குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்

Loading

நீங்கள் தேசியத்தை எந்தளவு விறைப்பாகவும் கறாராகவும் வரைவிலக்கணம் செய்கிறீர்களோ, அந்தளவு அதற்குப் பாதகமான எதிர்வினை உண்டாகும். அம்பேத்கர் எப்போதும் சொல்வதுபோல், சாதி (Caste) என்ற ஒன்று இருக்கும்வரை சாதி விலக்கம் (Outcaste) என்ற ஒன்று இருந்தே தீரும்.

அதேபோல், ‘இந்தியம்’ என்று நீங்கள் சொல்லும் கற்பனையான தேசியம் இருக்கும் காலமெல்லாம், (அதற்கு வழமையான வரைவிலக்கணம் கொடுக்கப்படும் காலமெல்லாம்), அதனால் அன்னியப் படுத்தப்பட்டோர் என்று மக்களில் ஒரு பகுதியினர் இருக்கவே செய்வார்கள். அவர்கள் தம்மை அத்தேசியத்தின் ஒரு பகுதியாக உணரமாட்டார்கள்.

“உங்களின் கற்பனைத் தேசியத்திற்குள் நாங்கள் உள்ளடங்க விரும்பவில்லை” என்று அவர்கள் கூறும்போது, நீங்கள் அவர்களை கொடுமைகளுக்கு ஆளாக்குகிறீர்கள்; பலவந்தம் செய்கிறீர்கள். “இல்லை, அவர்களும் அதற்குள் அடங்குவார்கள்” என்று அடம் பிடிக்கிறீர்கள்.

‘உங்களின் கற்பனைத் தேசியத்திற்குள் நாங்கள் உள்ளடங்க மாட்டோம்’ என்ற அவர்களின் மனவுறுதியும், தம்முடையதல்லாத தேசியத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்ற அவர்களின் வேட்கையும், தமக்கென்று ஒரு வாழிடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் உங்களின் அடக்குமுறையால் மென்மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தேசிய அரசு (nation-state) எனும் கருத்தாக்கத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்பது முற்றிலும் தனி விவகாரம். மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டும், அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டும், குருடாக்கப்பட்டுக் கொண்டும், சிறையிலடைக்கப்பட்டுக் கொண்டும் இருக்குமொரு நிலையில், தமது வருங்கால தேசிய அரசின் இயல்பு என்னவாக இருக்கும்? எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பது பற்றி பெரிய விவாதமொன்றைத் துவக்கி நடத்துவதென்பது கொஞ்சமும் சாத்தியமற்றது.

அவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? “உங்களின் சமூக விவகாரங்களை எப்படி ஒழுங்கு செய்துகொள்ளப் போகிறீர்கள் என்பது பற்றி புதியதொரு கருத்தாக்கத்தை நீங்கள் உருவாக்கும்வரை, உங்களின் நிலைமையில் மாற்றம் எதனையும் எதிர்பார்க்கக் கூடாது” என்று சொல்லப் போகிறீர்களா?

தேசிய அரசின் கீழ் பாதுகாப்பானவோர் சூழமைவிலேயே அப்படியொரு விவாதம் நிகழமுடியும். ஒரு சமூகம் தனது விவகாரங்களை எப்படி ஒழுங்கு செய்துகொள்ள வேண்டுமென்ற உரையாடலை ஒரு போர்க்களத்தில் இருந்துகொண்டு நிகழ்த்த முடியாது.

மக்கள் சுதந்திரமான நிலையில் இருந்து விவாதிக்க வேண்டிய சர்சைக்குரிய கேள்வி அது. மாற்றுக் கருத்து கொண்டோரினால் சுட்டுக் கொல்லப்படுவோம் என்ற அச்சம் இல்லாத நிலையில் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு தேசத்தையோ அரசையோ ஒரு ‘நிர்வாக அமைப்பு’ என்று நோக்குவதென்பது ஒன்று. (அதை ஒரு நடைமுறைசார் தேவை என்று சொல்லலாம்). ஆனால், அவ்வரசின் மீது மறைபொருள் பெறுமானங்களைச் சுமத்தி நோக்குவதென்பது முற்றிலும் வேறானது. தேசிய அரசுக்கு ஒருவித இறைமைத் தன்மை வழங்குவதற்கு ஒப்பாக அது அமைந்துவிடுகிறது.

மாபெரும் தேசங்களின் மகிமைக்கும் ஈவிரக்கமற்ற படுகொலைகளை நிகழ்த்துவதற்கான அவற்றின் திறமைக்கும் நேரடித் தொடர்பு இல்லையா? ஒரு நாட்டின் “வெற்றியின்” உயரமானது, அதன் அறம்சார் வீழ்ச்சியின் ஆழத்தைக் குறிப்பதாகத்தானே எப்போதும் இருக்கிறது?!

(ஒரு நேர்காணலில், காஷ்மீர் குறித்த கேள்விக்கு அருந்ததி ராய் வழங்கிய பதிலை மட்டும் இங்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளோம்.)

(தமிழில்: உவைஸ் அஹமது)

Related posts

Leave a Comment