குறும்பதிவுகள் 

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

விசாலமான வாசிப்பு ஒரு மனிதனை கடும்போக்குவாதத்திலிருந்தும் குறுகிய சிந்தனையிலிருந்தும் விடுவிக்கலாம். அறியாமையும் அறைகுறையான, மேம்போக்கான அறிதலும் கடும்போக்குவாத்தின் பக்கம் மனிதர்களை இட்டுச்செல்லக்கூடியவை.

பொதுவாக கடும்போக்குவாதிகள் தங்களின் வட்டத்தைத் தாண்டி எதுவும் வாசிப்பதில்லை அல்லது எதுவும் வாசிப்பதே இல்லை. அதிகபட்சம் தங்கள் இயக்கத்தை, சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களின் உரைகளைக் கேட்பதோடு அவர்கள் நிறுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களின் புத்தகங்களை வாசிப்பதை தங்களுக்கு அவசியமற்ற ஒன்றாகக் கருதுகிறார்கள் அல்லது அவற்றால் தாங்கள் வழிதவறிவிடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

எந்தவொன்றும் அதன் எதிர்மறையைக் கொண்டே நன்கு அறியப்படுகிறது. ஜாஹிலிய்யாவைப் பற்றி அதிகம் அறிந்தவர் இஸ்லாத்தின் சிறப்பையும் அது மனித வாழ்வுக்கு எந்த அளவு அவசியம் என்பதையும் அறிந்து கொள்வார். கசப்பின் கடுமையை உணர்ந்தவரால்தான் இனிப்பின் இனிமையில் லயிக்க முடியும் என்கிறார் செய்யித் குதுப்.

நம்முடைய ஈமான் எந்தவொன்றாலும் அசைக்க முடியாத உறுதியான அடித்தளத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். ஈமான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. ஆன்மிகத்திற்கும் அறிவுக்கும் தொடர்பே இல்லை, அறிவுக் கண்களை மூடிக்கொண்டு சொல்லப்படுவதை அப்படியே நம்புங்கள் என்று இஸ்லாம் கூறவும் இல்லை. திருக்குர்ஆனில் “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”, “புரிந்துகொள்ள மாட்டீர்களா?” போன்ற வாசகங்கள் இருநூறுக்கு மேற்பட்ட வசனங்களில் இடம்பெற்றுள்ளன என்கிறார் யூசுஃப் அல்கர்ளாவீ.

வஹீயைப் போன்று அறிவும் மனிதனுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குதான். இரண்டும் இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடைகள்தாம். ஒன்று மற்றொன்றை மறுக்காது. ஒன்று மற்றொன்றுடன் முரண்படாது. ஆனால் அறிவு எல்லைக்குட்பட்டது. வஹிக்கு எந்த எல்லையும் இல்லை. அறிவால் புரிந்துகொள்ள முடியாததை வஹியின் மூலமாக அறிந்துகொள்கிறோம்.

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.

Related posts

Leave a Comment