கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்

Loading

எழுத்தணிக் கலையை (Calligraphy) கற்கத் தொடங்கும்போது, அது எப்போது நிறைவுபெறும் என்பதைச் சொல்லவே முடியாது. இஸ்லாமிய எழுத்தணிக் கலையை கற்பது ஒரு வாழ்க்கைப் பயணம். அந்தப் பயணத்தில் நாம் எழுத்துகளைத் தீட்டுவதற்கு மட்டும் கற்றுக்கொள்வதில்லை, அதனுடன் சேர்த்து பணிவு, பொறுமை, சுயக் கட்டுப்பாடு, அல்லது ‘அதப்’ எனும் நன்னடத்தை போன்ற மனித அனுபவங்களின் வெவ்வேறு அம்சங்களையும் கற்றுக்கொள்கிறோம்.

நான் முதலில் எழுத்து வடிவங்களின் அழகில் ஈர்க்கப்பட்டே எழுத்தணி தீட்டுவதைத் தொடங்கினேன். “ஒவ்வொரு பட்டைக்கும், ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு ரகசியம், மெய்யறிவு, மறைவான செய்தி ஒளிந்துள்ளது” என்று நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.  ஒரு எழுத்தணிப் படைப்பைக் கண்ணுற்றதும், அதில் எழுதப்பட்டுள்ளதை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்கூட, உங்கள் ஆன்மாவுடன் இணைப்பு ஏற்படுத்தும் ஒரு ரகசியம் அதிலிருக்கிறது என்பதை நான் இன்றுவரை உணர்ந்து வருகிறேன். எனினும், ஓர் எழுத்தணிப் படைப்பைப் பார்க்கும்போது ஏற்படும் அந்த உணர்வு, நமது புலனறிவு சார்ந்த புரிதலுக்கு அப்பால் இன்னொரு மட்டத்தில் ஏதோ ஓர் இணைப்பை ஏற்படுத்துகிறது. அந்த இணைப்புதான் என்னை எழுத்தணி தீட்டுவதற்குத் தூண்டியது. என்ன செய்கிறேன் என்று சரியாகத் தெரியாமலேயே நான் சுயமாக அதைத் தொடங்கினேன். அந்தக் கலை வடிவத்தின் மந்திரம் என்னை வசீகரித்துவிட்டது.

என்.ஜி. மஸீப்புடன் சந்திப்பு மற்றும் எழுத்தணிக் கலையில் இஜாஸா

எழுத்தணியுடனான எனது முதல் சந்திப்பு, நான் நூரியா கார்சியா மஸீப்பை சந்தித்த சில மாதங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. அவரே என் வருங்கால ஆசானும், ஆசிரியரும், என் தொழில் வாழ்வில் மாபெரும் மாற்றத்தைத் தொடங்கிவைத்த மனிதரும் ஆவார். நான் சந்தித்தபோதே அவர் ஒரு நன்கறியப்பட்ட எழுத்தணிக் கலைஞராக வளர்ந்திருந்தார். அவர் என்னை இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று தன் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், நான் அவரிடமும் வேறுசில மிகப் பிரதானமான துருக்கி நாட்டு எழுத்தணிப் பண்டிதர்களிடமும் பயிலத் தொடங்கினேன். ஐந்து வருடப் பயிற்சிக்குப் பின், ஆசான்களான ஹசன் செலபி, ஃபர்ஹத் குர்லு மற்றும் நூரியா கார்சியாவின் கையெழுத்துகள் பொறிக்கப்பட்ட ‘இஜாஸா’ (எழுத்தணிக் கலையில் பட்டயம்) பெற்றேன்.

இஜாஸா வழங்கும் விழா

நெடுங்காலம் உதுமானியப் பேரரசின் தலைநகராக இருந்த இஸ்தான்புல், கலை அளவிலும் கலாச்சார அளவிலும் செழிப்புமிக்க ஒரு மாநகரமாகும். அந்த வகையில், நூற்றாண்டுகள் நெடுக எழுத்தணிக் கலை பேணி வளர்க்கப்பட்ட நகரமாகவும் அது திகழ்ந்து வருகிறது. கலையாசிரியர்களிடம் கற்பதற்காக உலகெங்குமிருந்து பலர் வருவதை இஸ்தான்புல்லில் பரவலாகப் பார்க்கலாம்.

எழுத்தணி கற்பிக்கும் கல்வி, முதலில் அரேபியத் தீபகற்பத்தில்தான் தொடங்கியது. பிறகு, அது வேகமாக நாலாபுறமும் பரவியது. எழுத்தணி மரபின் முக்கியத் தொடர்வரிசையானது சிரியா, ஈராக், பாரசீகம் என்று பயணித்து, பிறகு உதுமானியப் பேரரசின் அனடோலியாவுக்கு வந்துசேர்ந்தது. இதைக் கற்பிக்கும் பயிற்சி, இஸ்லாத்தின் உதயம் முதல், ஆசான் வழி மாணவருக்கு வாழையடி வாழையாக வந்து ஓர் அறிவுத் தொடரை உருவாக்கிவிட்டது.

இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பிடத்தக்கதொரு சிறப்பு. ஏனென்றால், நாம் உதுமானிய எழுத்தணிக் கலை மரபில் சீடராகச் சேரும்போது, அதன் மூலம் ஒரு தொன்மையான அறிவுத் தொடரில் இணைகிறோம். எனில், நமக்கு பயிற்றுவிக்கும் ஆசான்கள் முன்னொரு நாள் வேறு மூத்த ஆசான்களுக்குச் சீடராக இருந்துள்ளார்கள். இவ்வாசான்கள் இன்றுவரை, அன்றைய முதல் எழுத்தணிக் கலைஞர் பயன்படுத்திய அதே மூலப் பொருள்களையும் பாரம்பரியப் பயிற்சி முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆகையால், இவ்வழிமுறை மூலம் கலையறிவு கைமாற்றம் செய்யப்பட்ட காரணத்தால், எழுத்துகளின் பாரம்பரிய உருவங்கள் அல்லது வடிவங்கள் எவ்வொரு மாற்றத்துக்கும் ஆளாகவில்லை. எழுத்தணி மரபைப் பேணிக்காப்பதற்கான இன்னொரு நடவடிக்கையாக வரிசையாய் பல ‘சம்பிரதாய வழக்குகள்’ கடைப்பிடிக்கப்படுகின்றன.

எழுத்தணிக் கலையைக் கற்பிப்பது ஓர் அன்பளிப்பு

உதுமானிய எழுத்தணிக் கலை மரபிலுள்ள மிக முக்கியமான ஒரு சம்பிரதாய வழக்கு, கற்பிக்கும் தன்மையைக் குறித்தது. இந்த மரபில், கற்பிப்பது ஓர் ‘அன்பளிப்பு’ என்றே எப்போதும் போற்றப்படுகிறது. அதனால், ஆசான் அந்த ‘அன்பளிப்புக்குப்’ பகரமாக ஊதியம் பெறமாட்டார்.

நம் வாழ்வில் கிடைக்கும் விலைமதிப்பற்ற விஷயங்கள் யாவும் இலவசமானவையே என்பதால் அதை நாமும் விலை வைக்காமல் இலவசமாகத் திருப்பிக் கொடுப்பது அவசியம் என்ற போதனை இதில் பொதிந்துள்ளது. உதுமானியத் துருக்கிய எழுத்தணிக் கலையைக் கற்பிக்கும் வழிமுறையின் கருச்சாறு இதுதான். நாம் பெற்றுக்கொள்ளும் அன்பளிப்பை அன்பளிப்பாகவே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிறது மரபு.

ஆக, பெற்றதைக் கொடுக்க வேண்டும் எனும்போது, ஒவ்வொரு எழுத்தணி ஓவியரும் ஓர் ஆசிரியராகவும் மாறுகிறார். அனுபவம் பெற்று கைதேர்ந்துவிட்டால், கலையைக் கைமாற்றுவது கடமையாகிவிடுகிறது.

கலை நேரடியாகவே கற்பிக்கப்படுகிறது, அதன் மூலம் ஆசிரியரின் ஒவ்வொரு அசைவையும் கைப்பழக்கத்தையும் கவனமாகப் பார்க்க முடிகிறது.   ஆசிரியர், ‘கலம்’ என்ற எழுதுகோலை எப்படிப் பிடிக்கிறார், எப்படி வளைத்துத் திருப்புகிறார், எந்தப் புள்ளியில் பட்டையை வரையத் தொடங்குகிறார், எங்கே இடைநிறுத்துகிறார், எங்கே முடிக்கிறார் என்பதெல்லாம் ஆசிரிய-மாணவ உறவின் முக்கிய அம்சங்கள்.

ஆசானின் ‘கரங்கள்’

எழுத்தணிக் கலையைக் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் போதிக்கப்படும் வாசகம்: “நீர் கற்கவேண்டிய கலையறிவு யாவும் ஆசானின் கரத்தில் அடக்கம்.”

இந்தப் பாரம்பரியத்தில் கரத்துக்கு ஒரு குறியீட்டு மகிமை உள்ளது.  எழுத்தணி ஓவியரின் கரம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

உதுமானிய எழுத்தணிக் கலை ஆசான்கள் பற்றியும் அவர்தம் ‘கரங்கள்’ பற்றியும் சில சுவாரஸ்யமான சேதிகள் உண்டு. உதாரணமாக, கஸாஸ்கர் முஸ்தபா இஸ்ஸத் எஃபந்தி என்பவர் எழுத்தணி ஓவியராகவும், இஸ்தான்புல் நகரின் எயூப் மசூதியின் இமாமாகவும் இருந்தார். அவர் வெள்ளிதோறும் அந்தப் பள்ளிவாசலில் பிரசங்கம் ஆற்றுவார், அதனால் பகல்பொழுதில் எழுத்தணித் தீட்ட முடியாமல் போனது. எனவே, கரம் சோர்வடையாமல் இருக்க, கைக்குக் கலையெழுத்துப் பயிற்சியாக ஒரு சிறு மென்மையான பொருளை வைத்து அசைத்துக்கொள்வார்.

இதேபோல், இன்னொரு சம்பவம் பற்றி சொல்லப்படுகிறது. வரலாற்றின் மாபெரும் எழுத்தணி ஓவியர்களுள் ஒருவரான சமீ எஃபந்தி, தெருவில் நடக்கும்போது தன் கரங்களை சட்டைப் பொத்தான்களுக்கு இடையே திணித்துக் கொள்வாராம். தன் கரங்கள் எதிலும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடாம்.

இதைப் பிரதிபலிக்கும் வண்ணமாக துருக்கிய மொழியில் ஒரு மரபுத் தொடர் உள்ளது. அது எழுத்தணி ஓவியர்களிடையே வழங்கும் பிரபலமான சொற்றொடர்.  ஒருவர் ஓர் அழகான கலைப் படைப்பை இயற்றியதும் “எல்லரீன் சாஹ்லிக்” என்பார். அதாவது, “அல்லாஹ் உம் கரங்களைப் பாதுகாக்கட்டும்” என்பார்.

ஆசானை தரிசித்து வா!

பாரம்பரிய எழுத்தணியியல் வட்டங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் இன்னொரு ‘சம்பிரதாய வழக்கு’ என்னவென்றால், ஒவ்வொரு எழுத்தணி ஓவியரும் தனது ஆசானைச் சந்திக்க வாரம் ஒருமுறை சென்றுவர வேண்டும், அச்சமயம் தன் படைப்புகளைக் காட்டி அவருடைய அறிவுரை மற்றும் திருத்தங்களைப் பெறவேண்டும்.

இக்கலை இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆக, ஆசானுக்கு மாணவன் அளிக்கும் ஒரே ‘கட்டணம்’, தன்னால் இயன்றளவுக்கு தன்னைக் கலையில் ஈடுபடுத்திக் கொண்டு, விடாது அவரைச் சந்திக்கச் சென்று, அவரிடம் தன் படைப்பைக் காட்டுவதே.

ஆசானைச் சந்திக்கச் செல்வது, கற்றுக்குட்டி மாணவனுக்கு மட்டும் கடமையல்ல. பிரபலமடைந்த எழுத்தணி ஓவியர் உட்பட ஒவ்வொரு எழுத்தணிக் கலைஞரும் தன் ஆசானைத் தவறாமல் சந்திக்கச் செல்லுதல் வேண்டும்.

உன் ஆசான் உனது கையொப்பத்தில்

எழுத்தணிக் கலை ஆசானைப் பார்க்கப் போவது மட்டுமே பாரம்பரிய மரியாதை செலுத்தல் முறை அன்று. மாணவர்களாகிய நாங்கள், ஓர் எழுத்தணிப் படைப்பின் கையொப்ப வாசகத்திலும் எங்கள் ஆசானைக் கௌரவிப்போம், இது எல்லா எழுத்தணி ஓவியர்களுக்கும் உரியதொரு வழக்கம். கலைப் படைப்பை வடித்து முடித்ததும், சிறியதொரு கலம் (எழுதுகோல்) கொண்டு அதே தாளில் இப்படி எழுதுவோம்:

ஆசானின் பெயர் – அல்லாஹ் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வானாக – அவர்களின் மாணவர்களுள் ஒருவரான – எழுத்தணி ஓவியர் பெயர் – என்ற ஏழையால் (அதாவது ஆன்ம ஏழை அல்லது பணிவானவன்) எழுதப்பெற்றது.

கையொப்ப வாசகம்

இப்படி எழுதும் முறை, பதினேழாம் நூற்றாண்டு உதுமானிய எழுத்தணி ஓவியரான ஹாபிஸ் உஸ்மானின் வழக்கத்தையொட்டி வந்தது. ஹாபிஸ் மாணவனாக இருக்கும்போதே இதில் திறமையும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். எழில்கொஞ்சும் எழுத்தில் முழு குர்ஆனின் கையெழுத்துப் பிரதி ஒன்றையும் அவர் வடித்தார். ஒருநாள் அவரது ஆசான், ஹாபிஸின் கைவண்ணத்தை அன்றைய உதுமானிய சுல்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆன் பிரதியை சுல்தானிடம் எடுத்துச் செல்லுமாறு ஹாபிஸை பணித்தார். அதைப் பார்த்த மாத்திரத்தில் மனதைப் பறிகொடுத்த சுல்தான், உடனே அந்த அழகான கலையின் கைவண்ணத்துக்குச் சொந்தக்காரர் யார் என்று ஹாபிஸிடம் வினவினார்.

ஹாபிஸ் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “ஆசான் முஸ்தபா எய்யூபியின் எளிய மாணவன் எழுதியது” என்று சொன்னார். அவர் அன்று சொன்ன சொற்களே இன்றுவரை எழுத்தணி மாணவர்கள் மத்தியில் மரபாகத் தொடர்கிறது. ஹாபிஸ் தன் ஆசானுக்கு மாண்பும் மரியாதையும் காட்டும் விதமாக அவரது பெயரை மட்டுமே மொழிந்தார்.

கலமும் அதன் சீவல்களும்

நாம் எழுத்தணியை வடிக்கப் பயன்படுத்தும் கலம் ஒரு சாதாரண மரக்குச்சி போன்றே தோன்றும் என்றபோதிலும், அது முஸ்லிம் எழுத்தணி வினைஞர்களுக்கு பெரும் சிறப்பு கொண்டுள்ளது. பல சம்பிரதாய வழக்குகள் அந்தக் கலமுடன் நெருக்கமாகச் சம்பந்தப்பட்டுள்ளன.

இறைவன் முதன்முதலில் படைத்தது கலம் தான், அது ஒருவரது வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் பதிவதற்காகவே உள்ளது என முஸ்லிம் எழுத்தாக்கங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இதேபோல், குர்ஆனிலும் அறுபத்தி எட்டாம் அத்தியாயமான ‘சூரா அல் கலம்’ என்றதொரு முழு அத்தியாயமே கலம் என்ற பெயரில் வருகிறது.

மேலும், எழுத்தணி ஓவியர் தன் வாழ்நாள் முழுக்க தினமும் பெருவாரியான நேரத்தைக் கையில் கலம் வைத்துக்கொண்டு கழிக்கிறார். கலம், அவருடைய கையின் நீட்சியாகவே மாறிவிடுகிறது. இந்தக் கையின் நீட்சியே காகிதத்தில் சில கருத்துகளையும் எண்ணங்களையும் பதிக்கப் பயன்படுகிறது. ஆக, எழுத்தணி ஓவியருக்கு கலம் மிகப் புனிதமான கருவியாக விளங்குகிறது.

இது தொடர்பாக எழுத்தணி மாணவர்கள் போற்றும் ஒரு சம்பிரதாய வழக்கு நடப்பிலுள்ளது. கலம் என்ற எழுதுகோலை வெட்டிவிட்டுச் சீய்த்துக் கூர்மையாக்கும் ஒவ்வொரு முறையும் அதில் கிடைக்கும் எல்லா சீவல்களையும் சேமித்து வைத்திருப்பது. எழுத்தணி ஓவியர்கள் எழுதும் எல்லாமே நேரடியாக குர்ஆனிய வசனங்கள் அல்லது ஹதீஸ்களுக்கு (முஹம்மது நபிகளாரின் போதனைகள்) தொடர்புடையவை என்று சொல்ல முடியாவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை அப்படித்தான். இவ்வாறு புனித வரிகளை எழுதப் பயன்படுத்தும் கோலின் ஒரு பகுதி வீசப்பட்டு குப்பையோடு குப்பையாகக் கலந்துவிடக் கூடாது என்பது எங்கள் எண்ணம். எனவே, நாங்கள் கலமின் சீவல்களைச் சேமித்து வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆகையால், எழுத்தணி ஓவியர் அதைக் கலையைக் கற்கத் தொடங்கிய நாள் தொட்டு தன் இறப்பு வரை தன்னுடைய சீவல்கள் அனைத்தையும் சேமித்துவைப்பார். இறுதியாக அவர் இறந்தபின் அவரின் குடும்பத்தினர் அந்தச் சீவல்களை ஒன்றுசேர்த்து, அவரின் நல்லுடலைக் குளிப்பாட்டுவதற்கான நீரைக் கொதிக்க வைக்கும் நெருப்பில் அதைப் போட்டுவிட வேண்டும். இதுவே மரபு. சுருங்கக் கூறின், எழுத்தணி ஓவியர் தன் உடல் வடிவில் இவ்வுலகிலிருந்து மறைந்துவிடும்போது, அவருடைய கலமின் சீவல்களும் அவருடன் சேர்ந்து மறைந்துவிட வேண்டும்.

நீரும் மையும்

இதேபோல், மையைக் கலக்கப் பயன்படுத்தும் தண்ணீருக்கும் தனி அந்தஸ்து உள்ளது. உதுமானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், எழுத்தணி ஓவியர்கள் மை கலக்குவதற்கு மழை நீரையே பயன்படுத்துவர். மழை ஒரு ‘ரஹ்மத்துல்லாஹ்’ (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று கூறுவர். எனவே அதை ஆகத் தூய்மையான நீராகக் கருதிப் பயன்படுத்தினர்.

தற்காலத்தில், மழை நீர் மட்டுமல்லாது, ரோஜா இதழ் நீர் அல்லது வடிகட்டிய நீரையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், குழாய் நீரைத் தவிர்க்க முனைகிறோம். இதற்குக் காரணம், இந்தத் தண்ணீர் கடந்துவரும் குழாய்கள் முற்றிலும் சுத்தமானதா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், புனிதப் பொருள் பொதிந்த ஒன்றை எழுதுவதற்கு அசுத்தமான அல்லது தூய்மைக் குறைவான ஒன்றை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை.

நாங்கள் உபயோகிக்கும் மை, அசலில் புகைக்கரி, அரபுப் பசை மற்றும் தண்ணீரால் செய்யப்படுகிறது. கடந்த காலத்தில், எழுத்தணி ஓவியர்கள் பள்ளிவாசல்களுக்கு ஒளியூட்டும் எண்ணெய் விளக்குகளிலிருந்து புகைக்கரியைச் சேகரித்து, அதிலிருந்து மை தயாரிப்பார்கள். உதாரணமாக, புகழ்பெற்ற உதுமானிய கட்டடக்கலை வல்லுநரான மிமர் சினான், இஸ்தான்புல் நகரிலுள்ள சுலைமானியா பள்ளிவாசலைக் கட்டும்போது அதன் மேல்மாடியில் சிறியதோர் அறையைக் கட்டுமாறு தன் சீடர்களுக்குப் பணித்தார். விளக்குகளிலிருந்து வந்த புகைக்கரி யாவும் இந்த அறைக்குத் திருப்பிவிடப்பட்டது. வருடம் ஒருமுறை, எழுத்தணி ஓவியர்கள் இவ்விடம் வந்து, சுவர்களிலும் மேற்கூரையிலும் படிந்துள்ள புகைக்கரியை உரசியெடுத்துச் செல்வார்கள். பிறகு அதை தங்கள் மை தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்.

அந்த மையைக் கொண்டே குர்ஆன் பிரதிகளை எழுதுவது வழக்கம்.  இவ்வாறு எழுதிய பிரதிகளை அவர்கள் பள்ளிவாசலுக்கே கொடையளித்து விடுவார்கள். அதாவது, பள்ளிவாசலில் புகைக்கரி வடிவத்தில் பிறப்பெடுத்த அது, மீண்டும் அதே இடத்துக்கு ஓர் அழகான கையெழுத்துக் குர்ஆன் பிரதியாக வந்துசேரும், அதன்பின் அங்கேயே நெடுங்காலம் அது தங்கியிருக்கும்.

எழுத்தணிக் கலையும் கல்லறை விஜயமும்

எழுத்தணி ஓவியர்களின் இன்னொரு சம்பிரதாய மரபு வழக்கு, மாபெரும் கடந்தகாலக் எழுத்தணி ஆசான்களின் கல்லறைக்குச் சென்றுவருவது. இந்த விஜயங்களின்போது, ஆசான்களின் ஆன்ம ஈடேற்றத்துக்குப் பிரார்த்திப்பது மட்டுமல்லாமல், அவர்கள் ஒரு கலமை அங்கு அடங்கியுள்ளவரின் கை ஆழத்துக்குப் புதைத்து சிறிது காலம் விட்டுவைப்பார்கள்.

எழுத்தணிக் கலைஞர் ஹம்துல்லாஹ்வின் அடக்கஸ்தலம்

பிறகு கல்லறைக்குத் திரும்பிவந்து, அந்தக் கலமை தோண்டியெடுத்து, தங்கள் எழுத்தணிப் படைப்புகளைத் தீட்டப் பயன்படுத்துவார்கள். இந்தக் கலம் ஒருவித பரகத் (எழுத்தணி ஆசானிடமிருந்து அருள் அல்லது சாதக அதிர்வுகள்) பெற்று உயிர்வாழும், எழுத்தணிக் கலைஞரின் பணியை இலகுவாக்கும், கையெழுத்துக்கும் அழகுசேர்க்கும் என நம்பப்பட்டது.

நீடித்து நிலைக்கும் மரபும் கலையின் உருவாக்கமும்

இந்தச் சம்பிரதாய வழக்குகள் எல்லா எழுத்தணி ஓவியர்களுக்கும் கட்டாயமல்ல. எழுத்தணிப் பணியில் ஈடுபடும் எல்லோரும் இதைக் கடைப்பிடிப்பதும் இல்லை. எது எப்படியோ, இந்த மரபு வழக்குகளின் பாக்கியத்தால், மற்றும் வேறுசில காரணிகளால், தலைமுறை தலைமுறையாக எழுத்தணி ஓவியர்கள் இந்தக் கலையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கின்றனர். ஆக, நாம் எழுத்தணிக் கலையைப் பற்றிப் பேசும்போது இவற்றைக் கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

என் சுய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: இந்த மரபுசார்ந்த அம்சங்கள் அனைத்தும் உண்மையிலேயே என் மனதைக் கொள்ளை கொண்டு, இந்தக் கலை மீது காதலை உருவாக்கிவிட்டன. அதேவேளை, இதன் நடைமுறை அம்சமும் கவனிக்கத்தக்கது. இந்தப் படைப்பாக்கச் செயல்முறையில், நாம் ஓர் எழுத்தணிப் படைப்பை வடிப்பதன் மூலம் ஏதோவொரு வகையில் நம் உள்ளத்தை வெளிப்படுத்த முடிகிறது.

ஒரு கலையைப் படைப்பது நீண்ட, நெடிய செயல்முறை. அதன் இறுதி விளைவு, ஓர் அசையாத நாடகம் போன்றது. அதிலுள்ள ஒவ்வொன்றும் அதனதன் அழகு, சமநிலை, ஏனைய கூறுகளுடனான இயைபு ஆகியற்றைப் பொறுத்து அதற்கே உரிய இடத்தில் அமைக்கப்படுகிறது. “ஒரு எழுத்தணிப் படைப்பை வடிப்பது சிற்பம் செதுக்குவது போன்ற செயல்” என்று என் ஆசிரியர் கூறுவார். அதன் இறுதி வடிவம் கண்ணுக்குக் கவிதையாக, தாளில் தீட்டிய இசையாக, பார்வைக்கு இதமாக, ஆன்மாவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, ஒருவர் ஒரு எழுத்தணிப் படைப்பை வடிக்கும்போது, இந்தப் படைப்பு இவ்வுலகில் நெடுங்காலம் நீடிக்கப் போகிறது என்ற எண்ணத்தோடு அதைச் செய்தல் வேண்டும். எனவே, உலகில் நாம் விட்டுச்செல்ல விரும்பும் ஒன்றைக் குறித்து மிகுந்த பேணுதல் அவசியம். சுருங்கக் கூறின், பிறருக்கு விட்டுச்செல்லும் அளவுக்கு சிறப்பான ஒன்றைப் படைப்பது எழுத்தணி ஓவியனின் கடமை.

‘ஹால்’ என்ற நிலையை அடைவது

நாம் ஓர் எழுத்தணிப் படைப்பைப் பார்க்கும்போது, அதனுடன் ஓர் உரையாடல் நடைபெறுகிறது. வார்த்தைகள் அற்ற உரையாடல் அது. எழுத்துகளின் வடிவியலுக்கும், நமக்குள் உள்ள உயிரணுக்களின் வடிவியலுக்கும் இடையே மௌன சம்பாஷனை நடைபெறுகிறது.  இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது. ஏனென்றால், ஒவ்வொரு எழுத்தணிப் படைப்பும் அதைப் பார்ப்பவர் மனதில் மட்டும் தாக்கம் ஏற்படுத்துவதில்லை, அது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழலையும்கூட புதுவிதமாக மாற்றிவிடுகிறது. இதற்குக் காரணம், அதன் குறிப்பிட்ட வடிவியல் அம்சங்கள்தாம். அவை எப்படியோ அவ்விடம் நிலவும் சூழ்நிலையை முற்றிலும் மாற்றியமைத்து விடுகின்றன. மேலுமொரு உண்மை என்னவென்றால், எழுத்தணி ஓவியர்களாகிய நாம் சொற்களைத் தீட்டுகிறோம். சொற்கள் பொதுவாகவே, அவற்றை உச்சரிக்கும்போது சக்திவாய்ந்த தாக்கத்தை அல்லது ஆற்றலை ஏற்படுத்தக் கூடியவை.

மேலே, நூரியா கார்சியா வடித்த கலைப் படைப்பில், ‘ஹா’ என்ற எழுத்து தனித்து நிற்பதைக் காணலாம். இவ்வெழுத்து சூஃபிகளின் தியான அமர்வுகளில் ‘ஹால்’ என்ற நிலையை அடையப் பயன்படுத்தப்படுகிறது. ‘ஹால்’ என்பது வழக்கமான தன்னுணர்வு நிலையைக் காட்டிலும் ஓர் உயர்ந்த நிலை. அது நமது ஜீவனை, நமது உட்பொருளை, நமது இரட்சகனை நெருங்கிவரத் துணைபுரிகிறது.

ஆகவே, அதிலுள்ள சொற்களை நாம் மந்திரங்களாகப் புரிந்துகொண்டு உச்சரிப்போம் எனில், அவை மிகவும் குறிப்பிட்டதொரு தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும். சொற்களை எப்படி உச்சரிக்கிறோம் என்பதைப் பொறுத்து அவற்றின் தாக்கம் வேறுபடும். அதேபோலத்தான், எழுத்து வடிவிலான சொற்களும், அவை எப்படி எழுதப்படுகின்றன என்பதைப் பொறுத்து வெவ்வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.

இவ்விளைவைத்தான், ஒவ்வொரு பட்டையை வரையும்போதும் எழுத்தணி ஓவியர்கள் உருவாக்க முனைகின்றனர். ஒவ்வொரு பட்டையிலும் ஒளிந்துள்ள அழகின் ரகசியத்தை அண்மி வெளிப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.

(மூலம்: The Art of Islamic Calligraphy: Rituals and Traditional Art)

(தமிழில்: புன்யாமீன்)

Related posts

Leave a Comment