியினர். அப்படியானால் அவர்கள் என்ஐஏ விவகாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து, இந்தியாவில் இருக்கின்ற பிற கட்சிகளை இணைத்து, இதற்கெதிரான வாக்குகளைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

இவர்களுடைய இந்த அணுகுமுறையை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், திமுகவினரும் ஆளும் கட்சியாக இருந்தவர்கள்; இந்த சட்டத்தைக் கொண்டு வந்து மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள். என்ஐஏ மசோதா பொறுத்தவரையில், திமுகவுக்குள் என்ன மாதிரியான விவாதம் போய்க் கொண்டிருக்கிறது என்பது இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது. பாஜகவின் கருத்து என்னவோ அதையே இவர்களும் வெளியிட்டுள்ளார்கள். அப்படியானால் இது எப்படி பாஜகவுக்கு எதிர்ப்பணியாக இருக்கும்? இந்த முக்கியமான கேள்வியைத்தான் நாம் எழுப்பவேண்டும்.

பாஜகவுக்கு எதிராக நிற்கிறோம் எனச் சொல்லித்தான் தேர்தலில் நின்றீர்கள், ஓட்டு வாங்கினீர்கள், பாஜக வந்துவிடும் என்றீர்கள். அதன் கொள்கைகளை என்ன விதத்தில் எதிர்க்கிறீர்கள்? அதனுடைய முக்கியமான நிலைப்பாடுகளுள் ஒன்று இந்த பாதுகாப்புச் சட்டங்களையும் பாதுகாப்பு நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்துவது என்பது. அது குறித்த உங்கள் கொள்கை நிலைப்பாடு என்ன? அதை ஏன் வலுவாக எதிர்க்கவில்லை. இது அப்பட்டமாக வெளிப்படுத்துவது என்னவெனில் இவர்களும் ஆளும் வர்க்க நலனுக்கானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். பாஜக மட்டுமின்றி இவர்களும் ஆளும் வர்க்கப் பாதுகாவலர்களாக இருப்பதால், மக்கள் நலன் சார்ந்து இவர்கள் நிலைப்பாடு எடுக்கவில்லை. இவர்களுடைய கொள்கை நிலைப்பாடு பாஜகவுக்கு எவ்விதத்தில் வேறுபட்டதாக இருக்கிறது என்பதை இவர்கள் நிரூபிக்கவில்லை.

இந்த விவகாரம் மட்டுமல்ல, கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை RTI தொடர்பான மசோதா ஒன்று வந்தது. அதற்கும் இதே நிலைதான். அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். எதிர்த்து வாக்களிப்பது தானே முக்கியமானது. எதிர்ப்பைப் பதிவு செய்வது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா? அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள். அதற்கான விளக்கத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. பாஜகவுக்கு எதிர்க் கொள்கை கொண்டவராக திமுக தன்னை நிறுத்தியது அல்லவா? அப்படியானால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்!

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை (RTI) நீர்த்துப் போகச் செய்யும் விதமாக, அதை மத்திய அரசு தன் முழு கட்டுப்பாட்டில் எடுத்திருகிறது. யார் RTIயினுடைய தலைமை தகவல் ஆணையராக வரவேண்டும், தகவல் ஆணையராக யார் வரவேண்டும், மாநில அளவில் யார் நியமிக்கப்பட வேண்டும், சம்பளம் அவர்களுக்கு எவவளவு வழங்கவேண்டும் என்பதையெல்லாம் மத்திய அரசே முடிவு செய்யும் என்பதாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை எப்படி புறக்கணித்துவிட்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் திமுகவால் வெளியேற முடியும்? அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? மாநில அரசின் உரிமையும் போகிறது; RTI சட்டத்தின் மொத்த பலமும் போகிறது. அதை அழிக்கும், கொலை செய்யும் ஒரு முயற்சியாகவே இதனை சில அறிஞர்கள்கூட குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அப்படியானால் என்ன விவாதங்கள் திமுகவுக்குள் போய்க்கொண்டிருக்கின்றன? என்ன வகையில் ஜனநாயகமாக இருக்கிறார்கள் இவர்கள்? பாஜக முன்வைக்கும் மசோதாக்களைப் புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறுவீர்கள் என்றால், கடந்த ஆட்சியில் அதிமுகவும் இதே மாதிரிதான் நடந்துகொண்டது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா, இல்லை? எதற்கு பாராளுமன்றம் போயிருக்கிறீர்கள்? தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் கோரிக்கையையும் முன்னிறுத்தத்தானே அங்கே போயிருக்கிறீர்கள். மசோதாக்களை எதிர்த்து பாராளுமன்றத்தில் பேசுவோம், ஆனால் எதிர்த்து வாக்களிக்க மாட்டோம் எனச் சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கடந்த காலத்தில் வேண்டுமானால் இப்படியான நிலைப்பாடு சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது மக்கள் கவனிக்கிறார்கள். நாங்களும் கவனிக்கிறோம். தொடர்ச்சியாக மக்களை முட்டாள்களாகப் பார்த்துவிடாதீர்கள். ஒரு மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பது என்பது ஆவணபூர்வமாக அதைப் பதிவு செய்வதாகும். ஆனால், அந்தப் பதிவை திமுக செய்யவில்லை. எனவே, பாஜகவுக்கு அது முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வரலாற்றில் பதிவாகும். அடுத்து UAPA மசோதா வரப்போகிறது. என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?

Related posts

Leave a Comment