கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்

Loading

ஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக ‘ராஜு பையா சைனில் வித்யா மந்திர்’ என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்புகள் வரை அப்பள்ளியில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள ஆவதற்கான பயிற்சியும் கல்வியும் அளிக்கப்படும் எனவும், அடுத்த மாதம் முதலே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் எனவும் மேற்கு உ.பியின் வித்யா மந்திர் பொறுப்பாளர் அஜய் கோயல் சொல்லியுள்ளார். ஆறாம் வகுப்பில் 160 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இராணுவத் தியாகிகளின் பிள்ளைகளாக உள்ள56 பேர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். ராஜு பையா பிறந்த ஊரானா ஷிகார்பூரில் அவரது பிறந்த நாளன்றே பணி தொடங்கப்படும். ஆர்.எஸ்.எஸ்சின் ‘வித்யா பாரதி’ எனும் இந்த அமைப்பு இந்தியா முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படும் எனக் கூறும் அஜய் கோயல், “நிறைய இராணுவ அதிகாரிகள் எங்களுடனும் எங்களது கிளை அமைப்புகளுடனும் தொடர்பில் உள்ளனர். அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான சந்திப்புத் தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்” எனச் சொல்லியதுடன், இதுபோன்ற இராணுவப் பள்ளிகள் இன்னும் அதிகம் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார். நமது நாட்டிற்கு நிறைய இராணுவ அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் எனவும் தற்போது மாவட்டத்த்திற்கு ஒரு இராணுவப் பள்ளிதான் உண்டு என்பதால் இன்னும் அதிகப் பள்ளிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

‘மக்களை இராணுவமயப்படுத்துவது’ (militarisation) என்பது ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளில் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

இங்கொன்றைச் சொல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ்சின் வித்யா மந்திர் நடத்தும் பள்ளிகளில் இராணுவப் பள்ளிகள் இதுவரை ஏதுமில்லை. ஆனால் மகாராஷ்டிரத்தில் நாசிக்கில் ‘போன்சாலா இராணுவப் பள்ளி’ என்று ஓர் இராணுவப் பள்ளி உண்டு. மாலேகான் பயங்கரவாதத் தாக்குதலின்போது அதன் பெயர் பெரிய அளவில் அடிபட்டது. அந்தப் பள்ளியை 1937ல் உருவாக்கிய டாக்டர் மூஞ்சேதான் ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கும் காரணமாக இருந்தவர். ‘மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகம்’ (Central Hindu Military Education Society) எனும் அமைப்பால் நடத்தப்பட்டுவரும் அந்தப் பள்ளி ஆர்.எஸ்.எஸ்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாதபோதும் அதனுடன் நெருக்கமான தொடர்புடையதாகத்தான் இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அப்பள்ளி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆறுபேர்கள் கொல்லப்பட்டு, ஏராளமானோர் படுகாயம் அடைந்த மாலேகான் தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது 2008 செப் 16 அன்று சதிகாரர்கள் அங்குதான் கூடி சதித்திட்டம் தீட்டினர் என்கிற குற்றச்சாட்டு இங்கே நினைவுகூரத்தக்கது.

ஹிமானி சாவர்கர்: சாவர்கர்–கோட்சே இருவரின் வாரிசு

ஹிமானி சாவர்கர் (1947-2015) எனும் ‘துணிவுமிக்க’ப் பெண்மணியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்து மகாசபையில் மட்டுமின்றி மாலேகான் பயங்கரவாதத் தாக்குதலின்போதும் மேலுக்கு வந்த பெயர்களில் ஒன்று இது. ஒருகாலத்தில் சாவர்கர், மூஞ்சே (1872-1948) போன்றோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அதே பெயரில் 2006ல் அதேபோன்ற நோக்கங்களுடன் மீண்டும் உருவாக்கப்பட்டபோது அதற்குத் தலைமையேற்றவர் இந்த ‘வீரப் பெண்மணி’.

காந்தியைக் கொன்றதற்காகத் தூக்கிலேற்றப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகள் இவர். இந்த கோபால் கோட்சேயும் கொலைச் சதியில் பங்கேற்றதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதை அறிவீர்கள். காந்தியை அவர்கள் கொன்றபோது இந்த மகள் பத்து மாதக் குழந்தை. பெயர் அசிலதா. தந்தை விடுதலையாகி வந்தபோது இந்த மகளின் வயது 18. காந்தி கொலையில் சதிகாரர் எனவும், கோட்சேயின் கைகளில் காந்தியைக் கொன்று வீழ்த்துவதற்குத் துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்ட சாவர்கரின் தம்பியுமான நாராயண் சாவர்கருக்கு ஒரு மகன் உண்டு. அவன் அசிலதாவைத் திருமணம் செய்து கொண்டான். அதன்பின் அவள் ஹிமானி சாவர்க்கர் ஆனாள்.

ஹிமானி சாவர்கர்

ஆம், கோட்சே-சாவர்கர் என்கிற இரு புகழ்பெற்ற குடும்பங்களுக்கும் வாரிசானார் ஹிமானி சாவர்கர். கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்ற (architect) அவர் 2000 ஆண்டுக்குப் பின் இந்து மகாசபையில் இணைந்து செயல்பட்டார். 2006ல் சமீர் குல்கர்னியின் அழைப்பை ஏற்று இந்து மகாசபையின் தலைவராகவும் ஆனார். கோட்சே, சாவர்கர் எனும் இருபெரும் குடும்பங்களின் இணைவில் பிறந்தவர் என்றால் சொல்லவும் வேண்டுமா?

“குண்டு வெடிப்பிற்கு குண்டு வெடிப்பே பதிலடி. முஸ்லிம்களின் வன்முறையை அப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும்” என்று முழங்கியவர் இவர். பூனா ஒரு பிராமண மையம். காந்தி கொலைக்குப் பின் ஆங்காங்கு சிதறிக் கிடந்த மராத்தி பிராமணர்கள் பூனாவில் வந்து மையம்கொண்டனர் என்கிறார் சைகத் தத்தா (Outlook, Nov 17, 2008).

2008 செப்டம்பர் 29 அன்றுதான் மாலேகான் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. ஆறு பேர்கள் கொல்லப்பட்டு, 90 பேர்கள் காயம் அடைந்தனர். தற்போது பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சாத்வி பிரக்ஞாசிங் தாகூர் எனும் பெண் துறவி, சமீர் குல்கர்னி, ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அபய் ராதிர்கர், ரமேஷ் தவாலே அப்போது இராணுவத்தில் பதவியில் இருந்த லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீகாந்த் புரோகித் என மாலேகான் பயங்கரவாதத் தாக்குதலுக்காகக் கைதுசெய்யப்பட்ட எல்லோரும் ஹிமானி சாவர்கரின் தலைமையில் இயங்கிய ‘அபிநவ் பாரத்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“சென்று போன பல நூற்றாண்டுகளில் பல இலட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்களைப் பழி வாங்குவோம்” எனும் முழக்கத்தை இவர்கள் வைத்தனர். மும்பையில் இந்த இயக்கம் பதிவு செய்யப்பட்டாலும் பூனாவிலேயே அது மையம் கொண்டிருந்தது. போபால், விடிஷா, ராங்சன் முதலான மத்தியப் பிரதேச மாவட்டங்களிலும் அது பரவி இருந்தது என அவுட்லுக் இதழ் அப்போது எழுதியது. “முஸ்லிம்கள் தரும சத்ருக்கள்… அனுதாபமோ மன்னிப்போ கிடையாது, இனி போர்தான். அது தீவிரமாக இருக்கும்..” என அவர்கள் முழங்கினர். ரமேஷ் உபாத்யாயா இந்த இயக்கத்தின் செயல்தலைவராக இருந்தார்.

சிவநாராயண்சிங் கல்சங்கரா, ராமச்சந்திர கல்சங்கரா முதலான வேறு சிலரும் மாலேகான் தாக்குதலில் பங்குபெற்றதாகக் குற்றம்சாட்டிய பயங்கரவாத எதிர்ப்புக் காவற்படை (ATS), ராமச்சந்திர ராவும் பிரக்ஞாவும் இது குறித்து உரையாடிய ஒலிநாடா என்று ஓர் ஆதாரத்தையும் முன்வைத்தது. நாசிக்கில் உள்ள போன்சாலா இராணுவப் பள்ளியில்தான் அவர்கள் கூடி சதித்திட்டம் தீட்டினர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

டாக்டர் மூஞ்சேயின் பாசிசத் தொடர்புகள்

போன்சாலா இராணுவப் பள்ளி
போன்சாலா இராணுவப் பள்ளி

தற்போது மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 160 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பள்ளி (Bhonsala Military School) ஆர்.எஸ்.எஸ்சுக்கு வித்திட்ட டாக்டர் பாலகிருஷ்ண சிவராம்ஜி மூஞ்சேயால் (Dr B.S.Moonje) தொடங்கப்பட்டது என்பது அறியத்தக்கது. லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட மூஞ்சே 1931 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தில் பெரும்பகுதி அப்போது ஐரோப்பாவில் கிளைத்திருந்த பல்வேறு பாசிச நிறுவனங்கள், பள்ளிகள், உடற்பயிற்சிக் கழகங்கள ஆகியவற்றைப் பார்ப்பதில் கழிந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய அக்காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஐரோப்பாவில் பாசிச நிறுவனங்கள் கிளைத்திருந்தன. அவற்றை வியப்புடன் பார்த்துச் சிலிர்த்த மூஞ்சே, தனது பயணத்தின் உச்சகட்டமாக இத்தாலியச் சர்வாதிகாரி சிக்னோர் முசோலினியைச் சந்தித்தார் (விவரங்களுக்குப் பார்க்க: நான் எழுதிய ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்,’ உயிர்மை வெளியீடு, பக். 184-188).

அங்குள்ள பாசிச அமைப்புகளையும் நிறுவனங்களையும் விதந்து பாராட்டிய மூஞ்சே, “இராணுவத் தன்மையிலான இந்தியப் புத்துயிர்ப்புக்கு இத்தகைய அமைப்புகளின் தேவை அதிகமாக உள்ளது” என்று தன் கருத்தையும் முன்வைத்து, முசோலினியின் வாழ்த்துக்களோடு திரும்பிய மூங்சே தனது முக்கியச் சீடரும் ஆர்.எஸ்,எஸ் அமைக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக இருந்தவருமான ஹெட்கேவருடன் இணைந்து அப்பணிகளைத் தொடங்கினார்,

டாக்டர் மூஞ்சே

அப்போது ஒரு மராட்டிய இதழுக்குப் பேட்டி அளித்த மூஞ்சே, “உண்மையில் நமது தலைவர்கள் ஜெர்மானிய இளைஞர் அமைப்பு ‘பலில்லா’ மற்றும் இத்தாலிய பாசிச அமைப்புகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு அவை மிகவும் பொருத்தமானவை” என்றார். மூஞ்சே, ஹெட்கேவர், லாலு கோகலே மூவரும் இத்திசையில் தீவிரமாகச் செயல்பட்டனர். 1934 ஜனவரி 31 அன்று ஹெட்கேவர் தலைமையில் ‘பாசிசமும் முசோலினியும்’ எனும் தலைப்பில் மாநாடொன்றும் நடத்தப்பட்டது.

பின்னர் மூஞ்சே மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்திற்கான பணியைத் தொடங்கினார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளிகளின் மாதிரியில் இது அமைக்கப்படும் என வெளிப்படையாகப் பேசி இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூஞ்சே உருவாக்கிய ‘மத்திய இராணுவக் கழகம் மற்றும் இராணுவப் பள்ளிக்கான திட்ட வரைவு’ எனும் ஆவணத்தின் முன்னுரையில் (1935),

“வெற்றியை நோக்கிய பெரும் இலட்சியத்துடன், மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதி உடையவர்களாக நம் சிறுவர்களைத் தயாரிப்பதே நம் பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும், நமது தரப்பில் ஆகக் குறைந்த இழப்புகளை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் இந்த வெற்றி அமைய வேண்டும்”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“அமைதி என்பது கோடிக்கணக்கான எஃகு வாட்களின் மீதுதான் கட்டப்பட வேண்டும்” எனும் முசோலினியின் மேற்கோள், ஜெர்மானியப் பேராசிரியர் ஈவால்டு பான்சே எழுதிய ‘இராணுவ விஞ்ஞானம்’ எனும் நூலிலிருந்து, “குழந்தைப் பருவம் முதல் ஒரு நாட்டின் சிந்தனையில் போர் என்கிற எண்ணம் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். களத்தில் செத்துக் கொண்டிருக்கும் ஒரு போராளி தனது இரத்தம் தேசக் கடவுளின் பீடத்தில் பாய்கிறது என்று அறிவானேயானால் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவுவான்” என்பன போன்ற பல மேற்கோள்களுடன் அமைந்த அந்த அறிக்கை முத்தாய்ப்பாக,

“எனவே, இனி குடிமகனுக்கும் படைவீரனுக்கும் இடையிலான வேறுபாடுகள், சிவிலியனுக்கும் சீருடைக்காரனுக்கும் இடையிலான வேறுபாடுகள் இல்லாதொழியும்”

எனப் பிரகடனம் செய்தது.

இத்திசையில் இத்தாலியத் தூதரகங்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டு பல வேலைகள் நடந்தன (பார்க்க: முன் குறிப்பிட்ட என் நூல் பக்:186-188). முசோலினியின் பாசிச அறிக்கை தாம்லே என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு (1939) தொடர்ச்சியாக அது அவர்களின் ‘லோகாண்டி மோர்ச்சா’ எனும் இதழில் வெளியிடப்பட்டது.

முன்னதாக பாசிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இங்கு உருவான மற்றொரு அமைப்பான எம்.ஆர்.ஜெயகரின் ‘ஸ்வஸ்திகா கழகம்’ (1929) எனும் அமைப்பும் சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சியை வற்புறுத்தியது. இத்தாலியத் தூதரகம் பெரிய அளவில் அவர்களுடன் இந்த அம்சங்களில் ஒத்துழைத்தது. மும்பை ஆவணக் காப்பகத்தில் உள்ள பிரிட்டிஷ் உளவுத்துறைக் குறிப்புகளில் இது குறித்த பல செய்திகள் உள்ளன.

இப்படியான ஒரு பின்னணியில்தான் டாக்டர் மூஞ்சே ‘மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை நாசிக்கை மையமாகக் கொண்டு 1935ல் உருவாக்கினார். 1937ல் குவாலியர் மகாராஜா ஜிவாஜிராவ் சிந்தியாவின் உதவியுடனும் வாழ்த்துக்களுடனும் 90 மாணவர்களுடன் உருவானதுதான் ‘போன்சாலா இராணுவப் பள்ளி’ (Bhonsala Military School, Nasik, Maharashtra). அப்போது மூஞ்சேயின் வயது 65.

இந்தப் பள்ளியில்தான் 2008 செப் 16 அன்று மாலேகான் குண்டு வெடிப்புக்குத் திட்டம் தீட்டப்பட்டது எனக் குற்றம்சாட்டியது, இதை விசாரித்த பயங்கரவாத எதிர்ப்புப்படை. (ATS).

“குண்டுக்குக் குண்டு ஏன் பதிலாக இருக்க முடியாது?” – ஹிமானி சாவர்கர்

போன்சாலா இராணுவப் பள்ளியில் இப்படி ஒரு சதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எப்படிச் சாத்தியமானது என பள்ளியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான டி.கே. குல்கர்னியை விசாரணை அமைப்பு கேட்டபோது, “மாலேகான் பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீகாந்த் புரோகித் வேண்டிக் கொண்டதால் அனுமதி அளிக்கப்பட்டது” என்று பதில் வந்தது. அப்போது பள்ளியில் புதிதாகப் பதவி ஏற்றிருந்த கமான்டன்ட் கர்னல் எஸ்.எஸ். ராய்கரும் புரோகித்தும் ஒன்றாக வேலை செய்தவர்கள் என்பதால் எளிதில் அந்தச் சந்திப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்றனர். “அது (அதாவது மலேகான் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான அமைப்பு) அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு அமைப்பு” என்று மட்டும் தங்களுக்குத் தெரியும் என்றார் குல்கர்னி.

டி.கே. குல்கர்னி
டி.கே. குல்கர்னி

புரோகித் நாசிக்கில் உள்ள ‘இராணுவ மக்கள் தொடர்புப் பிரிவில்’ (Army Liaison Unit –ALU) பணியாற்ற நேர்ந்தபோது போன்சாலா பள்ளியுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஆண்டுதோறும் இப்பள்ளியில் நடக்கும் நான்கு சிறப்புரைகள் சிலவற்றில் புரோகித்தின் உரைகள் இடம்பெற்றதையும் குல்கர்னி கூறினார். ராய்கருக்கும் புரோகித்துக்குமான தொடர்பையும் ATS விசாரித்தது.

இராணுவத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த ராய்கர், ஏன் முன்கூட்டிய பதவி விலகலைக் கோரினார்? பொதுவாகக் கருணை அடிப்படை அல்லது பதவி உயர்வு மறுக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில்தான் இப்படி பதவி விலகலை யாரும் கோருவர். ஆனால் ராய்கரைப் பொருத்தமட்டில் அப்படி ஏதும் பிரச்சினையில்லை. இராணுவம் அவரை சிறப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு எல்லாம் அனுப்பியுள்ள சூழலில், அவர் பதவி விகுவதற்கு எந்த நியாயமும் இல்லை. காரணம் இல்லாமல் இராணுவம் எளிதில் இப்படி பணிவிலகலுக்கு அனுமதிப்பதும் இல்லை. ஆனால் ராய்கர் விடயத்தில் எல்லாம் நடந்தது. பதவி விலகும் அந்த அதிகாரி இப்படியான ஒரு பள்ளிக்குப் பொறுப்பேற்கப் போகிறார் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை,

இப்படியான வேறொரு இராணுவப் பயிற்சியகமான Maharashtra Military Foundation எனும் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேறி இராணுவப் பதவிக்குச் சென்றவர்தான் குற்றம்சாட்டப்பட்ட லெப்டினன்ட் கவர்னர் புரோகித்தும் கூட. அதன் தலைவராக இருந்த லெப்டினன்ட் கவர்னர் ஜயந்த சிதாலே என்பவரையும் ‘அவுட்லுக்’ இதழுக்காக சைகத் தத்தா சந்தித்துப் பதிவுசெய்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான் சிதாலே இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட என் பசங்க இப்போது இராணுவத்தின் மூன்று ‘சர்வீஸ்’களிலும் உள்ளனர். இந்தத் தேசத்திற்காக எதையும் செய்யும் நோக்கில் அவர்கள் ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளனர்” என்று கூறும் அவர், கடந்த இருபதாண்டுகளில் தன்னிடம் பயிற்சி பெற்று இராணுவத்தில் சேர்ந்து உயர் பதவிகளில் உள்ளோரின் கையொப்பங்கள் அடங்கிய ‘பார்வையாளர் புத்தகம்’ (visitors book) ஒன்றை வைத்துள்ளார். அதில் கையொப்பமிட்டு உள்ளவர்களில் ஒருவர்தான் லெப் கவர்னர் புரோகித். 1993 பிப் 20 அன்று அந்தக் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

“அவன் ஒரு புத்திசாலிப் பையன்….” என்கிறார் சிதாலே. படைவீரர்களுக்கான உரிமைகளும் பெருமைகளும் அங்கீகரிக்கப்படாத வெறுப்புதான் இப்படியான மாலேகான் போன்ற தாக்குதல்களில் புரோகித் போன்றவர்கள் பங்குபெறுவதற்குக் காரணமாக்கிவிடுகிறது என்பது சிதாலேயின் கருத்து. 2002ம் ஆண்டில் “அர்ப்பணிப்பு மிக்க மகாராஷ்டிர இளைஞர்களின் தற்கொலை கமாண்டோ படை” ஒன்றை அவர் உருவாக்கியதாகவும் அவர் அவுட்லுக் பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார். இந்தச் செய்தி பரவியதும் இராணுவ அதிகாரிகள் வந்து அதைக் கைவிடும்படி கோரினராம்.

“பலவகையான பயங்கரவாதங்கள் உண்டு. நகைகளைப் பறித்துக்கொண்டு ஓடுவது முதல், பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதங்களும் உண்டு. அவர்கள் இங்குள்ள ஒரு பேருந்தை வெடிவைத்துத் தகர்க்க முடியுமானால், நாம் அங்குள்ள ஐந்து பேருந்துகளைத் தகர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வகையான பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதுவே வழி” என்றார் அந்த ஓய்வுபெற்ற லெப் கவ்ர்னல் ஜயந்த் சிதாலே.

ஹிமானி சாவர்கரிடம் தொடங்கினோம். அவரது கூற்றோடு முடிப்போம். “என் கன்னத்தில் ஒருவர் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டும் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் திருப்பி அடிக்க வேண்டும். குண்டுக்கு குண்டு ஏன் பதிலாக இருக்க முடியாது.” அச்சமாகத்தான் இருக்கிறது.

பயன்பட்ட கட்டுரைகள்:

Related posts

One Thought to “ஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்”

  1. Ashik

    மிக அருமையான கட்டுரை.
    வாழ்த்துக்கள்.

Leave a Comment