கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)

Loading

(முதல் பகுதியை வாசிக்க)

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஐரோப்பிய வரலாற்றை செவ்வியல் காலம், மத்திய காலம், நவீன காலம் என மூன்றாக வகைப்படுத்துவதுண்டு. பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்டவற்றின் வரலாறு செவ்வியல் காலத்தைச் சார்ந்தது. 16 – 18ம் நூற்றாண்டு காலப்பிரிவில்தான் மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் காலம் என்பன வருகின்றன. இது நவீன காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது தோன்றிய கருத்தியல்கள் குறித்தே நாம் அதிகம் கரிசனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்குலக வரலாற்றின் முப்பகுதிகள்:

  • செவ்வியல் காலம் கி.பி. 500க்கு முன்
  • மத்திய காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை
  • நவீன காலம் கி.பி. 1500க்குப் பின்

நவீனத்துவத்தின் ஆறு பண்புகள்

1. நவீனத்துவம் என்பது வெறுமனே நவீன காலகட்டத்தைக் குறிப்பதன்று. அது சரி – தவறை எடைபோடுவதற்கான உரைகல்லாகவும், பல்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பாகவும் உள்ளது. எதுவெல்லாம் நவீனமானதோ அதுவெல்லாம் சரியானது, அறம் சார்ந்தது எனக் கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்தே, நீங்கள் நவீனமானவரா அல்லது பிற்போக்கானவரா, நீங்கள் நவீனமானவரா அல்லது பண்பற்றவரா, நீங்கள் நவீனமானவரா அல்லது அறிவீனரா போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நவீனம் மட்டுமே சரியானது, சிறந்தது, உயர்ந்தது எனக் கருதப்படுகிறது. இப்படியான செல்வாக்கு முன்னெப்போதும் எந்தத் தத்துவத்துக்கும் இருக்கவில்லை.

2. நவீனத்துவம் தொடர்ச்சியான பரிணாமங்களையும் மாறுதல்களையும் கொண்டது. அதைப் பொறுத்தவரை, மாற்றம் என்பதே சிறந்தது. எதுவெல்லாம் நிலையாக உள்ளதோ, தேங்கிவிட்டதோ அதுவெல்லாம் தவறானது, மோசமானது. எதுவெல்லாம் மாறிக்கொண்டும் முன்னேறிக்கொண்டும் உள்ளதோ அதுவே நல்லது. நுகர்வியல் சமூகத்தில் இதை நம்மால் நன்கு உணர முடியும். நீங்கள் புதிய மாடல் செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்களா, ட்ரண்டியாக ஆடை அணிகிறீர்களா என்றெல்லாம் நவீன மனம் எதிர்பார்க்கிறது.

3. தற்காலம்தான் எப்போதும் சிறந்தது. அதாவது, முந்தைய காலத்திலிருந்து தற்காலம் மாறுதலடைந்துள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது. ஆக, இதுவே அறிவு, நடத்தை என எல்லா அம்சங்களிலும் போற்றத்தக்கது. மத்திய காலம் என்பது அதனளவிலேயே மோசமானது, பின்தங்கியது, அறிவீனமானது. அக்கால மனிதர்களின் உலகை விட தற்போதைய உலகமும், வாழ்வும் சிறந்தது. அவர்களைவிட நாம் மேம்பட்டவர்கள். நம் அனைவரின் பொதுப்புத்தியிலும் இந்தக் கண்ணோட்டம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

4. நவீனத்துவம் இயல்கடந்த அதிகாரம் எதையும் ஏற்காது. உதாரணத்துக்கு, மது அருந்துவதை அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதாக யாரும் கோர முடியாது. காரணம், இஸ்லாத்திற்கென்று ஆதாரப் பனுவல்களும் உரைகல்லும் இருக்கின்றன. இதை நவீனத்துவம் ஏற்பதில்லை.

5. மரபு எதிர்ப்பு நவீனத்துவத்தின் மற்றொரு ஆதாரமான பண்பு. இதுகுறித்து நாம் விரிவாக விவாதிக்கவிருக்கிறோம். மரபு என்பதே அடிப்படையில் முற்காலத்தின் தொடர்ச்சிதான். அறிவு, பேச்சு, சிந்தனை, உலகம் பற்றிய புரிதல் போன்றவற்றில் வரலாற்று ரீதியாக ஒரு பொதுவான அடிப்படைகளைக் கொண்டிருப்பதை மரபுவாதம் எனலாம். அந்த வகையில் பார்த்தால் முஸ்லிம்களும் மரபுவாதிகள்தாம். முஸ்லிம்களின் உரைகல்லாகவும், வாழ்க்கை வழிகாட்டியாக உள்ள குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அருளப்பட்டதுதான். அதை முன்சென்ற தலைமுறையினரே மற்றவர்களுக்குக் கற்பித்து, பாதுகாத்து நம்மிடம் கையளித்திருக்கிறார்கள்.

தற்காலம் எல்லா வகையிலும் உச்சம் தொட்டிருப்பதாக நவீனத்துவர்கள் கருதுவதால் கடந்த காலத்தை அவர்கள் துச்சமாகவே கருதுவார்கள். அதனால் முற்காலத்திலிருந்து வந்த எதையும் முழுமையாக அவர்களால் நம்ப இயலாது. தற்காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்பார்கள். எது சரி – தவறு என்பதையெல்லாம் கடந்த தலைமுறையினரிடமிருந்து நம்மால் பெற முடியாது என்றும், அப்படி செய்வது நம்மைப் பின்னுக்கு இழுக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அது நம்மை முன்செல்லவிடாமல் தடுப்பதாகவும் நினைக்கிறார்கள்.

6. நவீனத்துவம் என்பது கருத்தியல் சார்ந்த இறுமாப்பு கொண்டது. அது மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்வதில்லை. ஆனால் அது தன்னை வெளிப்படைத்தன்மையோடும் சகிப்புத்தன்மையோடும் இருப்பதாகக் கருதிக்கொள்கிறது. சமயங்களோ அல்லது பிற மரபுகளோ எப்படி நவீனத்துவர்களால் அணுகப்படுகின்றன என்பதைப் பார்த்தால் இது விளங்கும். அவை தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகி வருகின்றன. அவற்றை முட்டாள்தனம் என்று கருதும் அவர்கள், அவற்றிலிருந்து மனிதர்கள் விடுபட்டு சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

நுகர்வுக் கலாச்சார சமூகத்தில் இந்த அம்சத்தை சாதாரணமாக நீங்கள் கவனிக்கலாம். கைக்கடிகாரம், சட்டை என நாம் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது நடத்தையும் பேச்சும் நவீனமாக இல்லையென்றால், நாம் கேலிப்பொருளாகிவிடுவோம். நம்மை மாற்றிக்கொள்ள, ‘திருத்திக்கொள்ள’ பலமான புற அழுத்தம் தரப்படும்.

நவீனத்துவமும் பின்நவீனத்துவமும்

பின்நவீனத்துவம் என்பது கல்விப்புலத்தில் பரவலாகப் புழங்கும் சொல்லாடல். நவீனத்துவம் கொண்டிருக்கும் பண்புகளை பின்நவீனத்துவமும் கொண்டுள்ளது. இதுவும் மரபு எதிர்ப்புக் கருத்தியல்தான். ஜான் லாக், ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஹாப்ஸ் போன்ற நவீனத்துவ முன்னோடிகள் சமய மரபுகளைத் தாக்குவார்கள். அவை மனிதகுலத்தைப் பின்னுக்கு இழுப்பதாகவும், வன்முறையானது என்றும் சாடுவார்கள்.

மிஷேல் ஃபூக்கோ, ழாக் டெரிடா, ரோலண்ட் பார்த் போன்ற பின்நவீனத்துவர்களைப் பொறுத்தவரை, மதம் என்பது பழைய பஞ்சாங்கம், அது இறந்துவிட்டது. நான் ஹார்வெர்ட் பல்கலையில் படித்தபோது அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு சதவீதமானவர்கள்கூட மதத்தைக் கடைப்பிடிப்போராய் இல்லை. பின்நவீனத்துவர்கள் மத மரபுகளைப் பொருட்படுத்தாமல் மொழி சார்ந்த மரபுகளை விமர்சனத்துக்கு உட்படுத்துவார்கள்.

மொழியின் இயக்கத்தை, அதன் விதிமுறைகளையெல்லாம் அவர்கள் கேள்விக்குள்ளாக்குவார்கள். இயல்பாக்கம் பெற்றுள்ள மொழியில் சிக்கல்கள் நிறைந்திருப்பதாக வாதிடுவார்கள். ஒரு பிரதியை எடுத்துக்கொண்டால், நாம் அதை எப்படி புரிந்துகொள்கிறோமோ அதைத்தான் அப்பிரதியை எழுதியவரும் சொல்ல முனைந்துள்ளாரா என்று கேட்பார்கள். பல்வேறு பொருள்கோடலுக்கான சாத்தியம் அதில் இருப்பதாகக் கூறுவார்கள். இந்தக் கருத்தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருசில முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரதிகளை இந்த முறையியலைக் கொண்டு வாசிக்க முனைந்திருக்கிறார்கள். அது மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பல குழப்பங்களுக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

மொத்தத்தில் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் வேறுபட்டது என்றாலும், இவ்விரண்டும் மேற்குறிப்பிட்ட ஆறு பண்புகளையே கொண்டிருக்கின்றன.

மதம் தேவையா?

நவீனத்துவத்தின் இரு முக்கியத் தூண்கள்:

  • தாராளவாதம்
  • அறிவியல்வாதம்

முன்னர் சுட்டிக்காட்டியதைப் போல இவ்விரண்டுமே மரபு எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. நவீனத்துக்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்துக்கும் இடையிலான சில அடிப்படை வேறுபாடுகள் பின்வரும் விளக்கப்படத்தில்.

நவீனத்துவம்இஸ்லாம்
இவ்வுலகைப் புரிந்துகொள்ள கடவுள் தேவையா?தேவையில்லை. அதற்குத்தான் அறிவியல் இருக்கிறது.ஆம். இவ்வுலகம் படைக்கப்பட்டதை, சொர்க்கம் – நரகத்தைப் பற்றியெல்லாம் இறை உதவியின்றி அறிய முடியாது.
நல்ல மனிதர்களாக இருக்க கடவுள் தேவையா?தேவையில்லை. சரி – தவறை பிரித்தறியவும், வாழ்வதற்கான விழுமியங்களை வழங்கவும் தாராளவாதம் இருக்கிறது.ஆம்
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறிய கடவுள் தேவையா?தேவையில்லை. அதை அறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இருக்கிறது.ஆம்
மகிழ்வுடன் இருக்க கடவுள் தேவையா?அதற்கு முற்போக்கு வளர்ச்சிதான் தேவை. நாங்கள் தாராளவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம். நுகர்வும், தொழில்சார் முன்னேற்றம் போன்றவையும் எங்களை மகிழ்விக்கும். மரபுகளோ கடவுளோ சமுதாயமோ தேவையில்லை.ஆம்
சமூகம் மேம்படவும் செழிக்கவும் கடவுள் தேவையா?தேவையில்லை. கடவுள் கோட்பாடு சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கும். மதம் நாகரிக வளர்ச்சியை மட்டுப்படுத்தும்.ஆம்

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)”

Leave a Comment