கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

Loading

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜூ இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்குகின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய இணையவழிப் பாடநெறியின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவமே இந்தத் தொடர்.

ஐயங்களின் பிடியில்..

எனது பெயர் டேனியல் ஹகீகத்ஜூ. ஈரானைப் பூர்விகமாகக் கொண்டவன். அமெரிக்காவின் டெக்சஸ் நகரில் பிறந்து வளர்ந்தவன். ஹகீகத்ஜூ என்பதுகூட பாரசீகப் பெயர்தான். ஹக் என்பது உண்மை/ சத்தியம். அறபியிலும் இவ்வார்த்தை இருக்கிறது. ஜு என்றால் தேடுபவன் என்று பொருள். என் பெயரை உண்மையைத் தேடுபவன் என்று அர்த்தப்படுத்தலாம். இஸ்லாத்தை என் பெற்றோர் மதச்சார்பின்மைவாதக் கண்ணோட்டத்தில் அணுகி வந்தார்கள். இஸ்லாம்தான் முழு வாழ்வையும் தீர்மானிக்கும் கருத்துநிலை என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை. நானும் அப்படியேதான் வளர்ந்தேன்.

மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என நான் படிக்கச் செல்லும்போதுதான் இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்பட்டது. நான் யார், வாழ்க்கைக்கான நோக்கம் என்ன போன்ற இருத்தலியல் கேள்விகள் என்னை ஆட்கொண்டன. பிறகு இஸ்லாத்தை முறையாகப் பின்பற்ற ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் இஸ்லாம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் என்னுள் தோன்றின. சில விஷயங்கள் என் அறிவுக்குப் புலப்படாததுபோல் அல்லது தவறென்று தோன்றியது. ஏன் பெண்கள் மட்டும் ஹிஜாப் அணிய வேண்டும், அரசையும் மதத்தையும் ஏன் கலக்க வேண்டும் முதலான எளிய விவகாரங்கள் என்னிடம் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணின. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றை உலகமே பூஜிக்கும்போது ஏன் இஸ்லாமிய மூலாதாரங்களில் இவையெல்லாம் இல்லை என்றுகூட யோசித்திருக்கிறேன்.

ஒருகட்டத்தில், எனக்கு வரும் அதே சந்தேகங்கள்தாம் என்னைப் போலவே குழப்பத்திலுள்ள மற்ற முஸ்லிம்களுக்கும் வருவது புரிந்தது. இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதோர் கேட்கும் கேள்விகளிலும், சில முஸ்லிம்களுக்குத் தோன்றும் சந்தேகங்களிலும் ஒருவித ஒப்புமையும் வகைமாதிரியும் இருப்பதை நீங்கள் அவதானிக்க இயலும். இது தற்செயலானதா அல்லது இப்படியான குழப்பங்கள் உருப்பெற வேறு உறுதியான மூலம் இருக்கிறதா என ஆராய்ந்தால், மேலைத் தத்துவம் இதற்கெல்லாம் மூல ஊற்றாக இருப்பது புலப்படும்.

மேற்கத்திய தத்துவவியலாளர்களாலும், அங்கு தோன்றிய கருத்தாக்கங்களாலும் தொடர்ச்சியாக இஸ்லாமும் முஸ்லிம் சமூகங்களும் தாக்கப்பட்டு வந்திருக்கின்றன. காலனியச் செயல்திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இது இருந்தது. காலனியச் செயல்திட்டம் என்பது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது, மக்களைக் கொல்வது என்பதையெல்லாம் தாண்டி இன்னும் நுட்பமாகச் செயல்படக்கூடியது. காலனிய மேலாதிக்கத்திலுள்ள மக்கள் தங்களின் நலன் விரும்பிகளாக காலனியவாதிகளைக் கருதுவதற்கு ஆதாரமாக விளங்கும் தத்துவார்த்த அடிப்படைகளை நாம் இனங்காண வேண்டியுள்ளது. நாத்திகம், தாராளவாதம், மதச்சார்பின்மைவாதம், பெண்ணியவாதம் போன்ற கருத்துநிலைகள் முஸ்லிம் உலகை ஆக்கிரமிக்கவும், இஸ்லாத்தைத் தாக்கவும் பயன்படுத்தப்பட்டன. இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று மேற்கில் வாழும் ஒரு முஸ்லிம் குர்ஆனைத் திறந்து ஓதினால் ஏகப்பட்ட ஐயங்கள் அவருக்கு எழும் சூழல் உள்ளது. உதாரணத்துக்கு, சுலைமான், தாவூத் (அலை) நபிமார்களாக மட்டுமின்றி அரசர்களாகவும் இருந்தவர்கள். இதை வாசிக்கும் ஒருவருக்கு, மன்னர் ஆட்சி என்பது அடிப்படையிலேயே அநீதியானது இல்லையா, மக்கள் பிரதிநிதித்துவம் அங்கே இல்லையே, ஜனநாயகம் இல்லையே போன்ற சந்தேகங்கள் எழலாம். இறைவனால் வழிகாட்ட அனுப்பப்பட்டவர்கள் எப்படி மன்னராக இருக்க முடியும் என்று தோன்றலாம். இறைவன் ஏன் ஆதம் (அலை) என்ற ஆணை முதலில் படைக்க வேண்டும், பெண்ணை முதலில் படைக்காதது ஏன் என என்னிடமே சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

தஃப்சீர் வகுப்பெடுப்பவர் சில பகுதிகளை மற்றவர்களுக்குக் கற்பிக்காமலேயே கடந்துபோவதுகூட சில இடங்களில் நடந்திருக்கிறது. காரணம், சில வசனங்கள் குழப்பத்துக்கு வழிவகுக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பேரறறிஞர்களான குர்துபி, தபரீ, இப்னு கஸீர் (றஹ்) போன்றோரின் விளக்கவுரைகளைப் படிப்பது குழப்பங்களை ஏற்படுத்துமா? இப்படியே இது தொடர்ந்தால் அடுத்தடுத்த தலைமுறைக்கு தீன் சரியான விதத்தில் கையளிக்கப்படாமல் போகும் நிலை உருவாகாதா?

ஐயங்களை எதிர்கொள்ளல்

ஆரம்பத்தில் ஜிஹாது, பெண் உரிமைகள், அடிமைமுறை போன்ற இஸ்லாத்தின் சில அம்சங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறியிருக்கிறேன். ஏன் இஸ்லாம் அடிமைமுறையைக் கண்டிக்கவில்லை, நபிகள் நாயகம் அடிமைகளை வைத்திருந்தது ஏன், ஃபிக்ஹு நூல்களில் அடிமைமுறை தொடர்பான விதிமுறைகளெல்லாம் இருப்பது சரியா என்றெல்லாம் நவயுக முஸ்லிம்களில் பலருக்கு ஐயங்கள் எழலாம். இப்படியான விஷயங்களை ஒதுக்கிவிட்டு நோன்பு, தொழுகை என இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பது நல்லது என்று சிலர் எண்ணக்கூடும். இன்னும் சிலர் இவற்றை யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஐயங்களை உரிய விதத்தில் எதிர்கொள்ளவில்லை என்றால் அவை புற்றுநோய்க் கட்டிபோல வளரத் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் கணிதவியல் பாடம் கற்பதாக வைத்துக்கொள்வோம். வகுத்தல் சொல்லித்தரப்படுகிறது. ஏனென்றே தெரியாமலும், பயன்பாடு புரியாமலும் அதன் முறைகளைக் கற்று, அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறீர்கள். வகுத்தலில் எதிர்கொள்ளும் இதே சிக்கலை பெருக்கலிலும், அல்ஜீப்ராவிலும், இன்னபிறவற்றிலும் நீங்கள் எதிர்கொண்டால் என்ன நடக்கும்? கணிதத்தையே வெறுத்துவிட மாட்டீர்களா? இஸ்லாமிய விவகாரங்களிலும் இதேபோல்தான் நடக்கிறது. ஆக, ஒரு விஷயம் உங்கள் அறிவுக்குப் புலப்படவில்லை என்றால் அதைக் கடந்து போவது நல்ல தெரிவு அல்ல.

சஹாபாக்களும் சலஃபுகளும் இஸ்லாத்தை இறைவனிடமிருந்து வந்ததாக உளப்பூர்வமாக நம்பினார்கள். இதுதான் சத்தியம் என்பதிலும், எதுவும் இதற்கு நிகரில்லை என்பதிலும் அவர்களுக்கு மிகுந்த தெளிவு இருந்தது. எந்தக் குழப்பங்களும் அவர்களிடம் இல்லை. வானத்திலிருந்து ஒரு பெரிய வைரம் நமது கண்முன் இறங்கினால் எப்படி உணர்வோமோ அதுபோல இஸ்லாத்தை ஓர் அற்புதமாக சஹாபாக்கள் நோக்கினார்கள். அதனால்தான் அவர்களுக்கு இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஊக்கம் மிகுந்து காணப்பட்டது. நற்செயல்கள் புரிவதற்கு அதுவே வினையூக்கியாக அமைந்தது.

இன்று ஜனநாயகம், முதலாளியம், தாராளவாதம் போன்றவற்றிலும் பயனடைய நிறைய இருக்கிறதே என்று சிலர் கருதுகிறார்கள். சில அம்சங்களில் இஸ்லாத்தைவிட இவை சிறந்ததாக இருக்கிறதே என்றுகூட ஒருசிலருக்குத் தோன்றுகிறது. அவர்களுக்குப் பத்தோடு பதினொன்றுதான் இஸ்லாம்.

இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை என்றே நான் கருதுகிறேன். பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இந்தக் கேள்விகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட முறைமையிலிருந்தும் மூலத்திலிருந்தும் வருபவை. அவற்றுக்கு நாமும் முறைசார்ந்துதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியே எதிர்கொண்டால் அதற்கு முடிவே இல்லை. நாம் வேரையும் மூலத்தையும் சரியாக இனங்கண்டு அதை உரிய விதத்தில் எதிர்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்பார்களே.. அதுமாதிரி. இந்த வகுப்பின் நோக்கமும் அதுதான்.

பின்வரும் படத்தை சற்று கூர்ந்து பாருங்கள். அதிலிருப்பது என்ன என்பதை சிறிது நேரம் யூகிக்க முயலுங்கள். பிறகு இதைத் தொடர்ந்து வாசியுங்கள்.

இந்தப் படம் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்திருக்கும். சிலருக்கு இது வெறும் கிறுக்கலாகத் தெரிந்திருக்கலாம். சிலருக்கு ஏதோ வரைபடம் போல இருப்பதாகத் தோன்றியிருக்கலாம். வேறு கருத்துகளும் இருக்கலாம். அதைத் திரும்பவும் பாருங்கள். அதிலிருப்பது ஒரு மாடு. முதல் பார்வையில் பலருக்கும் இது புலப்படாது. அதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பார்த்துக் குழப்பமடைவார்கள். ஆனால் அதிலிருப்பது என்ன என்பது தெரிந்துவிட்டால் இனி எப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் மாடு மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும். விடை தெரியும் முன் நீங்கள் படத்தைப் பார்த்த விதத்தில் இனி வாழ்நாள் முழுக்க உங்களால் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது.

இந்த உதாரணத்தை இஸ்லாத்துக்குப் பொருத்திப் பார்க்கலாம். இஸ்லாத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே பார்த்துப் புரிந்துகொள்ள நாம் முயல்கிறோம். இது சரியான அணுகுமுறையல்ல. மொத்தத்துவ நோக்கில் அதை விளங்கிக்கொள்ளாவிட்டால் பல தவறான கருத்துகள் தோன்ற அது காரணமாக அமையும். குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்துச் சொல்லும் கதை போல! மொத்தத்துவக் கண்ணோட்டத்தில் இஸ்லாத்தை உள்வாங்கிக்கொண்டால் இஸ்லாம் குறித்த குழப்பங்களும் சந்தேகங்களும் தவறான கருத்துகளும் தோன்றாது.

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)”

Leave a Comment