நூல் அறிமுகம் 

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்

Loading

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்: அந்நிய ஆட்சிக்கு எதிரான அவர்களின் விடுதலைப் போராட்டம்

நூலாசிரியர்: மரியம் ஜமீலா

பக்.72, விலை: ரூ.35

வெளியீடு: மெல்லினம், சென்னை.

தொடர்புக்கு: 31-பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை – 625 002, +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை)

14264950_1217322448309444_7352741667845026734_n

முஸ்லிம் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியமானவொரு கட்டத்தை அடைந்திருந்தது. முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரை, மேற்கத்தேய காலனித்துவத்தின் ஆரம்பமாக நெப்போலியனின் எகிப்து மீதான படையெடுப்பை சொல்லலாம். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.

அந்நாடுகளில் நடப்பிலிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள், இப்புதிய சவாலை எதிர்கொள்ளும் திராணி பெற்றவையாக இருக்கவில்லை.
எனினும், தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்ட இயக்கங்கள் காலனியவாதிகளின் நிம்மதியைச் சிதறடித்தன. அடிக்கிற கொள்ளையை திருப்தியாக அனுபவிப்பதற்கு இவ்வியக்கங்கள் அனுமதிக்கவில்லை. கைவசமிருந்த சொற்ப வளங்களைக் கொண்டே முஸ்லிம்கள் இத்தீரமிகு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அவற்றுள் பெரும்பாலானவற்றை தலைமையேற்று நடத்தியது சூஃபி மரபில் வந்த முஜாஹிதுகள் என்பதை வெறுமனேயொரு தற்செயலிணைவு என்று கொள்ள முடியுமா?! இவ்வுதாரணங்களைப் பாருங்கள்:

1. இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லை மாகாணப் பகுதிகளில் சீக்கியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராக ஜிஹாது இயக்கத்தை முன்னெடுத்த ரேபரேலியின் சையித் அஹ்மது (1786-1831); இவர் சிஷ்திய்யா, காதரிய்யா, நக்ஷ்பந்திய்யா சூஃபி மரபில் வந்தவர்.

2. ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் அரை நூற்றாண்டு காலம் வீரப்போர் புரிந்த தாகிஸ்தானின் இமாம் ஷாமில் (1797-1871); இவர் நக்ஷ்பந்திய்யா மரபின் முரீது இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்.

3. முசோலினியின் ஃபாசிஸ இத்தாலிய இராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த உமர் முக்தார் (1862-1931); இவர் சனூசிய்யா சூஃபி மரபைச் சேர்ந்தவர்.

4. அல்ஜீரியா மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய அப்துல் காதிர் அல்-ஜஸாயிரி (1808-1883); இவர் காதரிய்யா சூஃபி ஒழுங்கை சேர்ந்தவர்.

5. பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராகப் போராடிய செனிகலின் ஷெய்க் அஹ்மதூ பம்பா (1853-1927); இவர் முரீதிய்யா சூஃபி ஒழுங்கின் நிறுவனர்.

6. மொரோக்கோவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த சூஃபி ஷெய்குகளாக சித்தி முஹம்மது இப்னு அப்துல் காதிர் அல்-கத்தானியையும், அஹ்மது ஹிபாவையும் சொல்ல முடியும்.

7. வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயின் மற்றும் பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராக வெடித்த ‘ரிஃப் கிளர்ச்சியை’ தலைமையேற்று நடத்திய முஹம்மது அப்துல் கரீம் (1882-1963);

8. பிரிட்டிஷ், இத்தாலிய, எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக இருபதாண்டுகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து, தெர்வீஷ் அரசை நிறுவிய சூஃபி தலைவர் முஹம்மது அப்துல்லாஹி ஹசன் (1856-1920).

9. கினியா, செனிகல் மற்றும் மாலியில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய திஜானிய்யா சூஃபி ஒழுங்கின் தலைவர் அல்-ஹாஜ் உமர் தல் (1797-1864) என்ற ஷெய்க் உமர் இப்னு சயீத் அல்-ஃபூதி.

10. மலேசியாவில் காலனியத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடியதும் கூட சூஃபி ஷெய்குகளும் ஆலிம்களும் தான்.

11. இந்தோனேசியாவின் சுமத்ராவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் சூஃபியாக்கள் தான்.
இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனில், இன்றிருக்கும் சூஃபி குழுக்கள் பலவும் ஆட்சியிலுள்ள ஒடுக்குமுறை சக்திகளோடு நேசம் பாராட்ட நேர்ந்தது எப்படி?!

இதில் முதலாவது குறிப்பிட்ட மூன்று முஜாஹிதுகளையும் அவர்களின் போராட்ட இயக்கங்களையும் பற்றிய சுருக்கமானவொரு அறிமுகத்தை வழங்குவதே தற்போதைய நூலின் நோக்கம்.

நூலாசிரியர் மரியம் ஜமீலாவின் கதை சொல்லும் பாணியை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் போராட்டங்களை அவர் வெறுமனே இராணுவ ரீதியில் மட்டும் விவரித்துச் செல்லவில்லை. அவற்றுடன் தொடர்புடைய சமூக, அரசியல் இயங்கியல்களையும் தனது தனித்துவமான நடையில் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.விலகி நின்று, கல்வியியல் பகுப்பாய்வில் ஈடுபடும் உயிரோட்டமற்ற பாணியல்ல அவருடையது. அவர் உள்ளார்வத்துடனும் தீர்மானத்துடனும் முஜாஹிதுகளின் பால் அனுதாப உணர்வு கொண்டவராக, போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களின் ஊடாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

மரியம் ஜமீலா அந்த முஜாஹிதுகளின் கால-இடச் சூழல் பற்றி வழங்கும் சுருக்கமான அறிமுகம், நமக்கும் அப்போராட்ட இயக்கங்களுக்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்து நம்மை அவற்றுக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்துகின்றது. எதிரிகளுக்கு எதிராக முஜாஹிதுகள் வெற்றி ஈட்டும் போதெல்லாம் நமது மனம் கட்டுக்கடங்காமல் குதூகலிக்கிறது. வலுச் சமனின்மையாலும் துரோகங்களாலும் அவர்கள் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது மனம் பதைபதைக்கிறது. இறுதியில் அவர்களின் போராட்டம் நசுக்கப்படும் போது, நாம் மீளாத் துயரில் புதைந்து போகின்ற உணர்வுக்கு ஆட்படுகிறோம். எனினும், உம்மத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்காக அம்முஜாஹிதுகள் உவந்து அளித்த விலை தான் இத்தியாகங்கள் என்ற உண்மையை உணரும் போதே நம் மனங்கள் மெல்ல அமைதி கொள்கின்றன. அத்தியாகங்களை பொருளற்றுப் போகும்படி விட்டுவிடக் கூடாது என்ற திடசங்கல்பம் உள்ளே தோன்றுகிறது.

இப்போராட்டங்களைப் பற்றி மௌலானா மௌதூதி கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது:

“…அவர்கள் தழுவியது தோல்வியைப் போல் தோன்றுகிறதே தவிர அது அசலில் தோல்வியல்ல. ஒரு முஸ்லிமுக்கு உண்மை வெற்றி யாதெனில், அவன் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெரும் நோக்கில் இஸ்லாத்தின் வெற்றிக்காக போராடுவதும் உரிய முறையில் உழைப்பதுமேயாகும். இந்த அளவுகோலின் படி பார்த்தால், முஜாஹிதுகள் தங்களது இலட்சியப் போராட்டத்தில் வெற்றி அடைந்து விட்டார்கள். எனினும், உலகியல் நோக்கை கருத்தில் கொள்ளும் போது அவர்கள் தோற்றுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். காரணம், இறைவனுக்கு மாறு செய்யும் ஆட்சியை வீழ்த்தி, இஸ்லாத்தின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் அவர்கள் வெற்றியடையவில்லை…”

காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருமே காலனி நாடுகளின் வளங்களைச் சூறையாடுவதைத்தான் பிரதான நோக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஆனால், நாகரிக வளர்ச்சியடையாத பாவப்பட்ட மக்களை (முஸ்லிம்களை) நாகரிகப்படுத்துவதற்கான ஓர் உன்னதமான நோக்கம்தான் தமதிந்த படையெடுப்புகளை வழிநடத்துவதாக அவர்கள் கூறிக் கொண்டனர். காலனி நாடுகளின் மக்கள் பிற்போக்கிலிருந்து விமோசனம் அடைவதற்குள்ள ஒரே வழி, அவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கத்தேய கலாசாரத்தை ஏற்பதுதான் என்று நிறுவ காலனியவாதிகள் முயன்றார்கள். இஸ்லாத்தை முஸ்லிம்கள் தமது தனிப்பட்ட வழிபாட்டு சடங்குகளுக்கு உள்ளாக மட்டும் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்றும்; சமூகம், அரசு, நிர்வாகம் என்று வரும்போது முற்போக்கான மேற்கத்திய விழுமியங்களையே மதிப்பீட்டு அளவுகோல்களாக கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலிந்து திணிக்க முயன்றனர்.

முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.

இன்றும் கூட நவகாலனியத்தின் முதன்மை இலக்குகளாக முஸ்லிம் பூமிகளும் வளங்களுமே இருந்துவரும் சூழலில், நம் பொதுப் புத்தியிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிட்ட எதிர்ப்புப் போராட்ட மரபினை நம்முடைய மையச் சொல்லாடலுக்குள் மீள்அறிமுகம் செய்து வைப்பதற்கான ஒரு துவக்கநிலை முயற்சியாகவே இந்நூல் வெளிவந்துள்ளது.

குறிப்பு

நான் இந்நூல் அறிமுகத்தை எழுதியதற்குப் பிந்தைய காலத்தில் உலக அரங்கில் மற்றொரு புதிய யதார்த்தம் வளர்ச்சி கண்டுள்ளதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

“புதிய யதார்த்தம்” என்று கூறுவதன் மூலம் நான் நாடுவது, தக்ஃபீரி குழுக்களின் தோற்றத்தையும்வளர்ச்சியையுமே. இதனால், வரலாற்றிலும் சம காலத்திலும் இதற்கு முன்பு அவை எப்போதும் இருக்கவில்லை என்று நான் வாதிட வரவில்லை. எனினும், ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிறகு ISIS போன்ற குழுக்களின் “திடீர்” தோற்றத்தையும் அசாதாரண வளர்ச்சியையும் மனதில் கொண்டுதான், நான் ஒப்பீட்டளவில் இதுவொரு புதிய யதார்த்தம் என்கிறேன்.

இவர்களின் இலக்குகளும் வழிமுறைகளும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முஜாஹிதுகளின் இலக்குகளையும் வழிமுறைகளையும் விட்டு பாரியளவில் முரண்படுகின்றன. இவர்கள் தமது பகைமை வெறியை முழுக்க பிற முஸ்லிம்களின் மீதே பிரதானமாக பிரயோகிக்கிறார்கள். அதே போல், இவற்றின் தோற்றமும் வளர்ச்சியுமே கூட இயல்பானவை அல்ல என்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. நூலில் குறிப்பிடப்படும் ஜிஹாது இயக்கங்களைப் போல் இவை முஸ்லிம் வெகுமக்களின் அடிவேர் மட்டத்திலிருந்து தோன்றி வளரவில்லை. இவ்வியக்கங்களின் முதன்மை ஆளுமைகள் என்போர் மிகச் சமீப காலம் முன்பு வரை கூட யாரென்றே அறியப்படாதவர்கள். வெறுமனே தூரதேசத்தில் இருந்து கொண்டு நாம் இதனைச் சொல்லவில்லை. உள்ளூர் அளவிலேயே அவர்கள் எவ்வகையிலும் சமூகத்தில் ஆழ்ந்து செல்வாக்கு செலுத்தி வந்தவர்கள் அல்ல என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டது.

இன்னும் சொல்வதாயின், பல வகைகளிலும் அவர்கள் ஐயத்திற்குரிய நம்பகச் சான்றுகளைக் கொண்டோராகவே இருக்கிறார்கள். இதுவெல்லாம் “மேற்கத்திய ஊடகங்களின் அவதூறுகள்” என்று கூறிக் கொண்டு எவரேனும் வந்தால், அவர்கள் உண்மையில் அனுதாபத்திற்கு உரியவர்களே. ஒருவகையில் பார்த்தால் அவர்கள் தான் அறியாத நிலையில், “இஸ்லாத்தை ஆதரிக்கிறோம்” என்று நினைத்துக் கொண்டு, உண்மையில் ஏகாதிபத்திய சதிவலையில் விழுந்திருக்கிறார்கள்.

“புதிய யதார்த்தம்” தோன்றியுள்ளது என்பதற்காக இந்நூலறிமுக குறிப்பில் நான் எழுதிய எந்தவொரு கருத்தையும் திரும்பப் பெற முயலவில்லை என்பதை மனதில் கொள்ளவும். அவை யாவும் மிகச் சரியானவை என்றே நான் இப்போதும் கூறுகிறேன். எனினும், நமது புரிதல் ஆழமான அடிப்படைகளை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்; வெறுமனே உணர்வுபூர்வமான, பலவீனமான ஆதாரங்களின் மேல் அமைந்ததாக இருக்கக் கூடாது என்பதே இதனூடாக நான் உணர்த்த வந்த கருத்து என்பதை கவனிக்கவும்.

Related posts

Leave a Comment