குறும்பதிவுகள் 

சமநிலையின் சூட்சுமம்

ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அதற்கென இலகுபடுத்தப்பட்ட பணிகளை அது செய்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப வெவ்வேறு திறமைகளை பெற்றிருக்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும்விதமாக அவன் மனிதர்களின் வாழ்க்கையை அமைத்துள்ளான். அவர்களுக்கான பாதைகளையும் இலகுபடுத்தியுள்ளான். யாருக்கு எந்தப் பணி இலகுபடுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பணியை அவரால் மட்டுமே மனமொன்றி மிகச் சிறப்பாக செய்ய முடியும்.

இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த சமநிலையைப் புரிந்துகொள்வதற்கு நுணுக்கமான அறிவெல்லாம் தேவையில்லை. தம்மைச் சுற்றிக் காணப்படுபவற்றை ஒருவன் சற்று கவனத்தோடு பார்த்தாலே அவனால் இந்த சமநிலையை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மைகளுள் அதன் போதனைகளில், சட்டங்களில் காணப்படும் சமநிலையும் ஒன்றாகும். அவை மனித வாழ்வில் சமநிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றை தம் வாழ்க்கையில் செயல்படுத்தும் மனிதன் சமநிலையான மனிதனாய் மிளிர்கிறான். எந்தவொன்றாலும் அவன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவதில்லை. ஒருபுறமாக அவன் சாய்ந்து விடுவதும் இல்லை. அவன் எல்லாவற்றையும் துறந்த துறவியாகவோ இச்சைகளால் வழிநடத்தப்படும் கொடிய விலங்காகவோ ஆகிவிடுவதில்லை.

இந்த உலகில் காணப்படும் சமநிலையும் இஸ்லாத்தில் காணப்படும் சமநிலையும் படைத்த இறைவனால் அன்றி வேறு யாராலும் ஏற்படுத்த முடியாதவை. மனிதனின் இயலாமைகளில் இதுவும் ஒன்று. அவனால் இப்படிப்பட்ட ஒரு சமநிலையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

Related posts

Leave a Comment