கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்!

சமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் சமஸ்கிருதத்தை வளர்க்க அளவில்லாத நேரம், சக்தி, பணம் ஆகியவற்றை மத்திய அரசு செலவிட்டது. அம்மொழி யாருடைய தாய்மொழியும் இல்லை என்பதாலும், இந்தியாவின் பழமையான மொழி அதுவே என்பதாலும் அதனையே இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் முழங்கினார்கள். ஹீப்ரு மொழியை இஸ்ரேலின் தேசிய மொழியாக, மக்கள் பயன்பாட்டு மொழியாக மறுஉருவாக்கம் செய்த பொழுது, அதுவரை யூதர்கள் முன்னொரு காலத்தில் பேசிக்கொண்டிருந்த மொழி மக்களின் பயன்பாட்டுக்குள் பரவலான இடத்தைப் பெற்றது. இதைப் போல சமஸ்கிருதத்தை மாற்ற முயன்றதை ராபர்ட் அல்டர் ஒப்பிட்டுப் பார்க்கிறார். இதன் ஆதரவாளர்கள் ‘சமஸ்கிருதமே இந்தியா’ என்று உறுதியாக நம்புகிறவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று பலரும் கூறிக்கொண்டு இருக்கும் சூழலில், இந்தியாவின் குழப்பம் மிகுந்த வேற்றுமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த ஒற்றுமையைச் சமஸ்கிருதமே சாதிக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

பல்கலைக்கழகக் கல்வி கமிஷன், பள்ளிக்கால உயர்கல்வி கமிஷன், அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ஆகியவை வடமொழிக் கல்வி இந்தியக் குடிமகன்களுக்கு அவசியம் என்று நம்பிக்கை தெரிவித்தன. பல்வேறு கருத்துகள், அற எடுத்துக்காட்டுகள், இலக்கிய வளங்கள், அறிவு, ஞானத்தின் கருவூலமான அம்மொழி அழிந்து கொண்டிருக்கையில் அதனை அரசு காக்காவிட்டால் அம்மொழி அழிந்துவிடும் என்று இக்கமிஷன்கள் கவலை தெரிவித்தன. அக்டோபர் 1956ல் மாநில மறுவரைவுக் குழுவை அமைத்த மத்திய அரசு சமஸ்கிருதத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய சுனிதி குமார் சாட்டர்ஜி எனும் வடமொழி அறிஞர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இவருடன் சென்னைப் பல்கலையின் வி.ராகவன், பூனா பல்கலையின் ஆர்.கே.தாண்டேகர், ஜாதவ்பூர் பல்கலையின் எஸ்.கே.டே உட்பட ஏழு சமஸ்கிருத அறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

சுனிதி குமார் சாட்டர்ஜி இந்திய மொழிகளின் மொழியியல் வரலாற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர். நாற்பத்தி மூன்றில் அவர் இந்துஸ்தானியே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி உடையது என்றும், இந்துக்கள் மட்டும் இருந்தால் மூவாயிரம் வருடமாக இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள வடமொழியை தேசிய மொழியாக ஆக்கலாம் எனக் கருதினார். அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் 56ல் அறிக்கை சமர்ப்பித்த பொழுது அதன் உறுப்பினராக இருந்த சாட்டர்ஜி ‘இந்தி ஏகாதிபத்தியத்தை’ எதிர்த்தார். வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றும் மத்திய அரசின் மொழிகளாக வேண்டும் என அவர் கோரினார். வி.ராகவனோ எப்பொழுதும் வடமொழியே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் எனவும், அப்படி இந்தி தேசிய மொழியானால் அது சமஸ்கிருதமயமான வடமொழியாகவே இருக்க வேண்டும் எனக் கருதினார்.

சாட்டர்ஜி தலைமை தாங்கிய கமிஷன் சமஸ்கிருதத்தை உச்சக்கட்ட ஒற்றுமை சக்தி, அளவில்லாமல் இணைக்கும் ஆற்றல், நம்முடைய இரத்தத்தில் கலந்த மொழி, அது மூச்சோடு மூச்சாகக் கலந்துவிட்டது, இந்தியாவின் இருப்புக்கான ‘அடிப்படையே’ வடமொழியே என்று வாதிட்டது. ஒரு கலாசாரம், ஒரு மொழியின் அங்கம் என்கிற எண்ணத்தை வடமொழியை விலக்கினால் இந்தியர்கள் இழந்துவிடுவார்கள் என்று அது அஞ்சியது.

வடமொழியை இந்தியாவின் தேசிய மொழியாக, இணைப்பு மொழியாகக் கருதும் போக்கு ‘இந்து மத மறுமலர்ச்சி’யாளர்களிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தென்பட ஆரம்பித்தது. இந்திய மொழிகளின் அனைத்துக்கும் அதுவே தாய் என்றும், ஒட்டுமொத்த வலிமை, அழகின் கருவூலம் என்றும் அது தவறாகப் போற்றப்பட்டது. சார்லஸ் வில்கின்ஸ், மோனியர் வில்லியம்ஸ் முதலிய ஆங்கிலேய நிர்வாகிகள் மற்ற இந்திய மொழியைக் கற்க முடியாத குறையை வடமொழியைக் கற்றுப் போக்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

தயானந்தர், விவேகானந்தர், அரவிந்த கோஷ் ஆகியோர் வடமொழியைக் கற்றே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, தாங்களும் அதைக் கற்றுத் தேர்ந்தார்கள். நேரு, காந்தி வடமொழிக்குப் பதிலாக இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க விரும்பினாலும், காந்திக்கு வடமொழியின் மீது பற்று இருக்கவே செய்தது. பகவத் கீதையைச் சமஸ்கிருதத்தில்தான் ஒருவர் படிப்பது உகந்தது என்றார். நேருவோ “இந்தியாவின் சிறந்த கலாசாரம், புதையலை உள்ளடக்கியது எது எனக் கேட்டால் வடமொழியே என யோசிக்காமல் சொல்வேன்” என்றார்.

தயானந்தர் ஆரிய சமாஜத்தை உருவாக்கி, வடமொழியைக் கற்பதை பரவலாக்க முயன்றார். பின்னர் இந்து மதத்துக்குப் பிற மதத்தவரை மதமாற்றுவதில் ஈடுபட்டதால் இந்தியை முன்னிறுத்தினார். எனினும், ஆரிய சமாஜம் உருது/அரபி/இஸ்லாமிய எதிர்ப்பின் அடையாளமாகத் தன்னுடைய கல்வித் திட்டத்தில் வடமொழியைக் கட்டாயம் சேர்த்தது. ‘தேசிய மதத்தின்’ முதன்மைக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தியாசிபிகல் அமைப்பின் ஆல்காட் ‘தேசிய வடமொழி இயக்கம்’ ஒன்றை நடத்தக்கூடத் திட்டமிட்டார்.

விவேகானந்தர் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பாடங்களைக் கற்க வேண்டும் என்றாலும், வடமொழியே அவர்களுக்கு அதிகாரமும், மரியாதையும் தரும் என்று உறுதியாகக் கூறினார். அதைக் கற்காவிட்டால் மக்கள் கூட்டம் அடிமைப்பட்டே இருக்கும் என்றும், ஆதிக்க ஜாதியினரை எதிர்ப்பதை விடுத்து ஒடுக்கப்பட்ட ஜாதியினர் வடமொழியைக் கற்று தங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதோடு, ஆதிக்க ஜாதியினரின் கலாசாரத்தை வடமொழியைக் கற்பதன் மூலம் பெற்று ஜாதிமுறையைச் சமப்படுத்தலாம் என்று கூறினார்.

காந்தி இந்துஸ்தானி சமஸ்கிருதமயமாவதை எதிர்த்தாலும், தெற்கு, வடக்கு இரண்டின் இணைப்பாக வடமொழியே திகழ்கிறது என்றும், வடமொழியின் மகள்களாகத் தென்னிந்திய மொழிகள் தங்களுக்கு வார்த்தைப் பஞ்சம் ஏற்படுகிற பொழுது தாயான வடமொழியை நாடின என்றும் நாற்பத்தி இரண்டில் பேசினார். நாகரி, உருது வரிவடிவங்களில் அவர் விருப்பம் கொண்டிருப்பதாகச் சொன்னாலும் நாற்பத்தி ஆறில் இந்துக்கள் அனைவரும் நாகரி வரிவடிவத்தைக் கற்பதை கட்டாயமாக்க தான் விரும்புவதாகத் தெரிவித்தார். தான் வடமொழியைப் பள்ளிக்காலத்தில் கற்க கடினப்பட்டதை ஒப்புக்கொண்ட காந்தி, ஒவ்வொரு இந்து ஆணும், பெண்ணும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று தன்னுடைய சுயசரிதையில் எழுதினார்.

இவ்வளவு ஆதரவு கருத்துகள் சொல்லப்பட்டாலும், இறுதியில் வடமொழி தேசிய மொழியாகாமல் போனது சமஸ்கிருத கமிஷனை வருத்தப்படுத்தியது. வடமொழி ஒவ்வொரு இந்தியனின் நாவிலும் நடமாடிய பொழுது, இந்தியா வெற்றிமகுடம் தரித்த வண்ணம் இருந்தது என்று வரலாற்றை ஒற்றைப்படையாக அவர்கள் அணுகி வாதிட்டார்கள். வடமொழியை ஷெல்டன் பொல்லாக் ‘மாண்டரின்’ மொழி என்று அதன் உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பட்ட தன்மையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தூய்மைப்படுத்தப்பட்ட வடமொழி தற்போது மக்களைச் சென்றடைவதன் மூலம் அது இயற்கையான மொழியாக மாறக்கூடும் என்று அவர்கள் கருதினார்கள்.

விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே பம்பாய், கல்கத்தா பல்கலைகளில் வடமொழி இரண்டாவது கட்டாய மொழியாக இருந்தது. தேசிய கல்வியில் வடமொழியைச் சேர்க்க பல்வேறு கல்லூரிகள், அரசுகள் முயல்வது விடுதலைக்கு முந்தைய காலத்தில் ஆரம்பித்தது அதன் உச்சப்புள்ளி இக்கமிஷனில் வந்து நின்றது.

இந்தியன் என்பவர் தேசத்துக்கான வடமொழியின் அடிப்படை மதிப்பை மறுக்கக்கூடாது என்று இக்கமிஷன் வாதிட்டது. செப்டம்பர் நாற்பத்தேழில், சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக ஏற்பதன் மூலம் மேலும் இணைந்திருக்க முடியும் என்று அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் மனுவை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் முன்னர்ச் சமர்ப்பித்தார்கள். (டி.டி.கே, லக்ஷ்மிகாந்த மைத்ரா, துர்காபாய் தேஷ்முக், நஸ்ரூதின் அகமது ஆகியோர் பிறர்.) எது இந்தியாவின் தேசிய மொழி ஆகவேண்டும் என்கிற சிக்கல் எழுந்த பொழுது நஸ்ரூதின் அகமது, “வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை என்பதால் அது அனைவருக்கும் சமமான வாய்ப்பையே தரும்” எனக் கருதினார். எல்லா மொழிகளிலும் வடமொழியின் சொற்கள் இருப்பதால் அம்மொழியைக் கற்பது கடினமாக இருக்காது என்று வடமொழியின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள்.

மைத்ரா வடமொழியை ஒருவர் ஏற்க மறுப்பது தன்னுடைய பாட்டியை நிராகரிப்பது போலாகும் என்றார். இன்னமும் அபத்தமாக இந்தியின் ஆதரவாளர்கள், இந்திதான் வேதகால வடமொழியில் இருந்து இறங்கி வந்த மூத்த மகள் எனவும் பேசினார்கள். வடமொழியின் வரிவடிவமே அதிகாரப்பூர்வ வரிவடிவமாக இந்திக்கு ஏற்கப்பட்டது. அளகுராய் சாஸ்திரி, இந்தி என்கிற தேசிய மொழியும், தேவநாகரி வரிவடிவமும் ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டவை என்று அடிப்படை மொழியறிவு இல்லாமல் அரசியலமைப்பு வரைவுக் கூட்டத்தில் பேசினார்.

சமஸ்கிருத கமிஷன் இந்தியாவுக்கான மொழி வடமொழி என்று நிறுவ இந்தியா முழுக்கப் பயணம் செய்து பலரை நேர்முகம் கண்டது. தெற்கில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தே பலரும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் என்று அப்பொழுதைய காமராஜர் அரசு அவர்களை மதிக்காததை மறைத்து எழுதினார்கள். என்னென்ன கேள்விகள் எழுப்பினோம் என்று மட்டும் சொன்ன கமிஷன், என்னென்ன பதில்கள் வந்தன என்பதைப் பற்றி மூச்சுவிடவில்லை. ஈழவர்கள், மாப்பிள்ளைமார்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய அனைவரும் வடமொழியை விருப்பத்தோடு கற்பதாகவும், லக்னோவில் இஸ்லாமிய பெண்களும், குஜராத்தில் பார்சிக்களும், பஞ்சாபில் சீக்கியர்கள் அதைக் கற்பதைக் கண்டதாகவும் சுனிதி குமார் சாட்டர்ஜி சொன்னார். இஸ்லாமியர்களை எந்த இடத்திலும் தாக்காமல் கவனமாக இருந்த கமிஷன், ஒரே ஓர் இடத்தில் வடமொழியைக் கற்க மறுத்து ஆங்கிலேயர் நம்முடைய நாட்டைப் பிடிக்க அவர்கள் காரணமாகிவிட்டனர் என்று ‘அறிவுப்பூர்வமாக’ கருத்துத் தெரிவித்தது.

வேதங்கள் கோயில்களில் பயன்படுத்துவதைக் கண்டு பூரித்த இந்தக் கமிஷன் ஒரு மதச்சார்பற்ற அரசு கோயில்களை முறைப்படுத்தக் கூடாது என்றாலும், இந்திய கலாசாரத்தின் அடிப்படையான வேதத்தைத் தாங்கிய வடமொழியின் வளர்ச்சிக்கு இக்கோயில்களின் வருமானத்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. தினமும் சமஸ்கிருத செய்திகளோடு, கீதையும், மற்ற இதிகாசங்களும் வானொலியில் ஓதப்படவேண்டும் என்றும், காளிதாசர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் அது கோரியது. திரைப்பிரிவு இதிகாசங்கள் சார்ந்த ஆவணப் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீண்டன அதன் பரிந்துரைகள்.

அதன் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே தண்டி எனும் பல்லவர் அவையில் இருந்த வடமொழி அறிஞர் “மகா முனிவர்கள் பேசிய புனித மொழி” என்றதையும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய சேனாவரையர் “வடமொழி இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவானது” என்பதையும் சாதுரியமாகக் குறிப்பிட்டுத் தமிழர்கள் இம்மொழியை ஏற்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தது. தனித்தமிழ் இயக்கம் வடமொழியில் இருந்து கடன் பெறாமல் நவீன கருத்துகள், சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாது என்று சமஸ்கிருத திக்விஜயம் நூலில் சுனிதி குமார் சாட்டர்ஜி எழுதினார். ராகவன் இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமியர்கள் ஆட்சியில் இந்தியா தன்னுடைய இந்தியத் தன்மையை வடமொழியை விலக்கியதால் இழந்தது என்றும், அப்பொழுது தெற்குதான் வடமொழியைக் காத்தது என்றும் கருத்துரைத்தார்.

அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ‘வெறும் ஐநூறு பேர் பேசும் ஒரு மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக’ ஆக்க முடியாது என்று குட்டியதை எதிர்கொள்ளும் விதமாக வால்மீகி ராமாயணத்தின் வரிகளைச் சொன்னால் மக்கள் புரிந்துகொண்டு கண்ணீர் விடுவதில்லையா என்று கேட்டுக் கலக்கியது! வடமொழி மற்ற தாய்மொழிகளைப் போல உயிரோடு இருப்பதோடு, கவிதை, கதைகளில் அது பயன்படுத்தப்படுகிறது, அது நவீன கருத்துகளை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றது இக்கமிஷன்.

ராஜா ராமண்ணா எனும் தேர்ந்த அறிவியல் அறிஞர் இன்றைய அறிவியல் காங்கிரஸ் சர்க்கஸுக்கு எல்லாம் முன்னோடியாக, ‘சமஸ்கிருதமும், அறிவியலும்’ எனும் துண்டறிக்கையில், ‘பாணினியின் இலக்கணமே மொழியை அறிவியல் முறைகளில் வேதியியல் பகுப்பாய்வு செய்தது’ என்றும், வடமொழியின் வடிவம் கணிதம், வடிவியல், தர்க்கம் ஆகியவற்றின் வடிவங்களை ஒத்திருப்பதாக மெய்சிலிர்த்தார். பெல்லியன் சூத்திரத்தை, பித்தாகரஸ் சூத்திரத்தை முன்னமே வடமொழியில் இருப்பதைச் சொல்லி கமிஷன் அறிவியலுக்கும் உகந்த மொழி வடமொழி என்றது. இந்து தேசியத்தின் மொழியில் பேசிய இந்தக் கமிஷன் சாமர்த்தியமாக அதைத் தேசியத்தின் போர்வையில் செய்வதாகக் காட்டிக்கொண்டது, இது மதச்சார்பின்மை அரசியலை விட்டுக் காங்கிரஸ் ஆட்சி ‘விலகிய கணம்’ எனப் பார்த்தா சாட்டர்ஜி வர்ணிக்கிறார்.

சத்யமேவ ஜெயதே என்று அரசு பொறித்ததும், மிஸ்டர், மிஸர்ஸ் இடத்தை ஸ்ரீமதி, ஸ்ரீமான் எடுத்துக்கொண்டதும், ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய கடற்படை முதலிய அமைப்புகள் வடமொழியின் வாசகங்களைப் பயன்படுத்தியதை பெருமையோடு குறிப்பிட்ட கமிஷன் வடமொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றது.

மத்திய அரசு மத்திய சமஸ்கிருத வாரியத்தை வடமொழி வளர்ச்சி, பரவலாக்கம் ஆகியவற்றுக்கு அறிவுரை சொல்ல அமைத்தது. கேந்திரிய சமஸ்கிருத பரிஷத் அமைப்பை ஏற்படுத்தியும், கல்வித்துறையில் வடமொழி பிரிவு ஒன்றை உருவாக்கியும் வடமொழியைக் காக்க முனைந்தது. வடமொழி கற்றலை பல மாநில அரசுகளும், மத்திய அரசும் கட்டாயமாக்கின. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டதிலும் கோடிக்கணக்கில் நிதி வடமொழி வளர்ப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்து மதத்தை இந்தியாவின் இணைப்பு சக்தியாக மாற்ற முயன்று பிரிவினைக்கு வழிவிட்ட போக்கின் மறுவடிவமாக வடமொழி மீண்டும் இந்தியாவின் கலாசார முகமாக முன்னிறுத்தப்பட்டும், அரசின் செயல்பாடுகளைத் தாண்டி வடமொழி சீர்குலைந்து வருகிறது என்று அதன் ஆதரவாளர்கள் குமைகிறார்கள்.

சுதீப்தா கவிராஜ் குறிப்பிடுவதைப் போல, “நவீனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிற சமூகம் தன்னைக் கடந்த காலம், கலாசாரம் ஆகியவற்றின் மாறுவேடங்களில் ஒட்டுமொத்த நவீன கருத்துகளும் உள்ளதாகத் தன்னைப் புதைத்துக் கொள்வதைச் செய்கிறது. அது நவீனத்தை எதிர்கொள்ள மறுக்கும் பயமும், நவீனத்தால் தான் சிதைவுறுவதை ஏற்க மறுக்கும் போக்குமே இதற்குக் காரணம்.”

ஷெல்டன் பொல்லாக்கின் வரிகளில், “தெய்வங்களின் மொழியான சமஸ்கிருதம் தன்னுடைய வாழ்நாளை நீட்டித்துக்கொள்ள இம்மை உலகில் சாதாரண மனிதர்களின் நாவில் புழங்க வேண்டியது ஆகிற்று!” என்கிறார். வடமொழி சில மேல்தட்டுக்கு மட்டுமே உரியது என்கிற போக்கு போய், அடித்தட்டு மக்களைச் சென்றடையும் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டு இருந்தாலும் அதனைக் கற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் மதிக்கப்படுகிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பிக் கொள்ள வேண்டும்.

நவீன இந்தியாவில் முதன்முதலில் சமஸ்கிருதம் கற்ற தலித் பெண் என்கிற சிறப்புக்குரிய கும்தா பவ்டே தான் முதல்நிலையில் வடமொழியில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னரும், பிராமணர்களும், ஆதிக்க ஜாதியினரும் அவரை ஏற்கவோ, அவருக்குப் பணி தரவோ விரும்பவில்லை என்பதை ‘என் சம்ஸ்கிருதத்தின் கதை’ என்கிற கட்டுரையில் பதிவு செய்கிறார் . எனினும், அதே தேசம் நவீனத்தின் அடையாளமாக அவரை வரித்துக் கொண்டது. சாகாவரம் பெற்றது சமஸ்கிருதமும், சமத்துவமின்மையும் போலும்.

Related posts

Leave a Comment