குறும்பதிவுகள் 

காவல்துறை ரவுடிசம் செய்தால் பரவாயில்லையா?

Loading

போலீஸாரிடம் சிக்குகின்ற குற்றவாளிகளின் கைகளில் மாவுக் கட்டுப் போட்டிருப்பது மாதிரியான புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. சற்றுமுன் முகநூலில் பார்த்த ஒரு புகைப்படத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் இப்படி கையில் கட்டுடன் அமர்ந்திருக்கின்றனர். அந்தப் பதிவில் இவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளதாகப் பகடி செய்யும் ஒரு குறிப்பும் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, குற்றம் புரிந்ததற்காக போலீஸ்காரர்கள் அவர்களின் கைகளை உடைத்து கட்டுப்போட வைத்திருப்பதை பகடி செய்து கொண்டாடும் தொனியில் அந்த இடுகை அமைந்திருக்கிறது. அந்தப் பதிவுக்கு ஏராளமானோர் விருப்பக்குறி தெரிவித்து ஷேர் செய்திருக்கிறார்கள்.

அந்த இளைஞர்களின் கைகளை உடைத்தது சரியா என்று நாம் கேள்வி எழுப்பினால், “ரவுடிசம் செய்ததற்காக போலீஸ்காரன் கையை உடைத்திருக்கிறான், இதிலென்ன தவறைக் கண்டீர்கள்?” என்கிற ரீதியில் பதில் வருகிறது. “நீதிமன்றம் போய் தண்டனை பெறுவதெல்லாம் ஒத்துவராது. போலீஸே தண்டித்ததுதான் சரி” என்று பலரும் கருதுகின்றனர்.

சட்டத்துக்குப் புறம்பாக காவல்துறை செயல்படுவதற்கு இப்படி நியாயம் கற்பிக்கத் தொடங்கினால், என்கவுண்டர் கொலைகள், Custodial death என அவர்கள் செய்யும் அத்தனை மனித உரிமை மீறல்களையும் சரியென்றே சொல்ல வேண்டியிருக்கும். அது இந்த சமூகத்தில் ரவுடிசத்தை விட பெரும் அழிவை உண்டாக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சென்ற ஆண்டு இதே ஜூலை மாதம் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. உங்களுள் சிலருக்கும் இச்சம்பவம் ஞாபகமிருக்கலாம். எனக்குத் தெரிந்த ஹாரூன் எனும் இளைஞன் பைக்கில் சென்றபோது காவல்துறையினர் அவரை மடக்கி ஆவணங்களைக் கேட்டிருக்கின்றனர். அவரிடம் ஆவணங்கள் சரியாக இருந்தபோதும் லஞ்சம் பெறுவதற்காக RC புக் ஒரிஜினல் வேண்டும் என வம்பிழுத்து அவர் கையை உடைத்துவிட்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாரூனை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது காவல்துறை.

பிறகு, ஊடகங்களில் இது பெரியளவில் பேசப்பட்டதும், கண்துடைப்புக்காக அவரை சஸ்பண்ட் செய்தார்கள். அவ்வளவுதான். அவரை வேறொன்றும் செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்னையை நீதிமன்றம் எடுத்துச் சென்றிருந்தாலும் ஒரு பிரயோஜனமும் இருந்திருக்காது என்பது உறுதி. போலீஸ்க்காரர்களின் பவர் அப்படி. உண்மையில் நாம் இப்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மட்டுப்படுத்தப்படவே குரல் கொடுக்க வேண்டும்.

நான் மேலே சொன்னது மிகச் சிறு உதாரணம்தான். இதைவிட பன்மடங்கு கோர முகம் காவல்துறைக்கு உண்டு. தூத்துக்குடியையும் மெரினா போராட்டத்தையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே? அப்பாவித்தனமாக காவல்துறையின் வரம்புமீறலை நியாயப்படுத்தாதீர்கள். நீதிமன்றம், சட்டம் எல்லோருக்குமானது. இதில் காவல்துறைக்கு விதிவிலக்கு கிடையாது. குடிமக்கள் மட்டுமல்ல போலீஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் அது ரவுடிசம்தான்.

Related posts

Leave a Comment