குறும்பதிவுகள் 

சத்தியத்தைக் கண்டடைதல்

சத்தியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை ஒருவனின் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் அவன் அதற்காக எதையும் இழக்கத் தயாராகி விடுகிறான். அவனுடைய பதவி, புகழ், செல்வம் மற்றும் அவன் அனுபவிக்கும் இன்னபிற உலகியல் வசதிகள் யாவும் அவனுக்கு அற்பமானவையாக மாறிவிடுகின்றன.

உலகியல் இன்பங்களுக்கு அடிமையானவர்களால் சத்தியத்தை அடைய முடியாது. சத்தியம் பத்தோடு பதினொன்றாக பெறப்படக்கூடிய ஒன்றல்ல. அது தம்மை ஒப்படைப்பதற்கு நம்மிடம் எல்லாவற்றையும் கோருகிறது. அது ஏற்படுத்தும் ஆத்ம ஆனந்தத்திற்கு இணையாக எந்தவொன்றும் இருக்க முடியாது.

இடையூறுகள்சூழ் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னெப்போதையும்விட தற்காலத்தில் அவை பன்மடங்காகப் பெருகி நம் முன்னால் பிரமாண்டமாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றன. எங்கு திரும்பிடினும் விரிக்கப்பட்ட வலை நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சிறு பிசகல்கூட நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடலாம். படைக்கப்பட்ட நோக்கம்கூட அறியாதவாறு நம்மை மெய்மறதியில் ஆழ்த்திவிடலாம்.

பாமரர்கள் ஆளுமைகளைச் சார்ந்து வாழக்கூடியவர்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்லக்கூடியவர்கள். தங்களின் பாரத்தை அவர்களின் மீது சுமத்திவிட்டு நிம்மதியாக இருக்கக்கூடியவர்கள். ஆளுமைகள் அப்படிப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

வழிவழியாக நாம் பெறக்கூடிய நம்பிக்கை நம்முடைய வெளிப்படையான அடையாளங்களில் ஒன்றாகவே நிலைக்க முடியும். உறுதியான நம்பிக்கை சத்திய தரிசனத்தின் மூலமாகவே ஏற்பட முடியும். தேடல் கொண்டவர்கள் தாங்கள் தேடியதைப் பெற்றுக் கொள்வார்கள். எந்தவொன்றும் அதற்கு உரியவர்களைச் சென்றடைந்தே தீரும்.

Related posts

Leave a Comment