கட்டுரைகள் 

மார்டின் லிங்ஸ்: ஓர் அறிமுகம்

Loading

[2005-05-12-ல் மார்டின் லிங்ஸ் என்ற அபூ பக்ரு அல்-சிராஜுத்தீன் தனது 96 வயதில் இறையடி சேர்ந்ததை யடுத்து, The Journal of Islam & Science, Vol. 3, No. 2-ல் டாக்டர் முஸஃப்பர் இக்பால் எழுதிய நினைவேந்தல் கட்டுரையை தழுவி இதை ஆக்கியிருக்கிறேன். மெல்லினம் பதிப்பித்த ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற நூலில் இது பிரசுரமாகியுள்ளது.]

பிறப்பு, கல்வி, ஆசிரியப் பணி

மார்டின் லிங்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் ஷெய்க் அபூ பக்கர் சிராஜுத்தீன் 1909-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள பர்னேஜ் நகரத்தில் பிறந்தார். மார்டின் லிங்ஸின் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணி நியமனம் பெற்றிருந்த காரணத்தால், லிங்ஸ் தனது குழந்தைப் பருவத்தை அமெரிக்காவில் செலவிட்டார். அசல் ஆங்கிலக் கல்வியை பகுதியளவேனும் சுவைக்கும் எண்ணத்தில் பொருத்தமானவொரு தருணத்தில் அவர் இங்கிலாந்து திரும்பினார்.

முதலில் பிரிஸ்டலில் உள்ள கிளிஃப்டன் கல்லூரியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள மாக்டலென் கல்லூரியிலும் ஆங்கிலத்தில் பட்டம் ஈட்டினார்.பிரபல ஆங்கில நாவலாசிரியரும் மரபுக் கவிஞரும் இலக்கியத் விமர்சகருமான சி.எஸ். லூயிஸ் (1898-1963) அப்போது ஆக்ஸ்ஃபோர்டு மாக்டலென் கல்லூரியில் ஆங்கில வழிகாட்டியாக இருந்தார். இளைஞர் லிங்ஸ் மீது சி.எஸ். லூயிஸின் துவக்ககாலச் செல்வாக்கு மகத்தானது. சி.எஸ். லூயிஸின் செந்நெறிக்காலக் கவிதைப் பாடங்கள் லிங்ஸை முற்றாக ஆட்கொண்டு விட்டன எனலாம்.

ஆங்கிலக் கவிதை மீதான இக்காதலுடன் கூடுதலாக, லூயிஸிடமிருந்து லிங்ஸ் மத்திய காலங்களின் விஞ்சிய மேன்மை மீதான ஈர்ப்பையும் வளர்த்துக் கொண்டார். தாந்தே எழுதிய உலகப் பிரசித்திபெற்ற இலக்கியப் படைப்பான ‘தெய்வீக நகைச்சுவை’யை (Divine Comedy) அதன் அசல் மொழியிலேயே வாசித்து அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, மார்டின் லிங்ஸ் இத்தாலிய மொழியையும் கற்றுத்தேர்ந்தார். இந்த ஆசையை லிங்ஸிடம் பற்ற வைத்துதும் கூட சி.எஸ். லூயிஸ் தான்.

சி.எஸ். லூயிஸ்
சி.எஸ். லூயிஸ்

மத்திய காலங்கள் மீதான லிங்ஸின் இக்காதல் வெறுமனே கல்வியியல் சார்ந்ததாக மாத்திரம் இருக்கவில்லை. தனது குழந்தைப் பருவம் முதலே அவர் “பழங்காலங்கள் மீது ஒருவிதமான ஏக்கமிகு தன்னுணர்வைப்” பெற்றிருந்தார். “அனைத்திற்கும் மேலாக, நவீன நாகரிகத்தின் உச்சபட்ச அலங்கோலம் என்னைத் திடுக்குறச் செய்தது. ஏன் நான் ஏதேனும் ஒரு பழங்காலத்தில் பிறக்கவில்லை?” இவ்வாறு உள்ளுக்குள்ளே பற்றியெரிந்த நெருப்பின் காரணமாகவே, அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த இரண்டு ஆண்டுகளில் சி.எஸ். லூயிஸின் பாலும் மத்திய காலங்களின் உயர்தரக் கவிதைகளின் பாலும் ஈர்க்கப்பட்டிருந்தார்.

மார்டின் லிங்ஸ் தனது பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து வெளியேறியபோது, தனக்கு “கவிதை எழுதுவது தவிர்த்து வேறெந்த மெய்யான குறிக்கோளும் இருக்கவில்லை” என்று கூறுகிறார். மாக்டலென் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தனது இரண்டாம் கல்வியாண்டு இறுதிவாக்கில், ஒரு இசை நாடகத்தை எழுதி சி.எஸ். லூயிஸுக்கு அனுப்பிவைத்தார். அதற்கு மறுமொழி எழுதிய லூயிஸ், “கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலான வித்தியாசம் பற்றி எனக்கு மிகத் திட்டவட்டமான ஒரு புரிதல் இருக்கிறது; இது சந்தேகத்துக்கிடமில்லாமல் ஒரு கவிதையே” என்றார். லிங்ஸின் இந்த இசைநாடகம் 1930-ல் மாக்டலென் கல்லூரியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

1932-ல் ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற லிங்ஸ், ஆங்கிலப் பாடங்கள் போதிப்பவராக போலந்தில் ஒரு வருடத்தைச் செலவிட்டார். தொடர்ந்து, லிதுவேனியாவிலுள்ள கவ்னாஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்த வேலை, அவருக்கிருந்த ஆங்கில ஆர்வம் ஆகியவற்றின் துணையுடன் லிங்ஸ் இக்காலகட்டத்தில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பிக்கும் ஒரு பேராசிரியராக உருவெடுக்கும் திசையில் கல்வியியல் உலகில் சிறப்புடன் முன்னேறியதாகத் தெரிகிறது. பழையன பற்றிய ஒரு வலுவான ஏக்கமும் கவிதை புனைவதன் மீது ஒரு தனிவிருப்பமும் கொண்ட; தனது கவிப்புலனை மெருகேற்றுவதிலும், தனது விருப்பத்தெரிவுத் துறையின் விளங்காப் புதிர்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும் நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்த தனது இருபதுகளின் மத்தியிலிருந்த ஒரு இளைஞரைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத் தாகமும் தேடலும்

இதனைத்தும் இருப்பினும், மீப்பெரும் ஆன்மீக வேட்கையில் பற்றியெரிந்த அவரின் கவித்துவ ஆன்மா நிச்சயத்தன்மைக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த காலத்திலேயே தனிப்பட்ட வணக்கமல்லாத மற்றெல்லா வடிவங்களில் அமைந்த வணக்க வழிபாடுகளையும் தாம் கைவிட்டு விட்டதாகவும்…, இயற்கையையும் கலையையும் மையமாகக் கொண்ட பேரழகின் ‘மதத்தையே’ தமக்கு வரித்துக் கொண்டதாகவும் அவர் பிறிதொரு இடத்தில் கூறுகிறார்.

இந்நிலையில், 1930-கள் மத்தியில் பிரெஞ்சு எழுத்தாளரும் மீவியற்பியல் (Meta-physics) புலத்தில் முக்கிய ஆளுமையுமான ரெனே கினானின் (ஷெய்க் அப்துல் வாஹித் யஹ்யா, 1886-1951) ஆக்கங்களோடு லிங்ஸுக்கு முதன்முதலாகப் பரிச்சயம் ஏற்பட்டது. அதை நினைவு கூறும் லிங்ஸ், “நான் எனது வாழ்வில் முதன்முறையாக சத்தியத்தை முகத்துக்கு நேரே சந்தித்ததாக உணர்ந்தேன்” என்கிறார். விடயங்களின் அந்தரங்க பரிமாணங்களை லிங்ஸ் கினானிடமிருந்து கற்றார். இறைமதங்கள் அனைத்தினதும் அடிப்படையான ஒருமைப்பாடு குறித்து லிங்ஸின் இதயக் கண்ணைத் திறந்தது மூலம், மதம் குறித்து அவருக்கிருந்த குறிப்பிட்ட சில அகத்தடைகளை கினான் அகற்றினார்.

அந்த இறைமதங்களுள் எவ்வொன்றைத் தாம் பின்பற்றப் போகிறோம் என்பதை லிங்ஸ் அச்சமயத்தில் அறிந்திருக்கவில்லை என்றாலும், மதங்களின் பன்மைத்துவம் என்பது ஒரு வட்டத்தின் பரிதியில் அமைந்திருக்கும் புள்ளிகளைப் போன்றது; அந்தப் புள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரு ஆரத்தால் மையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொண்ட மறுகணமே, அவர் இங்ஙனம் உணர்ந்தார்: “பரிதியிலிருந்து மையம் நோக்கிச் செல்லும் இந்த ஆரங்களுள் ஏதோவொன்றில் தான் எனக்கான இடம் அமைந்திருக்கிறது.” “அகமியப் பாதைக்குள் பிரவேசிப்பதற்கு முன் தானொரு ஆன்மீக ஆசானைக் கண்டடைய வேண்டும் என்பதையும், அப்பாதைக்குள் நுழைவதற்கான தீட்சையை தாம் அவரிடமிருந்தே பெற வேண்டும் என்பதையும்” லிங்ஸ் முற்று முடிவான தெளிவுடன் கற்றுக்கொண்டது கினானிடமிருந்துதான்.

14225355_1217200918321597_6105172185495363538_n
ரெனே கினான்

ஒருவிதத்தில் சொல்வதாயின் ரெனே கினானும் சி.எஸ். லூயிஸும் எதிரெதிர்த் துருவங்கள். சி.எஸ். லூயிஸின் கடிதத் தொகுப்புகள் அவர் கினானை மிகத்தீவிரமாக எதிர்த்து வந்தார் என்பதைத் தெரிவிக்கின்றன. எனினும், இவ்விரு எதிரெதிர்த் துருவங்களுள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இத்தகையவொரு சுருக்கமான காலத்திற்குள் ஒருவர் பயணிக்கிறார் என்றால், அது சிறப்பு இறைக் கிருபையாகவே இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

அப்போது ரெனே கினான் கெய்ரோவில் வசித்துவந்தார். மார்டின் லிங்ஸ் கினானுக்கு கடிதங்கள் எழுதத் துவங்கினார். மேலும், இந்தக் காலகட்டத்தில்தான் ஓரியண்ட் எட் ஆக்ஸிடெண்ட் (1924) என்ற கினானின் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துவங்கியிருந்தார்.ரெனே கினானின் எழுத்தாக்கங்களுடன் ஏற்பட்ட இந்தப் பரிச்சயத்தின் ஊடாகவே சமயச் சடங்குகளின் முக்கியத்துவம் பற்றி லிங்ஸ் புரிந்துகொண்டார்.

வழிபாட்டுக் கிரியைகள் பற்றிய ஆழமான புரிதலாலும், மிகக் கறாரான நியமங்களோடு அவற்றை நிறைவேற்றி வரவேண்டும் என்கிற விருப்பத்தாலும் மார்டின் லிங்ஸ் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்து முனைப்பானதொரு ஆன்மீக வாழ்வினுள் பிரவேசித்தார். தினமும் காலை கூட்டுவழிபாடு, மாலை வழிபாடு என்றும், பகற்பொழுதெல்லாம் ஜெபமாலைகளை மையமாகக் கொண்டதாகவும் மாறியது. இக்காலகட்டத்தில் லிங்ஸுக்கு ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்ந்தது ரெனே கினான் எழுதிய வேதாந்தாவின் ஒளியில் மனிதனும் அவனது உருவாக்கமும் (1945) என்ற நூலாகும்.

மேலும், அவர் சமஸ்கிருதம் கற்பதிலும் பற்றார்வத்தோடு தினசரி நேரத்தைச் செலவிட்டு வந்தார். இதற்குக் காரணம், மதம் குறித்த தனது இறுதித்தெரிவு இந்துயிசமாகவே இருக்கப்போகிறது என்று அவர் நம்பியிருந்தார். இதனைத்திற்கும் மேல், அவரின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் முற்றாக ஆட்கொண்டிருந்த ஒரு விவகாரத்தில் அவர் ஓர் தீர்மானத்திற்கு வந்தாக வேண்டியிருந்தது:

“மற்றெதைக் காட்டிலும் இத்தீர்மானம் குறித்த கேள்வியே என்னை முற்றாக ஆட்கொண்டிருந்தது. சில சமயங்களில், நான் முழு இரவு நெடுக ஜெபமாலையை வைத்துக்கொண்டு ஒரு பாட்டர்நாஸ்டர், ஏழு ஏவ்ஸ், ஒரு குளோரியவை திரும்பத்திரும்ப ஓதிக் கொண்டிருப்பேன். சில குறிப்பிட்ட தருணங்களில் —ஏழாவது ஓதுதலுக்குப் பிறகு என்று நினைக்கிறேன்— எனது ஓரா ப்ரோ நோபிஸுக்குப் (‘இப்போது எங்களுக்காக பிரார்த்தியும்’) பதிலளிக்கும் விதத்தில், புனிதக் கன்னி தன்னுடைய பிரார்தனைகளை என்னுடைய பிரார்த்தனையோடு ஒன்றுகூட்டுவார் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனை புரிவேன். எனது பிரார்த்தனை எப்போதும் ஒன்றே ஒன்றாகத் தான் இருந்தது: நானொரு ஆன்மீக ஆசானைக் கண்டடைய வேண்டும்; அவர் என்னைத் தனது சீடராக ஏற்று, அவரின் வழியமைப்பில் எனக்குத் தீட்சையளித்து, அதன் இறுதிவரை என்னை வழிநடத்த வேண்டும்.”

14238129_1217343671640655_1384377035766432891_n
ஷெய்க் அஹ்மது அல்-அலாவி

1937-ம் ஆண்டு வாக்கில் லிங்ஸின் தேடல் தனது திசையை மாற்றிக் கொண்டது என்பதைக் கூறவேண்டும். ஏதேனுமொரு இந்து ஆசானின் பக்கம் நெருங்குவதற்குப் பதிலாக, லிங்ஸ் மென்மேலும் இஸ்லாத்தின் பால் வழிநடத்தப்பட்டார். யாரைக் கண்டடைய வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தாரோ அது குறிப்பிட்டவோர் அல்ஜீரிய சூஃபி ஷெய்குதான் (தர்காவி சூஃபி வழியமைப் பின் ஷெய்க் அஹ்மது அல்-அலாவி, 1869-1934) எனும் தீர்மானத்தை லிங்ஸ் வந்தடைந்தார். எவ்வாறு என்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. லிங்ஸ் இந்தத் தெரிவை மேற்கொண்டதன் பிறகு, அவருக்கு அதில் கொஞ்சமும் தடுமாற்றம் இருக்கவில்லை என்பதை இதன் பிறகான அவருடைய எழுபதாண்டு வாழ்க்கை விவரங்களிலிருந்து நாம் அறிகிறோம். எனினும், தனது ஆன்மீகத் தேடலை நெறிப்படுத்தப் போகின்றவர் அவரே என்பதை லிங்ஸ் மெய்யுணர்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஷெய்க் அஹ்மது அல்-அலாவி மரணமடைந்து விட்டிருந்தார்.

பிரார்த்தனை நிறைவேறல்

இவ்வாறிருக்க, அவரது இடையறாத பிரார்த்தனையின் பலனாக, சுவிட்சர்லாந்தில் உள்ள குறிப்பிட்டவொரு சூஃபிக் குழு பற்றி அவர் கேள்விப்படலானார். அது பற்றி லிங்ஸ் இப்படிக் கூறுகிறார்: “ஒரு நாள் காலை நான் உறக்கத்திலிருந்து எழுந்தபோது, அக்குழுவின் தலைவர் தான் உண்மையில் என்னுடைய பிரார்த்தனைக்கான பதில் என்றவொரு உறுதிப்பாட்டை இறைவன் என்னுள் விதைத்துள்ளான் என்ற ஒரு மெய்யுணர்வுடனேயே நான் விழித்தெழுந்தேன். “மேலும் சில வாரங்கள் ஓடின. 1938 ஜனவரி 11, செவ்வாய்க் கிழமையன்று மார்டின் லிங்ஸ் சுவிட்சர்லாந்தின் பாசில் நகரத்தை அடைந்து, அந்த சூஃபிகள் ஒன்றுகூடும் வீட்டுக் கதவைத் தட்டினார். ஒருவர் வந்து கதவைத் திறந்தார். உடனே லிங்ஸ் பிரெஞ்சு மொழியில் இப்படிக் கூறினார்: “நான் ஒரு ஆங்கிலேயன். கினானின் வாசகன். நீங்கள் ஒரு சூஃபி வழியமைப்பைப் பெற்றுள்ளீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு, உங்களோடு இணைவதற்காக வந்துள்ளேன்.” உள்ளே வரும்படி அழைக்கப்பட்டார். அவரை வரவேற்று அழைத்துச்சென்ற அந்த மனிதர் மற்றொருவரைத் தொடர்பு கொண்டு, லிங்ஸுக்கு மதிய உணவு வழங்கச் செய்தார்.

டைட்டஸ் பர்க்கார்ட்
டைட்டஸ் பர்க்கார்ட்

விரைவிலேயே, தொலைபேசியில் பேசிய அந்த ஜெர்மானிய சுவிஸ்ஸும் வந்துசேர்ந்தார்; அவர் தான் டைட்டஸ் இப்ராஹீம் பர்க்கார்ட் (1908-1984). அப்போது அவருக்கு வயது 29. லிங்ஸைக் காட்டிலும் மூன்று மாதங்கள் மூத்தவர். டைட்டஸ் பர்க்கார்ட் மார்டின் லிங்ஸை ஒரு நெடுநடைக்கு கூட்டிப்போனார்; “அது மகத்தானவொரு நட்பின் துவக்கமாக அமைந்துவிட்டது.” 1984-ல் பர்க்கார்டின் இறப்பு வரை அந்நட்பு நீடித்திருந்தது.

அநேகமாக, இந்த நெடுநடையின் போதுதான் லிங்ஸ் இதயம் திறந்து டைட்டஸ் பர்க்கார்டிடம் தனது ஆன்மீகத் தேடல் பற்றி உரையாடினார். அந்த சூஃபி ஒழுங்கின் தலைவர் ஃப்ரித்ஜஃப் ஷுவான் (ஷெய்க் ஈஸா நூருத்தீன் அஹ்மது, 1907-1998) அப்போது மல்ஹவுஸ் நகரில் (பிரான்ஸ்) வசிப்பதாகவும்; வருகின்ற வெள்ளிக் கிழமை அந்த வீட்டுக்கு வருவாரென்றும் டைட்டஸ் பர்க்கார்ட் லிங்ஸிடம் தெரிவித்தார். ஆனால், ஃப்ரித்ஜஃப் ஷுவானைப் பார்ப்பதற்குச் சென்ற அந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரான 20 வயது லியோ ஷாயாவின் வழியாக மார்டின் லிங்ஸின் வருகை பற்றிய செய்தி அதற்கடுத்த தினமே மல்ஹவுஸை எட்டிவிட்டது. “நம்மோடு இணைய விரும்பினால், அவரை இஸ்லாத்திற்குள் பிரவேசிக்கச் சொல்லுங்கள்” என்று ஷுவான் ஷாயாவிடம் கூறினார்.

இதைப் பின்னாட்களில் நினைவுகூர்ந்த லிங்ஸ் இவ்வாறு கூறினார்:

“எனவே, சிதீ இப்ராஹீம் (டைட்டஸ் பர்க்கார்ட்) என்னை இஸ்லாத்திற்குள் வரவேற்று, தொழுவது எவ்வாறென்று எனக்குச் சொல்லித் தந்தார். சமஸ்கிருதம் கற்பதை விட்டுவிட்டு நான் அரபி கற்பதற்கு மாறவேண்டிதாயிற்று.”மார்டின் லிங்ஸும் டைட்டஸ் பர்க்கார்டும் அந்த வெள்ளிக் கிழமை ஃப்ரித்ஜஃப் ஷுவானை சந்திப்பதற்கு இரயில்நிலையம் சென்றனர். ஷுவானைப் பார்த்த கணமே லிங்ஸ் தன்னுடைய பிரார்த்தனைகள் பதிலளிக்கப்பட்டு விட்டன என்பதை விளங்கிக் கொண்டார். ஷுவானுக்கு அப்போது வயது 30. “நான் எதையெல்லாம் கேட்டு பிரார்த்தித்தேனோ அவை எல்லாவற்றுக்கும் அவரின் தோற்றம் ஒத்தியைந்திருந்தது. உண்மையில் அவரே என்னுடைய பிரார்த்தனைகளுக்கான பதில் என்பது பற்றிய எனது உறுதிப்பாட்டை அவரின் தோற்றம் மட்டுமே அதிகரித்து விடவில்லை. மாறாக, இறைவனின் கிருபையால் நான் ஏற்கனவே போதுமானளவு அந்த உறுதிப்பாட்டை எட்டிவிட்டிருந்தேன். அவரின் சீடராக இருந்த அந்த அற்புதமான அறுபது ஆண்டுகளில் அந்த உறுதிப்பாடு எந்தவொரு தருணத்திலும் கொஞ்சம் கூட தடுமாற்றம் அடையவில்லை.”

அன்று மாலை அந்த சூஃபிக் குழு தமது ஸாவியாவில் குழுமியது. ரைன் நதியைப் பார்த்த வண்ணம் அமைந்திருந்த ஒரு பழைய வாடகைக் கட்டிடத்தின் பெரிய ஓர் அறையே அவர்களின் ஸாவியா.

“அன்று மாலை…நான் அந்த மனித வட்டத்தில் அமர்ந்தேன். எல்லோரும் இஸ்லாமிய உடைகளை அணிந்திருந்தனர் (எனக்கும் சில ஆடைகளை ஏற்பாடு செய்திருந்தனர்). எல்லையற்ற பேரானந்தம் என்னைப் படிப்படியாக ஆகர்ஷிக்கவாரம்பித்தது. அசாத்தியத்துக்கான என்னுடைய ஏக்கம் திடீரென மீண்டும் வலுப்பெற்றது —கினானின் செய்தியால் அது தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது, எனினும் இம்முறை அது ஓர் யதார்த்தமாக. நவீன உலகை விட்டுச் சுதந்திரமான, மரபு விழுமியங்கள் மேலாதிக்கம் செலுத்துகிற ஓர் பண்டைய யுகத்தில் நான் மீண்டும் பிறந்தது போன்றிருந்தது.”

“எனது ‘பேரழகின் மதமானது’ ஆன்மிக வாழ்வுக்கான இயல்பானதொரு அமைப்பும், ஒருவித பாதுகாப்பு உறையும்தான் என்பதை நான் மீள்கண்டுணர்ந்தேன். தீட்சையும் வழிகாட்டுதலும் பெறுவதற்கே நான் அந்த ஷெய்கை நாடிவந்தேன். எனினும், அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக அவர் எனக்கு ஓர் முழு நாகரிகத்தையே வழங்குவார் என்று நான் எண்ணியும் பார்த்திருக்கவில்லை.”

14224843_1217204794987876_780662950363859890_n
ஃப்ரித்ஜஃப் ஷுவான்

அடுத்த நான்கு மாதங்கள் மார்டின் லிங்ஸ் ஸாவியாவின் ஒரு அறையில் தங்கிக் கொண்டார். ஒவ்வொரு வார இறுதியிலும் ஷுவான் இரண்டு இரவுகள் அங்கு வந்துசென்றார். ஒரு மாதம் நிறைவடைந்த பின், மார்டின் லிங்ஸ் முறைப்படி அந்த சூஃபி வழியமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இவ்வாறு லிங்ஸ் பிரவேசித்த அந்த ஷாதுலி தரீக்கா காலத்தால் அபுல் ஹசன் அஷ்- ஷாதுலி (1196-1258) வரை பின்னோக்கிச் செல்கிறது. இங்கு சுவாரசியமான ஒரு தகவல் என்னவென்றால், ஃப்ரித்ஜஃப் ஷுவானின் நேரடி ஷெய்க் வேறு யாருமல்ல, ஷெய்க் அஹ்மது அல்-அலாவிதான். இவரைத் தான் லிங்ஸ் தனது ஆசானாக வரித்துக் கொள்ளலாமென எண்ணியிருந்தார் என்றும், ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது லிங்ஸுக்குத் தாமதமாகத் தெரியவந்தது என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

எகிப்து வாசம்

1939-ல் ரெனே கினானைச் சந்திப்பதற்காக லிங்ஸ் கெய்ரோவுக்குச் சென்றார். அச்சமயத்தில் அவர் லிதுவேனியாவில் விரிவுரையாளர் பணியில் இருந்ததால், அப்பயணத்தை அடுத்து அவர் லிதுவேனியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். எனினும், அவர் கெய்ரோவில் இருந்த சமயம் இரண்டாம் உலக யுத்தம் வெடித்த காரணத்தால் எகிப்திலேயே தங்கவேண்டியது ஆயிற்று. அவருடைய வாழ்க்கைப் போக்கையே மாற்றவிருந்த எண்ணற்ற பெருநிகழ்வுகளுள் இதுவே முதலாவதாக அமைந்தது.

எகிப்தில் கினானுடன் லிங்ஸ்
எகிப்தில் கினானுடன் லிங்ஸ்

விரைவிலேயே லிங்ஸ் கினானின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். அரபி மட்டுமே பேசும் கினானின் எகிப்திய மனைவி ஃபாத்திமாவுடன் உரையாடுமளவு விரைவில் அரபியையும் கற்றுத்தேர்ந்து விட்டார். இப்போதெல்லாம் அவர் தினமும் கினானைச் சந்திக்கச் செல்ல ஆரம்பித்திருந்தார். ‘அளவையின் ஆட்சி’ நூலை கினான் எழுதத்துவங்கிய சமயம், அதை அத்தியாயம் அத்தியாயமாக வாசித்த முதலாவது நபர் மார்டின் லிங்ஸ்தான். அதே சமயத்தில் தான் மார்டின் லிங்ஸ் தனது முதல் நூலான ‘நிச்சயத்தன்மை பற்றிய ஏடு’ (1952) நூலினை எழுதத் துவங்கியிருந்தார். லிங்ஸ் எழுதயெழுத அதனை கினான் அத்தியாயம் அத்தியாயமாக வாசித்தார்.

மார்டின் லிங்ஸ் தனக்குச் சிறு வயதிலிருந்தே அறிமுகமாகியிருந்த லெஸ்லே ஸ்மால்லே என்ற பெண்ணை 1944-ல் திருமணம் செய்துகொண்டார். பிரமிடுகளின் அடிவாரத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் அவர்கள் இருவரும் வசிக்கலாயினர். 1951-ல் கினான் மரணமடைந்தார். அதன் பிறகு சிறிது காலத்திலேயே கெய்ரோவில் மிக மூர்க்கமானதொரு பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலவரம் மூண்டது. லிங்ஸின் சக பணியாளர்கள் மூவரும் கூட அதில் கொல்லப்பட்டனர். 1952 ஜூலை 23 அன்று ‘இளைய அதிகாரிகள்’ மன்னர் ஃபாரூக்கின் மன்னராட்சியைக் கவிழ்த்துவிட்டு ஜெனரல் நாகிப் தலைமையில் அரசை நிறுவினர். புதிதாக நிறுவப்பட்ட புரட்சிக் கவுன்சில் பிரிட்டிஷ் பணியாளர்கள் எல்லோரையும் பல்கலைக் கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. இதனால் தனது வாழ்நாள் முழுக்க கெய்ரோவிலேயே வசிப்பதெனத் திட்டமிட்டிருந்த மார்டின் லிங்ஸ் தனது மனைவியுடன் இங்கிலாந்து திரும்ப வேண்டியதாயிற்று.

முக்கிய எழுத்தாக்கங்கள்

இங்கிலாந்து திரும்பிய லிங்ஸ் தனது முறைசார் கல்வியைத் தொடருவதெனத் தீர்மானித்தார்; உடற்பயிற்சி சிகிச்சையாளரான அவரது மனைவி லெஸ்லேவும் பணிக்குத் திரும்பினார். லிங்ஸ் முதலில் அரபிக் கற்கைகளில் இளங்கலைப் பட்டத்தை நிறைவுசெய்த பிறகு, கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்க கற்கைகளுக்கான பள்ளியில் தனது டாக்டர் பட்டப் பணியில் ஈடுபடலானார். அஹ்மது அல்-அலாவியின் வாழ்வு மற்றும் பணிகளையே அவர் தன்னுடைய ஆய்வுக் கருவாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். பின்னாட்களில் அந்த ஆய்வுக் கட்டுரை, ‘இருபதாம் நூற்றாண்டின் ஓர் சூஃபி மகான்’ (1961) என்ற தலைப்பில் நூலுருப்பெற்று சூஃபியிச இலக்கியத்தில் ஓர் தனித்துவப் பங்களிப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றது.

தனது டாக்டர் பட்டப் பணிக்குப் பிறகு, மார்டின் லிங்ஸ் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கீழைத்தேய அச்சு நூல்கள் மற்றும் சுவடிகள் பிரிவில் துணைக் காப்பாளராக (1955-1970) இணைந்தார். 1970-ல் காப்பாளராக பணியுயர்வு பெற்றார். 1973-ல் பிரிட்டிஷ் நூலகத்துக்குப் பணிமாற்றம் பெற்றார். 1964 முதல் 1976 வரையான ஆண்டுகள் அவருடைய முக்கிய எழுத்தாக்கங்களின் பதிப்புகளைக் கண்டன: ‘பண்டைய நம்பிக்கைகளும் நவீன மூடநம்பிக்கைகளும்’ (1965), ‘மூலக்கூறுகளும் பிற கவிதைகளும்’ (1967), ‘கட்டியங்களும் பிற கவிதைகளும்’ (1970), ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ (1975) ‘குர்ஆனியக் கலையெழுத்தும் குறியீட்டுச் சித்திரங்களும்’ (1976).இவ்வனைத்து ஆக்கங்களும் மிகப் பிரத்தேயகமான வாசகர்களால் உயர்வாக மதிக்கப்பட்ட போதிலும், பரந்தளவில் அவை வாசகர்களைக் கவரவில்லை.

‘முஹம்மது: துவக்ககால மூலாதாரங்களின் அடிப்படையில் அவரின் வாழ்வு’ (1983):

14231369_1217207871654235_6783565354795807762_o

எனினும், ‘முஹம்மது: துவக்ககால மூலாதாரங்களின் அடிப்படையில் அவரின் வாழ்வு’ (1983) நூலின் பிரசுரம், ஒரு எழுத்தாளர் என்றளவில் மார்டின் லிங்ஸ் குறித்த பொதுப் படிமத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. இஸ்லாத்தின் இறைத்தூதரது வாழ்க்கை வரலாற்று நூலான இது ஆங்கில மொழியில் உள்ள சீறா ஆக்கங்களிலேயே மிகச்சிறந்த ஒன்று என்பதோடு, பிற மொழிகளில் எழுதப்பட்டவை மத்தியிலும் சிறந்த ஆக்கங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நூலை வாசிப்பவரை அது இறைத்தூதர் வாழ்ந்த காலத்தினூடாக ஒரு ஆன்மிகச் சுற்றுலா சென்றுவரச் செய்கிறது. லிங்ஸ் தனது ஏக்கமிகு ஆவியின் முழுமையுடன் மக்கா-மதீனாவில் வாழ்ந்தது போலவும்; நம்மைப் போன்றவர்கள் இறைத்தூதரை நேரில் காண்பதன் பொருட்டு தம் வாழ்வை நிலைமாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக, லிங்ஸ் திரும்பி வந்து அந்த வாழ்க்கையை மீட்டி எடுத்துரைப்பது போலவும் இந்நூல் அமைந்திருக்கிறது. அதன் துல்லியம், நேரடித்தன்மை, செதுக்கி வடிக்கப்பட்ட உரைநடை, பேசுபொருளுடனான அன்னியோன்யம், ஆழிய எளிமை என அனைத்திலும் சீறா இலக்கியத்தில் இதற்கு இணையேதும் இல்லை எனலாம்.

பெருந்தொகுதி சீறா இலக்கியத்தின் முழுமையின் நடுவில் இந்நூலைத் தனிச்சிறப்பான ஒன்றாக ஆக்குவது, அது மூலாதாரங்களை திறம்படக் கையாண்டிருப்பது மட்டுமில்லை; மாறாக, ஒரு உயிர்த்துடிப்பான வருணனை மூலம் வாசகரை இறைத்தூதரின் காலத்தினுள் அமிழ்ந்துபோகச் செய்வதற்கு லிங்ஸால் முடிந்திருப்பதே அதற்குத் தலையாய காரணமாகும். எந்தளவெனில், அதை வாசிக்கும் எவரும் அச்சுஅசலாக அந்த ஏழாம் நூற் றாண்டு மக்கா-மதீனாவின் காற்றையே சுவாசிக்கத் துவங்கிவிடுகிறார்.நன்கு ஆய்வுசெய்யப்பட்ட ஆதாரக் குறிப்புகள் மாத்திரம் இதனைத் தனிச்சிறப்பான நூலாக்கி விடவில்லை. இறைத்தூதரின் வாழ்வுடன் ஒருவரின் உணர்வுபூர்வமான ஈடுபாடு மற்றும் நினைவு கூரலுக்கான ஓர் உயிர்த்துடிப்பான சாட்சியமாக விளங்கத்தக்க வகையில், ஒரு தொடரான நிகழ்வுகள் பற்றிய அன்னியோன்யமான வருணனையைக் கொண்டு வாசகரின் ஆன்மாவை வென்று கைப்பற்றுகிற அதன் திறனே அதனை அவ்வாறு ஆக்குகிறது.

மேலும், இந்நூல் பதினான்கு நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான மக்களின் நேர்வழிக்கான மாறாதவோர் மூலஊற்றாக விளங்கும் ஒரு மாமனிதரின் வாழ்வு மற்றும் காலம் குறித்த நாடக பாணியிலான விவரிப்பு அல்ல. மாறாக, வரலாறு பற்றிய ஒரு புனிதப் புரிதலைக் கொண்டு வாசகரை அக்காலத்திற்கே இடம்பெயர்க்கும் ஒரு உயிரோட்டமிகு பிரதியாகும். இந்நூலை வாசிக்கும்வேளை, மார்டின் லிங்ஸின் எடுத்துரைப்புப் பாணியிலும் தொகுப்பமைவு முறையிலும் ஒரு இரசவாதத் தாக்கத்தை உணரமுடிகிறது. புலமைத்துவத் துல்லியமும் கவியுணர்வும் நூலில் சமவிகிதத்தில் அமைந்து களிப்பூட்டுகின்றன.

‘ஓர் இருபதாம் நூற்றாண்டு சூஃபி மகான்’ (1961):

14291671_1217208564987499_5886426341039453684_n

அல்ஜீரிய ஷெய்க் அஹ்மது அல்-அலாவியின் ஆன்மீக வாழ்க்கை வரலாறு பற்றி தெளிவானதொரு பார்வையை வழங்கும் முக்கியமான நூல் இது. இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஐரோப்பிய மொழிகளில் சூஃபியிசம் பற்றிய எவ்வொரு தீவிர வாசிப்புக்கும் இந்நூல் ஒரு அவசிய முன்தேவையாக இருக்கும்” என்கிறார் சமகால இஸ்லாமிய மெய்யியல் அறிஞர் சையித் ஹுசைன் நஸ்ரு. இதில் ஆசிரியர் பெருமளவு சூஃபிகளையே பேசும்படி விட்டுவிடுகிறார்; பிரதானமாக அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அசாதாரணமான, ஆட்கொள்ளும் இயல்புகொண்ட, ஒரு தொடரான பத்திகளைக் கொண்டு வடஆப்பிரிக்க சூஃபி ஒழுங்கினுள் ஒரு வாழ்வு பற்றிய தெளிவான சித்திரத்தை வழங்கியிருக்கிறார். கடைசியில் வரும் சில அத்தியாயங்கள் ஷெய்க் அல்-அலாவியின் எழுத்துக்களுக்காக—குறிப்பாகச் சில அற்புதமான மறைஞானக் கவிதைகளுக்காக—ஒதுக்கப்பட்டுள்ளன.

‘சூஃபியிசம் என்றால் என்ன?’ (1975):

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? அவர்களின் இலக்கு என்ன? அவர்கள் என்ன செய்கின்றனர்? இக்கருப்பொருள் பற்றியெழுதும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் விடையளிக்கிறார். அதன் மூலம், சூஃபியிசம் என்றால் என்ன? எனும் முதன்மைக் கேள்விக்கு அவரால் மிகவளமாக விடையளிக்க முடிகிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்தாலும், அனைத்தும் விடயத்தின் வேர் நோக்கியே செல்வதாக அமைகின்றன.

14184288_1217208994987456_7798375093527704191_n

சூஃபியிசம் பற்றிய ஒரு தெளிந்த நம்பத்தகுந்த அறிமுகப் பிரதிக்கான தேவையை மட்டும் இந்த நூல் பூர்த்தி செய்யவில்லை; மாறாக, தனது சம்பூரணத் தன்மையிலும் சான்று வலிமையிலும் இது தனித்துயர்ந்து நிற்கிறது. லிங்ஸ் தனது பேசுபொருளை மிகப் பரிபூரணமாகவும் மிக நெருக்கமாகவும் அறிந்திருக்கிறார். நேரடியாக விடயத்தின் இதயம் நோக்கிச் செல்வதே அவரது ஆக்கங்கள் அனைத்தினதும் இயல்பாக இருப்பதை கருத்தூன்றிய வாசகர் எவரும் எளிதில் அவதானிக்க முடியும். நவீன எழுத்தாளர்களிடம் மிக அபூர்வமாகவே காணமுடிகிற ஆழ்ந்தவொரு புரிதலை மார்டின் லிங்ஸ் தனது இந்த மிகக் கவனமான ஆய்வில் வெளிப்படுத்துகிறார். வழமையாகப் பலரும் எளிதில் கடந்துசென்று விடுகிற சூஃபியிசத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி லிங்ஸ் சமரசமற்ற ஒரு வலியுறுத்தலை முன்வைக்கிறார். மார்டின் லிங்ஸின் நூல்கள் அனைத்திலுமே நாம் அவருக்கு மட்டுமேயுரிய ஒரு முத்திரையை, உயர்நேர்த்தியான நடையழகை, ஒருவிதமான நறுமணம் அல்லது சுவையை அனுபவிக்க முடிவதோடு, அவை நம்மையும் மீறிக்கொண்டு நம்முடைய ஆன்மாக்களோடு நேரடியாக பேசுவதையும் உணரலாம்.

‘நிச்சயத்தன்மை பற்றிய ஏடு’ (1970):

“சகல மதங்களின் இதயங்களிலும் நிலைபெற்றுள்ள அகிலப் பொதுவான உண்மைகள் சிலவற்றை சூஃபியிச மொழியில் வெளிப்படுத்துவதே இங்கு எமது குறிக்கோள். ஒவ்வொரு அத்தியாயமும் திருக்குர்ஆனின் ஒரு வசனம் அல்லது சில வசனங்களுக்கான விளக்கவுரையாக அமைந்திருக்கிறது. மேலும், இந்நூல் இறைத்தூதரின் பல்வேறு வாய்மொழிகள் மீதும், ஒரு குறிப்பிட்டளவு முஹ்யித்தீன் இப்னு அரபி எழுதியதாகக் கூறப்படும் குர்ஆன் விளக்கவுரையின் மீதும் அமைந்திருக்கிறது.”

“இந்நூலின் மீதான பிற செல்வாக்குகளைப் பொறுத்தவரை, பல சித்தாந்த விடயங்களும் வெறுமனே ‘அவர்கள் கூறினார்கள்’ அல்லது ‘என்று கூறப்படுகிறது’ என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்படுவதை வாசகர் கவனிக்க முடியும். சூஃபியிசம் என்பது ஒரு வாழும் மரபு என்பதையும், சூஃபி போதனைகளின் பெரும்பகுதி எழுத்துருவில் இருப்பதில்லை, சில சமயங்களில் அவற்றின் தோற்றுவாய் யாரென்று கூடத் தெரியாது என்பதும் இங்கு நினைவிலிருத்தப்பட வேண்டும். அந்த உண்மைகள் ஆசானிடமிருந்து சீடருக்கு வழிவழியாகக் கையளிக்கப்படுகின்றன. அத்தகைய வாய்மொழிப் போதனைகளின் துணையின்றி இந்நூலை ஒருபோதும் எழுதியிருக்க முடியாது.”

இந்நூலைப் பற்றி மார்டின் லிங்ஸ் சுயவிளக்கமாக எழுதியவை இந்த வார்த்தைகள்.

‘பண்டைய நம்பிக்கைகளும் நவீன மூடநம்பிக்கைகளும்’ (1964):

நவீன மனிதர்கள் மதத்தின் மீது முழுமனதோடு நம்பிக்கை கொள்வதைச் சிரமமாக்கும் சகல விடயங்கள் மீதும் இந்நூல் தாக்குதல் தொடுக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், எவ்வாறு நவீன மனிதன் மூடநம்பிக்கையின் முழுவுருமாக மாறியிருக்கிறான் என்பதைத் தனக்கேயுரிய இருபதாம் நூற்றாண்டு முறையில் புலப்படுத்துகிறார்.

“பேரரசரின் புத்தாடை பற்றிய நீதிக்கதையில் வருவது போன்றதொரு ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அனைத்தைக் காட்டிலும் அதிக அவசியமாக இருப்பது என்னவென்றால், யாரேனும் ஒருவர் உண்மையைப் பேசியாக வேண்டும். இந்நூல் மிகச்சரியாக அதைத் தான் செய்கிறது.”

14265083_1217211288320560_1733079152563473314_n

மதத்தின் மீது மனிதனின் நம்பிக்கை குறைந்து வருவதானது, தனது நவீன நோக்குக்கு ஏற்றவாறு மதத்தை மாற்றிக் கொள்வதற்கான அவனது முயற்சியால் மேலும் மோசடைந்திருக்கிறது என்று ஆசிரியர் இதில் வாதிடுகிறார். மதத்தை அதன் உண்மை நிலையில் வைத்துப் பார்ப்பதை விட்டு மனிதனின் அறிவுத்திறனை தடுத்துக்கொண்டுள்ள மாயையை அகற்றுவதன் மூலம் மட்டுமே மதநம்பிக்கையை அதன் அசல் நிலைக்கு மீட்க முடியும் என்று அவர் நம்புகிறார். நவீன மனிதன் ஒரு வகையில் இருபதாம் நூற்றாண்டுக்கே உரியவிதத்தில் பண்டைய மனிதர்களைக் காட்டிலும் படுமோசமான மூடநம்பிக்கையாளனாக இருக்கிறான். இந்த நவீன மூடநம்பிக்கைகள் காலத்தால் தமக்கு முந்தையவற்றை விட நச்சுத்தன்மையில் வீரியம் மிகுந்தவையாக, அபாயகரமானவையாக இருக்கின்றன.

மார்டின் லிங்ஸ் இதில் மையமாகக் கிறிஸ்தவ நம்பிக்கையை எடுத்துக் கொண்டாலும், மற்ற பல மதங்கள் பற்றிய தனது பரந்த அறிவிலிருந்தும் உரையாடுகிறார். இந்நூல் சக்திவாய்ந்த, எளிய, வாசிப்புக்குகந்த வகையில் மதத்தைத் தற்காத்து வாதிடும் ஒரு பிரதியாகும்.

‘பதினோரு மணி’ (1987):

ஆன்மிகச் செயற்பாட்டின் அவசரத் தேவை இந்நூலில் குறிப்பாக வலியுறுத்தப்படுகிறது. மரபு மற்றும் தீர்க்க தரிசனத்தின் ஒளியில் நவீன உலகின் ஆன்மீக நெருக்கடி விளக்கி உரைக்கப்படுகிறது. தற்போதைய நெருக்கடி எத்துணை தீவிரமான, பாரதூரமான ஒன்றாக இருப்பினும், அது குறைந்த பட்சம் தனிமனித அளவில் மட்டுமாவது தனது அழிவுக்கான விதையைத் தானே விதைத்துக் கொள்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மார்டின் லிங்ஸின் இந்நூல் ‘இஸ்லாமும் அறிவியலும்’ சொல்லாடலோடு நேரடித் தொடர்புகொண்டது.

14265071_1217211604987195_3421593848313406298_n

அறிவியல்வாதம், ‘வளர்ச்சி மீதான நம்பிக்கை’ போன்ற நவீன உலகின் போலி மதங்கள் பற்றிய லிங்ஸின் விமர்சனம் எனும் பொது வரைச்சட்டத்தில், பரிணாமக் கோட்பாடு குறித்த ஒரு துளைக்கும் விமர்சனத்தை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. லிங்ஸ் இவ்வாறு விளக்குகிறார்:”ஒரு ‘பாமரனை’ப் பொறுத்தவரை, பரிணாமவாதம் எனும் ஒரு போலிக் கோட்பாட்டை முன்வைக்கும் அறிவியல்வாதத்தில், எவ்விதத்தில் பார்க்கினும் பிழை என்பது முக்கியமாகக் குறியிலக்கு குறித்ததாகவே இருக்கிறது. இங்கு நவீன உலகின் ‘உயர் மதகுரு’வான விஞ்ஞானி, ஒரு தவறான நம்பிக்கையைக் கொண்டு தனது பின்பற்றாளர்களை வழிபிறழச் செய்கிறார். இது தான் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. ஏனெனில் வளர்ச்சி பற்றிய விவகாரம் எப்போதும் அபிப்பிராயம் பற்றிய ஒன்றாகவே இருக்கவேண்டும்; ஆனால், பரிணாமவாதமோ சகல விவாதங்களையும் ‘விஞ்சிய’ ஒரு அறிவியல் உண்மையாக முன்வைக்கப்படுகிறது. அனுபவ வரம்பைவிஞ்சிய சித்தாந்தங்கள் உண்மையில் அறிவுப்புலனை முடுக்கிவிடுகின்றன; ஆனால், இது போன்ற போலி விஞ்சியநிலைக் கோட்பாடுகளோ, அறிவுப்புலனை முடக்கிவிடுகின்றன. மேலும், அவை ஆன்மாவின் மீது மூச்சுத் திணறடிப்பதான ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுகின்றன.

பரிணாமவாதம் பற்றிய லிங்ஸின் விமர்சனம் ஒரு அறிவியல் விமர்சனமல்ல; அதாவது, அந்தக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்படும் உயிரியல் மற்றும் வேதியியல் உண்மைகள் பற்றியதல்ல அவருடைய அக்கறை. மாறாக, மனிதகுலம் பொதுவாகப் பெற்றுள்ள ஆன்மிக நுழைபுலங்களின் ஒளியில், அது ஒரு முரண்பாடற்ற கோட்பாடுதானா என்ற வகையில் அதன் அந்தஸ்து பற்றியே அவர் அக்கறை கொள்கிறார். பரிணாமவாதத்தை லிங்ஸ் தனது குறிப்பிட்ட நோக்கில் பார்த்து, ஒரு பரிணாமவாதியின் மனதிலுள்ள ‘மீளாத படிப்படியான முன்னேற்றம்’ என்கிற எண்ணக் கரு எவ்வாறு மதத்திடம் இருந்து கள்ளத்தனமாகக் கடன் பெறப்பட்டு, பௌதிக உலகுக்கு அப்பாற்பட்டவற்றிலிருந்து பௌதிக உலகுக்கு சிறுபிள்ளைத்தனமாக இடம்மாற்றப்பட்டுள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
அந்தக் கோட்பாட்டிலுள்ள தர்க்க ரீதியான பழுதுகளை தீர்க்கமாக நிரூபிப்பதோடு, அதன் போலிவாதங்களைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

“ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம் இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்க்க வேண்டியது தான். ஒன்று பரிணாமவாதம் அல்லது இறைவன், இரண்டிலொன்று பொய்யாகிப் போகும்.” பரிணாமவாதம் எவ்வாறு திட்டமிட்டதொரு முறையில் மனதிற்குள் புகுத்தப்படுவதன் மூலம் முன்னுக்குத் தள்ளப்படுகிறது என்பதையும் அவர் காட்டுகிறார்:

“முதலில் கோபர்நிகஸும், பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்ற அவரின் கண்டுபிடிப்பும்; அதனைத் தொடர்ந்து டார்வினும், குரங்குகளிலிருந்தே மனிதன் பரிணமித்தான் என்ற அவரின் கண்டுபிடிப்பும் (சொல்லிக் கொடுக்கப்படுகிறது). பொதுவாக இவ்விதமே சிந்தனை வளர்ச்சி ஆர்வமூட்டப்படுகிறது. இதிலுள்ள உள்ளார்ந்த தர்க்கம் பிழையானது என்ற விடயம் ஒருபோதும் சுட்டிக்காட்டப்படுவது இல்லை. அதாவது, இங்கு விவாதிக்கப்படும் இரு மனிதர்களுக்கு இடையே ஒப்புமையில்லை; அவர்கள் இருவரின் கோட்பாடுகளும் கூட ஒரேவிதமான சிந்தனாமுறையிலிருந்து விளைந்தவை அல்ல. மட்டுமின்றி, டார்வினினுடையது வெறுமனே ஒரு கற்பிதக் கோட்பாடு மட்டுமே.”

book_wrapper_cropping

தான் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன் மார்டின் லிங்ஸ் எழுதிமுடித்தது ‘ஆன்மாவிடம் மீளல்’ (2005) என்ற நூலாகும். முதன்மையான விடயங்களை எவ்வாறு முதலிடத்தில் வைத்து நோக்குவது என்ற மிகவும் அடிப்படையான எளிய கேள்வியுடன் நூல் தொடங்குகிறது. மார்டின் லிங்ஸ் மீது ஃப்ரித்ஜஃப் ஷுவான் செலுத்திய மகத்தான செல்வாக்குக்கு நூலின் முதல் அத்தியாயம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. மார்டின் லிங்ஸை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் அவர் தனது ஆசானின் பால் கொண்டிருந்த பரிபூரண அசையாத பற்றீடுபாட்டிலிருந்தே துவங்கவேண்டும்.

லிங்ஸின் எழுத்துப் பாரம்பரியம் பற்றிய கலந்துரையாடல் எதுவும் ஷேக்ஸ்பியர் பற்றிய அவரின் ஆய்வுகளைக் குறிப்பிடாது பூரணமாக முடியாது. ஷேக்ஸ்பியர் பற்றிய அவரது இலக்கியக் கலைப்படைப்பு ‘புனிதக் கலையின் ஒளியில் ஷேக்ஸ்பியர்’ (1966) என்ற தலைப்பில் வெளியானது. ஷேக்ஸ்பியர் மீதான அவரின் ஆர்வமிகுதி பற்றி லிங்ஸிடம் கேட்கப்பட்ட போது, ஆங்கிலம் இன்று உலக மொழியாக மாறிவரும் ஒரு சூழலில் நாம் அதனை அதன் ஆழிய ஞானம் மற்றும் மரபார்ந்த போதனைகள் சூல்கொண்டதாக வைத்துப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

கவிதையும் கவிதை மொழிபெயர்ப்பும்

மொழியின் கவித்துவ நடை என்பது ஒரு அருட்கொடையே. அதை ஒரு புனிதக் கடப்பாடு என்று லிங்ஸ் விளங்கியிருந்தார். அவரது முதல் கவிதை நூலான மூலக்கூறுகளும் பிற கவிதைகளும் இதைக் கொண்டு தான் துவங்குகிறது:

“நான் இப்போது எதைத் தேடுகிறேனோ, அதைப் பலரும் தேடியுள்ளனர். எனினும், சிலர் மட்டுமே அதில் வெற்றிகண்டனர்;
இருந்தபோதும் நான் இப்படிப் பிரார்த்திக்குமாறு உந்தப்படுகிறேன்:

உனது ஓட்டத்தை இடைநிறுத்து,

கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்கிறேன்.

என்னைக் கூட்டிப் போ,

கலைக்காவிய தேவதைகள் பாடியாடும் தோட்டத்திற்கு என்னை வழிநடத்து.

என் செவிகளை ஒலியாலும், விழிகளைப் பார்வையாலும் நிரப்பிக் கொள்கிறேன்.

மனிதர்களிடம் ஆழப்பதிந்து நிலைக்கும் கூற்றுகளை நான் மொழிய வேண்டும்.”

பின்னாட்களில் அவர் இவ்வாறு நினைவுகூர்ந்தார்:

“இந்த குறிப்பிட்ட கவிதையை எழுதியபோது, கலைக் காவிய தேவதை ஓர் எதார்த்தம் என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனினும், அந்த எதார்த்தத்தின் இயல்பையும், அதன் விளைவாக எனது “உறுதி மொழி” மற்றும் “பிரார்த்தனையின்” இயல்பையும் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள நேர்ந்தபோது, அது எனது பேனாவின் மையினை வற்றச் செய்துவிட்டது. உயர்ந்தோரின் பொறுப்புடமை எனும் நியதிக்கு ஒரு எதிர்மறை முக்கியத்துவமும், ஒரு நேர்மறை முக்கியத்துவமும் இருக்கின்றன. விலகியிருந்தால் சில விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியாது. நான் எல்லைப்புறத்தில் இருப்பதைக் கொண்டே திருப்தியுற்றிருந்தேன் என்றால், அது வேறுவிதமாக அமைந்திருக்கும். எனினும், தோட்டத்திற்குள்ளான பிரவேசத்தையே அன்றி நான் வேறெதையும் பிரார்த்திக்கவில்லை; மேலும், அதற்கிருக்கும் ஒரே வழி, தாந்தே தனது ‘நரகம் மற்றும் கழுவாயில்’ வரைந்துகாட்டியுள்ளது போன்ற ஒன்றுதான் என்பதை நான் கற்றுக் கொண்டேன். கவிதை எழுதுவதற்காக ஒருவர் அதில் பிரவேசித்துவிட முடியாது. மாறாக, அந்தத் தோட்டத்திற்காகவும் அதற்கப்பால் உள்ளதற்காகவுமே அதில் பிரவேசிக்க முடியும்.”

book_wrapper_cropping

‘சூஃபிக் கவிதைகள்’ என்ற தலைப்பில் மார்டின் லிங்ஸ் மத்திய கால சூஃபி கவிஞர்கள் பதிமூன்று பேரின் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். இத்தொகுப்பு ஒரு தனித்துவமான மத்தியகால நறுமணத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ளடங்கிய சூஃபிக் கவிதைகள் அந்த யுகத்தை நம்பத்தகுந்த முறையில் பிரதிநிதித்துவம் செய்வனவாக அமைந்திருந்தன என்பதோடு, இஸ்லாமிய மறைஞான மரபின் தலைசிறந்த சுடர்மிகு விளக்குகளுள் உள்ளனவாகவும் விளங்குகின்றன. இக்கவிதை மொழிபெயர்ப்புகளைப் பற்றி குறிப்பிடுகையில், அவ்வளவு எளிதில் எதையும் பாராட்டி விடாத ஃப்ரித்ஜப் ஷுவான், ‘சூஃபிக் கவிதைகளை எப்படி மொழி பெயர்க்க வேண்டும் என்பதற்கு ஓர் முன்மாதிரியாகக் கொள்ளப்படத் தக்கவை இவை’ என்றார்.

நேசனிடம் மீளல்

மார்டின் லிங்ஸ் தனதிந்த ஆன்மீக நெடும்பயணத்தைப் முடித்துக் கொண்டு 2005-ம் ஆண்டு மே 11 அன்று தனது 96-ம் வயதில் தனது ஆருயிர் நண்பனின் பால் பறந்து சென்றுவிட்டார். இந்நீண்ட எழுபதாண்டு கால ஆன்மீகச் சாலையில் தனது வீச்செல்லைக்குள் வந்தோரின் நெஞ்சங்களில் எல்லாம் அவர் ஒளியை நிரப்பிச் சென்றிருக்கிறார்.இறைநினைவு என்பது ஓர் குறிப்பிட்ட காலம் மற்றும் இடத்திற்குள் மட்டுப்படுத்தக் கூடிய ஒரு நடைமுறையல்ல; மாறாக, அது ஒருவரின் முழுவாழ்வையும் உண்மையில் தீர்மானிக்கும் வகையில் நிரந்தரமாக வழிந்தோடுகிற; இன்னும் சொல்வதாயின், அவரில் நிரம்பிவழிந்து பிறரின் வாழ்வுகளுக்குள்ளாகவும் வழிந்தோடக் கூடிய ஓர் கருணைப் பேரூற்றாகும் என்பதற்கு ஒரு மறுக்கவியலாத சான்றாக மார்டின் லிங்ஸின் பிரசன்னம் இருந்தது.

மார்டின் லிங்ஸுக்கு தோட்டக்கலை என்பது ஒரு உணர்வுப் பூர்வ, நிரந்தரச் செயற்பாடாக விளங்கியதில் ஆச்சர்யமில்லை. கெண்ட் கவுன்டியில் (கிழக்கு இங்கிலாந்து) இருந்த தனது வீட்டுத் தோட்டத்தில் அவர் மலர்ப் பாத்திகளை வடிவமைத்திருந்த நேர்த்தி, தெய்வீகக் குணங்களைப் பிரதிபலிப்பவையாக அமைந்திருந்த அவற்றின் நிறம் மற்றும் வண்ணங்கள் மீது அவர் கொண்டிருந்த பெருவிருப்பம்; மிகக் கவனமாகச் சேகரிக்கப்பட்ட மலர் வகைகள் என அனைத்தும் அவரின் ஆன்மீக ஏக்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தன. அவர் தனது இந்தப் பூவுலகத் தோட்டத்திலேயே தாம் அடக்கம் செய்யப்பட வேண்டுமென விரும்பினார். இந்த விருப்பம் இவ்வுலகில் நிறைவேறிவிட்டது. மறுமையின் தோட்டம் மீதான அவரின் பெருவிருப்பை அந்த மகா கிருபையாளன் நிறைவேற்றித் தருவானாக! நாம் அந்தத் தோட்டத்தில், அதன் உரிமையாளனின் அனுமதியுடன் அவரைச் சந்திக்கும் வரை அவர் தனது அதிபதியின் எல்லையில்லா கருணையின் நிழலில் வாழ்ந்து வருவாராக, இன்ஷா அல்லாஹ்!

மார்டின் லிங்ஸ் இயற்றிய நூல்கள்

1. The Book of Certainty: The Sufi Doctrine of Faith, Vision, and Gnosis. London: Rider, 1952; New York: Samuel Weiser, 1970; second edition, Cambridge, UK: Islamic Texts Society, 1992.

2. A Moslem Saint of the Twentieth Century: Shaikh Ahmad Al-Alawi: His Spiritual Heritage and Legacy. London: Allen & Unwin, 1961; second edition (A Sufi Saint of the Twentieth Century: Shaikh Ahmad Al-Alawi: His Spiritual Heritage and Legacy), London: George Allen & Unwin, 1971; Berkeley, CA: California University Press, 1971; third edition, Cambridge, UK: Islamic Texts Society, 1993.

3. Ancient Beliefs and Modern Superstitions. London: Perennial Books, 1964; second edition, London & Boston: Unwin Paperback, 1980; Cambridge, UK: Quinta Essentia, 1991; third edition, London: Archetype, 2001.

4. Shakespeare in the Light of Sacred Art. London: Allen & Unwin, 1966; New York: Humanities Press, 1966; second edition (The Secret of Shakespeare), Wellingborough: The Aquarian Press, 1984; New York: Inner Traditions, 1984; third edition, Cambridge, UK: Quinta Essentia, 1996; fourth edition (The Sacred Art of Shakespeare: To Take Upon Us the Mystery of Things), Rochester, VT: Inner Traditions, 1998; fifth edition (Shakespeare’s Window Into the Soul: The Mystical Wisdom in Shakespeare’s Characters), Rochester, VT: Inner Traditions, 2006.

5. The Elements, and Other Poems. London: Perennial Books, 1967. The Heralds, and Other Poems.  London: Perennial Books, 1970.

6. What is Sufism? London: George Allen & Unwin, 1975; Berkeley, CA: University of California Press, 1975; London & Boston: Unwin Paperbacks, 1977; Cambridge, UK: Islamic Texts Society, 1993.

7. The Quranic Art of Calligraphy and Illumination. London: World of Islam Festival Publishing, 1976; second edition (Splendours of Quran Calligraphy and Illumination), Vaduz, Liechten stein: Thesaurus Islamicus Foundation, 2005.

8. Muhammad: His Life Based on the Earliest Sources. London: Allen & Unwin, 1983; Rochester, VT: Inner Traditions, 1983; second edition, Cambridge, UK: Islamic Texts Society, 1991; Rochester, VT: Inner Traditions, 2006.

9. Collected Poems. London: Perennial Books, 1987; second edition, Collected Poems: Revised and Augmented. London: Archetype, 2002.

10. The Eleventh Hour: The Spiritual Crisis of the Modern World in the Light of Tradition and Prophecy. Cambridge, UK: Quinta Essentia, 1987; second edition, London: Archetype, 2002.

11. Symbol and Archetype: A Study of the Meaning of Existence. Cambridge, UK: Quinta Essentia, 1991; second edition, Louisville, KY: Fons Vitae, 2005.

12. Mecca: From Before Genesis Until Now. London: Archetype, 2004.

13. Sufi Poems: A Mediaeval Anthology. Cambridge, UK: Islamic Texts Society, 2004.

14. A Return to the Spirit: Questions and Answers. Louisville, KY: Fons Vitae, 2005.

15. The Underlying Religion: An Introduction to the Perennial Philosophy.  edited by Martin Lings and Clinton Minnaar. Bloomington, IN: World Wisdom, 2007.

16. The Holy Quran: Translations of Selected Verses. Cambridge, UK: The Royal Aal al-Bayt Institute for Islamic Thought & The Islamic Texts Society, 2007.

Related posts

Leave a Comment