கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி

Loading

(வழக்கறிஞர் அருள்மொழி News 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியதிலிருந்து…)

பொதுவாக, இந்தியாவில் பெண்களுக்கு எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதில் எந்த மதங்களுக்கும் விதிவிலக்கு கிடையாது. இஸ்லாமியப் பெண்களுக்கு இருக்கின்ற முத்தலாக் பிரச்னையைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இந்திய அரசியல் சாசனம் எல்லா மதங்களும் அவரவர்களுடைய தனியார் சட்டத்தை (Personal Law) வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. அதில் இந்துச் சட்டம் என்பது 1955க்குப் பிறகுதான் தொகுக்கப்படுகிறது. அதற்கு முன்னாள் இந்துச் சட்டம் ஒரு வகைப்படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட சட்டத் தொகுப்பாக இல்லை. அப்படியானால், நீதிபதிகள் எதனைக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள் என்றால், வால்மீகி, நாரதர், மனு இவர்களெல்லாம் இன்னின்னபடி சொல்லியிருக்கிறார்கள் என ஸ்மிரிதிகளை மேற்கோள் காட்டி தீர்ப்பளிப்பார்கள். இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தம் செய்யப்பட்டு, இந்து சட்டத் தொகுப்பு மசோதா 1949ல் அம்பேத்கர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதை மூன்றாண்டுகள் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததன் காரணமாக அவர் பதவி விலகினார். கடைசியில் ஒரு வழியாக 1956ல் அது நடைமுறைக்கு வந்தது.

ஆனால், கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை ரோமில் இருந்தும், ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்தும் வந்த சட்டங்களை அப்படியே அவர்கள் பின்பற்றினர். முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் என்பதும் இருந்தது. இன்னின்ன வகையில் விவாகரத்து செய்யலாம் என்பது அதிலே இருக்கிறது. விவாகரத்து என்றால் முதலில் ஒரு முறை தலாக் சொல்லவேண்டும். பிறகு, மூன்று மாதவிடாய் காலங்கள் இடைவெளி கொடுக்கவேண்டும். ஒவ்வொரு மாத இடைவெளியின்போதும் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும். அந்தப் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை, இரண்டாவது முறை தலாக் சொன்ன பிறகு தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவிட்டால் தலாக் சொன்னது செல்லாததாக மாறிவிடும். இப்படி ஆனபிறகு விவாகரத்து செய்யவேண்டுமென்றால் முதலில் இருந்துதான் தலாக் நடைமுறையைத் தொடங்க வேண்டும். இப்படி அதற்கு முறைகள் இருக்கின்றன.

அதேபோல, பெண்கள் விவாகரத்து செய்ய குலா எனும் நடைமுறை இருக்கிறது. ஆண்கள் விவாகரத்து செய்ய மேற்கூறியபடி இடைவெளி விடவேண்டிய தேவையெல்லாம் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இடைவெளி விடவேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் நேரடியாக, ‘இன்னாருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் குலா கொடுக்கிறேன்’ எனச் சொன்னாலே அந்த விவாகரத்து ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும். இங்கே சிக்கல் என்னவென்றால், இப்போது மோசமான முறையாகச் சொல்லப்படும் முத்தலாக் என்பது தவறானது. சொல்லப்போனால், ஷரீஆ சட்டத்திலேயே இல்லாதது. தந்தியின் மூலம் தலாக் கொடுப்பது, வாட்ஸ்அப்பில் சொல்வது, பதிவஞ்சல் அனுப்புவது என்பதையெல்லாம் அந்தச் சட்டமே அனுமதிக்கவில்லை.

ஆனால், பல பள்ளிவாசல்களில் இந்த உடனடி தலாக் முறையை ஏற்றுக்கொண்டு திருமணத்தை (நிக்காஹ்) ரத்து செய்திருக்கிறார்கள். சட்டமே அனுமதிக்காதபோது எப்படி விவாகரத்து சான்றிதழ் கொடுக்க முடியும்! இந்த நடைமுறை தவறு என்று நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படி நிராகரிக்காமல் இருந்ததன் விளைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்குத் தொடுத்தார்கள். அதில்தான் தீர்ப்பும் வந்தது. அந்த உடனடி தலாக்கை (முத்தலாக்கை) ரத்து செய்ய வேண்டும்; அது சட்டத்துக்குப் புறம்பானது என்றுதான் தீர்ப்பில் சொல்லப்பட்டது. இந்த முத்தலாக் தடை மசோதாவைக்கூட அதைச் சொல்லித்தான் பாஜகவினர் முன்னெடுத்தார்கள்.

முத்தலாக் பற்றி தீர்ப்பில் இப்படித்தான் சொல்லியிருந்தார்கள்:

Any pronouncement of talaq by a Muslim husband upon his wife, by words, either spoken or written or in electronic form or in any other manner whatsoever, shall be void and illegal.

இதை அப்படியே சட்டமாக்கியிருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், எங்கே அது ஆரம்பிக்கிறது என்றால், இப்படி ஒருவர் முத்தலாக் சொன்னால் அவரைப் பிடித்து மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கலாம். அவரிடமிருந்து ஜீவனாம்சமும் வாங்கலாம் என்கிறார்கள். ஒருவர் பஞ்சாயத்தில் விவாகரத்து வாங்கினால் இந்துச் சட்டப்படி அது செல்லாதுதான். கிராம சட்டப்படி அது ஏற்கப்படலாம். அதற்காக பஞ்சாயத்தில் விவாகரத்து வாங்கியதாகச் சொல்லும் ஒருவரை சிறையில் தள்ளலாம் என சட்டம் இருக்கிறதா? இல்லையே! அதை ஏன் இங்கு மட்டும் கொண்டு வருகிறார்கள். இதுதான் இந்தச் சட்டத்தில் நடந்த தவறு.

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களே விவாகரத்து செல்லாது என்றும் இது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் சொல்லித்தான் சேர்ந்து வாழ நினைக்கிறார்கள். அல்லது, விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் பெற நினைத்து நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். அப்படியென்றால் கணவரை எப்படி சிறைக்கு அனுப்ப முடியும்? அல்லது, சிறையில் அடைக்கப்பட்ட கணவரிடம் எப்படி ஜீவனாம்சம் பெற முடியும்? உண்மையில் எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டத்தைப் போடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதற்கு நேரெதிரான அம்சங்களையே கொண்டிருக்கிறது இந்தச் சட்டம். அடுத்தது, இந்த நாட்டில் எந்தப் பிரிவுக்கும் இல்லாத ஒரு தண்டனையை இந்தப் பிரிவுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இதற்குப் பின்னுள்ள நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல. முஸ்லிம் ஆண்களை உள்ளே பிடித்துப் போட இவர்களுக்கு ஒரு சட்டம் புதிதாகக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

Related posts

Leave a Comment