கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மெளதூதியைக் குறிவைக்கும் இந்துத்துவர்கள்

Loading

புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) பி.ஏ., எம்.ஏ. இஸ்லாமியக் கல்விப் பாடத் திட்டத்திலிருந்து மெளலானா மெளதூதி, சையித் குதுப் ஆகியோரின் புத்தகங்கள் நீக்கப்பட்டதாக கடந்த மாதத்தின் தொடக்கத்தில் செய்தி வெளியானது. தீவிர இந்துத்துவவாதியான மது கிஷ்வார் உள்ளிட்ட 25 இந்து ‘கல்வியாளர்கள்’ நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பின்னணியில் பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி இம்முடிவை எடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, என்றும் இல்லாத அளவுக்கு அவர்கள் மீது ஊடகக் கவனம் குவிந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட கடிதத்தில் அலிகர், ஜாமியா மில்லியா, ஹம்தர்த் ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள “ஜிஹாதியப் பாடத் திட்டங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்” என்றும், “இந்துச் சமூகத்தின் மீதும், அதன் கலாச்சாரம் – நாகரிகத்தின் மீதும் இடையறாத தாக்குதல் என்பது இப்படியான கல்வியின் நேரடி வெளிப்பாடுதான்” என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, அலிகர் பல்கலைக்கழகம் வேகவேகமாக மெளதூதி, சையித் குதுப் ஆகியோரின் நூல்களை பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது. சொல்லப்போனால் அந்தக் கடிதத்தில் மெளதூதியின் பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘முன்னெச்சரிக்கையாக’ சையித் குதுப் நூல்களையும் பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி நீக்கியிருக்கிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், எகிப்தியரான சையித் குதுபை “துருக்கியர்” என்றும், இந்தியப் பாகிஸ்தானியரான மெளதூதியை “பாகிஸ்தானியர்” என்றும் எழுதியிருக்கிறது.

உண்மையில் கெடுநோக்கோடும், தகுந்த ஆதாரமோ அறிவுசார் அடித்தளமோ இல்லாமலும், சதிக் கோட்பாடுகளால் நிரம்பியதாகவும் இருக்கிறது அந்தக் கடிதம். கார்ல் ஸ்மித்தின் நட்பு-எதிரி எனும் பிளவுவாத அரசியல் தர்க்கத்தைக் கொண்ட துவேஷமிகு கடிதமும்கூட. ஒரு ஜனநாயக அமைப்பில் புறக்கணிக்கப்பட வேண்டியவை இப்படியான கடிதங்கள்தாமே அன்றி மெளதூதியின் நூல்களல்ல.

கல்விப்புலத்துக்குத் தொடர்பே இல்லாத கடிதம்

இந்தக் கடிதம் மெளதூதியை “ஜிஹாதிய இஸ்லாத்தின் ஊற்றுக்கண்” என்று சுட்டுவதுடன், “மெளதூதி உலகெங்கும் உள்ள முஸ்லிமல்லாதோரை இனப்படுகொலை செய்ய வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்” என்று விஷம் கக்கியிருக்கிறது.

அலிகர் பல்கலையில் இந்த இரு இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் நீக்கப்பட்டதற்குப் பிறகு மது கிஷ்வார் எழுதிய பதிவில் அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கையை பாசாங்குத்தனமானது (தக்கியா) என்று கூறியிருப்பதுடன், இஸ்லாத்தின் சித்தாந்த அடிப்படைகள் குறித்துத் தங்களுக்கு நன்கு தெரியும் என்றும், இனியும் நாங்கள் அப்பாவித்தனமாக இருக்கப்போவதில்லை என்றும் காட்டமாக எழுதியிருக்கிறார். இவருக்கு மெளதூதி மட்டுமல்ல, இஸ்லாமே பிரச்னைதான் என்பது தெளிவு.

விஷம் தோய்ந்த வரிகளால் நிரம்பியிருக்கும் அந்தக் கடிதத்தில், “இன்று காஃபிர்கள் என்று சொல்லி இஸ்லாமியவாதிகளால் குறிவைக்கப்படுவோர் இந்த வன்முறையான சித்தாந்தம் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம். இந்தத் துணைக் கண்டத்தில் அது தொடர்ச்சியான இந்து இன அழிப்பை நிகழ்த்தியிருக்கிறது… முஸ்லிமல்லாதோரை மதம் மாற்றுவது, இந்து, ஜைன, பெளத்த ஆலயங்களை உடைப்பது, அவற்றை மசூதிகளாக மாற்றுவது… லட்சக்கணக்கான இந்துப் பெண்களையும் குழந்தைகளையும் கடத்தி பாலியல் அடிமைகளாக விற்பது என இஸ்லாமிய அந்நியப் படையெடுப்பாளர்கள் சொல்லொணாக் கொடுமைகளைப் புரிந்திருக்கிறார்கள்” என்று வன்மம் கக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “சர்வதேச பயங்கரவாத இயக்கங்களான அல்காயிதா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ், ஹிஸ்புல்லா, முஸ்லிம் சகோதரத்துவம், தாலிபான் முதலானவை மெளதூதியின் கருத்தியலால் தொடர்ந்து உத்வேகமடைகின்றன…” என்று போகிற போக்கில் அடித்துவிட்டிருக்கிறார்கள்.

உண்மையான எந்தக் கல்வியாளரும் இப்படியான பொதுமைப்படுத்தல்களையும் சதிக் கோட்பாடுகளையும் முன்வைக்க மாட்டார். இப்படி பொய்யையும் புரட்டையும் அடிப்படையாகக் கொண்ட கடிதம், “இந்திய நாகரிகத்தின் எஞ்சிய சின்னங்களை அழிக்கவும், மக்கள்தொகைப் படையெடுப்பின் மூலம் உள்நாட்டு மக்களின் எண்ணிக்கையை அவர்களின் சொந்த மண்ணில் குறைக்கவும்” சதி நடைபெறுவதாக பீதியைக் கிளப்ப முனைகிறது. இது பயங்கரவாதிகளான ஆன்டர்ஸ் ப்ரீவிக், பிரென்டன் டாரன்ட் மற்றும் கிறிஸ்தவ இனவாதக் குழுக்களின் சதிக் கோட்பாடுகளையே விஞ்சும் அளவுக்கு உள்ளது.

மெளதூதியையும் பயங்கரவாதத்தையும் தொடர்படுத்தும் இவர்களின் (கு)தர்க்கத்தின்படி பார்த்தால் தலாய் லாமாவின் புத்தகங்களையும் தடை செய்ய வேண்டியிருக்கும். ஓம் ஷின்ரிக்யோ எனும் ஜப்பானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும், மரண தண்டனை பெற்றவருமான ஷோகோ அசஹாரா, தலாய் லாமாவை இந்தியாவில் சந்தித்திருக்கிறார். “மிகுந்த தகுதி வாய்ந்த சமய போதகர்” என்று தலாய் லாமா இவரைப் புகழ்ந்துள்ளார். பல்வேறு உதவிகளும் செய்துள்ளார்.

பெளத்தம், இந்து மதம் ஆகியவற்றின் கலவையாக அசஹாராவின் சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் அவரது இயக்கத்தின் பெயரில் ஓம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. மெளதூதியையும் இஸ்லாத்தையும் குற்றப்படுத்துவோர் அசஹாரா – தலாய் லாமா – இந்து மதம்/ பெளத்தம் ஆகியவற்றையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துவார்களா?

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இவர்களின் கடிதத்துக்கு ஆதாரமாக இஸ்லாம் வெறுப்பாளர்கள் வி.எஸ். நைப்பால், பிரவீன் ஸ்வாமி போன்றோரின் ஆக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. நைப்பால் சர்வதேச அளவில் இந்துத்துவ முகமாக இருப்பவர். இஸ்லாம் மீதான அவரின் துவேஷத்துக்காகவும் அறியப்படுபவர். அதுபோல, 9/11-க்குப் பிறகு இஸ்லாத்தை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முன்னிறுத்தும் சட்டகத்திலிருந்துதான் பிரவீன் ஸ்வாமி, சுல்தான் ஷாஹீன் (இவரையும் கடிதம் மேற்கோள் காட்டுகிறது) போன்றோர் கருத்துருவாக்கங்களைச் செய்து வருகின்றனர். ராணுவம் – தொழில்துறை – ஊடகம் ஆகியவற்றின் மனப்பாங்கும், அறிவெதிர்ப்புமே இவர்களின் எழுத்துகளுக்கான அடிப்படைகள். இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியமெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

இன்னொரு மெளதூதி!

மெளதூதியை இழிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் மெளதூதி பற்றிய முழுப் பரிமாணத்தை கருத்தில் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

மெளதூதி மஹாராஷ்டிராவின் ஒளரங்காபாத்தில் பிறந்தவர். பாகிஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அபுல் கலாம் ஆசாத்தைப் போல இளம் வயது முதலே துடிப்புடன் அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டு வந்தவர். இந்து மஹா சபா, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவின் வாழ்க்கை வரலாற்றை தனது 16ம் வயதில் எழுதிப் பிரசுரித்தவர்.

மெளதூதி எழுதிய மதன் மோகன் மாளவியா வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் பக்கம்

இதுபோல் காந்தியின் வரலாற்றையும் அவர் எழுதியிருக்கிறார். அதை அப்போதைய பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்தது. 1947ம் ஆண்டு ஏப்ரலில் ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார். “நான் உங்கள் பேச்சை கவனமாகவும் மகிழ்ச்சியுடனும் செவியுற்றேன்” என்றும் காந்தி குறிப்பிட்டார்.

1920ல் காலனியம் பற்றியும், அது இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவது குறித்தும் விமர்சித்து எழுதினார் மெளதூதி. இந்திய உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவதை அவர் உலக முதலாளியத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தார். தொழில் சங்கங்களை ஆதரித்தார். 1930கள் மத்தியில் இந்திய அரசியல் தீவிரமாக மாற்றமடைந்த பின்னணியில் மெளதூதியின் நிலைப்பாடுகளும் மாறின. 1937 தேர்தலும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அமைத்த அமைச்சரவையும் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன.

மெளதூதி காங்கிரஸ் ஆட்சியை “இந்து அரசு” என்பதாகப் பார்த்தார். காங்கிரஸ் – ஜம்மியத் உலமா ஏ ஹிந்த் கூட்டணி மீது அதிருப்தியுற்று “இஸ்லாமியத்தை” (Islamism) முன்னெடுக்கத் தொடங்கினார். ஜனநாயகத்தையும் இஸ்லாமியத்தையும் மேற்குறிப்பிட்ட கடிதம் எதிரெதிரே நிறுத்த முனைகிறது. ஆனால் ஜனநாயகத்தை தீவிரமயப்படுத்தியவர் மெளதூதி.

1938ல் அவர் எழுதுகிறார்:

“…ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தில் எந்த அறிவார்ந்த மனிதனுக்கும் மாற்றுக் கருத்திருக்காது… ஒரே நிலப்பரப்பில் வசிப்பதால் இந்துக்கள், முஸ்லிம்கள், தீண்டப்படாதோர், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரே சமூகம் என்று அனுமானிக்கப்படுகிறார்கள். அதனால் அரசு பெரும்பான்மைச் சமூகத்தினுடைய விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுவது ஜனநாயகத்தின் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது. இதுவே இந்து தேசியவாதத்தையும் இந்திய தேசியவாதத்தையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்துக்களின் நிலைக்கு முரணாக, இந்த (ஜனநாயக) அமைப்புமுறையில் நாம் சிறுபான்மையினராக இருப்பதாலேயே நம் சமூகத்தின் அபிலாஷைகளெல்லாம் புதைக்கப்படுகின்றன.”

வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நம்பிக்கையை இழந்தால் அவர்களைத் திரும்பப் பெறும் உரிமையை வழங்குமாறு கோரிய அரிதான அரசியல் கோட்பாட்டாளராக மெளதூதி இருந்தார். ஜனநாயகத்தின் மீதான மெளதூதியின் ஈடுபாடு என்பது மேற்பூச்சானது அன்று. பாகிஸ்தானில் அவரது கட்சி தொடர்ச்சியாக தேர்தலில் பங்குகொண்டது. அரசு “ஷரீஆவை அமல்படுத்தாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

மெளதூதியின் சிந்தனையிலுள்ள நுட்பங்களையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவரது புத்தகங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், இஸ்லாத்தை இழிவுப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம் உண்மையில் இந்தியவியல் (Indology) துறைக்குக் கடன்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியவியலானது இந்தியாவை “உள்நாட்டுக்குரிய” இந்து மதத்தோடும், இஸ்லாத்தை அந்நிய நாட்டு வன்முறையோடும் சாரம்சப்படுத்துகிறது.

மாளவியாவை “இந்துஸ்தானின்” மைந்தன் என்று விவரித்தார் மெளதூதி. அவர் இந்தியா என்று சொல்லாமல் இந்துஸ்தான் என்று குறிப்பிட்டது ஒருவகையில் காலனிய நீக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதாக உள்ளது. பல பண்பாடுகளை உள்ளடக்கிய இந்துஸ்தான் எனும் கருத்தாக்கத்தைத் துடைத்தெறிந்து, இந்து மதத்தை மையப்படுத்திய “இந்தியா”வை நிறுவியதில் காலனியத்தின் பங்கு பற்றி வரலாற்றாசிரியர் மனான் ஆசிஃப் எழுதியிருக்கிறார்.

ஆக, அந்தக் கடிதம் மெளதூதியையும் இஸ்லாமிய மூலாதாரங்களையும் இந்தியாவுக்கு எதிரானதாக முன்வைப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

AMUவின் நடவடிக்கை பற்றி

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மெளதூதி, சையித் குதுப் புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பதற்றத்தால் அல்லது கோழைத்தனத்தால்தான்.

முதலில், பாடத்திட்டம் தொடர்பான ஒரு கடிதம் யாருக்கு எழுதப்பட வேண்டும்? பிரதமருக்கா அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவுக்கா (யூஜிசி)? யூஜிசி ஏதாவது சொல்லியிருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் அதுகுறித்து ஒரு நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, கல்விப்புலத்துக்கு சம்பந்தமில்லாத, அரசியல் உள்நோக்கு கொண்ட சிலர் ஆற்றிய வினைக்கு AMU போன்ற ஒரு மதிப்புக்குரிய கல்வி நிறுவனம் இப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத் தன்னாட்சி, அறிவுசார் சுதந்திரம், எதுவெல்லாம் “Indic” ஆகியவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் AMU ஒரு நியாயமற்ற, பிளவுவாதக் கோரிக்கைக்குப் பணிந்துவிட்டது!

(ஆகஸ்ட் 17 அன்று பேரா. இர்ஃபான் அஹ்மது தி வயர் தளத்துக்கு எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)

Related posts

Leave a Comment