நூல் அறிமுகம் 

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்: சமகாலத் துருக்கியில் இஸ்லாத்தின் ஓர் அம்சம்

ஆசிரியர்: டாக்டர் ஹமீத் அல்கர்

மொழிபெயர்ப்பு: புன்யாமீன்

பக்.48, விலை: ரூ.20

வெளியீடு: மெல்லினம், சென்னை.

தொடர்புக்கு: 31-பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை – 625 002, +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை)

book_wrapper_cropping

முதல் உலகப் போருக்கு பிறகு உஸ்மானிய சாம்ராஜ்ய வீழ்ச்சியை அடுத்து, முஸ்தஃபா கமால் (அதாதுர்க்) துருக்கி தேசியவாத அரசைப் பிரகடனம் செய்தார். அரசின் அதிகாரபூர்வ சித்தாந்தமாக இனி மதச்சார்பின்மையே இருக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. துருக்கிய தேசம் இதுவரை சந்தித்த இழிவு, தோல்வி அனைத்துக்கும் அது துருக்கிய தேசிய அடையாளத்தை புறக்கணித்து, இஸ்லாமிய அடையாளத்தையும் தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தியதே காரணம் என கமாலிஸ ஆளும் வர்க்கம் நம்பியது. இஸ்லாத்தைப் புறமொதுக்கி ஐரோப்பியமயமாவாதில் தான் முன்னேற்றமும் அபிவிருத்தியும் இருக்கிறது என்று அவர்கள் மிகத் தீவிரமாக நம்பினர். ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் கமாலிஸவாதிகள் இஸ்லாமிய நம்பிக்கைகளின் மீதும் அடையாளங்களின் மீதும் மிகக் கொடூரமான தொடர் தாக்குதல்களை தொடுக்கவாரம்பித்தனர்.

* துருக்கிய மொழியின் எழுத்தமைப்பாக இருந்த அரபி லிபியை லத்தீன் லிபியைக் கொண்டு பதிலீடு செய்தனர்;

* தொழுகைக்கு விடுக்கப்படும் ‘அதான்’ எனும் பாங்கொலி துருக்கிய மொழியிலேயே ஒலிக்கப்பட வேண்டுமென சட்டமியற்றப்பட்டது;

* அரசுப் பணிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கப்பட்டது.

சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது.

துருக்கியின் புதிய மதச்சார்பின்மை அமைப்புக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படாதவாறு பாதுகாக்கும் பொறுப்பு துருக்கியின் மதச்சார்பற்ற இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. முஸ்லிம் வெகுமக்களும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்க முனைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இராணுவம் தவறாமல் தலையிட்டு மதச்சார்பின்மையை நிலைநாட்டியது.

இதற்கொரு உதாரணமாக, 1997-ல் இராணுவம் அரங்கேற்றிய நஜ்முத்தீன் அர்பகானின் ஆட்சிக் கவிழ்ப்பை கூறலாம். இவ்வாறு சுமார் முக்கால் நூற்றாண்டுகால மதச்சார்பினமைவாத ஒடுக்குமுறையையும் மீறி, இஸ்லாமியவாதிகளின் கட்சி என்று அறியப்படும் ‘நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை’ (AKP) சேர்ந்தவர்கள் இன்று பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு வந்திருப்பதை பார்க்க முடிகிறது. மதச்சார்பின்மையின் பாதுகாவலர்களான துருக்கிய இராணுவ ஜெனரல்கள் பலரும், அவர்கள் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்காக இன்று சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

[துருக்கி இன்றும் நேட்டோ அணியில் நீடிப்பது, இஸ்ரேலுடன் அரசியல்-பொருளாதார உறவுகளைப் பேணுவது, அரபு சர்வாதிகாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுவது என்பன பற்றிய என்னுடைய விமர்சனத்தை நான் மற்றொரு சந்தர்ப்பத்திற்காக சேமித்து வைக்கிறேன்.]

இத்தனை ஆண்டுகளும் மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையைக் குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் தாண்டி, துருக்கிய மக்கள் இன்று தமது இஸ்லாமிய அடையாளத்தை பெருமிதத்துடன் முன்னிறுத்துவது எப்படிச் சாத்தியமானது? இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி ‘பதீயுஸ்ஸமான் சஈத் நூர்ஸி’, ‘ரிஸாலா-யே நூர்’ எனும் பெயர்களில் தங்கியிருக்கிறது.

யார் இந்த ‘சஈத் நூர்ஸி’? அது என்ன ‘ரிஸாலா-யே நூர்’?

இந்த சஈத் நூர்ஸியைப் பற்றியும் அவர் துவக்கி வைத்த ‘ரிஸாலா-யே நூர்’ என்னும் அமைதிப் புரட்சி பற்றியும் மிகச் சுருக்கமானதொரு அறிமுகத்தை தமிழுலகுக்கு வழங்குவதே மெல்லினம் வெளியிட்டுள்ள இந்நூலின் நோக்கம்.

சஈத் நூர்ஸி (1876-1960) கிழக்கு அனடோலியாவில் உள்ள நூர்ஸ் எனும் கிராமத்தில் குர்து குடும்பமொன்றில் பிறந்தவர். சஈத் நூர்ஸியின் ஆசிரியர்களுள் பெரும்பாலானோர் ஃகாலிதி நக்ஷ்பந்திய்யா சூஃபி ஒழுங்கைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அஹ்மத் சிர்ஹிந்தியின் எழுத்துக்கள் அவரில் பெரும் செல்வாக்கு செலுத்தின. நூர்சியிடம் இளமையிலேயே அசாதாரணமான அறிவு முதிர்ச்சியும் திறமையும் குடிகொண்டிருந்தன.

இஸ்லாத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கமாலிஸ மதச்சார்பின்மைவாதிகள் மிகவும் மூர்க்கமான முறையிலும் நிறுவன ரீதியிலும் தகர்த்து வருவதை நூர்ஸி ஆழ்ந்து அவதானித்தார். அரசுடன் மோதற் போக்கை மேற்கொண்டு தனது ஆற்றலைச் செலவிடுவதற்குப் பதிலாக, அவர் முற்றிலும் மக்களின் பால் திரும்பினார்.

* அவர்களுடைய இறைநம்பிக்கையின் அஸ்திவாரத்தை ஸ்திரப்படுத்த முயன்றார்;

* மதத்துக்கும் அறிவியலுக்கும், இறைநம்பிக்கைக்கும் சுதந்திரத்துக்கும், மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான இணக்கப்பாட்டை தர்க்க ரீதியிலும் அறிவியல்பூர்வமாகவும் விளக்கப்படுத்தினார்.

* அறிவியல், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பன போன்று கருத்துலகில் அன்று ஆதிக்கம் செலுத்திய கருத்தாக்கங்களை எல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் விளக்குவதற்கு ஏதுவாக இஸ்லாமியச் சொல்லாடலை தகவமைத்தார்;

* இஸ்லாத்தின் ஆதார விழுமியங்களின் பாலான விசுவாசத்தை உறுதிப்படுத்தினார்;

* சடவாதச் சித்தாந்தத்தின் உள்ளீடற்ற இயல்பினை திரைகிழித்தார்;

* ‘அகிலம் எனும் மகா புத்தகம்’ என்பதாக அழைத்து இயற்கை விதிகளை விளக்குவதன் ஊடாக இறைவனின் வல்லமையை மக்கள் புரிந்துகொள்ளச் செய்தார்;

நூர்ஸியின் போதனைகள் துருக்கியில் ஒரு ‘நவ-சூஃபியிசத்தை’ உருவாக்கின என்றே கூறவேண்டும். அவரது நூல்கள் இஸ்லாமிய அறிவை அறிஞர்களின் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து ஜனரஞ்சகப்படுத்தின. வாய்மொழி இஸ்லாத்திலிருந்து அச்சு இஸ்லாத்தை நோக்கிய நகர்வை அவர் வழிநடத்தினார்.

‘ரிஸாலா-யே நூர்’ எனும் தனது எழுத்தாக்கத்தின் மூலமே அவர் இதனைத்தையும் செய்தார். அது குர்ஆனிய கருத்துகளுக்கான அவருடைய விளக்கவுரையாக அமைந்திருந்தது. அது எழுதித் தொகுப்பட்ட விதமே கூட மிகவும் அலாதியானது.

சஈது நூர்சி நாட்டுப்புறங்களிலும் காடுகளிலும் இருந்தவாறு, கைகளில் மேற்கோள் நூல்கள் ஏதுமின்றி கடகடவென இவ்விளக்கங்களை மொழிவார்; அதே வேகத்தில், அவரது மாணவர்கள் அவற்றை எழுதிக்கொள்வர். அவர்களிடம் அப்போது அச்சு எந்திர வசதிகள் இல்லாத காரணத்தால், பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் கடத்தப்படும்.

மக்கள் சிறு சிறு குழுக்களாகக் குழுமி அவற்றை வாசித்து உள்வாங்கிக் கொள்வர். அந்த வாசிப்பு வட்டங்கள் ‘தெர்ஷான்கள்’ என்று அழைக்கப்பட்டன. அதில் பங்கேற்றுக் கற்கும் மாணவர்கள் ‘நூர்ஜுக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இது படிப்படியாக வளர்ந்து ஓர் மாபெரும் அறிவியக்கமாக விஸ்வரூபம் எடுத்தது.

ஒடுக்குமுறை அமைப்புகள் யாவுமே மக்களின் அறியாமை எனும் அஸ்திவாரத்தின் மீது தான் கட்டமைக்கப்படுகின்றன. அந்த அறியாமையின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது போது அவை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைகின்றன. ஆனால் இன்று இஸ்லாமிய இயக்கங்கள் என்பதாக நம்மிடையே இயங்குபவையோ இவ்வடிப்படை உண்மையை தெரிந்தும் தெரியாதவை போல நடந்து கொள்கின்றன.

எளிதாக மக்களைத் திரட்டுவதற்கு வசதியாக இருக்கும் உணர்ச்சிபூர்வமான கோஷங்களை முன்வைத்து கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் மட்டுமே இலட்சியங்களை சாதித்து விடலாம் என்பதாக தமது தொண்டர்களையும் வெகுமக்களையும் அவை நம்பவைக்கின்றன. அப்படியே எதையேனும் அவை கற்பித்தாலும் பிற முஸ்லிம்களை விவாதத்தில் தோற்கடிப்பதற்கும், தம்மைத் தவிர மற்றெல்லோரும் நெறிபிறழ்விலேயே உள்ளனர் என்று நிறுவுவதற்கும் தேவையான தர்க்கவியல் அடிப்படையை வலுப்படுத்தும் விதமான ஒரு கல்வியாகவே அது இருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது. ‘நேர்வழி எமது தனியுடைமை’ என்பது போன்றவொரு கற்பிதத்தைச் சுமந்து திரியும் அகந்தை கொண்ட தனிமனிதர்களையே அது உருவாக்கியிருக்கிறது.

வேறு சில இயக்கங்களோ இஸ்லாத்தின் செய்தியை இயன்ற மட்டும் நீர்த்துப் போகச் செய்து, காலில் விழாத குறையாகக் கெஞ்சும் பாணியில் அதனைப் பிறருக்கு முன்வைக்கும் ‘அழைப்பாளர்களை’ உற்பத்தி செய்வதற்கான ஒரு பாடத்திட்டத்தை முன்னிறுத்துகின்றன. இதனால் தன்னம்பிக்கையோ, தான் சுமந்திருக்கும் புரட்சிகர செய்தியின் மீதான உறுதிப்பாடோ இல்லாது பரிதாபகரமாக நடமாடும் ஒரு தலைமுறை உருவாக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.

இந்நோக்கில், சஈத் நூர்சியின் பாலான ஆர்வத்தை ஒரு சிறிதேனும் கிளப்பிவிடும் என்றாலும் தற்போதைய நூலின் குறிக்கோள் நிறைவேறியதாகக் கொள்ளமுடியும்.

நூர்ஸியும் அவரது மாணவர்களும் கமாலிஸ அரசுக்கு முன்பிருக்கும் ஓர் பேரபாயமாகப் பார்க்கப்பட்டனர். மதச்சார்பின்மை கோஷங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்த நாத்திகத்திற்கு நூர்ஸி ஓர் வாழும் சவாலாக விளங்கினார். ரிஸாலா-யே நூர் இயக்கத்தை முடக்குவதற்கு அரசு சகலவித ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டது. நூர்ஸி மீண்டும் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார்; நாடுகடத்தப்பட்டார்.

அவர் இறந்த பிறகு அவரது உயிரற்ற உடலையும் கூட அவர்கள் ஓர் ‘’தேசிய அபாயமாக’’ கருதினர். எனவே தான், ராணுவக் கிளர்ச்சியின் தலைவர்கள் 1960-ல் அவரது உடலைத் தோண்டியெடுத்து, எவருமறியாதவொரு இடத்தில் மீண்டும் புதைத்தனர்.

உண்மையைச் சொல்லுங்கள், சஈத் நூர்ஸியைப் பற்றியும் அவரது ரிஸாலா-யே நூர் பற்றியும் தேடிக் கற்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றவில்லையா?

Related posts

Leave a Comment