kashmir 370 tamilகாணொளிகள் குறும்பதிவுகள் 

சட்டப்பிரிவு 370 நீக்கம்: வரலாறும் அரசியலும்

Loading

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

2019ல் காஷ்மீரில் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு கடந்த டிசம்பர் 11 அன்று வெளியானது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பில் 370ஆவது சட்டப் பிரிவு போர்ச் சூழலுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் மோடி அரசு அந்தச் சட்டத்தை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு அந்த மாநிலத்தை இரண்டாகப் பிளந்து, ஜம்மு காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாகவும் ஆக்கியது. இந்த சர்வாதிகாரப் போக்கு பற்றி நீதிமன்றம் வாய்திறக்கவில்லை. ஆனால், மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

370ஆவது பிரிவு உருவான பின்னணி என்ன?

இந்தியாவும் பாகிஸ்தானும் அவை மேற்கொண்ட நான்கு போர்களில் மூன்று காஷ்மீருக்கானவை. தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் இந்த இரண்டு நாடுகளுடனும் இல்லை. பிறகுதான் இது யாருக்கானது என்ற பிரச்சினை மேலெழுந்தது. 1947ல் இவ்விரு நாடுகளும் பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு முதல் போர் மூண்டது. 1949ல் அது முடிவுக்கு வந்தது. எப்படி என்றால், ஐநா சபையே தலையிட்டு காஷ்மீரை இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் ஒரு பகுதியையும், பாகிஸ்தானிடம் ஒரு பகுதியையும் விடுவதன் மூலம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது.

இந்தப் பின்னணியில்தான் இந்திய அரசமைப்பின் 370ஆவது பிரிவு 1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி, தங்களை நிர்வகித்துக்கொள்வதற்கான அதிகாரத்தைக் கொடுத்தது. ராணுவம், வெளியுறவு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகியவை தவிர்த்து மற்ற விவகாரங்களில் சுயமாக சட்டங்கள் இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தையும் வழங்கியது. இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன்தான் அங்கு நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் தமக்கென்று சொந்த அரசியலமைப்புச் சட்டம், கொடி, சட்டங்கள் இயற்றுதல் ஆகியன அவர்களுக்கு வழங்கப்பட்டன. சொல்லப்போனால், 1953ஆம் ஆண்டுவரை காஷ்மீர் அதன் சொந்த பிரதமர், ஜனாதிபதியைக்கூட கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்து, அந்தப் பதவிகளையே ஒழித்துக்கட்டியது மத்திய அரசு.

370 சட்டப்பிரிவுடன் 35ஏ பிரிவையும் நாம் பார்க்க வேண்டும். 35ஏ 1954ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வெளி மாநிலத்தவர்கள் அங்கே நிலமோ சொத்துக்களோ வாங்க முடியாது. மாநில அரசுப் பணிகளில் சேர முடியாது முதலான சலுகைகள் வழங்கப்பட்டன. இவையெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

370 நீக்கம்: பாதிப்புகள் என்ன?

2019ல் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி இருந்தபோது ஜம்மு காஷ்மீரின் சட்டமன்ற ஒப்புதலே இல்லாமல் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து, இணையதளத்தையெல்லாம் துண்டுத்து, ராணுவத்தை பெருமளவில் குவித்து எதேச்சதிகாரமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டார்கள். அதை இன்றைக்கு நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது துரதிருஷ்டம்தான். கூட்டாட்சிக் கொள்கைக்கு, மாநில உரிமைக்கு முற்றிலும் பாதகமான ஒரு கருத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான காஷ்மீரில் இந்துக் குடியேற்றம் நடக்கலாம் என்ற ஐயம் முன்வைக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிலும் பாதிப்பு இருக்கும். பெரிய பெரிய நிறுவனங்கள் பெரும் முதலீடுகளோடு தங்களின் வியாபாரத்தைத் தொடங்கினால் அது உள்ளூர் மக்களை பாதிக்கும் என்கிறார்கள். வெளி மாநிலத்தவர்கள் அங்கே நிரப்பப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இது மட்டுமின்றி, பாஜக இந்தத் தீர்ப்பின் மூலம் ஒரு அரசியல் மைலேஜை இந்திப் பேசும் மாநிலங்களில் பெறும். ஏனென்றால், காஷ்மீர் விவகாரம் பற்றி அந்த மக்களிடம் ஆர்எஸ்எஸ், பாஜக சார்பு கண்ணோட்டம் மட்டுமே சென்றடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் அதற்கு மாறான ஒரு கருத்தோட்டத்தைக் கட்டமைக்கவில்லை. அவர்களேகூட மோசமான கண்ணோட்டம் கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

இறுதியாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளை இங்கு குறிப்பிடுதல் தகும். “இது மரண தண்டனையைப் போன்றது; ஜம்மு கஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கு” என்று மெஹ்பூபா முஃப்தி காட்டமாகக் கூறியிருக்கிறார். அசதுத்தீன் உவைசி, “பாஜகவின் இந்த நகர்வு இன்று சட்டப்படி செல்லுபடியாகியுள்ளது. நாளை சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் அல்லது மும்பையை யூனியன் பிரதேசமாக பாஜக மாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் மாநில உரிமை, மாநில சுயாட்சி என்றெல்லாம் கூக்குரல் எழுப்பும் திமுக இந்தத் தீர்ப்புக்கு எந்தப் பெரிய எதிர்வினையையும் ஆற்றவில்லை. சீமான், “சட்டம் தற்காலிகமானதல்ல, இந்தியாவுடன் இணைந்ததுதான் தற்காலிகமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மற்றபடி, தீர்ப்பு தொடர்பாக ஆழமான விவாதங்கள் எதுவும் தமிழகத்தில் எழவில்லை என்பது துரதிருஷ்டம்தான்.

Related posts

Leave a Comment