குறும்பதிவுகள் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் கண்டிக்கத்தக்கப் பேச்சு!

Loading

தலித்களுக்கு எதற்காக ஒரு அரசியல் கட்சி? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் பாமக போன்ற சாதியக் கட்சிகளே பலனடைகின்றன. எனவே அது ஒரு ‘மைய நீரோட்ட’ கட்சியின் தலைமையை ஏற்று அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நிலவுகிற அரசியல் சூழலில் இப்படியெல்லாம் ஒடுக்கப்படும் தரப்பிடம் ஒருவர் அபத்தமாக அட்வைஸ் செய்தால் அவற்றை நாம் ஏற்போமா?

நேற்று ஒரு நேர்காணலில் விசிக-வின் மாநிலப் பொருளாளர் யூசுஃப் முஸ்லிம்களுக்கு இப்படியான அட்வைஸ் கணைகளைத் தொடுத்திருக்கிறார். முஸ்லிம்கள் கட்சி வைத்திருப்பதே ‘தவறாம்’. காயிதே மில்லத் காலத்தோடு அதற்கான தேவை முடிந்துபோய்விட்டதாம். முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களுடன் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதே கூடாதாம். “உவைசி இருப்பது பாஜக-வுக்கு பெரிய சப்போர்ட். அவர் அப்படித்தான் இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார்.

சொல்லப்போனால் இவரைப் போல முஸ்லிம்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஆட்களே அவர்களின் பெருவிருப்பத்துக்கு உரியவர்கள். பொதுபுத்தியை, ஆதிக்கக் கருத்தியலை, மைய நீரோட்டம் எனும் கருத்தமைவை கேள்விக்குள்ளாக்கித்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழ முடியுமே தவிர இவற்றுக்குப் பணிந்துபோய் அல்ல என்பதை யூசுஃப் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

விஷய ஞானமில்லாமல் தத்துபித்து எனப் பேசும் இவரையெல்லாம் எதற்காக வேலை மெனக்கெட்டு பேட்டி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. விசிக-வின் பொருளாளராக இருந்துகொண்டு இவர் இப்படி அசட்டுத்தனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

Related posts

Leave a Comment