கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை

Loading

கடந்த 3/15 அன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி வெள்ளை இனவாதி ஒருவன் நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரு பள்ளிவாசல்களில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் பெண்கள் உட்பட 50 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதோடு, 20 பேர் காயமடைந்திருக்கும் கோரச் சம்பவத்தை நீங்கள் அறிவீர்கள். கொல்லப்பட்டவர்களுள் எழுவர் இந்தியர்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலில் கூடியிருந்த முஸ்லிம்கள் மீது இந்தத் துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய பிரெண்டன் ஹாரிசன் டாரன்ட் (இனி டாரன்ட்), அதைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலையாகப் பதிவு செய்துள்ளான். வன்மத்துடன்கூடிய இந்தக் கோழைத்தனமான செயலுக்கு உலகம் முழுவதிலும் கண்டனங்கள் ஒலித்துக்கொண்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டவுடனேயே இதுவொரு தீவிரவாதத் தாக்குதல் என்றும், நாட்டின் கறுப்பு தினங்களுள் இதுவும் ஒன்று என்றும் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமரும் இதை “வலதுசாரித் தீவிரவாதம்” என்று கண்டித்திருந்தார்.

வெள்ளையினத் தேசியவாதிகளின் நாசவேலைகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கையை நியூஸிலாந்து பிரதமர் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது அவர் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் யாவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆறுதலளிப்பதாகவும் பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கிறது.

3/15 தாக்குதலில் தொடர்புடைய டாரன்ட் உள்ளிட்ட மூவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றிய நியூஸிலாந்து காவல்துறை மறுநாளே அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியது. தற்சமயம் முக்கியக் குற்றவாளியான டாரன்ட் கொலைக் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளான். ஏப்ரல் 5ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டாரன்ட் துப்பாக்கிச்சூடு நடத்துமுன் ராடோவன் என்பவனை நாயகனாகக் கொள்ளும் பாடலொன்றைக் கேட்டபடி பள்ளிவாசலினுள் நுழைகிறான். ராடோவன் போஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காகவும் பிற போர்க் குற்றங்களுக்காகவும் சிறைவைக்கப்பட்டவன். அதுமட்டுமல்லாமல், இவனைப் போலவே கூட்டுக்கொலை புரிந்த மற்றொரு கொடூரனான அன்டர்ஸ் ப்ரீவிக்கிடம் ஆசி பெற்ற பிறகே தாக்க வந்ததாக டாரன்ட் அதிர்ச்சியூட்டுகிறான். 2011ஆம் ஆண்டு நார்வேயின் ஓஸ்லோவில் 77 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதிதான் இந்த அன்டர்ஸ் ப்ரீவிக். டாரன்ட் தொடர்புபடுத்தும் இதுபோன்ற ஆட்களும், இதர குறியீடுகளும் அவனுடைய தீய குறிக்கோளையும் முஸ்லிம் விரோத அரசியலையும் தூலமாகப் புலப்படுத்துகின்றன. இந்தப் பின்னணியோடு பார்க்கும்போது, ட்ரம்ப் ஆதரவாளனாக இவன் இருப்பதில் வியப்பேதுமில்லை.

டாரன்ட் “மாபெரும் குடியேற்றம்” எனும் தலைப்பில் இணையதளத்தில் வெளியிட்ட 74 பக்க அறிக்கை முழுவதும் தீவிர வலதுசாரி, வெள்ளையினவாத வெறுப்புரைகளால் நிறைந்திருக்கிறது. மேலும், பிற நாடுகளிலிருந்து மேற்குலகுக்குக் குடிபுகுவோர் மீதான கடும் துவேஷத்தை (Xenophobia) அது கக்குகிறது. இந்தக் கோரத் தாக்குதலை நடத்தியதற்கான காரணமாக டாரன்ட் தனது அறிக்கையில், “நம்முடைய நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுடைய (குடிபுகுந்தோருடைய) நிலங்களாய் ஆகமுடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே” என்று கூறியிருக்கிறான். மேலும், ‘ஆக்கிரமிப்பாளர்களை’ அச்சுறுத்தியும் அழித்தொழிப்பதன் வழியாகவும் ஐரோப்பிய மண்ணில் அவர்களின் குடியேற்ற விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைத் தனது நோக்கம் என்கிறான்.

ஆகமொத்தத்தில், உலகம் முழுவதிலும் செயல்பட்டுவரும் இஸ்லாம்-வெறுப்பாளர்களின் (Islamophobes) வழமையான சவடால்களே டாரன்டிடமும் வெளிப்படுகின்றன. அந்நியர் குடியேற்றம், பிறப்பு விகிதம் அதிகரிப்பு, நாட்டுக்கு அச்சுறுத்தல், கலாச்சாரம் அழித்தொழிக்கப்படுகிறது போன்ற வலதுசாரி ஃபாசிஸ்டுகளின் அடிப்படைகளற்ற சதிக் கோட்பாடுகளேஇவனுடைய பேசுபொருள்களாக உள்ளன. இந்துத்துவவாதிகளும் இதே பாணியிலான பரப்புரையையே இந்தியாவில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கும்பல் படுகொலைகள், லவ் ஜிஹாத் பிரச்சாரம், ரோஹிங்கியா அகதிகள் எதிர்ப்பு தொடங்கி சமீபத்தில் காஷ்மீரிகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் வரை இங்குள்ள இந்து தேசியவாதிகளின் இஸ்லாம்-வெறுப்புச் செயல்பாடுகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்.

சமீபகாலமாக மேற்கத்திய நாடுகளில் பள்ளிவாசல்களின் மீதும் முஸ்லிம் வணிக நிறுவனங்களின் மீதுமான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 9/11க்குப் பிறகு முஸ்லிம் எதிர்ப்பு வீரியமடைந்தன என்றபோதிலும் அமெரிக்காவில் ட்ரம்ப் தோன்றிய பிறகு அவை இன்னும் ஊக்கம் பெற்றுள்ளன.

கனடாவிலுள்ள கியூபிக் சிட்டி பள்ளிவாசலில் கடந்த 2017 ஜனவரி 29ஆம் நாள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 29 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்செயலைச் செய்த வெள்ளையின மேலாதிக்கவாதியான அலெக்ஸ்சாண்டர் பிஸ்ஸோனெட்டும் (Alexandre Bissonnette) டாரன்டைப் போலவே 28 வயதுடையவனாகவும், மேற்கூறிய நார்வேஜிய பயங்கரவாதி அன்டர்ஸ் ப்ரீவிக்கை ஆதர்சமாகக் கொண்டவனாகவுமே இருந்தான். இதுதவிர, அமெரிக்காவின் பிரபல இஸ்லாமிய வெறுப்பு வணிகர் பமேலா கெல்லரின் பிரச்சாரங்களாலும் அவன் ஈர்க்கப்பட்டிருந்தான்.

உண்மையில், நியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.

இஸ்லாமோ ஃபோபியா உருவாக்கத்தின் பின்னணியையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இரு துருவங்களாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலகைக் கோலோச்சியபோது அமெரிக்காவுக்கு ‘கம்யூனிச எதிரி’ தேவைப்பட்டது. பனிப்போருக்குப் பிந்தைய உலகில் அதற்குப் பதிலீடாக ‘இஸ்லாம் எதிரி’ முன்னிறுத்தப்படுகிறது. முன்பு கம்யூனிசப் பூச்சாண்டி காட்டியவர்கள் தற்காலத்தில் இஸ்லாம் குறித்து அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியல் அனுகூலமடைகிறார்கள். இது தொடர்பான விரிவான ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன.

அதே சமயம், சோவியத் கருவுறுவதற்கு முன்பே மேற்குலகில் சிலுவை யுத்த காலம் தொட்டு முஸ்லிம்களுக்கெதிரான பரப்புரைகளுக்கு நீண்ட ‘பாரம்பரிய’ தொடர்ச்சி உண்டு என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். இதன் நீட்சியாகவே முஸ்லிம்களின் மீதும், இஸ்லாத்தின் மீதும் மேற்கு நாடுகளில் தப்பெண்ணங்களும் காழ்ப்புக் கருத்துகளும் ஆழமாகக் குடிகொண்டுள்ளன. பெரும் அறிஞர்களாக உலகில் கொண்டாடப்படுவோரிடம்கூட இவை வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. நெடுங்காலமாக மேற்கின் அரசியல் எதிரியாய் முஸ்லிம் உலகம் இருப்பதும் இதற்கான பிரதான பின்புலமாக உள்ளது. இந்தப் பின்னணிகளையெல்லாம் ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலமே இஸ்லாமோ ஃபோபியாவின் மூலக்காரணிகளை நம்மால் கண்டடைய இயலும்.

நியூஸிலாந்து தாக்குதல் போலவே பல தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களுக்கெதிராக உலகம் முழுக்க நடந்த வண்ணமுள்ளன. இம்மாதிரியான மானுட விரோத வன்செயல்கள் இனியும் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் நம்முன்னுள்ள கேள்வி.

Related posts

One Thought to “நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை”

  1. […] முனைகிறது. இது பயங்கரவாதிகளான ஆன்டர்ஸ் ப்ரீவிக், பிரென்டன் டாரன்ட் மற்றும் கிறிஸ்தவ இனவாதக் […]

Leave a Comment